Wednesday, June 27, 2018

விலக்கப்பட்ட கனியும், மரியாளின் திரு வயிற்றுக் கனியும்.

விலக்கப்பட்ட கனியும், மரியாளின்
திரு வயிற்றுக் கனியும்.
**********************************

இறைவன் நம் முதல் பெற்றோரை பரிசுத்தமானவர்களாகத்தான் படைத்தார்.

அவரது கட்டளையை மீறி

விலக்கப்பட்ட கனியை உண்டதால் பாவம் புகுந்தது.

விலக்கப்பட்ட உணவுதான்

பாவத்திற்கும்,

அதன் விளைவான மரணத்திற்கும்

காரணமாக இருந்திருக்கிறது.

பாவத்திற்குத் தூண்டியவன் சாத்தான்.

ஒரு உணவினால் புகுந்த மரணத்தை

மற்றொரு உணவினால் வெல்ல

இயேசு திருவுளமானார்.

'இந்த உணவை உண்பார் என்றென்றும்  வாழ்வார்.'

எது அந்த உணவு?

"என் தசையைத் தின்று, என் இரத்தத்தைக் குடிப்பவன் முடிவில்லா வாழ்வைக் கொண்டுள்ளான்." (அரு:6:54)

நித்திய மரணத்தை வெல்ல

இயேசு தன்னையே

நமக்கு உணவாகக் கொடுக்கிறார்.

'விலக்கப்பட்டக் கனியைத்' தின்றதற்கான மருந்து,

'பாவத்திலிருந்து முற்றிலும் விலக்களிக்கப்பட்ட.'

மரியாளின் 'திரு வயிற்றின் கனி'.

பழைய ஏற்பாட்டின் 'கனி'க்கு மாற்றுமருந்து

புதிய ஏற்பாட்டின் 'கனி'.

பழைய ஏற்பாட்டின் கனியைப் பரிந்துரைத்தவன் சாத்தான்.

புதிய ஏற்பாட்டின் 'கனி'யைப் பரிந்துரைத்தவர்  மரியாளின் 'திரு வயிற்றின் கனி'யும்,

சாத்தானை வென்றவருமான நம் ஆண்டவராகிய இயேசு.

ஆக, திவ்ய நற்கருணைதான்

இயேசுவே நமக்கு அருளும் ஆன்மீக உணவு.

விலக்கப்பட்ட கனி மனித இயல்பையே சீரழித்துவிட்டது.

உடலை ஆளவேண்டிய ஆன்மா

பாவத்தினால்,

உடலால் ஆளப்பட ஆரம்பித்தது.

அதனால்தான் உடல் இச்சைகட்கு ஆன்மா அடிபணிய ஆரம்பித்தது.

மனித உறவுகளும் சீரழிந்தன.

இறைவனின் உறவிலிருந்து மனித உறவு முறிந்தது.

இயேசு தரும் இறை  உணவு

ஆதாம் உண்ட விலக்கப்பட்ட உணவினால் ஏற்பட்ட

சீரழிவுகளைச் சரிசெய்கிறது.

இயேசு தரும் அருள்வரங்கள்

நமது ஆன்மாவைப் பலப்படுத்துவதால்

உடல் இச்சைகளை வெல்வதற்கான

ஆன்மீக பலம் பெறுகிறோம்.

உடல் நமது ஆன்மாவின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது.

இறையுணவு அடிக்கடி உண்பதால்

இறையன்புடன் பிறர் அன்பும் வளரும்.

இதனால் சமூகத்தில்

இறைவன் தரும் சமாதானம் நிலவும்.

இறைவனே நமது உணவாகி

நம்மோடு இரண்டறக் கலப்பதால்

இறைவனோடு நமது உறவு வலுவடையும்.

நற்கருணை மூலம்

கிறிஸ்து நம்மோடு வாழ்வதால்

நாம் நமது சிந்தனை, சொல், செயலில்

கிறிஸ்துவைப் பிரதிபலிப்போம்.

"வாழ்வது நானல்ல

கிறிஸ்து என்னில் வாழ்கிறார்' எனத் துணிந்து சொல்லலாம்.

இயேசு தன்னையே சிலுவையில் பலியாக்கி

ஏற்றுக்கொண்ட உடல் மரணத்தினால்

நமது பாவத்தினால் ஏற்பட்ட

ஆன்மீக மரணத்தை வென்றார்.

இயேசு பெற்ற இந்த வெற்றியை நமது வெற்றியாக மாற்றுவது

நாம் உட்கொள்ளும் திவ்ய நற்கருணைதான்.

எப்படி?

சாதாரண அப்பத்தையும், இரசத்தையும்

தன் உடலாகவும், இரத்தமாகவும் மாற்றும் இயேசு,

சாதாரண மக்களாகிய நம்மை

இறைமக்களாக மாற்றுகிறார்.

அவரது தந்தையை

நாம் உரிமையோடு 'எங்கள் தந்தையே' என்று அழைக்கும்

வரத்தைத் தந்திருக்கிறார்.

நற்கருணை மூலம் இறைமகனோடு ஒன்றித்துவிட்ட நாம்

இறைமக்களுக்குரிய உரிமையயைப் பெறுகிறோம்.

விண்ணரசின் உரிமைக்குடிமக்களாக மாறுகிறோம்.

ஆதாம் உண்ட விலக்கப்பட்ட கனி நம்மை சாத்தானின் பிள்ளைகளாக்கியது.

மரியாளின் திருவயிற்றுக்கனி

நம்மை இறைவனின் செல்லப் பிள்ளைகளாக மாற்றியிருக்கிறது.

இயேசுவே நமது செல்வம்!

அவரே நமக்கு உணவாகக் கிடைத்திருப்பது நமது பாக்கியம்!

லூர்து செல்வம்.


No comments:

Post a Comment