Friday, June 15, 2018

இயேசுவின் மதிப்பீடுகளை நமது வாழ்வில் எந்த அளவுக்குப் பிரதிபலிக்கிறோம்?


இயேசுவின் மதிப்பீடுகளை நமது வாழ்வில் எந்த அளவுக்குப் பிரதிபலிக்கிறோம்?
*********************************

எந்த பொருளுக்கும் சுயமாக எந்த மதிப்பீடும் (Value) கிடையாது.

அதைப் பயன்படுத்துபவர்களைப் பொறுத்து  மதிப்பு மாறும்.

சாணம் அநேகருக்கு ஒரு கழிவுப்பொருள்.

ஆனால் விபசாயிக்கு அவனது பூம்பயிருக்கான உணவு.

அது கழிவா, உணவுப் பொருளா என்பது

அதைப் பயன்படுத்துபவர்களைப் பொறுத்தது.

நம்மிடையே நிலவிவரும் கருத்துக்களும், 

நடைபெறும் செயல்களும்

அவற்றை நோக்குபவர்களின் கண்ணோக்கிற்கு (Point of view) ஏற்ப

மதிப்பீடு (Value) பெறுகின்றன.

ஒரு தேர்தலில் ஒரு  போட்டியாளர் வெற்றி பெற்றுள்ளதாக வைத்துக்கொள்வோம்.

அவருக்கு வாக்களித்தவர்கட்கு அது இலாபம். (Gain.)

வேறொருவருக்கு வாக்களித்தவர்கட்கு அது இழப்பு. (Loss)

ஒரே நிகழ்ச்சி ஒரு சாராரருக்கு மகிழ்ச்சியையும்,

மற்றொரு சாராரருக்கு வருத்தத்தையும் தருகிறது .

அதாவது நிகழ்ச்சியின் மதிப்பீடு மாறுகிறது.

நம் ஆண்டவர் இயேசுவின் கண்ணோக்கில்

ஒரு செயலுக்கு அல்லது கருத்துக்குக் கிடைக்கும் மதிப்பீட்டை

'கிறிஸ்தவ மதிப்பீடு ' (Christian value) என்கிறோம்.

1. ஒருவருக்கு உரியதை

அவருக்குக் கொடுப்பது

உலக நீதி.

உலகில் நீதிமன்றம்

குற்றவாளியைக்

கண்டுபிடித்து

அவனுக்கு உரிய தண்டனையைக் கொடுப்பதற்கு

ஆவன செய்யும்.

இயேசுவோ

தனக்கு விரோதமாகப்

பாவம் செய்பவர்களைத்

தேடிச்சென்று அவர்களை

மன்னிக்க

ஆவன செய்து கொண்டிருக்கிறார்.

அவர் மனிதனாகப் பிறந்ததே

மனிதன் செய்த பாவத்திற்காகத்

தானே  பரிகாரம் செய்து

பாவியை மன்னிப்பதற்காகத்தான்.

பாவி செய்ய வேண்டியதெல்லாம்

தான் செய்த பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு,

இயேசுவின் பிரதிநிதியிடம் பாவசங்கீத்தனம் செய்யவேண்டியதுதான்.

தண்டிப்பது உலக நீதி.

மன்னிப்பது தேவ நீதி.

மன்னிப்பவன்தான் கிறிஸ்தவன்.

அப்படியானால் நரகம்?

இறைவனின் மன்னிப்பை விரும்பாத

மனிதன் தானே தேடிக்கொள்வது,

படிப்பை விரும்பாத மாணவன் Fail ஆவதைப்போல.

2.
உலக மதிப்பீட்டின்படி ஏழ்மை விரும்பத்தகாதது.

இயேசுவின் மதிப்பீட்டின்படி ஏழ்மை ஒரு ஆசீர்வாதம். (Blessing)

இயேசுவே ஏழையாகப் பிறந்தார்,

ஏழையாக வாழ்ந்தார்.

ஏழையாக இறந்தார்.

பிரான்சிஸ் அசிசி,

அந்தோனியார்

போன்ற வசதி படைத்தவர்கள்கூட

தங்கள் உடைமைகளை எல்லாம் விட்டுவிட்டு

ஏழையாய் மாறியே

இயேசுவைப் பின்பற்றியுள்ளனர்.

இயேசுவின் வார்த்தைகள் :

"நீ நிறைவு பெற விரும்பினால்,

போய் உன் உடமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடு.

வானகத்தில் உனக்குச் செல்வம் கிடைக்கும்.

பின்னர் வந்து என்னைப் பின்செல்" என்றார்."(மத். 19:21)

அவரை நெருக்கமாகப் பின்பற்ற விரும்பும்
துறவற சபையினர்

ஏழ்மையை ஒரு வார்த்தைப்பாடாகவே

எடுத்துள்ளனர்.

They have vowed to be poor.

ஏழ்மை எனும் சொல்

பொருள் இல்லாமையை மட்டுமல்ல,

பொருள்மீது

பற்று இல்லாமையையும் குறிக்கும்.

பொருள்மீது பற்று இல்லாமை ஒரு புண்ணியம்.

பொருள்மீது பற்று இல்லாமையையே இயேசு விரும்புகிறார்.

பற்றில்லாதவர்களை இயேசு பாக்கியவான்கள் என்கிறார்.

3.  இயேசு,

"எங்கள் அனுதின உணவை இன்று தாரும்."

"Give us our daily bread."

என்று செபிக்கக் கற்றுத்தந்துள்ளார்.

அதன் பொருள் என்ன?

'இன்றைய உணவு இன்றைக்கு,

நாளைய உணவு நாளைக்கு.

அன்றன்றைய தேவைகளை அன்றன்று பூர்த்தி செய்தால் போதும்.

மொத்தமாகத் தரவேண்டாம்.'

இயேசு கற்றுத்தந்த இந்த செபத்தின்மூலம் நாம் அறியவேண்டியது

'நாம் எல்லோரும் இறைவனின் பிள்ளைகள்.

நமது உழைப்பினால் நாம் பெறும் வரும் வருமானம்

நமக்கு மட்டுமல்ல

இறைவனை தந்தையாகக் கொண்ட

எல்லா குடும்ப உறுப்பினர்களுக்கும் உரியது.

  ஆகவே நமக்குத் தேவை போக

மீதியை தேவையுள்ள உறுப்பினர்களுடன்

பகிர்ந்துகொள்ள வேண்டும்.'

"உன்னைப்போல உன் அயலானையும் நேசி"

என்ற இறைக்கட்டளையின் கீழ் இந்தச் செயல் வருகிறது.

பிறருக்கு உதவாமல்

நமக்காக மட்டும் சேர்த்துவைப்பது

இயேசுவின் சித்தத்திற்கு விரோதமானது.

ஆனால்

நம்மில் எத்தனை பேர்

இயேசுவின் இந்தச் சித்தத்தை

நிறைவேற்றுகிறோம்?

இறைவனே அறிவார்!

"கொடுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்."

"எந்த அளவையால் அளப்பீர்களோ அதே அளவையால் உங்களுக்கு அளக்கப்படும்." (லூக். 6:38)

"நம்மிடம் உள்ளதை எல்லாம் மற்றவர்கட்கு பகிர்ந்து அளித்துவிட்டால் நமக்கு அவசியம் ஏற்படும்போது யார் தருவார்? "

இக்கேள்விக்கு ஒரே பதில்தான்:

"இயேசுவை நம்புவோம்.

கொடுக்கச் சொன்னவர் கட்டாயம் தருவார். "

இப்போ பிரச்சினையே

நமக்கு நம்பிக்கை இல்லாததுதான்.

இயேசுவை விசுவசித்தால் மட்டும் போதாது.

அவரை நம்பவும்வேண்டும்.

4. துன்பப்படுபவனை ஏதோ பாவத்திற்குத் தண்டனை அனுபவிப்பதாக உலகம் கருதுகிறது.

"என்ன பாவம் செய்தானோ,  அனுபவிக்கிறான்." இது உலகின் கூற்று.

ஆனால் கிறித்தவ கண்ணோக்கின்படி

(அ) துன்பங்கள் நம்மைத் தூய்மைப்படுத்துகின்றன, நெருப்பு தங்கத்தைத் தூய்மைப்படுத்துவது போல்.

(ஆ)
துன்பத்தை அதாவது சிலுவையைச் சுமந்து செல்பவன்தான் இயேசுவின் சீடன்.

"தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்சொல்லாதவன் என் சீடனாயிருக்க முடியாது."(லூக். 14:27)

"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்."(மத்.16:24)

இயேசு மனிதனாகப் பிறந்ததே பாடுபடத்தானே.

(இ) துன்பப்படுபவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

"நீதியினிமித்தம்

துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்,

ஏனெனில், விண்ணரசு அவர்களதே."
(மத்.5:10)

துன்பங்கள் வரும்போது

முணுமுணுக்காமல்

அவற்றை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு

இறைவனுக்கு ஒப்புக்கொடுத்தால்,

அதற்கு ஈடான இன்பம்

மறுவுலகில்

காத்துக்கொண்டிருக்கும்.

5.  "பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை."

இவ்வுலகினர்

பொருளுக்கும்,

பணத்திற்கும்

மட்டுக்கு மிஞ்சிய

மரியாதை வைத்திருக்கின்றனர்.

ஒருவருடைய சமூக அந்தஸ்தை
அவருடைய சொத்தை வைத்தும்,

வருமானத்தை வைத்துமே

தீர்மானிக்கின்றனர்.

மாதச்சம்பளத்தை வைத்தே

ஒருவருடைய உத்தியோகத்தின் பெருமை

தீர்மானிக்கப்படுகிறது.

பணம் இருந்தால்

எதையும் சாதிக்கலாம் என்று

இவ்வுலகு நம்புகிறது.

பணம் பாதாளம் மட்டும் பாயுமாமே!

பணத்தைத் தேட

உலகின் எந்த எல்லைக்கும் போக

மக்கள் தயாராகிவிட்டனர்.

கோவில் விழாக்களின் வெற்றியைக்கூட

உண்டியல் வருமானத்தை வைத்தே

தீர்மானிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆனால் செல்வத்தைப் பற்றிய இயேசுவின் மதிப்பீடு வித்தியாசமானது.

"மண்ணுலகில் செல்வம் சேர்த்துவைக்க வேண்டாம்."
(மத்.6:19)

"கடவுளுக்கும் செல்வத்திற்க்கும் நீங்கள் ஊழியம்செய்யமுடியாது." 
(லூக். 16:13)

இயேசு பொருளையோ, பணத்தையோ வேண்டாமென்று சொல்லவில்லை.

அவற்றைப் படைத்தவரே அவர்தான்.

இறைவன் மகிமைக்காக அவற்றைப் பயன்படுத்தலாமே தவிர

அவற்றுக்கு ஊழியம் செய்யக்கூடாது.

அதாவது

பணமே நமது வாழ்க்கை முறையைத்

தீர்மானிக்கக்கூடாது.

பணத்தை

இறைவன் சேவைக்குப்

பயன்படுத்தவேண்டும்,

இறைவனைப்

பணம் சம்பாதிக்கப்

பயன்படுத்தக்கூடாது.

இறைப்பணிக்கு நன்கொடை வாங்கலாம்,

நன்கொடை வாங்குவதற்காக இறைப்பணி செய்யக்கூடாது.

அப்படிச் செய்தால்,

அது இறைப்பணி அல்ல,

இரைப்பணி!

6. இவ்வுலகினர் தங்களுக்குத் தீங்கு  இழைத்தவர்களைப் பழிவாங்கவே துடிக்கின்றனர்.

ஆனால் இயேசு சொல்கிறார் :

"நானோ உங்களுக்குச் சொல்லுகின்றேன்:

உங்கள் பகைவர்களுக்கு அன்பு செய்யுங்கள்:

உங்களைத் துன்புறுத்துவோருக்காகச் செபியுங்கள்." (மத்.5:44)

"எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தவர்களை நாங்கள் மன்னித்துள்ளதுபோல, எங்கள் குற்றங்களை மன்னித்தருளும்."
(கர்த்தர் கற்பித்த செபம்)

"நீங்கள் செபம் செய்ய நிற்கும்போது யார்மேலாவது உங்களுக்கு மனத்தாங்கல் ஏதேனும் இருந்தால், மன்னித்துவிடுங்கள்."
(மாற்கு.11:25)

"உங்கள் பகைவர்களுக்கு அன்புசெய்யுங்கள். உங்களை வெறுப்பவர்களுக்கு நன்மை செய்யுங்கள்." (லூக். 6:27)

"அவன் ஒரு நாளில் ஏழு முறை உனக்கெதிராகக் குற்றம் செய்து, ஏழு முறையும் உன்னிடம் திரும்பி வந்து, "நான் மனம் வருந்துகிறேன்" என்றால், அவனை மன்னித்துவிடு" 
(லூக். 17:4)

இயேசுவின் மதிப்பீடுகளை நமது வாழ்வில் எந்த அளவுக்குப் பிரதிபலிக்கிறோம்?

சுயபரிசோதனை செய்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment