"சின்னஞ் சிறிய என் சகோதரருள் ஒருவனுக்கு நீங்கள் இவற்றைச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள்."
(மத்.25:40)
***********--********************
"உம்மையன்றி எனக்கு யார் உள்ளார், இயேசுவே,
உம் சொல்லன்றி வேறு சொல்லறியேன், இயேசுவே,
எல்லாம் இயேசுவே, எனக்கெல்லாம் இயேசுவே"
என்று இயேசுவை நம் வாயினால் மட்டும் ஏற்றுக்கொண்டால் போதாது.
நம் உள்ளத்தாலும், செயலாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஞாயிறு பிரசங்கத்தில் சுவாமியார் சொன்னார்,
"இயேசு நம் எல்லோருக்கும் சகோதரர்.
ஆகவே நாம் எல்லோரும், மத, இன, அந்தஸ்து, வயசு வேறுபாடு இன்றி ஒருவருக்கொருவர் சகோதரர்களே.
இயேசுவிடம் காட்டும் அன்பை எல்லோரிடமும் காட்ட வேண்டும். "
என்று சொன்னார்.
அன்று மதியம் உணவு வேளையில் ஒரு பிச்சைக்காரன் வாசல் அருகே நின்றுகொண்டு,
"அம்மா, தாயே தர்மம் போடுங்கம்மா."
என்று குரல் கொடுத்தான்.
எனக்கு சுவாமியார் பிரசங்கம் ஞாபகத்திற்கு வந்தது.
ஆனால் அவரது வார்த்தைகளைச் செயல்படுத்த மனப்பக்குவமோ, தைரியமோ இல்லை.
வார்த்தைகளைச் செயலாக்குவதாயிருந்தால் நான் என்ன செய்திருக்க வேண்டும்?
அவனை வீட்டிற்குள் அழைத்து உணவு பரிமாறியிருக்க வேண்டும்.
இயேசு வாசலில் நின்றிருந்தால் அதைத்தானே செய்திருப்பேன்.
ஆனால் அப்படிச் செய்யாமல் கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பிவிட்டேன்.
பணம் இருந்தால் ஹோட்டலில் சாப்பிட்டுக்கொள்வான் என்று என்னை நானே திருப்திப்படுத்திக்
கொண்டேன்.
ஆனால் உண்மையிலேயே இயேசு நின்றிருந்தால்,
"இயேசுவே பணம் தருகிறேன்.
ஹோட்டலில் சாப்பிட்டுக்கொள்ளுங்கள்."
என்று சொல்லியிருப்பேனா?
அப்படிச் சொல்லியிருந்தால் இயேசு என்ன சொல்லியிருப்பார்?
"தம்பி, நான் சாப்பாட்டிற்கு ஆசைப்பட்டு உன்னிடம் வரவில்லை.
உன் அன்பைத் தேடி வந்தேன்"
என்று சொல்லியிருப்பார்.
யாராவது ஏழைகள் உதவி கேட்டு நம்மிடம் வந்தால்
நாம் அவர்களிடம் இயேசுவைக் காணவேண்டும்.
அவர்கட்கு நாம் என்ன செய்தாலும் அதை இயேசுவுக்கே செய்கிறோம்.
நம்மிடம் இருப்பதெல்லாம் இயேசுவால் தரப்பட்டவையே.
ஆகவே நம்மால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும்.
நான் என்ன செய்கிறோம் என்பது முக்கியம் அல்ல.
என்ன மனநிலையில் செய்கிறோம் என்பதுதான் முக்கியம்.
இயேசு நம்மிடம் விரும்புவது அன்பு நிரம்பிய உள்ளத்தைத்தான்.
நம் உள்ளத்து அன்பு உண்மையானதாக இருந்தால் அது செயலில் வெளிப்படும்.
True love will express itself in action, not mere words.
நமது "செயல் அன்பை'' நாம் காண்பிக்க வேண்டியது நம் வீடு தேடி வருபவர்களிடம் மட்டுமல்ல,
நமது நம் அன்பைப் பெறுவதற்காக உலகினர் அனைவரும் நம் வீடு தேடி வரமுடியுமா என்ன,
நாம் செல்லுமிடமெல்லாம் நமது அன்பை விதைக்கவேண்டும்.
நாம் பார்க்கின்றவர்களைப் பார்த்து புன்முறுவல் பூப்பது,
இனிய வார்த்தைகளால்
wish பண்ணுவது,
நலம் விசாரிப்பது,
பாராட்டுவது,
ஆறுதல் கூறுவது,
அறிவுரை கூறுவது,
மன்னிப்பது -
எல்லாமே அன்பின்பாற்பட்ட செயல்கள்தான்.
இந்த செயல்களுக்கு காசு தேவையில்லை,
உள்ளம்நிறை அன்பும்,
இனிமைநிறை வார்த்தைகளும்தான்.
"செயல் சிறியது, பலன் பெரியது."
"இயேசுவே, நீர் அரசுரிமையோடு வரும்போது, என்னை நினைவுகூரும்"
"இன்றே நீ என்னோடு வான்வீட்டில் இருப்பாய் என்று நான் உறுதியாக் உனக்குச் சொல்லுகிறேன்"
நல்ல கள்ளன் சொன்ன ஒற்றை வாக்கிய செபத்திற்கு
எவ்வளவு பெரிய பரிசு பாருங்கள்!
"என் சீடன் என்பதற்காக
இச் சிறியவருள் ஒருவனுக்கு
ஒரே ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவனும்
கைம்மாறு பெறாமல் போகான்
என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்."
இயேசுவிற்காக
ஒரு சிறியவற்கு
ஒரே ஒரு கிண்ணம் தண்ணீர்
கொடுத்தாற்கூட
நித்திய பேரின்பப் பரிசு கிடைக்கும்.
நம்மால் பெரிய சாதனைகள் செய்ய முடியாவிட்டாலும்
சிறிய சிறிய நற்செயல்களால்
நமது சிறிய சகோதரர்களை மகிழ்வித்து
பெரிய சகோதரர் கையிலிருந்து
நித்திய பேரின்பத்தையே
பரிசாகப் பெறலாமே!
இங்கே மற்றொரு உண்மையையும் நினைவிற்கொள்ள வேண்டும்.
நாம் நமது சிறிய சகோதரருக்கு உதவும்போது
இயேசுவுக்கு உதவுவது போலவே,
சிறிய சகோதரர்களை
மனம் நோகச்செய்யும்போது
இயேசுவையே மனம் நோகச்செய்கிறோம்.
பெற்றோர் பிள்ளைகளிடம் பேசினாலும் சரி,
பிள்ளைகள் பெற்றோரிடம்
பேசினாலும் சரி,
ஆசிரியர்கள் மாணவர்களுடன் பேசினாலும் சரி,
மாணவர்கள் ஆசிரியர்களிடம்
பேசினாலும் சரி,
யார் யாரோடு பேசினாலும் சரி,
நாம் இயேசுவுடன் பேசுகிறோம்
என்பது நினைவில் இருந்தால்
காயப்படுத்தும் வார்த்தைகள் வராது,
கனிவான வார்த்தைகள் மட்டுமே வரும்.
நம் நினைவாலும்,
சொல்லாலும்,
செயலாலும்
எல்லோருக்கும்
நம்மால் இயன்ற
உதவிகள் செய்வதையே
வாழ்வாகக் கொள்வோம்.
இறைமகன் இயேசுவுடன் நித்திய வாழ்வில் இணைவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment