Saturday, January 27, 2018

காலமும், நித்தியமும். (Time and Eternity)

காலமும்,  நித்தியமும்.
Time  and eternity .
******************************************

கடவுள் காலங்களுக்கு அப்பாற்பட்டவர்,  நித்தியர்.

மனிதன் காலவரையரைக்கு
உட்பட்டவன், 

நித்திய வாழ்விற்காகப் படைக்கப்பட்டவன்.

காலம்:(Time)

காலத்திற்குத் துவக்கமும், முடிவும் உண்டு.

காலம் பிரபஞ்சம் (Universe) படைக்கப்பட்டபோது ஆரம்பித்த்தது.

பிரபஞ்சம் அழியும்போது காலமும் முடிந்துவிடும்.

காலம் ஒரு கருத்து.(Concept).

வினாடி, நிமிடம், மணி, நாள், வாரம், மாதம், வருடம், நூற்றாண்டு  என்னும்  அளவுகளால் அளக்கப்படக்கூடியது.

காலத்தை ஒரு கிடப்புக்கோட்டிற்கு(horizontal line) ஒப்பிட்டால், அக்கோட்டிலுள்ள ஒவ்வொரு புள்ளியும் ஒரு குறிப்பிட்ட கால அளவைக் (A particular point of time) குறிக்கும்.

நாம் இப்போது இருப்பது
கி.பி 2018வது புள்ளி.

உலகம் ஆரம்பித்த புள்ளியிலிருந்து இது எத்தனையாவது புள்ளி என்று நமக்குத் தெரியாது.

கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்து பிறந்த ஆண்டை '0' புள்ளியாக வைத்துக்கொண்டு,  அதற்கு முந்திய  காலத்தை கி.மு எனவும், பிந்திய காலத்தை கி.பி எனவும் குறிக்கிறோம்.

உலக வரலாறு இக்காலக் கணக்கை ஏற்றுக் கொண்டிருக்கிறது.

நாம் வாழும் இந்த வரலாற்றுக் காலம் (Chronological time) நிரந்தரமானது அல்ல.

கிறிஸ்துவின் 2வது வருகையின்போது இந்தக் காலம் முடிந்துவிடும்.

இறுதித் தீர்வை நாளில் நாம் எல்லோரும் நித்தியத்திற்குள் நுழைந்து விடுவோம்.

சுருக்கமாக,  இவ்வுலகம் நிரந்தரமானதல்ல.

நித்தியம்:(Eternity)

நித்தியத்திற்கு துவக்கமும், முடிவும் கிடையாது.

நாம் இப்போது வாழும் காலத்தை ஒரு கோட்டிற்கு ஒப்பிட்டால், நித்தியத்தை ஒரு புள்ளிக்கு ஒப்பிட வேண்டும்.

நித்தியத்திற்குக் கடந்த காலமோ(Past), எதிர்காலமோ(Future) கிடையாது.

நிரந்தர நிகழ் காலம்தான்.(Ever present).

இறைவன் மோயீசனுக்குத் தன்னைப் பற்றிக் கூறிய
வார்த்தைகள்,  "இருக்கிறவர் நாமே".(I am who I am.)
(யாத்.3:14)

இறைவன் துவக்கமும், முடிவும் இல்லாதவர்.

நமது காலக் கணக்குப்படியான கடந்த காலமும், எதிர்காலமும்
இறைவனுக்கு நிகழ்காலம்தான்.

இறைவனின் ஞானம் அளவு கடந்தது.

நாம் இவ்வுலகில் நிகழ்கால நிகழ்ச்சிகளை நேரடியாகப் பார்க்கிறோம்.

கடந்த கால நிகழ்வுகளை வரலாற்றை வாசித்து அறிகிறோம்.

எதிர்கால நிகழ்வுகள் நமக்குத் தெரியாது.

இறைவனின் ஞானத்திற்கு முக்கால நிகழ்வுகளும் நிகழ்கால நிகழ்வுகள்போல் நேரடியாகத் தெரியும்.

அளவு கடந்த ஞானத்தினால்தான் கடவுள் மாறாதவராய் இருக்கிறார்.

கடவுள் மாறாதவர். அப்படியானால் அவரை யாராலும் மாற்றவும் முடியாது.

இப்போது ஒரு கேள்வி எழும்.

கடவுளை மாற்றவே முடியாதென்றால் ஏன் உதவி கேட்டு செபிக்கிறோம்?

நாம் பாவம் செய்யும்போது நமக்கும் இறைவனுக்கும் உறவு முறிகிறது.

இம்முறிவு ஒரு வாரம் நீடிக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

ஒரு வாரம் கழித்து மனம் வருந்தி மனம் வருந்தி மன்னிப்பு வேண்டுகிறோம்.

கடவுள் நம்மை மன்னிக்கிறார்.

மன்னிக்கிறார் என்றால் இறைவன் மனம் மாறுகிறார் என்றுதானே அருத்தம்.

நினிவே நகர மக்கள்  மனம் திரும்பியபோது  'தாம் அவர்களுக்குச் செய்யப் போவதாகச் சொல்லியிருந்த தீங்கைக் குறித்துக் கடவுள் தம் மனத்தை மாற்றிக் கொண்டு, அதைச் செய்யாமல் விட்டார்.'(யோனாஸ்.3:10) என்று பைபிளியே உள்ளதே என்று கேட்கலாம்.

ஆனால் ஒரு அடிப்படை உண்மையைப் புரிந்து கொண்டால் இக்கேள்விக்கு இடமிருக்காது.

ஒரு சின்ன உதாரணம்:

தன் மக்களின் குணத்தை நன்கு அறிந்த தந்தை ஒருவர் இருந்தார்.

ஒரு நாள் அவரது மூத்த மகன்,  ''அப்பா, கணக்குகளை விரைவாய்ச் செய்ய ஒரு Calculator வேண்டுமே" என்றான்.

உடனே தந்தை பீரோவைத் திறந்து ஒரு பெட்டியை எடுத்து,  மகனிடம் கொடுத்து, ''திறந்து பார்" என்றார்.

பையன் பெட்டியைத் திறந்தபோது உள்ளே ஒரு அழகிய Calculator இருந்தது.

"எப்படிப்பா, நான் இப்போதானே கேட்டேன். அதற்குள் எப்படிப்பா? "

"நீ கணித பாடம் எடுக்கும்போதே எனக்குத் தெரியும், நீ Calculator கேட்பாய் என்று. ஆகவே ஏற்கனவே வாங்கி வைத்துவிட்டேன்."

மகனுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.

இறைவனும்  அப்படித்தான்.

இறைவன் நம்மைப் படைக்கும்போது  முழுமனச் சுதந்திரத்தோடு படைத்தார்.

நமது  சுதந்திரத்தில் அவர் குறுக்கிடுவதில்லை.

ஆனால் நாம் நமது சுதந்திரத்தை எப்படி பயன்படுத்துவோம் என்று  முன்கூட்டியே நித்திய காலமாக அவருக்குத் தெரியும்.

ஆகவே நாம் செபிப்போமா, என்ன கேட்போம் என்று நித்திய காலமாக அவருக்குத் தெரியும்.

அதற்குரிய பதிலை அவர் நித்திய காலமாகத் தீர்மானித்து விடுகிறார்.

ஆகவே அவர் மாறுவதில்லை.

இங்கு இரண்டு காரியங்களை மனதில் கொள்ள வேண்டும்.

1.இன்று நாம் செய்யும் செபத்திற்கான பதிலை இறைவன் நித்திய காலமாகத் தீர்மானித்துவிடுகிறார். ஆகவே நமது செபம் கேட்கப்பட்டுவிட்டது.

2.நாம் இறைவனை மாற்றவில்லை,  மாற்றவும்  முடியாது.

நித்திய காலமாக,  (அதாவது நாம் பிறக்குமுன்பே) தீர்மானிக்கும் கடவுளை இன்று எப்படி மாற்ற முடியும்?

பாவமன்னிப்பை பொறுத்த மட்டிலும் இதே நிலைதான்.

நினிவே மக்கள்  பாவம் புரிவார்களென்று இறைவனுக்கு நித்திய காலமாகத் தெரியும்.

பாவத்திற்காகத் தண்டிக்கப் படுவார்கள் என்பதை அம்மக்களிடம் அறிவிக்க யோனாஸை அனுப்பப் போவதும் நித்திய காலமாகத் தெரியும்.

அம்மக்கள் செய்த பாவத்திற்காக வருந்துவார்கள்,  மன்னிப்புக் கேட்பார்கள் என்பதும் நித்திய காலமாகத் தெரியும்.

ஆகவே அவர்களை   நித்திய காலமாக மன்னிக்கிறார்.

ஆகவே இறைவன் மாறவில்லை.

அப்படியானால் 'மனத்தை மாற்றிக் கொண்டு,' என்று ஏன் பைபிளில் கூறப்பட்டுள்ளது?

மனித அனுபவத்தில் காரணம்(Cause) முந்தியும்,  காரியம்(Effect) பிந்தியும் வரும்.

மன்னிப்புக் கேட்ட பின் மன்னித்ததாகச் சொன்னால்தான் மனிதனுக்குப் புரியும்.

ஆகவேதான் அப்படி எழுதப்பட்டுள்ளது.

நாம் கடந்த காலத்தில் நெடுநாள் பாவ வாழ்வு வாழ்ந்ததாக வைத்துக்கொள்வோம்.

இன்று நாம் செய்த பாவங்களுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்பதாக வைத்துக்கொள்வோம்.

நேற்று வரை மன்னியாதிருந்து இன்று மன்னித்தால் கடவுள் மாறினார் என்றாகும்.

ஆனால் நடப்பது அதுவல்ல.

கடவுளின் அளவு கடந்த ஞானத்திற்கு நமது எதிர்காலமும் தெரியும்.

ஆகவே நாம் இன்று மன்னிப்பு கேட்பது கடவுளுக்கு நித்திய காலமாகத் தெரியும்.

ஆகவே கடவுள் நம்மை நித்திய காலமாக மன்னிக்கிறார்.

இன்று கடவுள் மாறவில்லை.

நாம் இன்று மன்னிப்புக் கேட்டிருக்கலாம். 

ஆனால் அவர் நித்திய காலமாக மன்னித்து விட்டார்.

இன்று அவர் மாறவில்லை.

காலம், நித்தியம் முக்கிய வேறுபாடு:

நமது காலக் கணக்குப்படி
ஆதாம் படைக்கப்பட்டதற்கும் இறுதித்தீர்ப்புக்கும் இடையில் பல கோடி ஆண்டுகள் கடந்து விடும்.

ஆனால், இறைவனின் நித்திய கணக்குப்படி இடைவெளியே கிடையாது.

இவ்வுலகில் அநித்திய வாழ்வு வாழும் நாம் மரண வாயிலைக் கடந்தவுடன் நித்திய வாழ்விற்குள் நூழைவோம்.

அந்த நித்திய வாழ்வு மகிழ்ச்சிகரமாக இருக்குமா அல்லது துக்ககரமாக இருக்குமா என்பதை இன்றைய நமது வாழ்வுதான் தீர்மானிக்கும்.

இவ்வுலகில் இறைவன் சித்தப்படி வாழ்ந்தால் மறுவுலகில் இறைவனோடு பேரின்ப வாழ்வு உறுதி.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment