பணமா? பாசமா?
*******************************************
ஆசிரியர் மாணவர்களிடம் நுண்ணறிவுக் கேள்வி ஒன்று கேட்டார்:
கார் ஓட அத்தியாவசியமாய்த் தேவைப்படுவது பெட்ரோலா? சக்கரமா?
40ல் 39 பேர் பெட்ரோல் என்றார்கள்.
ஒருவன் மட்டும் சக்கரம் என்றான்.
ஆசிரியர் அந்த ஒருவனிடம் கேட்டார்: பெட்ரோல் இல்லாமல் கார் எப்படி ஓடும்?
பையன் சொன்னான்: யாராவது தள்ளிவிட்டால் ஓடும்.
பெட்ரோல் இருந்து, சக்கரம் இல்லாவிட்டால் பெட்ரோலினாலும் ஓடாது, தள்ளிவிட்டாலும் ஓடாது.
இப்போது ஒரு கேள்வி.
நல்ல கிறிஸ்தவனாக வாழ அத்தியாவசிய தேவை பணமா? பாசமா?
இதற்குப் பதிலைத் தேடும்போது நாம் கருத்திற் கொள்ள வேண்டிய வார்த்தைகள் இரண்டு:
1.கிறிஸ்தவனாக.
2.அத்தியாவசிய.
வெறுமனே 'வாழ' என்று மட்டும் கேட்டிருந்தால் பதில் எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம்.
'கிறிஸ்தவனாக வாழ' என்று கேட்கப்பட்டிருப்பதால் ஒரே பதில்தான் இருக்க முடியும்.
'கிறிஸ்தவன்' யார்?
உணர்விலும், உண்மையிலும்
கிறிஸ்துவாக வாழ்கிறவன்.
"இனி, வாழ்பவன் நானல்ல: என்னில் வாழ்பவர் கிறிஸ்துவே" (கலாத்.2:20) என்று புனித சின்னப்பருடன் கூற முடிந்தவனே கிறிஸ்தவன்.
புனித சின்னப்பர் தனது கூற்றுக்குக் கூறும் காரணம்:
'இவரே என்மேல் அன்பு கூர்ந்தார்:
எனக்காகத் தம்மையே கையளித்தார்.'
கிறிஸ்துவையும், அன்பையும் பிரிக்க முடியாது.
நமக்காகத் தம்மையே கையளிக்கக் காரணமாய் இருந்தது அன்பு மட்டுமே.
நாம் கிறிஸ்துவின் சீடர்கள் என்பதற்கு அடையாளமாய் இருப்பது அன்பு மட்டுமே.
"நீங்கள் ஒருவர் மீதொருவர் அன்புகொண்டிருந்தால் தான், நீங்கள் என் சீடர் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வார்கள்."
(அரு. 13:35)
இயேசு பிதாவின் அன்பு மகன்.
அவர் மனிதனாகப் பிறந்தது நம் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாகத்தான்.
இறுதி நாளில் நாம் விண்ணகம் செல்லக் காரணமாய் இருக்கப்போவது நம் அன்புச் செயல்கள்தான்.
35 ஏனெனில், பசியாய் இருந்தேன், எனக்கு உண்ணக் கொடுத்தீர்கள்.
தாகமாய் இருந்தேன், எனக்குக் குடிக்கக் கொடுத்தீர்கள்.
அன்னியனாய் இருந்தேன், என்னை வரவேற்றீர்கள்.
36 ஆடையின்றி இருந்தேன், என்னை உடுத்தினீர்கள்.
நோயுற்றிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள்.
சிறையில் இருந்தேன், என்னைக் காணவந்தீர்கள் " என்பார்." (மத்.25:35,36)
"உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: சின்னஞ் சிறிய என் சகோதரருள் ஒருவனுக்கு நீங்கள் இவற்றைச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள்."
ஆக
அன்பு செய்து,
அந்த அன்பைச் செயலில் காட்டுபனே
உண்மைக் கிறிஸ்தவன்.
அவனுக்கு மட்டுமே விண்ணகத்தில் இடம்.
இயேசு பணத்தைப் பற்றி என்ன சொல்கிறார்?
19 "மண்ணுலகில் செல்வம் சேர்த்துவைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்: திருடரும் கன்னமிட்டுத் திருடுவர்."
21 "உங்கள் செல்வம் எங்குள்ளதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்."
24 "எவனும் இரு தலைவர்களுக்கு ஊழியம் செய்யமுடியாது."
" கடவுளுக்கும் செல்வத்திற்கும் நீங்கள் ஊழியம் செய்யமுடியாது."
பணம் சேர்ப்பதற்காக வாழ்பவன் கிறிஸ்தவன் அல்ல.
இறையன்பை விட பணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பனும் கிறிஸ்தவன் அல்ல.
இரட்சண்யம் பெற ஞானஸ்நானம் பெற்றால் மட்டும் போதாது.
கிறிஸ்துவில், கிறிஸ்துவிற்காக, கிறிஸ்துவாக வாழவேண்டும்.
இப்போது ஒரு கேள்வி எழும்.
அன்புச் செயல்கள் செய்ய பணம் வேண்டும்.
திருச்சபையின் நிர்வாகச் செலவிற்குப் பணம் வேண்டும்.
கோவில் கட்ட பணம் வேண்டும்.
திருவிழா கொண்டாட பணம் வேண்டும்.
அப்படியானால் பணம் இல்லாவிட்டால் எப்படி?
இப்போது நமது கேள்வியிலுள்ள 'அத்தியாவசிய' என்ற வார்த்தை நமது கவனத்திற்கு வரவேண்டும்.
'அத்தியாவசிய' என்றால் 'இல்லாமல் முடியாத' என்பது பொருள்.
மேற்கூறிப்பிட்டுள்ள காரியங்களுக்கு பணம் அவசியமாக இருக்கலாம், அத்தியாவசியம் கிடையாது.
நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது தற்செயல்களுக்கு, பணத்திற்கு அல்ல.
திருச்சபையின் வரலாற்றை வாசித்தவர்களுக்கு ஒரு முக்கிய உண்மை புரிந்திருக்கும்.
திருச்சபையின் முக்கிய பொறுப்புகளில் இருந்த சிலர் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததினால்
அநேகர் உண்மையான விசுவாசத்தை இழந்து 'மறு மலர்ச்சி' என்ற பெயரில் வெளியேறிவிட்டார்கள்.
நமது கடந்த கால அனுபவத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
திருச்சபை என்னும் ஒரே தாயின் பிள்ளைகளின் ஒரு பகுதியினர் வறுமையை விட்டு வெளியேற முடியாமல் தத்தளிக்கும்போது இன்னொரு பகுதியினர் ஆடம்பரமாக வாழ்ந்தால் அன்பு எப்படி மலரும்?
"நரிகளுக்கு வளைகள் உண்டு.
மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை." (லூக்.9:58)
இயேசுவின் இந்த வார்த்தைகளை வாசித்திருப்பவர்கட்கு ஆடம்பர ஆசை எப்படி வரும்?
ஆண்டவருக்காக பணத்தைச் செலவழிப்போம்.
பணம் நம்மைச் செலவழித்து விடக்கூடாது.
கோவில் கட்டுவோம், திருவிழாக் கொண்டாடுவோம், எளிமையாக.
பரமன் தங்குவது பாசத்தில், பணத்தில் அல்ல.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment