Tuesday, January 16, 2018

எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப்போடுவதில்லை.(மாற்கு.2:21)

எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப்போடுவதில்லை.(மாற்கு.2:21)
********************************

"தம்பி, புத்தாண்டு ட்ரெஸ் புதுமையாயிருக்கு! ''

''இது புத்தாண்டு ட்ரெஸ் இல்ல,  'பழையபுதிய' ஆண்டு ட்ரெஸ்.''

''அதுதான் பார்த்தவுடன் தெரிகிறதே. பழைய துணியின் கிழிசலோடு புதிய துணியை ஒட்டுப்போட்டிருக்கிறாய்.''

இது உண்மையை விளக்கப் பயன்படுத்தப்படும் ஒப்புமை (Analogy).

ஒரு இந்து  நண்பர் ஒருவர் திருமணத்திற்காகக் கிறிஸ்தவராக மாறவிருந்தார்.

நான் அவருக்கு ஞானோபதேசம் எடுத்து தயாரித்துக் கொண்டிருந்தேன்.

அவர் ஞானஸ்நானம் பெறுவதற்கு முந்திய நாள் அவர்சொன்னார்,  "சார், ஞானஸ்நானத்தை இரண்டு நாள் தள்ளிவைக்கலாமா? ''

''ஏன்? ''

"மாரியம்மனுக்கு ஒரு நேர்ச்சை பாக்கியிருக்கிது.
அதை நாளை நிறைவேற்றி விடுகிறேனே. அல்லது தெய்வ குற்றமாகிவிடும்.''

எனக்கு சிரிப்பு வந்தது.

''தம்பி நீ ஒன்று முழுக் கிறிஸ்தவனாக வேண்டும்.

அல்லது

இருக்கும் இடத்திலேயே இருந்துகொள்.

ஒரு காலை ஒரு படகிலும்,

இன்னொரு காலை

இன்னொரு படகிலும்
வைத்தால்

கரை சேர மாட்டாய்,

ஆற்றுக்குள் விழுவாய்.''

"சரி சார். நாளை ஞானஸ்நானம் பெறுகிறேன்."

"நாளை மறு நாள் நேர்ச்சையா? ''

''சார், சத்தியமா இல்ல. இனி முழுக் கிறிஸ்தவன்.''

இவன் புதுக் கிறிஸ்தவன்.

தங்களைப் பரம்பரைக் கிறிஸ்தவர்கள் என்று பெருமைப்பட்டுக் கொண்டிருப்பவர்களிடம்கூட இந்த ஒட்டுக் குணம் இருப்பதைச்  சீரணணிக்க முடியவில்லை.

பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப்போடுவதும்,
புதிய ஆடையில் பழைய துணியை ஒட்டுப்போடுவதும் ஒன்றுதான்.

பொருந்தாத இரண்டு குணங்கள் ஒன்றாய்  ஒன்றாய் இருப்பது மணம் கமழும் காபியுடன் நாற்றம் அடிக்கும் சாக்கடையைக் கலப்பதற்குச் சமம்.

சோம்பல் என்ற பழைய துணியை எரிக்காமல் பக்தி என்ற புத்தாடை மீது ஒடட்டுப்போடுபவர்கட்கு

மணிக்கணக்காக T.V பார்க்க நேரம் இருக்கும்,

குடும்ப செபம் சொல்ல நேரம் இருக்காது.

ஞாயிற்றுக்கிழமை முழுப் பூசை காண நேரம் இருக்காது.

இவ்வுலகைச் சார்ந்த வாழ்க்கை முறைகளை நமது ஆன்மீக வாழ்க்கை மேல் ஒட்டுப் போட்டுவிடக் கூடாது.

இவ்வுலக வாழ்க்கை எற்காக?

"ஒரு சாண் வயிறே இல்லாட்டா

உலகில் எதற்குக் கலாட்டா?"

இவ்வுலக வாழ்வு வயிறு, வயிறு சார்ந்த பணிகளுக்காகத்தான் இயங்குகிறது.

ஆனால் ஆன்மீக வாழ்வு இறைவனை மையமாகக்கொண்டு இயங்குகிறது.

இவ்வுலக வயிற்று வாழ்விற்காக ஆன்மீக வாழ்வைத் தியாகம் செய்யத் துணிந்தவன் லௌகீகவாதி.

இறைவனுக்காக இவ்வுலக வாழ்வைத் தியாகம் செய்பவன் ஆன்மீகவாதி.

எவனொருவன் ஆன்மீக வாழ்வு வாழ்வதாகக் கூறிக்கொண்டு தன் வயிற்றை அடக்காமலிருக்கிறானோ  அவன் ஆன்மீகம் என்ற
புத்தாடை மேல் லௌகீகம் 
என்ற பழைய துணியை ஒட்டுப்போடுகிறான்.

பழைய காலத்தில் இறைவனை திவ்ய நற்கருணை வழியாய் உட்கொள்ள நடுச்சாமம் துவங்கி நன்மை வாங்குமுன் வரை ஒன்றும் உண்ணாமலும்  குடியாமலும் இருக்க வேண்டியதிருந்தது.

ஆனால் தாய்த் திருச்சபை நம்மீது இரங்கி தண்ணீர் தவிர, மற்ற உணவுப்பொருட்களின் உபவாசம் நன்மை எடுக்குமுன் ஒரு மணி போதும் எனக் கூறியுள்ளது.

தண்ணீருக்கு உபவாசம் இல்லை.

ஆனால் அதைக்கூட அனுசரிக்க சிலருக்கு விருப்பமில்லை.

பூசைக்கு வரும்போதே எதையாவது மென்று கொண்டு வருகிறார்கள்.

இது ஆண்டவருக்கு செய்யப்படும் அவமரியாதை.

நமது மீட்பிற்காகத் தன் உயிரையே தியாகம் செய்த இயேசுவுக்காக  ஒரு மணி நேரம் உபவாசம் இருக்கக்கூடாதா?

உடலை ஒறுப்போம், ஆன்மாவைக் காப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment