"நீங்கள் கடவுளுடைய கோவில்......கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார்..."
(1கொரி.3:16)
********************************
நாம் பரிசுத்த ஆவியின் ஆலயம்.
நமது இருதயம் ஆவியானவரின் சிம்மாசனம்.
"நாம் " என்ற வார்த்தையைக் கேட்கும்போது முதலில் ஞாபகத்திற்கு வருவது நமது உடல்.
ஆனால் 'நாம்' குறிப்பது நமது ஆன்மாவை.
'நாம்' பிறக்கும்போது 'உடலோடு' பிறக்கிறோம்.
இறக்கும்போது நமது உடலை மண்ணிற்கு விட்டுவிட்டு விண்ணிற்கு விரைகிறோம்.
ஆகவே 'நாம்' எனும்போது நமது ஆன்மாவைக் குறிக்கிறோம்.
ஆக, நமது ஆன்மா பரிசுத்த ஆவியின் ஆலயம்.
'இருதயம்' நமது உடலின் ஒரு உறுப்பு.
நாம் உயிர் வாழக் காரணமாய் இருக்கும் உறுப்பு.
இருதயம் தன் இயக்கத்தை நிறுத்திவிட்டால் உடல் இயக்கத்தை நிறுத்திவிடும்.
உடலின் இயக்கத்திற்கு ஆதாரமான இருதயத்தைக் குறிக்கும் வார்த்தையை நமது ஆன்மீக இயக்கத்திற்கு ஆதாரமான 'அன்பை'க் குறிக்க பயன்படுத்துகிறோம்.
ஆன்மீகரீதியாக 'இருதயம்' என்றால் 'அன்பு'.
ஆக நமது அன்புதான் பரிசுத்த ஆவியின் சிம்மாசனம்.
கடவுள் அன்புமயமானவர்.
அன்பின் இருப்பிடமும் அன்புதான்.
'எங்கே அன்பு இருக்கிதோ, அங்கு கடவுள் இருக்கிறார்.'
'Where love is, there God is.'
அன்பு எனும்போது ஆன்மீக வாழ்விற்கு ஆதாரமான இறையன்பைக் குறிக்கிறோம்.
ஆக, நமது ஆன்மீக வாழ்விற்கு ஆதாரமானவர் அன்பின் தேவனாகிய பரிசுத்த ஆவிதான்.
சென்மப் பாவத்தின் காரணமாக அருள் வாழ்வின்றி உற்பவிக்கும் நாம் ஞானஸ்நானத்தின்போது பரிசுத்த ஆவியைப் பெற்று நமது அருள் வாழ்வை ஆரம்பிக்கிறோம்.
அதாவது நமது ஆதிப் பெற்றோர் தங்கள் பாவத்தினால் இழந்த இறையன்பைத் திரும்பப் பெறுகிறோம்.
பெற்ற இறையன்பை இழக்காமல் பாதுகாத்துக்கொள்வது நமது பொறுப்பு.
நம்மிடம் இறையன்பு இருக்குமானால் அதன் பண்புகளும் நம்மிடம் இருக்கும்.
"அன்பு
பொறுமையுள்ளது;
நன்மை செய்யும்;
பொறாமைப்படாது;
தற்புகழ்ச்சி கொள்ளாது;
இறுமாப்பு அடையாது.
அன்பு இழிவானதைச் செய்யாது;
தன்னலம் நாடாது;
எரிச்சலுக்கு இடம் கொடாது;
தீங்கு நினையாது.
அன்பு தீவினையில் மகிழ்வுறாது;
மாறாக உண்மையில் அது மகிழும்.
அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்;
அனைத்தையும் நம்பும்;
அனைத்தையும் எதிர்நோக்கி
இருக்கும்;''(1கொரி.13:4-7)
புனித சின்னப்பர் குறிப்பிட்டுள்ள மேற்குறிப்பிடப்பட்டுள்ள பண்புகள் நம்மிடம் இருந்தால் நம்மிடம் இறையன்பு செழிப்பாய் இருக்கிறது என்று அருத்தம்.
உழவன் நிலத்தை கல், முள் நீக்கி சுத்தமாய் வைத்திருந்தால் மட்டும் போதாது.
அதில் பயிர் செய்ய வேண்டும்.
ஆன்மாவிலிருந்து பாவம் நீங்கினால் மட்டும் போதாது.
புண்ணியம் வளர வேண்டும்.
பாவம் நீங்கிய ஆன்மாவில், அன்பு என்ற சிம்மாசனத்தில் பரிசுத்த ஆவி வீற்றிருக்க, அவரது ஆசீர் ஊற்றி புண்ணியம் எனும் பயிர் வளர்ப்போம்.
உலகில் வாழும் அனைத்து மக்களின் ஆன்மாக்களும் பரிசுத்த ஆவியின் ஆலயங்கள்தான்.
ஆகவேதான் நாம் நம்மை நேசிப்பதுபோல் மனிதர் அனைவரையும் நேசிக்க வேண்டும்.
இறையன்பையும், பிறரன்பையும் பிரிக்க முடியாது.
இறையன்பு இல்லாதவனிடம் உண்மையான பிறரன்பு இருக்க முடியாது.
இறையன்பில் வாழ்வோம், இறைவனோடு வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment