சுகமளிக்கும் கூட்டங்கள்.
******************************************
''கேளுங்கள், கொடுக்கப்படும்.'' - இது நம் ஆண்டவர் நமக்குத் தந்துள்ள வாக்கு.
நிச்சயமாக. அவர் வாக்கு மாற மாட்டார்.
''கேளுங்கள் '' என்று சொன்னவர் நாம் எதைக் கேட்க வேண்டும் என்று வரையறுத்துக் கூறவில்லை.
நமது சுபாவம் அவருக்குத் தெரியும்.
நம்மைப் படைக்கும்போதே ஆன்மாவோடும், உடலோடும் படைத்ததால் ஆன்மா சார்ந்த தேவைகளோடும், உடல் சார்ந்த தேவைகளோடும் படைத்தார்.
நம்மை மறுவுலக வாழ்விற்காகவே இவ்வுலகத்தில் படைத்திருப்பதால் நமது ஆன்மா சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்வதுதான் முதல் இடம் பெறுகிறது.
உடல் சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்வதுகூட நமது ஆன்மீக வாழ்விற்கு உதவுவதற்காகத்தான்.
ஆயினும் நமது முதல் பெற்றோர் செய்த பாவத்தின் விளைவாகப் பழுது பட்டிருக்கும் நமது சுபாவம் உடல் சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே முதல் இடம் கொடுக்க விரும்புகிறது.
இறைமகன் இயேசு மனிதனாகப் பிறந்தது நமது ஆன்மீக மீட்பிற்காகத்தான், நமது உடல் நலத்தைப் பேணுவதற்காக அல்ல.
ஆனாலும் நமது மீட்பின் செய்தியை அறிவித்தபோதே அவர் சென்றவிடமெல்லாம் மக்களின் உடற்பிணியையும் நீக்கினார்.
நாம் சிறு பிள்ளைகளின் நோய் நீங்க கசப்பான மருந்தை இனிப்பான தேனில் கலந்து கொடுக்கிறோம்.
நமது நோக்கம் தேன் கொடுப்பதல்ல, மருந்தைக் கொடுப்பதுதான்.
நேரடியாக மருந்தைக் கொடுத்தால் கசப்பு காரணமாகப் பிள்ளைகள் குடிக்கமாட்டார்கள்.
அதனால்தான் தேனில் கலந்து கொடுக்கிறோம்.
நமது சுபாவத்தை நன்கு அறிந்த இயேசு ஆன்மீக மீட்பாகிய மருந்தை, ' உடல் நலமளித்தல்' என்ற தேனோடு அறிமுகப்பபடுத்தினார்.
ஆகவேதான் ஒவ்வொரு முறைக் குணமாக்கியபோதும் ''உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று,'' என்றார்.
ஆகவே இயேசுவின் ஒவ்வொரு குணமாகுதல் பின்னும் 'விசுவாசம்' என்னும் ஆன்மீக சக்திதான் காரணமாக இருந்திருக்கிறது.
இயேசு சென்றவிடமெல்லாம் மக்களைக் குணமாக்கியது அவர்களுக்குத் தன்மீது விசுவாசத்தை அருளத்தான்.
மக்கள் விசுவாசத்தின் அடிப்படையில் வாழ ஆரம்பித்தபின் விசுவாச வாழ்வுதான் வாழ்வு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நமது உடல் மற்றும் உலக சம்பந்தப்பட்ட வாழ்வும், அதை இறைவனுக்காக வாழ்ந்தால், விசுவாச வாழ்வாய் மாறிவிடும்.
இறைவனுக்காகச் செய்தால் உண்பதும், உறங்குவதுங்கூட விசுவாச வாழ்வுதான்.
நமது செபக்கூட்டங்களில்கூட நோய்கள் நீங்கி சுகம் அளிப்பதற்காக விசேச செப நேரம் ஒதுக்கப் பட்டுள்ளது.
அந்நேரத்தில் செப வழிபாடு நடத்தும் குருவானவர் உடல் நலம் தருவதற்கான செபம் சொல்கிறார்.
அநேகர் நலம் பெறுகின்றனர், சாட்சியமும் சொல்கின்றனர்.
ஆனால் உடல் பெற்றால் மட்டும் போதாது.
நலம் தந்த இறைவனின் வழி நின்று ஆன்மீக மறுமலர்ச்சி பெற வேண்டும்.
செபக்கூட்டத்திற்கு உடல்நலம் இன்றி சென்று உடல்நலத்தோடு திரும்புவதுபோல், ஆன்மீக நலமும் பெற்று, அதாவது பாவசங்கீத்தனம் மூலம் பாவமன்னிப்புப் பெற்று பரிசுத்தமான இருதயத்தோடு திரும்ப வேண்டும்.
உடல் நலத்தைவிட ஆன்மீக நலம்தான் முக்கியம்.
சென்றவிடமெல்லாம் சுகமளித்த இயேசு தனது வளர்ப்புத் தந்தை சூசையப்பர் சுகமின்றி படுத்தபோது சுகம் அளிக்கவில்லை.
சூசையப்பர் இயேசுவின் மடியில்தான் உயிர் விட்டார்.
இறந்த இலாசருக்கு உயிர் அளித்த இயேசு தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவில்லை.
ஏனெனில் அவர் பிறந்ததே நமக்காக உயிர் விடத்தான்.
இயேசுவை விட நமது உயிர் முக்கியமானதல்ல.
ஆன்மீக நலத்தைவிட உடல் நலம் முக்கியமானதல்ல.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment