இறைவனை ஏன் தந்தை என்று அழைக்கிறோம்?
மனித வாழ்வில் உறவு முறை ஒரு முக்கியமான அம்சம்.
உறவு முறை இன்றி ஒருவர் மற்றொருவரை நினைத்துக்கூட பார்க்க முடியாது.
இரத்த உறவு இல்லாவிட்டால்கூட நட்புறவு இருக்கும்.
அதுவும் இல்லாவிட்டால்கூட அயலான் என்ற உறவு இருக்கும்.
நம்மைப் படைத்த இறைவனை நினைக்கவும், நேசிக்கவும் முதலில் ஒரு உறவு முறையை ஏற்படுத்திக்கொள்ள நினைப்பது மனித இயல்பு.
இறைவன் அரூபி.
ஆவி.
உருவம் அற்றவர்.
நம்மைப்போல் உடல் இல்லாதவர்.
உருவம் அற்ற இறைவன் ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்க முடியாது.
நமக்கு உருக் கொடுத்த இறைவனை நமது மொழியில் அழைக்க எண்ணும்போது, இவ்வாழ்வில் நம்மைப் பெற்றெடுத்த பெற்றோர் நினைவுக்கு வருகிறார்கள்.
இவ்வுலகில் நம்மைப் பெற்றவர்கள் அப்பா, அம்மாவாக இருப்பதால், ஒன்றுமில்லாமையிலிருந்து நம்மை உருவாக்கிய இறைவனை அப்பா என்றோ, அம்மா என்றோ, அம்மையப்பா என்றோ அழைக்கலாம்.
தப்பில்லை.
இறைவன் எதிர்பார்ப்பது நமது ஆழமான அன்பைத்தான்.
ஆயினும்,
நாம் இயேசுவின் சீடர்கள்.
எல்லா வகையிலும் இயேசுவைப் பின்பற்றுபவர்கள்.
இயேசு கடவுள்.
பரிசுத்த தமதிருத்துவத்தின் இரண்டாம் ஆளாகிய இயேசு, முதல் ஆளைத் தந்தை எனவும், தன்னை மகன் எனவும் அறிமுகப்படுத்தினார்.
அவர் மனிதனாகப் பிறந்தபோது ஆண்மகனாகப் பிறந்தார்.
மனித சுபாவத்தில் அவர் மரியாயின் மகன். தந்தை இல்லை.
தேவசுபாவத்தில் தன்னை இறைத்தந்தையின் மகன் என்று அறிமுகப்படுத்தினார்.
தந்தை, மகன் என்றவுடனே அதை மனித மனித உறவுபோல் கற்பனை செய்துவிடக்கூடாது.
ஏனெனில், மனித உறவில் தந்தை மகனுக்கு மூத்தவராய் இருப்பார்.
ஆனால், தமதிருத்துவத்தின் மூன்று ஆட்களில் மூத்தவர், இளையவர் என்ற பேச்சுக்கே இடமில்லை.
மூவரும் நித்தியமாக, துவக்கமும் முடிவுமின்றி ஒரே கடவுள்.
பழைய ஏற்பாட்டில் இறைவனை யகோவா என்று அழைத்தார்கள்.
புதிய ஏற்பாட்டில் இறைமகன் இயேசு தன் தந்தை இறைவனை நமது தந்தையாக அறிமுகப்படுத்தியதால் நாமும் தந்தை என்று அழைக்கிறோம்.
தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே, ஆமென்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment