கடவுளால் கோபப்பட முடியுமா?
********************************
கடவுள் தன் பண்புகளில் அளவு கடந்தவர்.
நாம் நமது பண்புகளில் அளவு உள்ளவர்கள்.
கடலும், தம்ளரும் அளவு உள்ளவைதான்.
ஆனாலும் முழுக் கடலையும் ஒரு தம்ளரால் கொள்ள முடியுமா?
முடியாது.
அளவில் வித்தியாசம் இருப்பதால் ஒரு சிறிய பொருளால் பெரிய பொருளைக் கொள்ள முடியவில்லையே, அளவு உள்ள நம்மால் அளவற்ற கடவுளை முற்றிலும் புரிந்து கொள்ள முடியுமா?
கடவுளை உள்ளபடியே விபரிக்க மனித மொழியில் வார்த்தைகள் இல்லை.
நம்மிடம் உள்ள வார்த்தைகளைக் கொண்டு முடிந்த அளவு விபரிக்கிறோம்.
கடவுளைப் பற்றி பேசும்போது அவரைப் பற்றிய வார்த்தைகளைப் புரிந்துகொள்ள வேண்டிய விதமாய்ப் புரிந்துகொள்ள வேண்டும்.
உதாரணத்திற்கு,
'கடவுள் அன்பாயிருக்கிறார்' - 'நாம் அன்பாயிருக்கிறோம்'.
அன்பு என்ற சொல்லுக்குப் பொருள் ஒன்றுதான்.
ஆனால் நாம் அன்பு செய்வதற்கும், கடவுள் அன்பு செய்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
நமது அன்பு
அளவுள்ளது,
ஆளுக்கு ஆள் அளவு மாறக்கூடியது,
ஏறிஇறங்கக்கூடிய உணர்ச்சிகள் உள்ளது,
நாம் அன்பு செய்வதை இன்னொருவர் அன்பு செய்தால் பொறுத்துக்கொள்ளாதது,
மறைந்து வெறுப்புக்கு இடம் கொடுக்கக்கூடியது.
ஆனால்,
இறையன்பு
நித்தியமானது,
அளவு கடந்தது,
எல்லோருக்கும் உரியது,
வெறுப்பவர்களையும் நேசிப்பது,
பாவிகளையும் நேசிப்பது,
அளவு மாறக்கூடிய உணர்ச்சிகட்கு அப்பாற்பட்டது.
நம்மிடம் அன்பு உள்ளது.
ஆனால்,
கடவுள் அன்பானவர்.
We have love,
but,
God is love.
அன்பிடம் அன்பிற்கு எதிரான, அன்போடு ஒத்துப் போகாத பண்பு எதுவும் இருக்க முடியாது.
அதாவது ,
கடவுளிடம் அன்பிற்கு எதிரான, அன்போடு ஒத்துப் போகாத பண்பு எதுவும் இருக்க முடியாது.
அன்போடு ஒத்துப் போகக்கூடியவை இரக்கம், கருணை, கனிவு ஆகிய
பண்புகள்.
ஆகவே,
கடவுள்
இரக்கமாயிருக்கிறார்,
கருணையாயிருக்கிறார்,
கனிவாயிருக்கிறார்.
ஆனால்,
வெறுப்பு, கோபம் ஆகிய பண்புகள் அளவற்ற அன்போடு ஒத்துவராதவை.
ஆகவே, கடவுளிடம் வெறுப்பு, கோபம் ஆகிய பண்புகள் இருக்க முடியாது.
கடவுளிடம் எந்தப் பண்பு இருந்தாலும் அது நித்தியமானதாகவும், அளவற்றதாவும் இருக்கும்.
நித்திய காலமும் வெறுப்பும், கோபமும் உள்ள கடவுளக் கற்பனை பண்ணிப்பார்க்க முடியுமா?
கடவுள் அன்புமயமானவர்.
அவர் நித்தியகாலமும் தன்னையே அன்பு செய்கிறார், நம்மையும் அன்பு செய்கிறார்.
'அன்பு' என்ற வார்த்தைக்குப் பதில் 'வெறுப்பு, கோபம்' என்ற வார்த்தைகளைக் கற்பனையில்கூடப் போட்டுப் பார்க்க முடியுமா?
முடியாது.
அன்புமயமான கடவுளால் அன்பு மட்டும்தான் செய்ய முடியும்.
வெறுக்கவும் மமுடியாது, கோபப்படவும் முடியாது.
அப்படி முடிந்திருந்தால் ஆதாம், ஏவாளோடு உலகம் முடிந்திருக்கும்.
பைபிளில் கடவுளுக்குக் கோபம் வந்ததாக வரும் வசனங்களுக்கு என்ன பொருள் ?
மனிதருக்கு மனித சிந்தனைகளையும், செயல்பாடுகளையும் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.
மனித மொழியில் அவற்றை விளக்கமட்டுமே வார்த்தைகள் உள்ளன.
இறைவனது சிந்தனைகளையும், செயல்பாடுகளையும் விளக்க நம் மொழியில் பொருத்தமான வார்த்தைகள் இல்லை.
ஆகவே இறைவன் தீர்க்கத்தரிசிகளுக்குத் தன்னை வெளிப்படுத்தியபோது, அவர்கள் ஆவியான இறைவனை நம்மைப் போல் கற்பனை செய்து, இறைவன் தங்களுக்கு வெளிப்படுத்தியவற்றை எழுதினார்கள்.
இது அவர்கள் பயன்படுத்திய இலக்கிய யுக்தி.
“ஒளி தோன்றுக!” என்றார்;
ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்.
கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்"
மேலே குறிப்பிடப்பட்டுள்ள வேத வாக்கியங்களில் வரும்
'என்றார்;
'நாசிகளில் உயிர் மூச்சை ஊத,'
'ஓய்ந்திருந்தார்'
என்ற சொற்றறொடர்களில் வேதாகம ஆசிரியர் அரூபியான இறைவனுக்கு மனித உருக் கொடுத்திருக்கிறார்.
மனிதனால்தான் பேசமுடியும்,
மூச்சை ஊத முடியும், ஓய்ந்திருக்க முடியும்.
இறைவனின் செயல்பாட்டை நமக்குப் புரியும்படி விளக்க இதைத்தவிர வேறு வழியில்லை.
நமது பிள்ளைகள் தவறு செய்யும்போது அவர்களைத் திருத்த கோபப்படுகிறோம், அடிக்கிறோம்.
இஸ்ராயேல் மக்கள் தவறு செய்தபோது அவர்களைத் திருத்த இறைவன் செய்தவற்றை நமக்குப் புரியும்படி நமது பாணியிலேயே ஆசிரியர் விளக்கியிருக்கிறார்.
அவர் தம் மக்களைத் துன்பப்பட அனுமதித்தது அவர்களைத் திருத்தவே, அது அவரது அளவில்லா அன்பின் காரணமாக.
மற்றபடி அன்பே உருவான இறைவனால் கோபப்பட முடியாது.
கோபம் திடீரென்று வருவது, காரணம் தீர்ந்தவுடன் மறைவது.
இறைவன் மாறாதவர், மாறாத இறைவனுக்கு வந்து போகக்கூடிய கோபம் எப்படி வரும்?
இறைவனின் பண்புகள் நித்தியமானவை, மாறாதவை, அளவில்லாதவை.
இறைவனின் பண்புகளாகிய
அன்பு, நீதி, ஞானம், வல்லமை, நன்மைத்தனம், புத்தி ஆகியவை நித்தியமானவை, மாறாதவை, அளவில்லாதவை.
கோபம் முற்றிலும் மனித குணம்.
இறைவனால் கோபப்பட முடியாது.
நமது பாவத்தின் காரணமாக நமக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டால் அது இறைவனின் அன்பின் காரணமாகவே, நம்மைத் திருத்துவற்காக அவர் அனுமதிப்பது.
துன்பம் வரும்போது இறைவனுக்கு நன்றி சொல்வோம்,
ஏனெனில்,
அது நம்மை நல்லவர்களாக மாற்ற இறைவன் பயன்படுத்தும் அன்பின் ஆயுதம்.
அவரால் கோபப்பட முடியாது.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment