“விசுவாசம் குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?”
(மத்.8:26)
*****************************************
இயேசுவும், அவரது சீடர்களும் ஒரு படகில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இயேசு தூங்கிக் கொண்டிருக்கிறார்.
திடீரென்று கடலில் கொந்தளிப்பு ஏற்படுகிறது.
சீடர்கள் பயந்து இயேசுவை எழுப்புகிறார்கள்.
இயேசு எழுந்து சீடர்களை நோக்கி, “விசுவாசம் குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?” என்கிறார்.
சீடர்களுக்கு இயேசுவின்மீது விசுவாசம் இருக்கிறது.
ஆகவேதான் சீடர்களாயிருக்கிறார்கள்.
ஆனால், குறைவாக இருக்கிறது.
ஆகவேதான், "“விசுவாசம் குன்றியவர்களே,'' என்று அழைக்கிறார்.
அவர்களது விசுவாசம் ஆழமாய் இருந்திருந்தால், அவர்களோடு சர்வ வல்லவ தேவனாகிய இயேசு இருக்கும்பபோது அவர்கள் கடல் கொந்தளிப்புக்கு அஞ்சியிருக்கக்கூடாது.
உயிர் வாழ உடலில் சக்தி வேண்டும்.
சக்தி மிகக் குறைவாக இருந்தால் உயிரோடு படுத்திருக்கலாம்.
எழுவது, நடப்பது, ஓடுவது, உற்சாகமாய் வேலை செய்வது ஆகியவை நம்மிடம் இருக்கும் சக்தியின் அளவைப் பொறுத்தது.
நமது ஆன்மீக வாழ்விற்கு அடிப்படை நமது விசுவாசம்.
விசுவாசத்தின் ஆழத்திற்கு ஏற்ப ஆன்மீக வாழ்வின் தரமும் இருக்கும்.
நம்மிடம் விசுவாசம் இருக்கிறது.
ஆகவேதான் கிறிஸ்தவர்களாக இருக்கிறோம்.
ஆனால் நமது விசுவாசம் எந்த அளவு இருக்கிறது?
இறைவன் எங்கும் இருக்கிறார் என்று விசுவசிக்கிறோம்
ஆனால் அவர் நமது இருதயத்தில் தனது அளவற்ற அன்புடனும், வல்லமையோடும் இருக்கிறார் என்பதை உண்மையிலேயே உணர்கிறோமா?
நமது கண்ணிற்கு முன்னால் நமது அன்பிற்கு உரியவர் இருந்தால் எப்படி உணர்கிறோமோ அதேபோல் நம்முள் இறைவன் இருப்பதை உணர்கிறோமா?
நம்முள்இறைவன் இருப்தை நாம் உணர்ந்தால் நம் சிந்தனை, சொல், செயல் இப்போது இருப்பது போலவா இருக்கும்?
நமது விசுவாசம் ஆழமாய் இருந்தால், இறைவன் நம்மில் இருக்கும்போது நாம் அவருக்குள் இருப்பதை உணர்வோம்.
விசுவாசம் இருக்குமிடத்தில் அச்சம் இருக்காது.
நம்பிக்கை இருக்கும்.
சுகமில்லையா?
நம்மைப் படைத்தவர் நம்மோடு இருக்கிறார்.
நம்மைக் குணமாக்க அவரால் முடியும் என்று விசுவசிப்போம்.
சுகம் கிடைக்கும் என்று உறுதியாக நம்புவோம்.
நிச்சயம் சுகம் கிடைக்கும்.
நாம் எதைப்பற்றியாவது கவலைப்படுகிறோமென்றால் நம்மிடம் போதிய விசுவாசம் இல்லை என்றுதான் பொருள்.
விசுவாசம் ஆழமாய் இருந்தால் நம்பிக்கையும் ஆழமாயிருக்கும்.
இறைவனால் எல்லாம் முடியும்.
நமக்கு இறைவன் மீது உறுதியான விசுவாசமும் நம்பிக்கையும் இருந்தால் அவரே நம் மூலம் செயலாற்றுவார்.
"வாழ்வது நானல்ல, கிறிஸ்துவே என்னில் வாழ்கிறார் "
என்பது உண்மையானால்,
"செயலாற்றுவது நானல்ல, கிறிஸ்துவே என் மூலம் செயலாற்றுகிறார் '' என்பதும் உண்மை.
இங்கு இன்னொரு உண்மையையும் இங்கே குறிக்க வேண்டும்.
''ஆகவே
அனைத்திற்கும் மேலாக
அவரது ஆட்சியையும்
அவருக்கு ஏற்புடையவற்றையும்
நாடுங்கள்.
அப்போது
இவையனைத்தும்
உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.
34ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள்.''
(மத்.6:33,34)
இவை நம் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகள்.
உண்மையான விசுவாசம் உள்ளவர்கள் இறைவனது இராட்சியத்தை மட்டும் தேடுவார்கள்.
அவர்கட்குத் தேவையான மற்ற காரியங்களை இறைவனே கவனித்துக் கொள்வார்.
இயேசு கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவார்.
''இயேசுவே,
உம் கட்டளைப்படி
உம்மை அன்பு செய்கிறேன்.
என் அயலானையும் அன்பு செய்கிறேன்.
உமக்காக என் அயலானுக்கு
சேவை செய்வதின் மூலம்
உமக்கு சேவை செய்கிறேன்.
இவ்வுலகில் எனக்கு என்ன தேவை என்று
உமக்குத் தெரியும்.
அவற்றை நீரே கவனித்துக் கொள்ளும்.
எனது விசுவாசத்தையும்,
நம்பிக்கையையும்,
அன்பையும்
அதிகரித்தருளும்.
ஆமென்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment