நான் மரம் பேசுகிறேன்.
*************************************
ஒரு அழகான தோட்டம்.
எங்கு நோக்கினும் கொள்ளை அழகுடன் பூத்துக் குலுங்கும் மலர்ச்செடிகள்.
விதவிதமாய்க் காய்த்து, பழுத்துத் தொடுமுன்பே நாவைக் கிள்ளி இழுக்கும் பழங்கள் தொங்கும் பழ மரங்கள்.
நானும் அவற்றுள் ஒருவன்.
ஓங்கி வளர்ந்தவன்.
பசுமையான இலைகளும், மணம் பரப்பும் மலர்களும், இனிமையான பழங்களும் நிறைந்தவன்.
அந்தத் தோட்டத்தில் அழகான ஒரு ஆண்மகனும், பெண்மகளும் ஜோடியாக முகத்தில் நடமாடும் மகிழ்ச்சியுடன் தினம் பலமுறை வலம் வருவர்.
ஒருவருக்கொருவர் கை கோர்த்துக்கொண்டு மிகவும் ஆனந்தமாக உரையாடிக்கொண்டுத் தோட்டத்தை வலம் வருவதைப் பார்க்கும்போது எனக்குப் பொறாமையாக இருக்கும்!
பெண்மணி அழகான பூக்களைப் பறித்து முகர்ந்து பார்த்துக்கொண்டே செல்வாள்.
ஆண்மகன் ஆங்காங்கே பழங்களைப் பறித்துத் தானும் தின்று மனைவிக்கும் கொடுத்துக்கொண்டு செல்வாள்.
ஆனால் ஒரு முறைகூட என்னைத் திரும்பிகூட பார்க்கவில்லை.
இவ்வளவுக்கும் என் பழங்கள் மற்ற மரத்துப் பழங்களைவிட கவர்ச்சியாய் இருந்தன.
ஒருநாள் அவர்கள் நடப்பதைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தபோது, பயங்கர சைஸ் பாம்பு ஒன்று என்மேல் ஏlறியது.
ஒருவேளை பாம்பிற்கு பழங்கள்மீது ஆசைவந்துவிட்டதோ என்று எண்ணினேன்.
ஆனால் அது பேச ஆரம்பித்தது.
பெண்ணை நோக்கி குரல் கொடுத்தது.
அவள் திரும்பிப் பார்த்தாள்.
அருகே வர அழைத்தது.
பாம்பு பேசுவதைக் கேட்ட பெண் ஏதோ வினோதப் பிரியத்தில் என் அருகே வந்தாள்.
பெண் என் அருகே வந்தது அதுதான் முதல் தடவை.
ஆண்மகனும் அவள் கூடவே வந்தான்.
பெண் கேட்டாள், "எதற்கு அழைத்தாய்?"
“கடவுள் உங்களிடம் தோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலிருந்தும் உண்ணக்கூடாது என்றது உண்மையா?”
‘தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது; அதைத் தொடவும் கூடாது. மீறினால் நீங்கள் சாவீர்கள்’ என்று கடவுள் சொன்னார்,”
“நீங்கள் சாகவே மாட்டீர்கள்; ஏனெனில் நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்”.
இப்போது எனக்குப் புரிந்தது, என் மேல் அமர்ந்து பேசியது பாம்பல்ல, பாம்பின் வடிவில் வந்த சாத்தான் என்று.
சாத்தானின் சொற்கேட்டு என்னிடமிருந்து பழத்தைப் பறித்து தான் தின்றதோடு தன் கணவனுக்கும் கொடுத்தாள்.
இருவரும் ருசித்துச் சாப்பிட்டார்கள்.
விலக்கப்பட்ட கனின்னாலே ருசியே தனிதான்!
அன்று சாப்பிட்டு விட்டுப் போனவங்கதான் திரும்ப வரவேயில்லை.
.
☺நானும் வெகுநாள் வாழ்ந்து இறந்து விட்டேன்.
பழக்கொத்துகளுடன் வாழ்ந்த நான் காய்ந்த மரக்கட்டையாய் மாறிவிட்டேன்.
இந்த கட்டை நிலையில் எவ்வளவுநாள் இருந்தேனோ தெரியாது.
குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுகள் இருக்கலாம்.
அதற்கு மேலேயும் இருக்கலாம்.
ஒரு நாள் என்னில் ஒரு கிளையை யாரோ வெட்டிக்கொண்டு போனார்கள்.
பின் அதை இரண்டாக வெட்டினார்கள்.
பின் இரண்டு துண்டுகளையும் குறுக்கு நெடுக்காக ஆணியால் சேர்த்து ஒரு சிலுவையாக மாற்றினார்கள்.
எதற்காக என்னைச் சிலுவையாக மாற்றினார்கள்?
குற்றவாளிகளைத்
தண்டிப்பதற்குச் சிலுவையில் அறைவது வழக்கம்.
என் மேல் எந்தக் குற்றவாளியை அறையப்போகிறார்கள்?
என்னை எடுத்துக்கொண்டு ஒரு அரண்மனை நீதி மன்றத்திகுச் சென்றனர்.
முப்பத்து மூன்று வயதிருக்கும்.
மாசுமருவற்ற, பேரழகு வாய்ந்த முகம்.
உடல் முழுதும், பேரழகு வாய்ந்த முகம் உட்பட, கசையடிக் காயங்கள்.
கசையடியால் பிய்ந்து தொங்கும் இரத்தம் சொட்டும் சதைத்துண்டுகள், முள்முடி சூட்டப்பட்ட தலை, கால் பட்ட இடமெல்லாம் இரத்த வெள்ளம் - இவரா குற்றவாளி?
முகத்தில் தெய்வீக அம்சம் தெரிகிறதே!
இவரா குற்றவாளி?
நம்பமுடியவில்லையே.
என்னை அவர் தோள் மேல் ஏற்றினார்கள்.
ஏற்றும்போதே ஒருவன் அவரைக் கசையால் அடித்தான்.
ஒருவன் அவர் முகத்தில் காரித் துப்பினான்.
ஆனால் அவர் முகத்தில் கோபமே தெரியவில்லை.
நிச்சயமாக இவர் குற்றவாளியாக இருக்கமுடியாது.
யார் செய்த குற்றத்தையே இவர்மேல் சாட்டியிருப்பார்கள்.
அவரும் மறுக்காமல் தண்டனையை ஏற்றுக்கொண்டிருப்பார்.
எனக்குப் பேச வாயில்லை. அல்லது நானே விபரம் கேட்டிருப்பேன்.
என்னை அவர் தோள் மேல் ஏற்றவும் எனக்கு என்னமோ மாதிரி இருந்தது.
அவர் மேல் நான் பட்டது கடவுளைத் தொட்டது மாதிரி இருந்தது.
என்னைச் சுமந்து நடக்க ஆரம்பித்தார்.
ஆனால் எனது சுமை காரணத்தினாலும், அவர் பட்ட அடிகளால் உடல் பலம் குறைந்திருந்த காரணத்தினாலும் அவரால் நடக்க இயலலவில்லை.
அவர் அடிக்கடி என்னோடு கீழே விழுந்தார்.
ஒவ்வொரு முறையும் கசையால் அடித்தே அவரை எழச் செய்தார்கள்.
இப்படி விழுந்தும் எழுந்தும் மிக வேதனையோடு மெதுவாக நடந்தார்.
அவரைப் பார்க்க பாவமாயிருந்தது.
இந்த சிலுவைப் பாதையில் சில பக்தியுள்ள பெண்கள் நடந்து வந்தார்கள்.
அவர்களுள் ஒருவர் முகம் என்னைச் சுமந்து செல்பவரின் முகச்சாயலாக இருந்தது.
அவர் இவரின் தாயாக
இருக்கலாம்.
முகத்தில் சோகம் இருந்தது.
அவருடன் வந்த மற்ற பெண்மணிகள் தங்களுக்குள் பேசிக்கொண்டதிலிருந்து சில உண்மைகள் தெரியவந்தன.
என்னைச் சுமந்து செல்பவர் பெயர் இயேசு.
மனிதர் செய்த பாவங்களிலிருந்து
அவர்களை மீட்கத் தன்னையே பலியாக ஒப்புக்கொடுக்க மனிதனாய்ப் பிறந்த இறைமகன்.
சிலுவை மரணம் அவராகவே விரும்பி ஏற்றுக்கொண்ட ஒன்று.
அவரே இதைப் பற்றி முன்னறிவித்திருக்கிறார்.
அவர் சுமந்து செல்வது மனித இனத்தின் பாவங்ளையே.
இப்போது ஒன்று புரிந்தது.
சாத்தான் என்மீது அமர்ந்துதான் முதல் பெண்மணியை ஏமாற்றியது.
தன் மரணத்தின் மூலம் சாத்தானை வெற்றி கொள்ளப்போவதற்கு அடையாளமாகவே சாத்தான் அமர்ந்திருந்த என்னை தான் பலியாகப்போகும் கருவியாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
சாத்தானைச் சுமந்ததற்குப் பரிகாரமாக நான் இறைமகனையே சுமக்கப்போகிறேன்.
என்மேல் மரிக்கப்போகின்றவர் குற்றவாளி அல்ல.
குற்றவாளிகளை மீட்கப்போகிறவர்.
அவரை நினைப்பவர்களெல்லாம் என்னையும் நினைப்பார்கள்.
பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெரும் என்பார்கள்.
இனி இயேசுவிற்கு முத்தம் கொடுப்பவர்கள் எனக்கும் கொடுப்பார்கள்!
நான் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
என்மீது அறையப்படப்போகும் இடத்திற்கு வந்தாயிற்று.
என்னைக் கீழே கிடத்தினார்கள்.
இயேசுவின் ஆடைகளை அகற்றிவிட்டு என்மேல் கிடத்தினார்கள்.
ஆணிகளால் அவரது கைகளையும், பாதங்களையும் என்னோடு அறைந்தார்கள்.
ஆணிகள் அவரது தோலையும், எலும்புகளையும், நரம்புகளையும் ஊடுருவி, என்னையும் ஊடுருவிச் செல்லும்போது அவருக்கு எவ்வளவு வேதனை இருந்திருக்கும்!
ஆணிகளை சுத்தியலால் அறையும் ஒவ்வொரு முறையும் அவரது உடல் வேதனையால் துள்ளியதை என்னால் உணர முடிந்தது.
ஒரு பக்கத்தில் அறைந்தபின் என்னை மாற்றிப்போட்டு மறுபக்கத்தில் நீண்டு கொண்டிருக்கும் ஆணிகளை வளையும்படி அறைந்தார்கள்.
இயேசு முகம் குப்புற இருந்ததால்
ஒவ்வொரு அறையிலும் அவரது முகமும் உடலும் தரையில் உரசி மோதியதால் சொல்லவண்ணா வேதனை ஏற்பட்டிருக்கும்.
நான் இரத்த வெள்ளத்தில் மிதந்தேன்.
பின்னர் என்னை நிமிர்த்து நட்டினார்கள்.
முதல் தாயை ஏமாற்றிய சாத்தான் அமர்ந்த என்மீது இயேசு தொங்குகிறார்.
சாத்தானின் இராட்சியம், அதாவது, பாவம் இருந்த அதே இடத்தில் இயேசுவின் இராட்சியம் ஏற்படும் என்பதற்கு இது ஒரு முன் அடையாளம்.
என்மேல் இயேசு இருப்பதால் என்னைப் பார்த்தவுடன் சாத்தான் பயந்து ஓடுவான்.
பாவச் சோதனை ஏற்படும்போது சிலுவை அடையாளம் போட்டால் போதும்.
சோதனை பறந்துவிடும்.
என் அருகில் இயேசுவின் தாய் நின்றுகொண்டிருக்கிறார்கள்.
அவர்களைப் பார்த்தவுடன் எனக்குப் பழைய ஞாபகம் வருகிறது.
அன்று சாத்தான் ஏறிய என் அருகில் ஏவாள்.
இன்று இயேசு தொங்கும் என் அருகே அவரின் தாய்!
என்னையும் இயேசுவையும் எப்படி பிரிக்க முடியாதோ, அதேபோல் இயேசுவையும் அவரது தாயையும் பிரிக்க முடியாது.
சிலுவை இருக்குமிடமெல்லாம் இயேசு இருக்கிறார்.
சிலுவையை, அதாவது துன்பத்தைச், சுமப்பவர்கள் இயேசுவைச் சுமக்கிறார்கள்.
கிறிஸ்தவர்கள் என்றால் இயேசுவைச் சுமப்பவர்கள் என்றுதான் பொருள்.
நான் மரம்தான், ஆனால் சிலுவை மரம்.
என்னைப் பற்றிக்கொள்ளுங்கள், இயேசுவும் உங்களோடு இருப்பார்.
சிலுவை மரம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment