சுயநலம் பேணுவது குற்றமா?
********************************
இறைன்பு, பிறரன்பு, சேவை பற்றி பேசும்போது சுயநலம் பற்றி பேசுவது தவறானதுபோல் தோன்றும்.
சுயநலம் தவறானதா?
சரியாகப் புரிந்துகொண்டால்
சரியானது,
தவறாகப் புரிந்துகொண்டால் தவறானது.
சுயநலமின்றி பிறர் நலமில்லை.
இறைவன் நமது ஆன்மீக வாழ்விற்கு அடிப்படையாகத் தந்திருக்கும் கட்டளைகள் இரண்டு:
“‘இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக’
என்பது முதன்மையான கட்டளை."
‘'உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும்
அன்பு கூர்வாயாக.''
(மாற்கு.12:30,31)
பிறர்நல ஆன்மீகம் மீதான கட்டளை, "உன்மீது நீ அன்புகூர்வது போல்," என்று ஆரம்பிக்கிறது.
நாம் நம்மை நேசிப்பதுபோல் பிறரை நேசிக்க வேண்டும்.
நம்மை நேசிக்க வேண்டும் என்பது கட்டளை அல்ல.
அதற்குக் கட்டளை தேவை இல்லை.
ஏனெனில் இறைவன் நம்மைப் படைக்கும்போது தன் சாயலாகப் படைத்தார்.
இறைவன் அன்புமயமானவர்.
அன்புமயமான இறைவன் தன்னையே அளவு கடந்த விதமாய் அன்பு செய்கிறார்.
அன்பின் ஒரே பணி அன்பு செய்வதுதான்.
தன்னையே அன்பு செய்கிற இறைவன் தன் அளவற்ற அன்பைப் பகிர்ந்து கொள்வதற்காக சம்மனசுக்களையும், நம்மையும் படைத்தார்.
நம் மொழியில் கொஞ்சம் அழுத்தமாக சொல்லவேண்டுமென்றால்,
கடவுளின் ஒரே வேலை தன்னையும், நம்மையும் அன்பு செய்வதுதான்.
படைத்தல், காத்தல், மன்னித்தல், இரட்சித்தல் போன்ற மற்ற செயல்களெல்லாம் அவரது அன்பின் விளைவே.
அன்பே நம்மைப் படைத்ததால் படைத்தவரைப்போலவே சுபாவத்திலேயே (By nature) நாம் நம்மையே அன்பு செய்கிறோம்.
சுய அன்புக்குக் கட்டளை தேவையில்லை.
இறைவனது கட்டளை, 'நாம் நம்மை நேசிப்பதுபோல் நமது அயலானையும் நேசிக்கவேண்டும்' என்பதுதான்.
இறைவன் நம்மைப் படைத்தது அவரை நாம் அன்பு செய்வதற்காகத்தான்.
அன்பு அன்பை எதிர்பார்க்கும்.
இது அன்பின் இயல்பு.
நமது அனுபவத்தில், நாம் யாரை அன்பு செய்கிறோமோ அவரிடமிருந்து பதில் அன்பை எதிர்பார்க்கிறோம்.
நம்மை அளவு கடந்து அன்பு செய்யும் இறைவன் நம்மிடமிருந்து அன்பை எதிர்பார்க்கிறார்.
இறைவன் பரிபூரணமானவர்.
நாம் செய்யும் அன்பினால் அவருக்கு ஆதாயம் ஏதுமில்லை.
நமக்குதான் ஆதாயம்.
நாம் செலுத்தும் அன்பின் அளவுக்கு ஏற்ப அவர் நமக்கு அருளவிருக்கிற நித்திய பேரின்பத்தின் அளவும் அதிகரிக்கும்.
ஆக சுயநலம் தன்னிலே தவரானது அல்ல, அது இறைவன் தந்த வரம்.
ஆனால் எவ்வாறு இறைவன் தன்மீது கொண்டுள்ள அன்பை நமக்கும் பகிர்ந்து தந்துள்ளாரோ, அதுபோல் நாமும் நமது அன்பை இறைவனுக்கும், நமது அயலானுக்கும் தரவேண்டும்.
அதாவது, நாம் நமது வாழ்வை இறைவனுக்காகவும், பிறருக்காகவும் வாழவேண்ணடும்.
நமது வாழ்வை இறைவனுக்காகவும், நமது அயலானுக்காகவும் தியாகம் செய்யவேண்டும்.
பிறர் வாழ்வை நமது நலனுக்காகத் தியாகம் செய்யக்கூடாது.
பிறரை உண்பிக்க நாம் உண்ணாதிருக்கலாம், நாம் உண்ண பிறர் உணவைப் பிடுங்கக்கூடாது.
பிறர் குடியிருக்க நமது வீட்டைத் தியாகம் செய்யலாம்.
நாம் குடியிருக்கப் பிறர் வீட்டைப் பிடுங்கக்கூடாது.
பிறரை வாழ்விக்க நமது உயிரைத் தியாகம் செய்யலாம்.
நாம் உயிர் வாழ பிறர் உயிரை எடுத்துவிடக் கூடாது.
பிறர் நலம் பேணுவதற்காகத்தான் சுய நலம் தரப்பட்டுள்ளது.
நம் ஆண்டவர் இயேசு நமக்காகப் பிறந்தார், நமக்காக வாழ்ந்தார்,
நமக்காகத் தன் உயிரைக் கொடுத்தார்.
நாம் இயேசுவைப் பின்பற்றுபவர்கள், சொல்லில் மட்டுமல்ல, வாழ்விலும்.
நாம் வாழ்வது நமக்காக மட்டுமல்ல, இறைவனுக்காகவும், பிறருக்காகவும்தான்.
ஆகவே நாம் இறைவனுக்காகவும், பிறருக்காகவும்
சுயநலம் பேணுவது குற்றமானது அல்ல.
இறைவனை நேசித்து, நமது அயலானை வாழ்விக்க, வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment