"கிளையானது திராட்சைக் கொடியில் நிலைத்திருந்தாலன்றி, தானாகக் கனி தரமுடியாது."
(அரு.15:4)
*******************************
"நானே உண்மையான திராட்சைக்கொடி."
இயேசு மிகப் பெரிய உண்மைகளைச் சாதாரண மக்களுக்கு விளக்கும்போது கதைகளையும், உவமைகளையும் பயன்படுத்துவது வழக்கம்.
இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவை ஒரு திராட்சைக் கொடிக்கு ஒப்பிட்டு விளக்குகிறார்.
தந்தை திராட்சைக் கொடியைப் பயிர் செய்பவர்,
இயேசு திராட்சைக் கொடி,
நாம் அதன் கிளைகள்.
கிளைகள் கொடியோடு இணைந்திருந்தால்தான் பூத்துக் காய்த்துப் பலன் தரும்.
கிளைகளைக் கொடியிலிருந்து பிரித்துவிட்டால் அவை உலர்ந்து போய்விடும்.
பலன் தராது.
அவ்வாறே நாமும் இயேசுவோடு இணைந்திருந்தால்தான் நம்மால் ஆன்மீகப் பலன் தர இயலும்.
இயேசு தந்தைக்கும் நமக்கும் இடையே உள்ள பாலம்.
இயேசுவின் மூலமாகத்தான் நாம் தந்தையை அடைய முடியும்.
நமக்கும் இயேசுவுக்கும் இடையே
உள்ள உறவு அறுபட்டுவிட்டால் நம்மால் தந்தையை அடைய முடியாது.
நமக்கும் இயேசுவுக்கும் இடையே
உறவு உள்ளது என்று எப்படி அறிவது?
நமது ஆன்மா தேவ இஸ்டப்பிரசாத நிலையில், அதாவது, சாவான பாவமின்றி, இருந்தால் நமக்கும் இயேசுவுக்கும் இடையே
உறவு உள்ளது என்று அருத்தம்.
இந்நிலையில் இருந்தால் மட்டுமே நம்மால் நற்காரியங்கள் செய்ய முடியும்.
இந்நிலையில் இருந்தால் மட்டுமே நமது அன்புச் செயல்களுக்கு நித்திய சம்பாவனை உண்டு.
பாவ நிலையில் நாம் என்ன செய்தாலும் பயன் இல்லை.
இயேசுவின் அன்புச் சகோதரர்களாக இருந்தால் மட்டுமே அவரது தந்தையை நமது தந்தை என்று அழைக்கலாம்.
பாவசங்கீத்தனம் செய்வோரின் எண்ணிக்கை வரவரக் குறைந்து கொண்டே வருகிறது.
இயேசுவின் அன்பு சகோதரர்களாக, பரலோகத் தந்தையின் பிள்ளைகளாக வாழ பாவசங்கீத்தனம் மிக அவசியமான சாதனம்.
நம்மைத் திராட்சைக் கொடியின் கிளைகளாக ஒப்பிட்டிருப்பதில் இன்னொரு பொருளும் இருக்கிறது.
திராட்சைக் கொடிகளின் அவ்வப்போது கத்தரித்து விட்டால் புதிய தளிர் விட்டு நன்கு காய்க்கும்.
நாம் ஆன்மீக வாழ்வில் நல்ல பலன் தர நம்மிடமுள்ள வேண்டாத குணங்களை அடிக்கடி கத்தரித்துவிட வேண்டும்.
வேண்டாத குணங்களைக் கத்தரித்து விடும்போது வேண்டிய குணங்கள் தளிர்விடும்.
ஞாபகத்தில் வைத்துக்கொள்வோம்:
விண்ணகத் தந்தையை அடைய இயேசு மட்டுமே வழி.
அவ்வழியே செல்ல பாவமில்லாமை அவசியம்.
பாவமில்லாதிருக்க பாவசங்கீத்தனம் அத்தியாவசிய சாதனம்.
பாவ மன்னிப்பு பெற்று,
இயேசு வழியே
தந்தையிடம்
செல்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment