Sunday, January 7, 2018

இறைவன் நமக்காக மனிதன் ஆனது அவரின் அன்பின் காரணமாகவா, நீதியின் காரணமாகவா?

இறைவன் நமக்காக மனிதன் ஆனது  அவரின் அன்பின் காரணமாகவா, நீதியின் காரணமாகவா?
******************************************
கண்டிப்பான, நீதி நியாயம் பேசக்கூடிய பெற்றோர்,

விளையாட்டுக்கார ஐந்து வயது மகன் ,

கருணையும், அன்பும் நிறைந்த தாத்தா,

இது ஒரு குடும்பம்.

ஒரு நாள்,

காலையில் சாப்பிட்டுவிட்டு விளையாடப் போன பையன் மதிய உணவிற்கு வரவில்லை.

அப்பாவும், அம்மாவும் தேட ஆரம்பித்தார்கள்.

சாயங்காலம் ஐந்து மணி வரைத் தேடியும் பையனைக் காணவில்லை.

அம்மாவிற்குப் பயம்.

அப்பாவிற்குப் பயங்கர கோபம்.

இருட்டும் நேரத்தில் வீட்டிற்கு வந்தான் பையன், கையில் ஒரு கிளிக்கூண்டுடன்.

அம்மாவின் பயம் நீங்கியது.

அப்பாவின் கோபம் குறையவில்லை.

பையன் அப்பாவின் முகத்தைப் பார்த்தான்,   பயத்துடன்.

தண்டனை நிச்சயம்.

"அப்பா...."

"முழங்கால்ல இருல."

பையன் மறு பேச்சுப் பேசாமல்  முழந்தாழ்ப்படியிட்டான்.

பத்து நிமிடம் கழித்து தாத்தா உள்ளே வந்தார்.

பேரன் தனியே  முழந்தாளில் இருப்பதையும், மகன் கோபமாக அருகே நிற்பதையும் பார்த்தார்.

நிலைமையைப் புரிந்துகொண்டார்.

யாரிடமும் எதுவும் கேட்கவில்லை.

கையில் செபமாலையை எடுத்தார்.

பேரன் அருகில் முழந்தாளில் அமர்ந்தார்.

செபமாலை சொல்ல ஆரம்பித்தார்.

செபமாலையில் பேரனும் சேர்ந்து கொண்டான்.

அப்பாவும்,    அம்மாவும் வேறு வழியின்றி செபமாலையில் சேர்ந்து கொண்டனர்.

அன்றைய இரவு செபத்தை முடித்து எழும்போது யார் மனதிலும் கோபமோ,  வருத்தமோ இல்லை.

பேரனின் தண்டனையைத் தாத்தா ஏற்றுக்கொண்டதால் அப்பாவால் ஒன்றும் பேச முடியவில்லை.

நம் தந்தை இறைவன்.

அளவற்ற அன்புள்ளவர்.

அதேபோல்,

அளவற்ற நீதியுள்ளவர்.

அன்பு பாவங்களை மன்னிக்கக்கூடியது.

நீதி உரியதைக் கொடுப்பது. (Give one one's due)

1. மன்னிப்பு உரியதானால் மன்னிப்பு.

2. தண்டனை  உரியதானால் தண்டனை.

3. பரிகாரம் செய்த பின் மன்னிப்பு.

அன்பும், நீதியும் எதிர் எதிரான பண்புகள் அல்ல. இணைந்து செயலாற்றும் பண்புகள்.

நாம் இறைவனுக்கு எதிராகப் பாவம் செய்தோம்.

பாவம் தண்டனைக்கு உரியது.

ஆனால் இறைவன் தண்டிக்க விரும்பவில்லை, மன்னிக்கவே விரும்புகிறார்.

பாவத்திற்கு ஏற்ற பரிகாரம் செய்தபின்தான் மன்னிப்பு , நீதிப்படி.

இறைவன் நீதியும், அன்பும் உடையவரராகையால் பாவத்திற்கான பரிகாரம் செய்தபின் மன்னிக்கத் திட்டமிட்டார்.

பாவம் செய்தவன் மனிதன், ஆகவே மனிதன்தான் பரிகாரம் செய்யவேண்டும்.

ஆனால் நாம் அளவு உள்ளவர்கள், ஆகவே நமது  பரிகாரம் அளவற்ற கடவுளுக்குப் போதாது.

கடவுளுக்கு நிகரான ஒருவரே பரிகாரம் செய்யவேண்டும்.  

கடவுளுக்கு நிகரானவர் கடவுள் ஒருவரே.

ஆனால்  கடவுளால் துன்பப்பட்டு பரிகாரம் செய்ய முடியாது.

தனது அளவற்ற அன்பின் காரணமாக மனிதனை மன்னிக்கத் திட்டமிட்டுவவிட்டார்.

ஆகவே அவரே மனிதனாகி தன் மனித சுபாவத்தில் நமக்காகப் பரிகாரம் செய்யத் தீர்மானித்தார்.

அவ்வாரே அவரே மனித உருவெடுத்து, நமக்காகப் பாடுபட்டு, தம் உயிரையே பலியாக ஒப்புக்கொடுத்தார்.

மனிதனாகப் பிறந்த   இயேசு தன் மனித சுபாவத்தில் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக அடிபட்டார், மிதிக்கப்பட்டார், காரி உமிழப்பட்டார், சிலுவையில் அறையப்பட்டுத் தனது உயிரையும் பலியாக்கினார்.

இயேசு கடவுள்.

நம்மைப் படைத்த கடவுளே நமது பாவங்களுக்குப் பரிகாரமாக அடிபட்டார், மிதிக்கப்பட்டார், காரி உமிழப்பட்டார், சிலுவையில் அறையப்பட்டுத் தனது உயிரையும் பலியாக்கினார்.

நீதிபதி குற்றவாளிக்க்குரிய தண்டனையைத்  தானே ஏற்றுக்கொண்டார்.

இறைவன் நம் மீது கொண்ட அன்பை ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தால் நமக்கு பாவம் செய்ய மனது வருமா?

இறைவன் நமக்காக மனிதன் ஆனது  அவரின் அன்பின் காரணமாகவா, நீதியின் காரணமாகவா?

இரண்டின் காரணமுமாகத்தான்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment