Sunday, December 3, 2017

விழிப்பாயிருங்கள்.

விழிப்பாயிருங்கள்.
********************************

பங்கு சுவாமியாரின் அறைவீடு.

சுவாமி அன்றைய பணிகளை முடித்துவிட்டு படுக்கச் செல்லும்போது நேரம் நடு இரவை நெருங்கிவிட்டது.

பகலில் ஓய்வே இல்லாமல் பணி செய்ததால் பயங்கர களைப்பு.

படுக்கப் போகுமுன் வழக்கமாகச் சொல்லும் ஜெபத்தைச் சொல்லிவிட்டு படுக்கையில் அமர்ந்தபோது, செல்போன் அலரியது.

போனைக் கையில் எடுத்துக் காதில் வைத்தார்.

"வணக்கம் Father.  அந்தோனி பேசுகிறேன்."

"வணக்கம். என்ன இந்த நேரத்தில்? "

"சுவாமி தூக்கமே வரமாட்டேங்குது."

"அதுக்கு  நான் என்ன செய்யணும்? தூக்கத்துக்காக ஜெபம் செய்யட்டுமா? "

"சுவாமி, தயவு ஒரு பிரசங்கம் வையுங்களேன். நான் நிம்மதியாகத் தூங்கும் நேரம் தங்கள் பிரசங்க நேரம்தான்."

"அப்போ ஞாயிற்றுக்கிழமை பிரசங்கத்தில்? "

"நல்ல தூக்கம்."

"அப்போ நான் 'விழிப்பாயிருங்கள் 'னு சொன்னபோது நீங்க தூங்கிக்கிட்டு இருந்திருக்கீங்க."

"பிரசங்கம் அப்படி தாலாட்டு போல இருந்திருக்கு."

"ஆண்டவர் ஜெபிக்கச் சொன்னபோது அப்போஸ்தலர்களே தூங்கிட்டாங்க. பாவம் அப்பாவி நீங்க என்ன பண்ணுவீங்க.!  அப்போ ஒண்ணு பண்ணுங்க."

"சுவாமி சொல்லுங்க."

"கையில் ஜெபமாலையை எடுங்க. ஜெபமாலை சொல்ல ஆரம்பியுங்க."

"தூக்கம்  வந்திடுமா?"

"விழிப்பாயிருக்கும்போது ஜெபம் சொல்லுங்கள். தூக்கம் வரும்போது வரட்டும். Good night."

அதற்குப் பிறகு சாமியாருக்குத் தூக்கம் வரவில்லை.

இந்த மக்கள் ஏன் இப்படி இருக்ககிறார்கள்?

சினிமா பார்த்தால் தூக்கம் வராது.

T. V பார்த்தால் தூக்கம் வராது.

விளையாட்டு பார்த்தால் தூக்கம் வராது.

கதை வாசித்தால்  தூக்கம் வராது.

அரட்டை அடித்தால்  தூக்கம் வராது.

சாப்பிடும்போது தூக்கம் வராது.

ஆனால்,

ஜெபம் ஆரம்பித்தால் தூக்கம் வந்திடும்.

பூசை ஆரம்பித்தால் தூக்கம் வந்திடும்.

பிரசங்கம் ஆரம்பித்தால் தூக்கம் வந்திடும்.

ஞான காரியங்களில் மட்டும் தூக்கம் வருவது ஏன்? 

உலக காரியங்களில் உள்ள அக்கரை ஆன்மீக காரியங்களில் இல்லாதிருப்பதே  இதற்குக் காரணம்.

அதாவது நித்திய பேரின்ப வாழ்வை விட முடிந்துபோகும் உலக வாழ்விற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களே ஞானகாரியங்களில் தூங்குவர்.

இவ்வுலக வாழ்வு எதிர்பாராமல் முடிந்துவிடும்.

மறு உலக வாழ்வு நித்தியமானது.

இது நினைவில் இருந்தால் ஞான காரியங்களில் விழிப்பாயிருப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment