Saturday, December 16, 2017

முதுமை நினைவுகள்.

முதுமை நினைவுகள்.
********************************

முதுமைப் பருவம் இறைவனால் அருளப்படும் மிக உன்னத பரிசு.

இறைமகன் இயேசு  தானே அனுபவிக்காமல் நமக்குத் தந்த பரிசு.

பிறக்கும்போது ஒருவராய்ப் பிறக்கிறோம்.

முதுமையில் மனைவி, மக்கள், மருமக்கள், பேரன்மார், பேத்திமார், பூட்டன்மார், பூட்டிமார் என்ற ஒரு விரிந்த உறவுக்கூட்டத்திற்குக் காரணமாகி,  "இத்தனை பேரும் என்னால் வந்தவர்கள்"
என்ற பெருமையான பூரிப்பு அடைகிறோம்.

முதுமை அதிகமாக அதிகமாக நம் சந்ததிகளின் எண்ணிக்கையயும் அதிகமாகும்!

இறைவன் அருளோடு கடமையை ஆற்றிய இளமைக் காலம்,  இறைவனை நேருக்கு நேர் சந்திக்கக் காத்திருக்கும் எதிர் காலம், இவ்விண்டிற்கும் இடைப்பட்டதுதான் முதுமைப் பருவம்.

பேரன், பேத்திகளோடு கொஞ்சி விளையாடும் பருவம் முதுமைப் பருவம்.

சம்பளம் வாங்கி மாணவர்கட்கு பாடம் போதித்த இளமைப் பருவம் முடிந்து போய்விட்டது.

மகிழ்ச்சி ஒன்றையே  சன்மானமாகப் பெற்று பேரன், பேத்திகட்கு பள்ளிப் பாடத்தோடு பரனைப் பற்றியும் போதிக்க வரம் பெற்று வந்த பருவம் முதுமைப் பருவம்.

இப்பருவத்தில் நம் கடந்த கால வாழ்க்கை அனுபங்களை நிகழ் கால சந்ததியினரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இது அவர்களது Likes, comments பெறுவதற்காக அல்ல.

நிகழ் கால வாழ்க்கையில் பயன் தருவதற்காக.

அவர்கள் சொல்லலாம்,  "தாத்தா, காலம் மாறிப் போச்சி. உங்க காலம் வேற, எங்க காலம் வேற" என்று.

ஆனாலும் அன்பு ஒன்றையே மையமாக வைத்து நாம் கூறும் வார்த்தைகள் அவர்கள் அடி மனதில் ஆழமாகப் பதியும்.

அவர்களது அனுபவங்களில் அவர்கள் அறியாமலே உதவும்.

இது கற்பனைகளில் மூழ்கும் பருவமல்ல.

காலமெல்லாம் நம்மை வழி நடத்திய நம் கற்பனைகட்கு அப்பாற்பட்ட கடவுளைப்பற்றி தியானிக்க நேரம் அருளும் பருவம் முதுமைப் பருவம்.

இது நன்றி கூறும் பருவம்.

அன்பினால் நம்மை ஆக்கிய இறைவனுக்கு,

வாழ்வெல்லாம் வழி நடத்திய
இறைவனுக்கு,

விழும்போதெல்லாம் எழுப்பிவிட்ட இறைவனுக்கு,

பாவம் செய்தபோதெல்லாம் மன்னித்த இறைவனுக்குii,

நம் நலனில் அக்கரை கொண்ட உறவினரையும், நண்பர்களையும் தந்த இறைவனுக்கு,

தனது அருளால் நமது ஆன்மீக வாழ்வை வளப்படுத்திய இறைவனுக்கு

நன்றி சொல்லிக்கொண்டே இருக்கவேண்டிய பருவம் முதுமைப் பருவம்.

இறைவனை நோக்கி நாம் வேகமாக நகரும் பருவம் முதுமைப் பருவம்.

குழந்தைப் பருவத்தில் நமது ஆன்மீக,  விண்ணுலகம் நோக்கிய பயணத்தைத் தொடங்குகிறோம்,

இளமைப் பருவத்தில் தொடர்கிறோம்.

முதுமைப் பருவத்தில் இறங்கவேண்டிய இடத்தை (Destination)  நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.

தென்காசிக்கு வந்தவுடன் குற்றாலத்தின் குளுமையை உணர்வதுபோல், முதுமைப் பருவம் வந்தவுடன் மோட்சத்தின் வாசனையை உணர வேண்டும்.

மோட்சத்தைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்களை ஞான வாசிப்புக்குப் (Spiritual reading) பயன்படுத்தி, தியானிக்கவேண்டும்.

இத்தகைய தியானம் மோட்சத்தைப் பற்றிய முன்சுவையை(foretaste) தருவதோடு பாவச் சோதனைகளிலிருந்து காப்பாற்றும்.

முதுமைக் காலம் ஆன்மீகரீதியாக ஓய்வு எடுக்க வேண்டிய காலமல்ல, ஞான காரியங்களில் சுறுசுறுப்பாக இயங்க வேண்டிய காலம்.

முதுமையில் உலகைச் சார்ந்த பணிகள் அதிகம் இருக்காது.

செபம், திருப்பலி,  ஞான வாசகங்கள், அயலாருக்கு உதவி போன்ற ஞான காரியங்களில் அதிக உற்சாகம் காண்பிக்க வேண்டும்.

முதுமைப் பருவத்தின் கடைசி எல்கை மரணம்.

அதுவே மோட்ச வாழ்வின் ஆரம்பம்.

இவ்வுலக வாழ்விலிருந்து மறுவுலக வாழ்விற்குள் நுழைவதற்கான வாயில்.

இவ்வாயிலில் நுழைந்தவுடன் விண்ணகத்தில் நித்திய பேரின்ப வாழ்வு ஆரம்பமாகும்.

மரணம் மனித வாழ்வின் மகிழ்ச்சிகரமான எல்கை.

நாம் எல்லோருமே விண்ணக வாழ்வை நோக்கியே பயணிக்கிறோம்.

பயணத்தின்போது இயேசுவும் நம்மோடு வருகிறார்.

இயேசுவின் துணையுடன் விண்ணரசின் வாயிலை நெருங்கிக்கொண்டிருக்கும் முதுமைப் பருவமே வாழ்வின் உன்னதமான பருவம்.

லூர்து செல்வம்.









No comments:

Post a Comment