Friday, December 1, 2017

டிப் டாப் ட்ரஸ்.

டிப் டாப் ட்ரஸ்.
******************************

''டிப் டாப்பா புது மாப்ள மாதிரி ட்ரஸ் போட்டுக்கிட்டு எங்கடா போற? "

  "ஆஸ்பத்திரிக்கு, அப்பா."

"ஆஸ்பத்திரிக்கா? இந்த ட்ரஸ்ல? "

"ஆமா. என் நண்பன் போர்க்களத்தில் அடிபட்டு ஆஸ்பத்திரியில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறான். அவனைப் பார்க்கப் போகிறேன்."

"அதுக்கு இந்த புது மாப்ள ட்ரஸ்லியா? "

"ஆமாப்பா. அதுதான் இப்போ fashion! "

இந்த fashionஅப் பார்த்து சிரிப்பு வரல?

வராது.

ஏனென்றால், நாம் இப்போது புது ட்ரஸ் வாங்கி வைத்திருக்கிறோமே,  எதுக்காக?

கிறிஸ்மஸ் விழாவிற்காகத்தானே.

அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?

வறுமையில்,   பிறக்கக்கூட வீடு  கிடைக்காமல் மாட்டுத்தொழுவத்தில் பிறந்து,  படுக்க இடமின்றி மாட்டுத் தீவனத்தொட்டியில் படுத்து, மார்கழி மாதக் குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கும் ஒரு ஏழைக் குழந்தையைப் பார்க்கப் போவதற்காக டிப்டாப் ட்ரஸ் வாங்கி வைத்திருக்கிறோம்.

இந்தக் குழந்தைதான் வளர்ந்தபின் பொய்யாகத் தேவ தூஷணக் குற்றம் சாட்டப்பட்டு,  சிலுவையில் அறையப்பட்டு உயிர்விடப்போகிறது என்றும் நமக்குத் தெரியும்.

எல்லாம் இறைவன்தான் நாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக மனிதனாகப் பிறந்து,  தன்னையே பலியாக்கி உயிர் விடப்போகிறார் என்றும் நமக்குத் தெரியும்.

இவ்வளவும் தெரிந்த பின்பும்,  நமக்காக ஏழ்மையை ஏற்றுக்கொண்ட இறைவனைக் காண நாம் பணக்கார வேடமிட்டால் அதுக்கு என்ன அர்த்தம்?

நமக்கு சிந்திக்கத் தெரியவில்லை என்று அர்த்தம்.

சிந்திக்கத் தெரிந்திருந்தால்
கிறிஸ்து பிறந்த விழாவைக் கொண்டாட ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்திருப்போம்.

நமது செலவுகளைக் குறைத்து, நமது ஏழை அயலாருடன் நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்திருப்போம்.

ஏனெனில் நமது எளிய சகோதரர்கட்குச் செய்வதை இயேசுவுக்கே செய்கிறோம்.

இயேசு விரும்புவது நமது ஆடம்பரத்தையல்ல,  அன்பு
நிறை உள்ளத்தை.

நமது வெளி ஆடம்பரங்களை
இயேசு கவனிக்க மாட்டார்.

அவர் கவனிப்பது நமது ஆன்மீகத் தூய்மையைத்தான்.

கிறிஸ்து பிறந்த விழாவைக் கொண்டாட நாம் முதலில் செய்ய வேண்டியது நமது ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் பணிதான்.

நமது பாவங்களுக்காக மனம் வருந்தி ஒப்புரவு  அருட்சாதனம் மூலம் பாவமன்னிப்பு பெற்று, ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவோம்.

ஆன்மத் தூய்மையின்றி கொண்டாடப்படும் எந்த விழாவினாலும் பயன் ஏதுமில்லை.

கிறிஸ்மஸ் விழாவை

எளிமையாக,

பிறருக்கு உதவி செய்து,

இறையன்புடன்,

ஆன்மீகத் தூய்மையுடன்

கொண்டாடுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment