இறைவனின் தாய்.
********************************
பிரிந்து சென்ற சகோதரர் ஒருவர் என் கையில் இருந்த செபமாலையைப் பார்த்தார்.
பின் என்னைப் பார்த்தார்.
பின் செபமாலையைப் பார்த்தார்.
பழையபடி என்னைப் பார்த்தார்.
"ஹலோ, சார், செபமாலை வேண்டுமா?"
"உங்ககிட்ட ஒண்ணு கேட்கணும்."
"கேளுங்க."
"நீங்க கிறிஸ்தவர்தான?"
"அதுல என்ன சந்தேகம்?
"கிறிஸ்துவை விட அவரது தாய்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள் எப்படி கிறிஸ்தவராக முடியும்?"
"தப்பாகப் புரிந்திருக்கிறீர்கள். நாங்கள் கிறிஸ்துவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால்தான் அவரது தாய்க்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோம்."
"அதெப்படி?"
"கிறிஸ்து யாரை நமது தந்தை என்று அழைக்கச் சொன்னார்?"
"தனது தந்தையை."
"கிறிஸ்துவின் தந்தை நமக்குத் தந்தை என்றால் கிறிஸ்து நமக்கு யார்? "
"சகோதரர்."
"சகோதரரின் தாய் நமக்கும் தாய்தானே."
"ம்ம்ம் "
"நீங்க உங்க அம்மாவை ஏன் நேசிக்கிறீர்கள்?"
"எனது அம்மாவாக இருப்பதால்தான்."
"நாங்களும் அப்படித்தான். இயேசுவின் தாய் எங்கள் தாயாக இருப்பதால்தான் அவர்களை நேசிக்கிறோம்."
"நாங்கள் பைபிள்படி நடப்பவர்கள். பைபிளில் எங்கேயும் இயேசு 'என் தாயை நேசியுங்கள்' என்று சொல்லவில்லையே!"
"இயேசு 'என் தாயை நேசிக்காதீர்கள்' என்று சொல்லியிருக்கிறாறா?"
"சரி, அது போகட்டும். இறைவன் துவக்கமும் முடிவும் இல்லாதவர்.
மரியாள் இறைவனால் படைக்கப்பட்டவர்.
இறைவனால் படைக்கப்பட்டவரை எப்படி இறைவனின் தாய் என்கலாம்?"
"உங்கள் மகன் பெயர் என்ன?"
"ஜோசப்."
"ஜோசப் என்ன வேலை செய்கிறார்?"
"எங்கள் ஊர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறான்."
"நீங்கள் தலைமை ஆசிரியரோட அப்பாவா?"
"ஆமா."
"ரொம்ப சந்தோசம். நீங்கள் தலைமை ஆசிரியரோட அப்பா, தலைமை ஆசிரியர் உங்கள் மகன்."
"இரண்டும் ஒன்றுதான்."
"இயேசு கடவுள்.
மரியாள் இயேசுவின்தாய்.
அப்படியானால், மரியாள்...?"
"கடவுளின் தாய்"
"Very good. சரியாய்ச் சொன்னீங்க."
"சொல்ல வச்சிட்டீங்க.
ஆனாலும் ஒரு சந்தேகம். இயேசுவுக்கு இரண்டு சுபாவங்கள்.
தேவ சுபாவம், மனித சுபாவம்.
மரியாள் மனித சுபாவத்தை மட்டும்தான் உற்பவித்தாள்.
அப்படியானால் மரியாள் இயேசுவின் மனித சுபாவத்தின் தாய் என்றுதானே கூறவேண்டும்."
" அப்படியானால் நீங்கள் ஜோசப்புக்கு அப்பா இல்லையே!"
"ஏன்?"
"உங்கள் மனைவி உற்பவித்தது ஜோசப்பின் உடலையா? ஆன்மாவையா?"
"உடலை மட்டும்தான். ஆன்மா இறைவனின் நேரடி படைப்பு."
"உங்கள் வாதப்படி நீங்கள் ஜோசப்பின் உடலுக்குதானே அப்பா. எப்படி ஜோசப்பிற்கு அப்பா என்று கூறலாம்?"
"தெரியவில்லை."
"நீங்கள் ஜோசப் என்ற ஆளுக்கு அப்பா. அந்த ஆளுக்கு ஆன்மாவும் சரீரமும் இருக்கிறது.
இயேசுவின் மனித சுபாவத்தை மட்டும் மரியாள் கருத்தரித்தாலும், அந்த சுபாவம் பரிசுத்த தம திருத்துவத்தின் இரண்டாம் ஆளுக்கு உரியது.
திருத்துவத்தின் இரண்டாம் ஆள் கடவுள்.
இயேசுவின் மனிதசுபாவத்தை மட்டுமே மாதா உற்பவித்தாலும், அந்த சுபாவத்திற்கு உரிய இயேசு தேவ ஆளாய் இருப்பதால், மரியாளை தேவமாதா என்று அழைக்கிறோம்.
இயேசுவின் தாய் இறைவனின் தாய், புரிகிறதா?"
புரிகிறது. சரி, ஒரு சின்ன உதவி செய்ய முடியுமா?"
"உங்க கையில் இருக்கிற செபமாலையைக் கொஞ்சம் தர முடியுமா?"
"கொஞ்சம் என்ன. முழுவதையுமே தர்ரேன். பிடியுங்க."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment