Monday, December 18, 2017

அவரன்றி அணுவும் அசையாது.

அவரன்றி அணுவும் அசையாது.
*********************************

ஒரு ஆசாரி மரத்திலிருந்து ஒரு நாற்காலி செய்தார்.

இனி ஆசாரி இல்லாவிட்டாலும்  நாற்காலி இருக்கும்.

ஆசாரிக்கும்,   நாற்காலிக்கும் ஒரு உறவும் இல்லை, அவர் அதைச் செய்தார் என்பதைத் தவிர.

கொத்தனார் வீடு கட்டியபின் கொத்தனார் மறந்தாலும் வீடு இருக்கும்.

ஆசாரி ஏற்கனவே இருந்த மரம் இருந்தது.

ஆகவே நாற்காலியின் இருப்பிற்கு(Existence)  ஆசாரி காரணம் அல்ல.

கொத்தனார் வீடு கட்டுமுன்பே  கட்டுமான பொருட்கள் இருந்தன.

ஆகவே வீட்டின் இருப்பிற்கு(Existence)  கொத்தனார் காரணம் அல்ல.

கடவுள் உலகை ஒன்றுமில்லாமையிலிருந்து படைத்தார்.

ஆகவே உலகின் இருப்பிற்கு கடவுள் மட்டுமே காரணம்.

ஆசாரி மறந்தாலும் நாற்காலி இருக்கும்.

ஆனால் கடவுள் மறந்தால் உலகம் ஒன்றுமில்லாமை ஆகிவிடும்.

ஏனெனில் உலகின் இருப்பிற்குக் காரணம் அவரே.

ஆனால் கடவுள் மறக்க மாட்டார், அவரால் மறக்க முடியாது.

கடவுள் விரும்பினால் உலகை ஒன்றுமில்லாமையாக்க முடியும்.

அவர் சர்வ வல்லவர்.

உலகம் படைக்கப் பட்டதற்கு மட்டுமல்ல, அது இயங்கிக்கொண்டிருப்பதற்கும் அவர்தான் காரணம்.

அவரன்றி அணுவும் அசையாது.

அவர் எங்குமிருக்கிறார்.

ஒவ்வொரு அணுவிற்குள்ளும் அவர் இருக்கிறார்.

இதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

உலகம் சடப்பொருள் (Matter). அது இடத்தை அடைத்துக்கொண்டிருக்கிறது

ஒரு சடப்பொருள் இருக்கும் இடத்தில் இன்னொரு சடப்பொருள் இருக்க முடியாது.

ஆனால் இறைவன் ஆவி.

ஆவிக்கு இடம் தேவையில்லை.

அவரால்  இடத்தை அடைத்துக்கொண்டிருக்க முடியாது. (He cannot occupy space.)

அப்படியானால் சடப் பொருளான அணுவிற்குள் ஆவியான அவர்  எப்படி  இருக்கிறார்?

தனது வல்லமையினால் அணுவிற்குள்ளும் இருக்கிறார்.

அவரது வல்லமையால்தான் ஒவ்வொரு அணுவும் இருக்கிது,  இயங்குகிறது.

இயற்கையில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் இறைவனினன் வல்லமையினாலும்,  சித்தத்தினாலுமே நடைபெறுகின்றன.

இயற்கை இயங்குவதற்கான நியதிகளை (Laws of nature) வகுத்தவர் இறைவனே.

அந்நியதிகளின்படியே, அதாவது இறைவனின் திட்டப்படியே இயற்கை இயங்குகிறது.

இறைவன் மாறாதவர்,  ஆகவே அவர் ஏற்படுத்திய நியதிகளும் மாறாது.

மனிதன் சடப்பொருளாகிய உடலையும், ஆவியாகிய ஆன்மாவையும் கொண்டவன்.

மனித உடலும் அணுக்களால் ஆனதுதான்.

ஆகவே நமது ஒவ்வொரு அணுவிலும் இறைவன் இருக்கிறார்.

நமது ஆன்மாவையும் இறைவன் தனது வல்லமையால்தான் படைத்தார்.

நமது ஆன்மாவிற்குள்ளும் இறைவன் இருக்கிறார்.

இறைவன் எங்கும் இருப்பதால் நாம் இறைவனுக்குள் இருக்கிறோம்.

இறைவன் சர்வ வல்லவர், அளவில்லா அன்பு மிக்கவர்.

ஆகவே நாம் இறைவனின் அன்பிற்குள்ளும், வல்லமைக்குள்ளும் இருக்கிறோம்.

இறையன்பும், வல்லமையும் நமக்குப் பாதுகாப்பு அரணாய் அமைந்துள்ளன.

இத்தகைய பாதுகாப்பில் வாழும் நாம் எதற்கு அஞ்ச வேண்டும்?

இவ்வுலகில் நமது அன்பிற்கு உரியவர்கள் நமது அருகே
இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறோம்!

சர்வ வல்லவ அன்பர் நம்மோடு இருக்கும்போது எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும்!

இறையன்பு எப்போதும் நம்முடனே, உள்ளும், புறமும் இருப்பதை உணர்ந்தால் நம்மால் பாவம் செய்ய முடியுமா?

ஒருவகையில் நமது மோட்ச வாழ்வு இப்போதே ஆரம்பித்துவிட்டது என்று கூட கூறலாம்.

மோட்சத்தில் இறைவனோடு வாழ்வோம்.

இங்கேயும் நாம் இறைவனோடுதான் வாழ்கிறோம்.

ஒரு வித்தியாசம்- மோட்சத்தில் இறைவனை நேருக்கு நேர் (Face to face ) சந்திப்போம்.

இங்கே நமது உடல்  என்னும் திரை நாம்  இறைவனை நேருக்கு நேர்  பார்க்காதபடி தடுக்கிறது.

இத்திரை நீங்கும்போது நமது நித்திய வாழ்வு ஆரம்பமாகும்.

இயேசு எப்போதும் நம்மோடு இருக்கிறார் என்பதை நாம் ஏற்றுக்கொண்டால் நாம் பயப்படும் பல பிரச்சனைகள் தாமாகவே நீங்கிவிடும்.

1.நமது வாழ்வில் கஷ்டங்கள் வரும்போது,

அதுவும் நமது சக்திக்கு மீறியவையாய்த் தோன்றும்போது,

சர்வ வல்லவரான,

அளவற்ற அன்புள்ள தந்தை

எப்போதும் நம்முடன் இருக்கிறார்

என்ற நம்பிக்கை

நம்மைக் காப்பாற்றும்.

2. இந்த நம்பிக்கையால் நமது
கஷ்டங்களை நீக்கும்   பொறுப்பை நமது தந்தையிடம் ஒப்படைப்போம்.

நமது மனம் அமைதி அடையும்.

3. தொடர்ந்து கஷ்டங்கள் நீங்காதிருந்தால்,  'இறைவன் நம் தந்தை' என்ற நம்பிக்கையை நம் செபம், தியானம் மூலம் வலுப்படுத்த வேண்டும்.

இந்நம்பிக்கை வலுப்பெற்றால் 'நம் தந்தை' நமக்கு  என்ன செyyய்தாலும் அது நம் நன்மைக்காகத்தான் இருக்கும் என்பதை உணர்வோம்.

தந்தையால் பிள்ளைக்கு தீயதை அனுமதிக்க இயலாது.

இதை உணர்ந்தால் என்ன துன்பம் வந்தாலும் நாம் மகிழ்ச்சியாய் இருப்போம்.

4.துன்பம் ஒரு பிரச்சினையே
அல்ல.

இயேசு துன்பப்படுவதற்காவே பிறந்தார்.

5. சிலுவைக்குப் பின்தான் உயிற்பு.

இறைவன் எப்போதும் நம்மோடு  இருப்பதால் நாம் அவருக்கு ஏற்றபடி நாம் வாழ வேண்டும்.

இறைவன் நம்மோடு வாழ்வதுபோலவே நம் அயலானோடும் வாழ்கிறார்.

ஆகவே நாம் அயலானை அன்பு செய்யும்போது அவனுள் வாழும் இறைவனை அன்பு செய்கிறோம்.

நாம் அயலானை வெறுத்தால் அவனுள் வாழும் இறைவனை வெறுக்கிறோம்.

நாம் அயலானுக்குத் தீமை செய்தால் அவனுள் வாழும் இறைவனுக்குத் தீமை செய்கிறோம்.

நாம் இறைனை உண்மையிலேயே அன்பு செய்தால் நம் அயலானையும் அன்பு செய்வோம்.

இறைவனுக்காக நம் அயலானுக்குச் சேவை செய்தால், இறைவனுக்கே சேவை செய்கிறோம்.

நமது சேவையும் இறைவனாலேயே இயக்கப்பட வேண்டும்.

லூர்து செல்வம்.



,

No comments:

Post a Comment