"பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா." (மத்.16:18)
********************************
"அண்ணாச்சி, உங்களப் பார்க்க வீட்டுக்குப் போயிருந்தேன். நீங்க ஏதோ Interview வுக்குப் போயிருக்கதாச் சொன்னாங்க. இந்த வயசுல என்ன வேலைக்கு application போட்டிருக்கீங்க?"
"ஏன் தம்பி, எனக்கு 60 வயசு ஆகுது. இந்த வயசுல வேலைக்கு application ஆ?"
"அப்போ எங்கே போய்ட்டு வர்ரீங்க?"
"Interview வுக்குதான்."
" விளங்கல."
"Interview நடத்திவிட்டு வர்ரேய்."
"நீங்க Interview நடத்தினீங்களா? வேலைக்கு ஆள் எடுக்கிறவங்கதான் நடத்துவாங்க. நீங்க என்ன வேலைக்கு ஆள் எடுக்கிறீங்க? சொந்தக் கம்பனி எதுவும் ஆரம்பிச்சிறீங்களா? "
"பள்ளிக்கூடம் ஒண்ணு ஆரம்பிச்சிருக்கப்போறேன். எல்லாம் ரெடி. ஆசிரியர்கள் தேர்வுதான் பாக்கி. அதற்காகத்தான் Interview."
"நீங்களே ஆசிரியர்தானே."
"அதுக்காக எல்லா வகுப்புக்கும் என்னையே பாடம் எடுக்கச் சொல்றியா? திறமைவாய்ந்த தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர்கள் வேண்டும். அதற்காகத்தான் Interview."
"அண்ணாச்சி எனக்கு ஒரு பள்ளிப் பொறுப்பாளர் தெரியும். ரொம்ப பெரிய பள்ளிக்கூடம்.
ஒரு விசேசம் என்ன தெரியுமா?
அவர் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கும்போது திறமையில்லாத ஆட்களாகப் பார்த்து ஆசிரியர்களாகத் தேர்ந்தெடுத்தார்.
அவர்களைக்கொண்டுதான்
பள்ளிக்கூடத்தை விரிவுபடுத்தினார்.
இப்போது அவரது பள்ளியில்தான் மற்றெல்லாப் பள்ளிகளிலேயும்விட அதிக மாணவர்கள் படிக்கிறாங்க."
"தம்பி, நீ யாரைப்பற்றி சொல்கிறாய் என்று புறிகிறது.
அவர் கடவுள்.
திறமையில்லாத ஆட்களாகப் பார்த்துத் தேர்ந்தெடுத்து அவரே பயிற்சி கொடுத்தார்.
இது உலகே அறிந்த விசயம்.
ஏதோ யாருக்கும் தெரியாததைச் சொல்றது மாதிரிச் சொல்ற."
"அண்ணாச்சி, எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் ஆண்டவரைப் பற்றிய செய்தியைச் சொல்லிவிட வேண்டும்."
"அதுவும் சரிதான்."
இறைமகன் இயேசு ஆரம்பித்த பள்ளிக்கூடம் நமது திருச்சபை.
அதில் நிர்வவாக, போதனைப் பணியாற்ற முதலில் தேர்வு செய்யப்பட்டவர்கள் அப்போஸ்தலர்கள்
இயேசு சாதாரண, தங்கள் அறிவுக்காக அன்றி வயிற்றுக்காக உழைத்துக் கொண்டிருந்த உழைப்பாளிகளையே அப்போஸ்தலர்களாகத் தேர்வு செய்தார்.
அவர்களிடம் குறைபாடுகள் இருந்தன.
குறைபாடுகளோடு அவர்களை ஏற்றுக்கொண்ட இயேசு அவர்கட்குப் பயிற்சி அளித்தார்.
அவர்களிடமிருந்த நல்ல பண்பு,
அவர்கள்
தங்கள் உடைமைகள் யாவற்றையும் விட்டுவிட்டு,
விசுவாசத்தோடு
அவரைப் பின்பற்றியதுதான்.
அவர்களுடைய விசுவாசமும், அன்பும்தான் அவர்களை அப்போஸ்தலப் பணிக்கு ஏற்றவர்கள் ஆக்கின.
திருச்சபையின் ஒரே தலைவர் இயேசுதான்.
ஆயினும் அவர் விண்ணகம் எய்தியபின் அவரது பிரதிநிதியாக இருந்து
திருச்சபையை ஆண்டு வழிநடத்த அவரது பிரதிநிதி ஒருவர் புவியில் இருக்க வேண்டுமல்லவா?
புவியில் திருச்சபையின் தலைவராக, அதாவது நிரந்தரத் தலைவராகிய தனது பிரதிநிதியாக அப்போஸ்தலர்களில் ஒருவரான புனித இராயப்பரை நியமித்தார்.
இராயப்பர் பெரிய கெட்டிக்காரர் என்பதற்காக இயேசு அவரைத் திருச்சபையின் தலைவராக நியமிக்கவில்லை.
ஏனெனில், இயேசுவே அவரை ஒருமுறை 'சாத்தானே ' அழைத்திருக்கிறார்.
இயேசுவின் பாடுகளின்போது இராயப்பர் அவரை மும்முறை மறுதலித்திருக்கிறார்.
எந்த அடிப்படையில் இயேசு அவரைத் தலைவராக நியமித்தார்?
எந்த அடிப்படையில் நம்மைப் படைத்தாரோ அதே அடிப்படையில்தான்.
நாம் தகுதி உள்ளவர்களாக இருப்போம் என்றா நம்மைப் படைத்தார்?
அன்பு, அன்பு ஒன்றுதான் நம்மைப் படைக்கக் காரணமாயிருந்தது.
இயேசு தன்னால் படைக்கப்பட்ட எல்லோரையும் அன்பு செய்கிறார், அளவு கடந்த விதமாக அன்பு செய்கிறார்.
எல்லோரையும் அளவு கடந்த கரிசனத்தோடு, கவனித்துக்கொள்கிறார்.
அவரது அன்பிலும், கரிசனத்திலும் பாரபட்சம் இல்லை.
அவரது சித்தத்தால் அவர் நமக்குத் தரும் பணிகள் வேறுபடலாம், அவர் நம்மீது கொண்டுள்ள அன்பில் வித்தியாசம் இல்லை.
இயேசு எல்லா அப்போஸ்தலர்களையும் ஒரே மாதிரிதான் நேசித்தார்.
இராயப்பருக்கு அவர் கொடுத்த பணி தலைமைப் பணி.
உண்மையில் திருச்சபையை வழி நடத்தி ஆளப்போவது பரிசுத்த ஆவியானவர்தான், இராயப்பர் ஒரு கருவியே.
இராயப்பரிடம் குற்றம், குறைகள் இருக்கலாம், ஆனால் பரிசுத்த ஆவியானவர் நிறைவானவர்.
ஆகவே ஆவியானவரின் வழி நடத்துதலோடு இராயப்பர் செய்யும் ஆட்சியில் தவறு இருக்காது.
இராயப்பரின் கையைப் பிடித்து நடத்திச் செல்லும் ஆவியானவர், அவரைக் கீழே விழ விடமாட்டார்.
"18எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா." (மத்.16:18)
இவை இயேசு இராயப்பரைத் தலைமைப் பதவியில் அமர்த்தப் பயன்படுத்திய வார்த்தைகள்.
இராயப்பரின் ஆட்சிப் பொறுப்பில் உள்ள திருச்சபையைச் சாத்தானின் சக்திகளால் ஒன்றும் செய்ய முடியாது.
இராயப்பருக்குக் கொடுக்கப்பட்ட இந்த வாக்குறுதி அவர் காலத்திற்குப் பின் அவரது இடத்தில் அமரும் பாப்பரசர்கட்கும் பொருந்தும்.
பாப்பரசர்களின் தனிப்பட்ட வாழ்வில் ஆயிரம் குறைகள் இருக்கலாம்.
அவர்களும் மனிதர்களே.
ஆனால் திருச்சபையின் தலைவர் என்ற பொறுப்பில் திருச்சபை முழுவதையும் கட்டுப்படுத்தும் விசுவாசம் சம்பந்தப்பட்ட போதனைகளில் அவரால் தவறு செய்ய முடியாது.
ஏனென்றால் திருச்சபையை ஆள்பவர் பரிசுத்த ஆவியானவர்தான்.
எப்படி அப்போஸ்தலர்கள் இயேசுவின் சொற்படி செயல்பட்டார்களோ அப்படியே ஆயர்களும், குருக்களும் பாப்பரசர் சொற்படி செயல்படவேண்டும்.
மாதாவையும், அவரது மைந்தன் இயேசுவையும் தவிர மீதி அனைத்து மனிதர்களும் குற்றம், குறைகள் உள்ளவர்களே.
ஆனாலும் பாப்பரசர், ஆயர்கள், குருக்கள் ஆகிய அனைவரும் நமது ஆன்மீக வழிகாட்டிகள் என்ற முறையில் இறை இயேசுவின் பிரதிநிதிகள்.
தனிப்பட்ட வாழ்வில் குற்றம் குறைகள் உள்ளவர்களாக இருந்தாலும்
திருப்பலியில் வசீகர வார்த்தைகளைக் கூறும்போது இயேசு இறங்கி வருகிறார்,
ஒப்புரவு அருட்சாதனத்தில் அவர்கள் பாவங்களை மன்னிக்கும்போது அவை மன்னிக்கப்படுகின்றன.
ஒப்புரவு அருட்சாதனத்தின்போது அவர்கள் கூறும் வார்த்தைகள் இயேசு கூறும் வார்த்தைகளே.
அவற்றிற்குக் கட்டுப்பட வேண்டியது நமது கடமை.
இறைவன் படைத்த உலகில் பாவிகள் இருக்கின்றனர்.
இயேசு நிறுவிய திருச்சபை உலகில்தான் இருக்கிறது.
ஆகவே திருச்சபையிலும்பாவிகள் இருக்கின்றனர்.
பாவிகளைத் தேடிதான் இயேசு உலகிற்கு வந்தார்.
மருத்துவ மனையில் நோயாளிகள் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
ஆனால் குணம் அடையவே அங்கு இருக்கிறார்கள்.
ஒருவன் தன்னை நோயாளி என்று ஏற்றுக்கொண்டால்தான் குணம் அடைவான்.
திருச்சபை ஒரு ஆன்மீக மருத்துவமனை.
இங்கு நாம் பாவிகள் என்று ஏற்றுக்கொண்டால்தான் பாவங்களுக்கு மன்னிப்புப் பெற்று, இரட்சண்யம் அடைவோம்.
நாம் பாவிகள் என்பதை ஏற்றுக்கொள்வோம்.
மனம் வருந்துவோம்.
மன்னிப்புப் பெறுவோம்.
இரட்சண்யம் அடைவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment