Sunday, December 10, 2017

"கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்." (மத்.23:10)

"கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்." (மத்.23:10)
********************************

ஆசிரியர்கள் இரண்டு வகை.

முதல் வகையினர்

போதிக்கப்படக்கூடிய பாடங்களை நன்கு தயாரித்து,

மாணவர்கட்குப் போதித்துவிட்டு,

பாடங்களுக்கான கேள்விகளையும், பதில்களையும் அவர்களே தயாரித்து,

எழுதிப்போட்டு,

விளக்கி,

அவற்றை மனப்பாடம் செய்யவைத்து,

திரும்பத் திரும்ப எழுதப் பயிற்சி கொடுத்து,

தேர்வுக்கு அனுப்பி,

எல்லா மாணவர்களையும் பாஸ் பண்ண வைப்பர்.

நானே இந்த வகையைச் சேர்ந்தவன்தான்.

இதில் மாணவர்களின் மூளைக்கு வேலையேயில்லை.

அவர்கள் வேலையெல்லாம் மனப்பாடம் செய்யவேண்டியது,

வீட்டில் மனப்பாடம் செய்ததை தேர்வுத் தாளில் கக்க வேண்டியது.

இரண்டாவது வகையினர் பாடம் நடத்துவதுவரை முதல் வகையினரைப்போல்தான்.

அடுத்து கேள்விகளை மட்டுமே ஆசிரியர் கொடுப்பார்.

பதில்களை மாணவர்களே தயாரிக்க வேண்டும்.

எனது ஆசிரியர் இவ்வகையைச் சேர்ந்தவர்.

மாணவர் தயாரித்த பதில்களில் உள்ள பிழைகளைத் திருத்திக் கொடுப்பார்.

மாணவர்கள் படிப்பதும்  தேர்வுகளில் எழுதுவதும் அவரவர் சொந்த தயாரிப்புகளையே.

மாணவகளின் உழைப்புக்குக் காரணமாயிருப்பவரும், தூண்டுதலாயிருப்பவரும் ஆசிரியரே.

ஆசிரியர் இன்றி மாணவர் இல்லை.

உழைப்பு இன்றியும் மாணவர் இல்லை.

நமது ஆன்மீக வாழ்வில் நமது ஆசிரியர் நமது ஆண்டவர் கிறிஸ்துவே.

"கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்." (மத்.23:10)

நாம் குறிப்பிட்ட ஆசிரியர் வகையில் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்.

கத்தோலிக்கத் திருச்சபை என்னும் பள்ளிக்கூடத்தில், தலைமையாசிரியரும், உதவியாசிரியர்கள் மூலமாகச் செயல்படுபவரும் இறைமகன் இயேசுவே. 

மாணவர்களாகிய நாம் பயின்று வெற்றி பெற வேண்டிய பாடம் இயேசுவின் நற்செய்தி.

நாம் வெற்றி பெறவேண்டிய தேர்வு நமது வாழ்வு.

வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் விண்ணக வாழ்வு.

இயேசு தன்  நற்செய்தியை நமக்குக் கற்றுத்தருவது மனப்பாடம் செய்து வாய்வழியாகவோ,  பேப்பர் வழியாகவோ ஒப்பிப்பதற்காக அல்ல.

கற்றுக்கொண்ட நற்செய்தியை உள்ளத்தில் தியானித்து,  நமது வாழ்க்கைக்கான செய்தியாக மாற்ற வேண்டியதே நமது வீட்டு வேலை.(Home work)

இந்த வேலையில் ஏதாவது பிழையிருந்தால் இயேசுவிடம்  காட்டித் திருத்திக்கொள்ள வேண்டும்.

எப்படி இயேசுவிடம் காட்டுவது?

அதற்காகத்தான் உதவி ஆசிரியர்களாகக் குருக்களை நியமித்திருக்கிறார்.

நாம் குருக்களிடம் பேசும்போது இயேசுவிடம் பேசுகிறோம்.

நற்செய்தியை நமது வாழ்வாக மாற்ற நமக்கு ஆலோசனை நல்கிடவும், நமது தவறுகளைத் திருத்தி சரியான வழியில் நடத்திடவுமே குருக்கள் இயேசுவால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இயேசுவின் நற்செய்தியை
நம் வாழ்வாக்கி வாழும்போது
நம் வாழ்வில் இயேசுவாக மாறுகிறோம்.

நற்செய்தியால் நாம் வாழும்போது நம்மைப் பார்ப்பவர்கள் நம்மில் இயேசுவைப் பார்ப்பார்கள்.

நாமும் நமது வாழ்வால் நற்செய்தியைப் போதிக்கும் ஆசிரியர்களாக மாறிவிடுகிறோம்.

நாம் செல்லுமிடமெல்லாம் நற்செய்தி பரவும்.

நல்ல மாணவன் தான் கற்ற கல்வியை மற்றவர்கட்குக்
கொடுக்கும்போது செயலில் ஆசிரியராக மாறிவிடுகிறான்.

அப்படியானால் நற்செய்தி பயிலும் நாமும் நற்செய்திப் பணியாளர்களே.

கற்ற நற்செய்தியைக் கொண்டு வாழ்வாகிய தேர்வை எழுதும்போது ஒவ்வொரு சரியான விடைக்கும் விண்ணக சான்றிதழில் மதிப்பெண்கள் பதிவாகிக்கொண்டேயிருக்கும்.

உதாரணத்திற்கு, காலையில் நற்செய்தி வாசகத்தில்,  'உனது எதிரியை நேசி' என்ற
நற்செய்தி அறிவிக்கப்பட்டால், அதைத் தியானித்து வாழ்வில் எதிரியை நேசிக்க முடிவெடுத்துக்கொள்ள வேண்டும்.

நேசத்தைச் செயலில் காட்டும்போது எதிரிகளை மன்னிப்போம்,  அவர்கட்கு நன்மை செய்வோம்.

நம்மை வெறுப்போருக்கு நற்செய்தியின் அடிப்படையில் நாம் செய்யும் ஒவ்வொரு நன்மைக்கும் விண்ணகத்தில் மதிப்பெண் ஏறிக்கொண்டேயிருக்கும்.

இயேசுவின் நற்செய்திப் பள்ளியில் நமக்கு எவ்வளவு தெரியும் என்பது முக்கியமல்ல, எவ்வளவு
செய்கிறோம் என்பதே முக்கியம்.

ஒவ்வொரு நாளும் நாம் பெறும்  நற்செய்தியை அன்றைய நாளிலும், அடுத்து வரும் வாழ்நாழிலும்  நம் வாழ்வாக்க வேண்டும்.

இயேசுவின்

நற்செய்தியை

வாசிப்போம்,

வாழ்வாக்குவோம்,

வான் வீட்டில்

வளமான

வாழ்வடைவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment