Saturday, January 29, 2022

இறைவனே நமது வீடு.

இறைவனே நமது வீடு.


"அண்ணாச்சி, Good morning."

",Good morning. சொல்லு.''

"சொல்ல வரவில்லை. கேட்க வந்தேன்."

", சரி, கேள்."

"நீங்கள் வீட்டில் இருப்பது வேலைக்குப் போவதற்கா?

அல்லது,

வேலைக்குப் போவது வீட்டிற்குத் திரும்புவதற்கா?"

",உன் கேள்வி புரியவில்லை."

"நீங்கள் பிறந்தது வீட்டில், வாழ்வது வீட்டில். 

வேலை செய்வது அலுவலகத்தில். வேலையால் கிடைக்கும் சம்பளத்தை வீட்டுக்கு கொண்டு வருகிறீர்கள்.

கேள்வி,

அலுவலகத்தில். வேலை செய்ய, வீட்டில் வாழ்கிறீர்களா?

அல்லது,

வீட்டில் வாழ்வதற்காக வேலைக்கு போகின்றீர்களா?"

", வீடு நமக்கு உரியது.

அலுவலகம் நமக்கு உரியது அல்ல. ஆனாலும் வீட்டில் வாழ்வதற்கு வேண்டிய பொருளை அங்குதான் சம்பாதிக்கிறோம்.

இரண்டுமே முக்கியமானதுதான்.

ஆனாலும், பிறந்ததும் வாழ்வதும் வீட்டில் தானே!
அலுவலகத்தில் அல்லவே!

ஆகவே நாம் எங்கே எதைச் செய்தாலும் அது வீட்டில் வாழ்வதற்காகத்தான்!" 

"கேள்விக்கும் பதில்?"

", வாழ்வதற்காக வீட்டுக்கு திரும்புவதற்காகத்தான்  வேலைக்கு போகிறேன்."

" ஆகவே?"

", வீட்டில் வாழ்வதற்காகத்தான் வேலை.

வேலைக்காக வீடு இல்லை.

சரி தம்பி, திடீரென்று இந்த கேள்வியை கேட்பதற்கு காரணம்?"

"அண்ணாச்சி,

வாழ்க்கைக்கு உயிர் அளிக்கும் அன்பு,

குடும்பத்தில் சேர்ந்து வாழ்வதால் கிடைக்கும் மகிழ்ச்சி,

ஒற்றுமை,

ஆறுதல் தரும் வார்த்தைகள்,
 
உண்மையான சுதந்தரம்,

உண்மையான மன்னிப்பு,

நமது முன்னோர்களின் வாழ்க்கை அனுபவங்கள்

போன்ற உண்மையான வாழ்க்கை இன்பங்கள் கிடைப்பது நாம் வாழும் வீட்டில்தான்.

நாம் பிறக்க காரணமாகி, நம்மை ஆசையோடு வளர்த்துவரும்  நமது பெற்றோரும்,

நம்மோடு அன்பைப் பகிர்ந்து வாழும் நமது உடன் பிறந்தவர்களும் வாழ்வது நமது வீட்டில் தான்.

களைப்பைத் தரும் உழைப்பிற்குப் பின் நமக்கு உண்மையான ஓய்வு கிடைக்கும் இடமும் வீடுதான்."

",அதெல்லாம் புரிகிறது. இப்போது என்னிடம் இந்த கேள்வியைக் கேட்க வேண்டிய அவசியம் என்ன?"

"நீங்கள் கையில் பேப்பர், பேனாவுடன் எதை எழுதலாம் என்று யோசித்து கொண்டிருப்பதுபோல தெரிகிறது.

தங்கள் சிந்தனைக்கு சிறிது விருந்து அளிக்கலாம் என்று நினைத்தேன்."

", very good. வா, உட்கார். இருவரும் சேர்ந்தே நீ அளித்த விருந்தை  உண்ணலாம்.

நீ தந்திருப்பது வெறுமனே சிந்தனைக்கு விருந்தல்ல. 
ஆன்மீக விருந்து. ஆன்மா வளர்வதற்கும் வாழ்வதற்குமான விருந்து. 

விருந்தை ரசித்து, ருசித்து உண்போம். 

ஆன்மீக ரீதியாக நமது வீடு எது? நாம் பணி புரியும் அலுவலகம் எது?"

"ஆன்மீக ரீதியாக, நம்மைப் படைத்த இறைவன்தான் நமது வீடு.

உலகில் ஒரு குழந்தை தாயின் வயிற்றில் பத்து மாதங்கள் இருந்துவிட்டு முழு வளர்ச்சி அடைந்தவுடன் பிறப்பது போல,

நாமும் இறைவனது உள்ளத்தில் ஆதியிலிருந்தே கருவாக (idea) இருந்துவிட்டு,

அவர் தீர்மானித்த நேரத்தில் பிறந்தோம்.  

நாம் பிறந்தது இறைவனிடமிருந்துதான்.

ஆகவே அவர்தான் நமது வீடு.

 நாம் பணி புரியும் அலுவலகம் இந்த உலகம்.

அலுவலகத்தில் நமது பணி முடிந்தவுடன் நாம் திரும்ப வேண்டிய வீடு இறைவன்தான்."

", நம்மைப் பெற்றவர் இறைவன்தான். ஆனால் நாம் உலகில்தானே பிறந்தோம்!"

"அது உடல் ரீதியாக.

ஆன்மீக ரீதியாக இவ்வுலகில் பணிபுரிய  வந்த நிகழ்வை பிறப்பு என்கிறோம். 

பணி புரிந்து முடிந்தபின் நமது வீட்டுக்கு,

அதாவது நம்மை படைத்த இறைவனிடம்,

 திரும்பும் நிகழ்வை இறப்பு என்கிறோம்."

",நமது அலுவலகப் பணிக்கு துவக்கமும் உண்டு, முடிவும் உண்டு.

உலகமாகிய   அலுவலகத்தில் நமது பணிதான் என்ன?"

"முழுக்க முழுக்க ஆன்மீகப் பணி.

நமது விண்ணக தந்தையையும் சகோதர சகோதரிகளையும் நேசித்து, இறைவனுக்காக வாழ்வது மட்டுமே நமது பணி."

",இறைவனுக்காக என்றால்?"

"நாம் என்ன செயல் செய்தாலும் அதற்கு ஒரு நோக்கம் கட்டாயம் இருக்கும்.

ஒரு நோக்கமும் இல்லாமல் ஒருவன் செயல் புரிந்தால் அவனைப் பைத்தியம் என்போம்.

நமது இவ்வுலக வாழ்க்கையின் ஒரே நோக்கமாக இருக்க வேண்டியது இறைவனின் மகிமை மட்டுமே.

மூச்சு விடுதல் உட்பட நமது அனைத்து செயல்களையும் இறைவனின் மகிமைக்காகவே செய்ய வேண்டும்." 

'', உலகியலில் அலுவலகத்தில் உழைக்கும்போது நமக்கு உரிய
சம்பளம் பண வடிவில் கிடைக்கிறது அதை அனுபவிப்பதற்காக வீட்டுக்குக் கொண்டு செல்கிறோம்.

ஆன்மீகத்தில் எப்படி?"

"ஆன்மீகத்தில் இறைவனின் மகிமைக்காகச் செய்யப்படும் ஒவ்வொரு செயலுக்கும் இறைவனின் அருள் சன்மானமாகக் கிடைக்கும்.

அந்த அருள் உலகில் நமது ஆன்மீக வாழ்வுக்கு உதவுவதோடு,

நமது விண்ணக வீட்டில் நமக்காக சேர்த்து வைக்கப்படும்.

நாம் ஈட்டும் அருள் அதிகமாக   அதிகமாக, நமக்கான விண்ணக பேரின்பத்தின் அளவு அதிகரித்துக் கொண்டே போகும்.

இறைவனோடு நமக்குள்ள நெருக்கமும் அதிகமாகும்.

 விண்ணக வீட்டில் இறைவன் நமக்குத் தரும் அருளை சேமித்து வைப்பதற்காகத்தான் இவ்வுலகில் ஆன்மீக வாழ்வு வாழ்கிறோம்."

", உலகில் நாம் நமக்காக வாழ்ந்தால்?"

"நமக்காக மட்டும் வாழ்ந்தால் விண்ணக வீட்டில் நமக்காக எதுவும் இருக்காது.

இறைவனுக்காக வாழ்பவர்களுக்கு மட்டுமே 
விண்ணக வீடும், அதன் 
அருட்செல்வங்களும் கிடைக்கும்."

", இவ்வுலகில் நாம் செய்ய வேண்டிய ஒரே பணி

சிந்தனையாலும், சொல்லாலும் செயலாலும் அன்பு செய்வது மட்டுமே.

இவ்வுலகில் நாம் வாழ்வது விண்ணக வீட்டுக்காக மட்டுமே.

இறைவனிடமிருந்து பிறந்த நாம்,

இறைவனுக்காக வாழ்வோம்,

இறைவனுக்காக மட்டுமே வாழ்வோம்.

உலகம் இறையருளை சம்பாதிக்க நாம் பணி புரியும் அலுவலகம் மட்டுமே.

அலுவலக வாழ்வுக்கு Retirement உண்டு.

வீட்டில் வாழ்வது நிரந்தரமானது.

விண்ணுலகில் வாழும் இறைவனே நமது வீடு.

அவர் தரவிருக்கும் பேரின்ப வாழ்வும் நிரந்தரமானது."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment