"தாத்தா, நான் கேட்கும் கேள்விகளுக்கு ஒரே வார்த்தையில் பதில் கூறுங்கள்.
இறைமகன் ஏன் மனிதனாகப் பிறந்தார்?"
", மன்னிக்க."
"இயேசு மூன்று ஆண்டுகள் போதித்த நற்செய்தியின் சுருக்கம்?
",மன்னிப்பு."
"இயேசு ஏன் பாடுகள் பட்டார்?"
",.மன்னிக்க"
"இயேசு ஏன் சிலுவையில் மரித்தார்?"
",மன்னிக்க."
"இயேசு ஏன் தனது அப்போஸ்தலர்களை உலகெங்கும் அனுப்பினர்?"
",மன்னிக்க."
"நம்மிடையே குருக்கள் ஆயர்கள் ஆகியோர் எதற்காக வாழ்கின்றார்கள்?"
".மன்னிக்க."
"நமது ஆன்மாவின் இரட்சண்யம் எதில் அடங்கியிருக்கிறது?"
", மன்னிப்பில்."
" அடுத்த கேள்விக்கு விளக்கமான பதில்.
இயேசு பிறந்த அன்று வானதூதர்கள்,
" விண்ணுலகில் இறைவனுக்கு மகிமையும், பூவுலகில் நன்மனதோருக்கு சமாதானமும் உண்டாகுக."
என்றுதானே பாடினார்கள். மன்னிக்க என்று சொல்லவில்லையே.
உங்கள் பதிலில் சமாதானம் என்ற வார்த்தை வரவில்லையே, ஏன்?"
",இப்போ நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்.
சமாதானம் என்றால் என்ன?"
"இரண்டு நண்பர்களுக்கு இடையே சுமுகமான உறவு இருந்தால் அவர்களுக்கு இடையே நிலவுவது சமாதானம்."
",எப்போது சமாதானம் கெடும்?"
"இருவரில் ஒருவர் மற்றவர் மனதை நோகச் செய்துவிட்டால் அவர்களுக்கு இடையே நிலவிய சமாதானம் கெடும், அதாவது உறவு முறியும்."
",நமக்கும் இறைவனுக்கும் இடையே நிலவும் சமாதான உறவு எப்போது முறியும்?"
"நாம் இறைவனுடைய மனதை நம்முடைய பாவத்தினால் நோகச் செய்யும்போது அவரோடு நமக்கு இருக்கும் சமாதான உறவு முறியும்."
", முறிந்த உறவை மீண்டும் ஏற்படுத்த வேண்டுமென்றால்
இறைவன் நமது பாவங்களை மன்னிக்க வேண்டும்.
அதற்காகவே இயேசு பிறந்தார்.
மன்னிப்பு இன்றி சமாதானம் இல்லை."
"உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்.
விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான்,"
என்றுதான் இயேசு தனது சீடர்களிடம் கூறினார்.
இது மன்னிப்பு எங்கே வருகிறது?"
", இயேசுவின் நற்செய்தியே மன்னிப்பின் செய்திதான்.
ஞானஸ்நானம் பெறுவதே பாவ மன்னிப்பு பெறுவதற்காகத்தான்.
ஆன்மாவின் பாவங்கள் மன்னிக்கப் படும்போதுதான் அதற்கு மீட்பு கிடைக்கிறது."
''அப்படியானால் கிறிஸ்தவனையும் மன்னிப்பையும் பிரிக்க முடியாதா?"
",கடவுள் நமது பாவங்களை மன்னிப்பது போல பிறருடைய குற்றங்களை மன்னிப்பவன்தான் உண்மையான கிறிஸ்தவன்.
மன்னிக்க மனம் இல்லாதவன் கிறிஸ்தவன் அல்ல.
பிறரை மன்னிப்பவனுக்கு மட்டுமே
கடவுளிடம் மன்னிப்பு கேட்க உரிமை உண்டு."
"கடவுள் நம்மை எத்தனை முறை மன்னிப்பார்?"
", அதற்கு கணக்கே கிடை யாது.
அவர் அளவற்ற அன்பு உடையவர்.
அவரது மன்னிப்புக்கும் அளவே கிடையாது.
நாம் எத்தனை கோடி தடவை மன்னிப்பு கேட்டாலும்,
அத்தனை கோடி தடவையும் மன்னிப்பார்."
"எப்படிப்பட்ட பாவங்களை மன்னிப்பார்?"
"எல்லா பாவங்களையும்,
அவை பெரியவையோ, சிறியவையோ,
பாவத்தின் தன்மையைப் பார்க்காமல் மன்னிப்பார்.
கோடிக் கணக்கான மனிதர்களை கொலை செய்துவிட்டு, அதற்காக மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டாலும் மன்னிப்பார்.
தன் மகனைக் கொன்றவர்களையே மன்னித்தார்.
ஆண்டுக் கணக்காக பாவம் செய்தவர்களையும் ஒரு விநாடியில் மன்னிப்பார்."
"நாமும் அப்படித்தான் மன்னிக்க வேண்டுமா?"
",ஆமா. அயலானை மன்னிக்காமல் நாம் அவருக்குச் செலுத்தும் காணிக்கைகளை அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார்.
நாம் திருப்பலி செலுத்துமுன் முதலில் நமது அயலானை மன்னிக்க வேண்டும்.
அயலான் மீது வன்மம் வைத்துக் கொண்டு, நாம் எத்தனை முறை திருப்பலி ஒப்புக் கொடுத்தாலும் பயனில்லை.
"நீ பீடத்தின்மேல் காணிக்கை செலுத்த வரும்பொழுது,
உன் சகோதரனுக்கு உன்மீது மனத்தாங்கல் இருப்பதாக அங்கே நினைவுற்றால்,
அங்கேயே, பீடத்தின்முன், உனது காணிக்கையை வைத்துவிட்டு,
முதலில் போய் உன் சகோதரனோடு சமாதானம் செய்துகொள்.
பின்னர் வந்து, உன் காணிக்கையைச் செலுத்து"
(மத். 5:23, 24)
என்று நமது ஆண்டவரே கூறியிருக்கிறார்.
மன்னிப்பு இன்றி பலி ஒப்புப் கொடுப்பது, ஓட்டைப் பானைக்குள்
தண்ணீர் ஊற்றுவதுபோல.
எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் ஒரு சொட்டுக்கூட பானைக்குள் நிற்காது.
இறைவன் அருள் நம்மில் தங்க வேண்டும் என்றால் நம் மனதில் யார் மீதும் வன்மம் இருக்க கூடாது.
வான தூதர்கள் 'நல்மனது உள்ளவர்களுக்கே சமாதானம்' என்று பாடினார்கள்.
மன்னிக்கத் தெரியாத மனது நல்மனது அல்ல."
"அரசாங்கம் கிறிஸ்தவர்களுக்கு எதிராக செயல்படும் போது நாம் அதை எதிர்த்து போராட்டம் செய்ய வேண்டுமா அல்லது மன்னிக்க வேண்டுமா?"
"ஒரு கன்னத்தில் அறைபவனுக்கு, மறுகன்னத்தையும் காட்டு.
உன் மேலாடையைப் பறிப்பவனுக்கு, உள்ளாடையையும் மறுக்காதே.
உன்னிடம் கேட்பவன் எவனுக்கும் கொடு.
உன் உடைமைகளைப் பறிப்பவனிடமிருந்து திருப்பிக் கேட்காதே."
(லூக்.6:29, 30)
என்றுதான் ஆண்டவர் கூறியிருக்கிறார்.
நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு அவரது பாடுகளின்போது அவர் நடந்து வந்த விதமே நமக்கு எடுத்துக்காட்டு.
தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களுக்கு எதிராக ஒன்றும் செய்யாதது மட்டுமல்ல,
அவர்களை மன்னிக்கும்படி தந்தையிடம் வேண்டினார்.
அவரிடம் பயிற்சி பெற்ற அப்போஸ்தலர்கள்
வேத கலாபனை காலத்தில் தங்களைக் கொல்ல அனுமதித்தார்கள் தவிர
அரசை எதிர்த்து போராடவில்லை.''
"ஆனால் நம்மவர்கள் போராடுகிறார்களே.''
", அது இவ்வுலகைச் சார்ந்த முறை.
கிறிஸ்து வாழ்ந்த சமயத்தில் யூதர்கள் ரோமானியரின் அடிமைத்தனத்தில் வாழ்ந்து வந்தார்கள்.
அவர்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுக்க இயேசு போராடவில்லை.
நமது ஆன்மாவின் மீட்புக்கு கூட அவ பாடுபட்டு மரித்திருக்க வேண்டிய அவசியமில்லை.
அவரது ஒவ்வொரு செயலுக்கும் அளவற்ற பலன் உண்டு.
ஒரு நாள் நோன்பு இருந்து அதை நமது பாவங்களுக்கு பரிகாரமாக ஒப்புக்கொடுத்திருந்தால் கூட அது மனுக்குலத்தின் எல்லா பாவங்களுக்கும் மன்னிப்பு பெற்றுத் தந்திருக்கும்.
ஆனால் மனுக்குலத்தின் மீது அவருக்கு அந்த அளவற்ற அன்பை காட்டவே
அவர் தாங்கமுடியாத வேதனைகள் நிறைந்த பாடுகள் படவும்,
தன்னையே சிலுவையில் பலியாக்கவும் மனப்பூர்வமாக தீர்மானம் எடுத்தார்.
அவரது சீடர்களும் அவரையே பின்பற்றினார்கள்.
நற்செய்தியை உலகெங்கும் அறிவிக்க அவர்கள் போராடவில்லை,
தங்களது உயிரையே கொடுத்துதான் நற்செய்தியை அறிவித்தார்கள்.
வேத சாட்சிகளின் இரத்தம்தான் கிறிஸ்தவம் உலகெங்கும் பரவ காரணமாக இருந்தது.
நமது உரிமைகளை பறிப்பது யாராக இருந்தாலும்
அவர்களை மன்னிப்போம்,
அவர்களுக்காக செபிப்போம்.
மன்னிப்பு ஒன்றுதான் நமது ஆயுதம்.
நாம் ஒருவரையொருவர் மட்டுமல்ல நமது எதிரிகளையும் மன்னிப்போம்.
எதிரிகளையும் மன்னிப்பவன்தான் உண்மையான கிறிஸ்தவன். ''
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment