புத்தாண்டுச் செய்தி.
" தாத்தா, ஒரு கணக்குக்கு பல விடைகள் இருக்க முடியுமா?"
".ஒரு கணக்குக்கு சரியான விடை ஒன்றுதான் இருக்க முடியும்.
தவறான விடைகள் கோடிக்கணக்கில் இருக்கலாம்.
இப்போ எதுற்காக இந்தக் கேள்வி?"
"இன்று 'நாங்கள்தான் கிறிஸ்தவ சபை' என்று கூறிக்கொண்டு ஆயிரக்கணக்கான சபைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
எல்லோர் கையிலும் பைபிள் இருக்கிறது.
எல்லா சபைகளையும் கிறிஸ்தவ சபைகள் என்று ஏற்றுக் கொள்ளலாமா?
அப்படி ஏற்றுக் கொண்டால்,
5 X 4 = 20 என்றாலும்,
5 X 4 = 22 என்றாலும்
5 X 4 = 32 என்றாலும்
சரிதான் என்று ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்குமே. அதனால்தான் அப்படிக் கேட்டேன்."
", உண்மைதான். ஆயிரக்கணக்கான சபைகள் தங்களைக் கிறிஸ்தவ சபை என்று கூறிக்கொண்டாலும்
ஒன்றே ஒன்று மட்டும்தான் தன்னை உண்மையிலேயே கிறிஸ்துவால் உருவாக்கப்பட்ட சபை என்று கூறமுடியும்.
அதன் போதனைகள்தான் கிறிஸ்துவின் கிறிஸ்துவின் போதனைகள்.
அவற்றை வாழ்பவர்களே உண்மையான கிறிஸ்தவர்கள்."
"அதை எப்படிக் கண்டுபிடிப்பது?"
", கிறிஸ்து எதற்காக மனிதனாகப் பிறந்தார்?"
"மனுக்குலத்தை பாவத்திலிருந்து மீட்பதற்காக ."
",அதாவது?"
"நமது பாவங்களை மன்னிப்பதற்காக."
", அதை மனிதனாகப் பிறக்காமல் செய்திருக்க முடியாதா?"
"முடியும். ஆனால் தனது பாடுகளின் மூலமும், தன்னைத் தானே பலி ஒப்புக்கொடுப்பதன் மூலமும்
நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்து."
நமது பாவங்களை மன்னிக்க இறைமகன் மனுமகனாய்ப் பிறந்தார்."
"அப்படியானால் இயேசு நமது பாவங்களுக்காக தன்னையே பலியாக்கிய வினாடியே மனுக்குலத்தின் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு விட்டனவா?"
", இயேசு மனுக்குலத்தின் பாவங்களுக்காக பரிகாரம் செய்தார். நாம் நமது பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு மன்னிப்பு கேட்கும்போது பாவமன்னிப்பு கிடைக்கும்."
"இயேசு நமது பாவங்களுக்காகப்
பரிகாரம் செய்துவிட்டார். நமது பாவங்களை மன்னிக்கிறவரும் அவரே.
அப்படியானால் ஏன் பாவமன்னிப்புப் பெற ஒரு குருவிடம் நமது பாவங்களை அறிக்கையிட வேண்டும்?"
"எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்:
எவர்களுடைய பாவங்களை மன்னியாது விடுவீர்களோ, அவை மன்னிப்பின்றி விடப்படும்"
(அரு. 20:23) என்று சொன்னது யார்? யாரிடம் சொன்னார்?"
"இப்போது புரிகிறது. இயேசு நமது பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை தன்னுடைய அப்போஸ்தலர்களுக்குக் கொடுத்தார்.
நமது குருக்கள் அப்போஸ்தலர்களின் வாரிசுகள்.
ஆகவே நமது பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் நமது குருக்களுக்கு இயேசுவால் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆகவேதான் நமது பாவங்களை குருவிடம் அறிக்கையிட வேண்டும்."
",நமது பாவங்களை மன்னிப்பது ஆண்டவர்தான். நமது குருக்கள் மூலம் ஆண்டவர் நமது பாவங்களை மன்னிக்கிறார்கள்.
பாவசங்கீர்த்தனம் என்னும் தேவத் திரவிய அனுமானத்தை ஏற்படுத்தியவர் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே.
பாவசங்கீர்த்தனம் என்னும் தேவத் திரவிய அனுமானத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அதை ஏற்படுத்திய இயேசுவையே ஏற்றுக் கொள்ளாதவர்கள்.
இயேசுவையே ஏற்றுக் கொள்ளாதவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல.
இயேசு எதற்காக பாடுகள் பட்டு சிலுவையில் தனது உயிரைக் கொடுத்தார்?"
" நமது பாவங்களுக்கு பரிகாரமாக
இயேசு பாடுகள் பட்டு சிலுவையில் தனது உயிரைக் கொடுத்தார்."
", எகிப்தின் அடிமைத் தனத்திலிருந்து இஸ்ரயேலர்கள் மீட்கப்பட்ட பாஸ்கா நாளன்று
கடவுளுக்கு பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்ட பொருளை அவர்கள் உணவாக உண்ண வேண்டும் என்பது
மோயீசன் மூலம் இறைவன் கொடுத்த கட்டளை.
அதேபோல்தான் பாவத்தின் அடிமைத் தனத்திலிருந்து நம்மை மீட்க தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்த இயேசு,
மீட்படைய விரும்புகிறவர்கள் அவரை உண்ண வேண்டும் என்று விரும்புகிறார்.
" என் தசையைத் தின்று, என் இரத்தத்தைக் குடிப்பவன் முடிவில்லா வாழ்வைக் கொண்டுள்ளான்." (அரு. 6:54)
அவருடைய தசையைத் உண்டு,
இரத்தத்தைக் குடிப்பதற்காகத்தான்
இயேசு பாடுபடுவதற்கு முந்திய நாள், வியாழக்கிழமை இரவு, திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்.
''அப்பத்தை எடுத்து, நன்றிகூறி, பிட்டு, அவர்களுக்கு அளித்து, " இது உங்களுக்காக அளிக்கப்படும் என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள் " என்றார்.
அவ்வாறே, உணவு அருந்தியபின் கிண்ணத்தை எடுத்து, "இக்கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படும் என் இரத்தத்தினாலாகும் புதிய உடன்படிக்கை."
புனித வியாழனன்று இயேசு திவ்ய நற்கருணையையும், குருத்துவத்தையும் ஏற்படுத்தினார்.
வசீகர வார்த்தைகள் மூலம் இயேசு
அப்பத்தை தன் உடலாகவும், ரசத்தைத் தன் இரத்தமாகவும் மாற்றி தனது சீடர்களுக்கு தன்னையே உணவாக அளித்தார்.
இதைத்தான் நமது குருக்கள் திருப்பலியின் போது செய்கிறார்கள்.
அப்பத்தையும் ரசத்தையும் இயேசுவின் உடலாகவும் ரத்தமாகவும் மாற்றி நமக்கு அவரை உணவாகத் தருகின்றார்கள்.
திவ்ய நற்கருணையை ஏற்படுத்தியவர் இயேசுவே.
திவ்ய நற்கருணையை ஏற்றுக் கொள்ளாதவன் இயேசுவை ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆகவே நற்கருணையை ஏற்றுக் கொள்ளாத யாரும் கிறிஸ்தவன் அல்ல.
திருப்பலியின்போதுதான் அப்பமும் இரசமும் இயேசுவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறுகின்றன.
"இதை என் நினைவாகச் செய்யுங்கள்"
இதை : இயேசு அப்பத்தையும் ரசத்தையும் தனது உடலாகவும் இரத்தமாகவும் மாற்றியதை.
என் நினைவாக: என்னை நினைத்துக்கொண்டு.
செய்யுங்கள்: நீங்களும் அப்பத்தையும் இரசத்தையும்
என் உடலாகவும், இரத்தமாகவும் மாற்றி, உண்ணுங்கள்.
சீடர்கள் இயேசுவின் நினைவாக செய்ததால்தான்
அவர்கள் இயேசு பயன்படுத்திய அதே வார்த்தைகளை
("என் உடல்"
"என் இரத்தத்தினாலாகும்" )
அப்படியே பயன்படுத்தி
அப்பத்தை இயேசுவின் உடலாகவும்,
ரசத்தை அவருடைய இரத்தமாகவும் மாற்றினார்கள்.
சீடர்களின் வாரிசுகளான நமது குருக்களும் அதையே செய்கிறார்கள்.
குருவானவர் 'என்' என்று சொல்லும்போது இயேசுவின் இடத்தில், இயேசுவாகவே நிற்கிறார்.
இயேசுவின் நினைவாக குருக்கள் செய்வதுதான் திருப்பலி,
திருப்பலியின்போதுதான் அப்பம் இயேசுவின் உடலாகவும், ரசம் இயேசுவின் இரத்தமாகவும் மாறுகின்றன.
திருப்பலியை ஏற்றுக் கொள்ளாதவன் அதை நிறைவேற்ற சொன்ன இயேசுவையும் ஏற்றுக்கொள்ளவில்லை.
இயேசுவை ஏற்றுக் கொள்ளாதவன் கிறிஸ்தவன் அல்ல.
இயேசு மனிதனாக பிறந்து முப்பத்தி மூன்று ஆண்டுகள் உலகில் வாழ்ந்ததே
நமது பாவங்களை மன்னிக்கவும்,
(பாவசங்கீர்த்தனம்)
நமது மீட்புக்காகத் தன்னையே பலியாக்கவும்,
(திருப்பலி)
பலிப்பொருளை, அதாவது தன்னை, நமக்கு உணவாகத் தரவும், (திவ்ய நற்கருணை)
அதன்மூலம் நமக்கு நிலை வாழ்வைத் தரவும்தான்.
ஆகவே பாவசங்கீர்த்தனத்தையும்,
திருப்பலியையும்,
திவ்ய நற்கருணையையும்
ஏற்றுக்கொள்ளாமல்,
பைபிள் வசனங்களை கொண்டு பாட்டுக்கள் பாடினாலும் பயன் இல்லை.
எத்தனை முறை அல்லேலூயா போட்டாலும், கைகளை ஆட்டி ஆவியானவரை அழைத்தாலும் பயனில்லை.
பைபிள் இயேசு கிறிஸ்துவை மையமாகக் கொண்டது.
பழைய ஏற்பாடு இயேசு கிறிஸ்துவின் வருகையை முன் அறிவிக்கிறது.
புதிய ஏற்பாடு அவரை நாம் வாழ வழி காட்டுகிறது.
இயேசு கிறிஸ்து வாழ்ந்தது
நமக்காக பலியாகவும்,
தன்னை நமக்கு உணவாகத் தரவும்,
நமது பாவங்களை மன்னிக்கவும்,
இவற்றின் மூலம் நம்மை விண்ணகத்திற்கு அழைத்து செல்வதற்காகவுமே.
இயேசு எதற்காக உலகிற்கு வந்தாரோ அதை ஏற்றுக்கொள்ளாமல் எப்படி நம்மால் அவரை வாழ முடியும்?
கிறிஸ்தவன் என்று ஒருவன் தன்னை அழைத்துக்கொள்வதால் மட்டுமே கிறிஸ்தவன் ஆகிவிட முடியாது.
கிறிஸ்தவனாக வாழ்ந்தால் மட்டுமே ஒருவன் கிறிஸ்தவன் ஆக முடியும்.
கிறிஸ்து ஏற்படுத்திய பாவசங்கீர்த்தனத்தையும்,
அவர் தனது உடலோடும்,
உதிரத்தோடும்,
ஆன்மாவோடும்,
தெய்வீகத்தோடும்,
நமது ஆன்மீக உணவாக வருவதற்கென்றே காத்துக் கொண்டிருக்கும் தேவ நற்கருணையையும்,
அவரது நினைவாக நிறைவேற்றப் பட்டுக்கொண்டிருக்கும் திருப்பலியையும்
ஏற்றுக்கொண்டு, அவரது போதனைகளின்படி வாழ்பவனே உண்மையான கிறிஸ்தவன்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment