Monday, January 3, 2022

இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் நிலை என்ன?

 இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் நிலை என்ன?


"தாத்தா, வணக்கம்."

"வணக்கம். வழக்கமா காலையில் வந்து வணக்கம் போடுவ, இன்றைக்கு சாயங்காலம் வந்து போடற?"

"காலையில குற்றாலத்துக்குப் போனோம்."

"அப்படியா? அருவிகளில் எல்லாம் நிறைய தண்ணீர் விழுமே!"

"ஆமா, தாத்தா. எல்லா அருவிகளிலும் நிறைய தண்ணீர் விழுந்து கொண்டிருக்கிறது."

"நீ எந்த அருவியில் குளிச்ச?

"நான் ஒரு அருவியிலும் குளிக்கல.
அருவியை இரசிச்சேன், அவ்வளவுதான்."
 
", உன்னோடு வந்த மற்றவர்கள் குளித்தார்களா?"

"அவர்கள் குளித்தார்கள்."

", நீ என்னதான் செய்தாய்?"

"அருவியை இரசிச்சேன், அப்புறம் ஹோட்டலில் நன்கு சாப்பிட்டேன்.
கடைகளிலிருந்து சில விளையாட்டுப் பொருட்கள் வாங்கினேன். ஊருக்கு திரும்பும்போது தென்காசியில் மேட்னி சினிமா பார்த்தேன்."

",ஆக குற்றாலத்திற்குப் போகின்றவர்கள் எதற்காக போகிறார்களோ அதை நீ செய்யவில்லை."

"தாத்தா, நான் குற்றாலத்திற்குக் குளிப்பதற்காக செல்லவில்லை.
ஒரு சிறு உல்லாச பயணமாகச் சென்றேன்.

நீங்கள் ஆசிரியர்தானே, பள்ளிக்கூடத்துக்கு வரும் எல்லா மாணவர்களும் படிக்கின்றார்களா?
 
கோவிலுக்கு செல்லும் எல்லோரும் இறைவனை வணங்குகிறார்களா?

பைபிள் வாசிக்கும் எல்லோரும் அதன்படி நடக்கிறார்களா?"

". பேரப்புள்ள, ஒரு குட்டிப் பிரசங்கமே வச்சிட்ட!"

"தாத்தா, நான் சொல்வது சரியா? தவறா?

இப்போ நான் கேட்பதற்குப் பதில் சொல்லுங்கள்.

இயேசு ஏன் ஏழைத் தாயின் வயிற்றில், ஏழ்மையான மாட்டுத் தொழுவத்தில், 
ஏழையாகப் பிறந்தார்?"

"ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றவர்கள்: ஏனெனில், கடவுளின் அரசு உங்களதே."
(லூக்.6:20)

என்ற அவரது போதனைக்கு முன்மாதிரிகையாக வாழ்ந்து காண்பிப்பதற்காக ஏழையாகப் பிறந்தார்."

"யாருக்கு முன்மாதிரிகையாக?"

", நமக்கு முன்மாதிரிகையாக. உலகின் அதிபதியாகிய அவர் ஏழ்மையை நேசித்தார்.

தன்னை நேசிப்பவர்கள் அனைவரும் ஏழ்மையை நேசிக்க வேண்டும் என்பது அவரது சித்தம்.

நமக்கு முன்மாதிரிகையாகத்தான்
அவர் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வாழ்ந்து, ஏழையாக மரித்தார்."

"தாத்தா, நாம் ஒவ்வொரு 
 வருடமும் 

ஏழையாக பிறந்த இயேசு பாலனின் பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

நமக்கு முன்மாதிரியாக தானே அவர் ஏழையாக பிறந்தார் என்று சொன்னீர்கள்.

 நம்மில் எத்தனை பேர் இயேசு பாலனை பின்பற்றி ஏழ்மையை நேசிக்கிறோம்?

எத்தனை பேர் வாழ்நாள் முழுவதும் ஏழைகளாகவே வாழ விரும்புகிறோம்?

எத்தனை பேர் கிறிஸ்மஸ் கொண்டாடும்போது இயேசு பாலனிடம், 'நாங்கள் ஏழைகளாக வாழ வரம் தாரும், ஆண்டவரே ' என்று கேட்கிறோம்?

மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள்?"

", நீ கேட்பது நியாயமான கேள்விதான்.

நம்மவர்கள் கிறிஸ்மஸ் விழாவை கொண்டாடும் விதத்தைப் பார்த்தால் யாரும் ஏழைகளாக வாழ விரும்பவில்லை போல்தான் தெரிகிறது."

"ஏழ்மை என்றால் என்ன? எப்படி வாழ்பவர்கள் ஏழைகள்?"

",உலக பொருட்கள் மீது பற்று இல்லாமையையே ஏழ்மை என்று அழைக்கிறோம்.

உலக பொருட்கள் மீது பற்று இல்லாமல் வாழ்பவர்கள்தான் ஏழைகளாக வாழ்பவர்கள்.

எதிர்மறையான இரண்டு பொருட்கள் மீது ஒரே நேரத்தில் ஒருவருக்கு பற்று இருக்க முடியாது.

கடவுள் மீது பற்று உள்ளவர்களுக்கு உலகத்தின் மீது பற்று இருக்க முடியாது.

உலகப்பற்று உள்ளவர்களுக்கு இறைப்பற்று இருக்க முடியாது.

இறைப் பற்று உள்ளவர்களால் மட்டுமே இறை அரசுக்குள் நுழைய முடியும்.

ஆகவேதான் ஆண்டவர்,

"ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றவர்கள்: ஏனெனில், கடவுளின் அரசு உங்களதே."

என்று சொன்னார்.

  சிலரிடம் உலகப் பொருட்கள் எதுவும் இருக்காது. ஆனால் அவற்றின்மீது பற்று இருக்கும்.

 உலக பார்வையில் அவர்கள் ஏழைகளாக இருக்கலாம்,

 ஆனால் ஆன்மீக பார்வையில் அவர்கள் ஏழைகள் அல்ல.

சிலரிடம் உலகப் பொருட்கள் இருக்கலாம், ஆனால் அவற்றின்மீது பற்று இருக்காது.

அவர்கள்தான் ஆன்மீக பார்வையில் உண்மையான ஏழைகள்.

இயேசு உலகத்தைப் படைத்தவர். அதிலுள்ள ஒவ்வொரு பொருளும் அவருக்கு உரியவை.

 ஆனால் அவற்றில் எதையும் அவர் அனுபவிக்க விரும்பாமல் ஒன்றும் இல்லாதவர்போல் ஏழையாகப் பிறந்தார்.

 தன்னைப் பெற்ற அன்னையையும் வளர்த்த தந்தையையும் தன்னைப்போலவே ஏழைகளாக வைத்திருந்தார்.

அவர்களிடம் அருள்வளம் இருந்தது, பொருள்வளம் இல்லை.

புரிகிறதா?"

"நன்றாகவே புரிகிறது, தாத்தா.

 ஆனால் என் கேள்வி இயேசுவைப் பின்பற்றுகிறோம் என்று சொல்லிக் கொள்பவர்கள் அப்படி இருக்கிறார்களா?"

",அதை அவரவர் சிந்தனைக்கு விட்டுவிடுவோம்."

லூர்து செல்வம்.








"

No comments:

Post a Comment