Wednesday, January 5, 2022

"அவரைக் கண்டபின் எனக்குத் தெரிவியுங்கள். நானும் போய் அவரை வணங்கவேண்டும்"(மத்.2:8)

"அவரைக் கண்டபின் எனக்குத் தெரிவியுங்கள். நானும் போய் அவரை வணங்கவேண்டும்"
(மத்.2:8)

பிறந்திருக்கும் யூதர்களின் அரசரைத் தரிசிப்பதற்காக கீழ்த்திசையிலிருந்து வந்த ஞானிகள்,

 அவர் பிறந்த இடம் தெரியாததால் அதைப் பற்றி விசாரிக்க ஏரோது மன்னனிடம் சென்றார்கள்.

"பிறந்திருக்கும் யூதர்களின் அரசர்" என்பதைக் கேட்டதும், தனது பதவிக்கு ஆபத்து வந்து விட்டதோ என்று எண்ணி ஏரோது அரசன் கலங்கினான்.

உடனே அவரைக் கொல்வது என்று தீர்மானித்துவிட்டான்.

தலைமைக் குருக்கள், மக்களுள் மறைநூல் அறிஞர் மூலம் அவர் பெத்லகேமில் பிறப்பார் என்பதை அறிந்து கொண்டான்.

பின்பு ஞானிகளைப் பெத்லெகேமுக்குப் போகச் சொல்லி, 

"நீங்கள் சென்று குழந்தையைப்பற்றிக் கருத்தாய் ஆராய்ந்து பாருங்கள்: 

அவரைக் கண்டபின் எனக்குத் தெரிவியுங்கள். 

நானும் போய் அவரை வணங்கவேண்டும்" என்றான்.

"நானும் போய் அவரை வணங்கவேண்டும்" என்று சொன்னது

உண்மையில் அவரை வணங்குவதற்காக அல்ல,
அவரைக் கொல்வதற்கு.

ஏரோதுவின் வார்த்தைகளையும், நோக்கத்தையும் சிறிது தியானித்தால், ஒரு கவலை தரும் உண்மை நமக்குப் புலனாகும்.

ஆண்டவர் பிறந்த சமயத்தில் ஒரு ஏரோது தான் வாழ்ந்தான்.

ஆனால் இன்று எண்ணற்ற ஏரோதுகள் வாழ்ந்து கொண்டிருப்பார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

நாமும் கூட அவர்களில் ஒருவராக இருப்போமோ என்ற சந்தேகம் எழுகிறது. 

அன்றைய ஏரோது இயேசுவை வணங்க ஆசைப் படுவதாகக் கூறினான், ஆனால் உண்மையில் அவன் அவரைக் கொல்ல நினைத்தான்.

இன்றைய ஏரோதுகள் இயேசுவை மகிமைப்படுத்த போவதாக கூறிக்கொண்டு,

 அவரை அவமானப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.

ஆன்மீக வாழ்வு வாழ்வது இயேசுவை மகிமை படுத்துவதற்காக.

ஆன்மீக வாழ்வில் ஏசுவின் சித்தப்படி நடந்து அவரை மகிமைப் படுத்துகின்றோம்.

ஆனால் ஆன்மீக வாழ்வு வாழ்வதாக கூறிக்கொண்டு

 லௌகீக வாழ்வு வாழ்பவர்கள் அவரை அவமானப்படுத்துகிறார்கள்.

நாம் இறைப்பற்றோடு வாழும்போது இயேசுவை மகிமைப்
படுத்துகிறோம்.

இறைப்பற்றோடு வாழ்வதாக கூறிக்கொண்டு பணப்பற்றோடு வாழ்ந்தால் அவரை அவமானப்படுத்துகிறோம்.

ஆவிக்குரிய கூட்டங்கள் நடத்துபவர்கள் பரிசுத்த ஆவியை மகிமைப் படுத்துவதாக கூறிக்கொள்கிறார்கள்.

ஆனால் அவர்கள் காணிக்கை வசூலிப்பதில் மட்டும் குறியாக இருப்பார்களானால் அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? 
ஏரோதுவைவிட மோசமானவர்கள்.

ஆண்டவரை வழிபடுவதற்காக தானே கோவிலுக்குச் செல்கிறோம்?

ஆனால் அங்கு நமது ஆன்மீகத் தேவைகளைப் பற்றி கொஞ்சம் கூட கவலை படாமல்,

உலகைச் சார்ந்த உதவிகளை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தால்,

நாம் ஆன்மீக வாழ்வு வாழ்வதாக வெளித்தோற்றத்திற்கு தோன்றினாலும்,

நாம் உண்மையில் வாழ்வது உலகைச் சார்ந்த வாழ்வாகவே இருக்கும்.

யார் நமது ஆன்மாவை காப்பாற்ற மனிதனாகப் பிறந்து, பாடுபட்டு, சிலுவையில் நமக்காக மரித்தாரோ

அவரிடமே சென்று நமது உடல் சம்பந்தப்பட்ட, உலகைச் சார்ந்த உதவிகளை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தால் 

அது அவரது விருப்பத்திற்கு எதிரானது.

இயேசுவின் விருப்பத்திற்கு எதிரான செயல்களை நாம் செய்து கொண்டிருந்தால்

நிச்சயமாக அது அவரை மகிமை படுத்துவதற்காக அல்ல. 


''அப்போது, கூட்டத்தில் ஒருவன், "போதகரே, 

என் சகோதரன் என்னுடன் சொத்தைப் பங்கிட்டுக்கொள்ளுமாறு சொல்லும்" என்றான்.

அதற்கு அவர், "அன்பனே, நியாயம் தீர்க்கவோ பாகம்பிரிக்கவோ என்னை ஏற்படுத்தியவர் யார்?" என்றார்.

 பின் மக்களைப் பார்த்து, "எவ்வகைப் பொருளாசையும் கொள்ளாதபடி கவனமாயிருங்கள்.

 ஏனெனில், ஒருவனுக்கு எவ்வளவு தானிருந்தாலும் செல்வப் பெருக்கினால் வாழ்வு. வந்துவிடாது" (லூக்.12:13-15)

பொருளாசை இறைப்பற்றுக்கு எதிரானது.

ஒருவன் பணத்திற்கும் இறைவனுக்கும், ஒரே நேரத்தில் ஊழியம் செய்ய முடியாது என்று இயேசுவே கூறியிருக்கிறார்.

இறைப் பணிக்கு மட்டுமே அவர் நமக்கு தரும் பொருள் பயன்படுத்தப்பட வேண்டும்.

இறைவனை மறந்து பணத்தை 
பணத்திற்காக மட்டுமே விரும்பினால் நாம் பணத்திற்கு அடிமைகள் ஆகிறோம்.

பணத்திற்காக மட்டுமே இறைவனைத் தேடினால்,  அது அவரை அவமானப்படுத்தும் செயல்.

இதைச் செய்யும்போது நாம் ஏரோதுகளாக மாறி விடுகிறோம்.

 நமது ஆண்டவராகிய இயேசுவை 
 நற்கருணை மூலம் நமது ஆன்மீக உணவாக உண்ணும்போது நமது ஆன்மா பரிசுத்தமானதாக இருக்க வேண்டும். 

சாவான பாவ மாசுடன் பரிசுத்தரான இயேசுவை நாம் உட்கொண்டால்

 மற்றொரு சாவான பாவம் செய்து அவரை அவமானப் படுத்துகிறோம்.

இயேசுவை உணவாக உட்கொண்டு ஆன்மீகத்தில் வாழ்வதாக கூறிக்கொண்டு,

அவரை நமது பாவ சேற்றுக்குள் இழுத்து அவமான படுத்துகிறோம்.

தகுதியான தயாரிப்பின்றி நற்கருணை அருந்துபவர்கள் அனைவரும் ஏரோதுகள்தான்.  

இயேசுவின் அதிமிக மகிமைக்காக என்று கூறிக்கொண்டு
.
 தற்பெருமைக்காகவும், 

குறைவாக கொடுத்தால் நிறைவாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடனும்

பிறருக்கு உதவி செய்பவர்கள் உண்மையில் இயேசுவை பெருமைப் படுத்தவில்லை, அவமானப்படுத்துகிறார்கள்.

தற்பெருமைக்காக செய்யப்படும் எதுவும் நற்செயல் அல்ல.

சுய விளம்பரத்திற்காக பிறசிநேக செயல்கள் போல் தோன்றும்படி 
செயல்படுபவர்கள் அனைவரும் ஏரோதுகள்தான்.

சுயபரிசோதனை செய்து பார்ப்போம்.

நாம் இறைவனின் அதிமிக மகிமைக்காக ஆன்மீக வாழ்வு வாழ்ந்தால்தான் கிறிஸ்தவர்கள். 

சுய நன்மைக்காக, 

ஆன்மீக வாழ்வு வாழ்வது போல் தோற்றம் அளித்துக்கொண்டு

 உலகைச் சார்ந்த வாழ்வை மட்டும் வாழ்ந்தால் ஏரோதுகள்.

இறைவனுக்காக வாழ்வோம்.

இறைவனுக்காக மட்டும் வாழ்வோம்.

இயேசு பாலனுக்கு மகிமை உண்டாவதாக!

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment