Thursday, January 13, 2022

விசுவாசமா? சுயநலமா?

விசுவாசமா? சுயநலமா?



அரசியல் கட்சியில் உறுப்பினராய் இருப்பவர்கள் அடிக்கடி கட்சி மாறுவதைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம்

ஏன் கட்சி மாறுகிறார்கள்?

கட்சி என்றல் அதற்கென்று ஒரு கொள்கை இருக்கும்.

தத்துவப்படி (Theoretically) ஒரு கட்சியின் கொள்கையில் நம்பிக்கை உள்ளவர்கள் தான் அதில் இருப்பார்கள்.

கொள்கையில் நம்பிக்கை போய்விட்டால் அவர்களும் கட்சியை விட்டுப் போய் விடுவார்கள்.

 கொள்கையில் நம்பிக்கை இல்லாதவர்கள் அந்த கட்சியில் இருந்தால் அவர்கள் அவர்களது சுய நலத்திற்காக இருப்பதாக அர்த்தம்.

சுய நலத்திற்கு கட்சி உதவாவிட்டால் அதை விட்டு போய்விடுவார்கள்.

மக்கள் அடிக்கடி கட்சி மாறுவதன் காரணம் இதுதான்.

இப்போது நம்மைப் பார்த்து நாமே ஒரு கேள்வி கேட்போம்.

நாம் கிறிஸ்தவர்களாக இருப்பது கிறிஸ்தவத்தின் மீது உள்ள விசுவாசத்தினாலா, அல்லது சுய நலத்திற்காகவா?

வேறுவிதமாகக் கேட்டால்

கிறிஸ்துவின் திட்டப்படி ஆன்மீக வாழ்வு வாழ்வதற்காகவா,
  அல்லது
 நமது இஷ்டப்படி உடல் சார்ந்த வாழ்வை மட்டும் வாழ்வதற்காகவா?

இது மாதிரியான கேள்வியை பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் மாணவனைப் பார்த்து கேட்பார்,

"நீ பள்ளிக்கூடம் வருவது பாடம் படிப்பதற்கா, அல்லது வெறுமனே நேரத்தைப் போக்குவதற்கா?"

எப்படிப்பட்ட மாணவனை பார்த்து ஆசிரியர் இந்த கேள்வியை கேட்பார்?

பாடம் படிக்காமல் விளையாடிக் கொண்டிருக்கும் மாணவனை பார்த்து.

அதேபோல் தான்,

நாம் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவராக வாழ்ந்தாலும்,

ஆன்மீக வாழ்வில் ஆர்வம் காட்டாமல் லௌகீக வாழ்வில் மட்டும் ஆர்வம் காட்டினால்,

 நம்மை பார்த்து நாமே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும்.

எதற்காக செபம் சொல்லுகிறோம்?

செபம் என்றாலே இறைவனும் நாமும் ஒன்றிப்பதுதான்.

இறைவனும், நாமும் ஒன்றிப்பதற்கு அத்தியாவசியமானது இறைவனுடைய அருள்.(grace)

நாம் இறைவனுடைய அருள் வேண்டி செபிக்காமல் உலகைச் சார்ந்த பொருள் மட்டும் வேண்டி செபித்தால்

 நாம் நமது உலக வாழ்வில் மட்டும் ஆர்வம் காட்டும் சுயநலக்காரர்கள்.

இறைவன் நம்மை படைத்தது முழுக்க முழுக்க அவருக்காக.

நாம் வாழ்வது நமக்காக அல்ல,
 இறைவனுக்காக மட்டுமே.

இறைவனுக்காக மட்டும் வாழ்வது ஆன்மீக வாழ்வு.

 நமக்காக மட்டும் வாழ்வது உடல்சார்ந்த வாழ்வு.

உடலும் அதைச் சார்ந்தவையும் நமக்கு தரப்பட்டிருப்பது நமது ஆன்மீக வாழ்வுக்கு உதவிகரமாக இருக்கத்தான்.

நாம் ஆன்மீக வாழ்வு சார்ந்த பாவ, புண்ணியங்களைப் பற்றி கவலைப்படாமல்,

பாவங்களுக்காக மனஸ்தாபப்பட வேண்டும் என்பதை பற்றியும்,

ஆண்டவருடைய அருள் வரங்களைப் பெற்று ஆன்மீகத்தில் வளர வேண்டும் என்பதை பற்றியும் கவலைப்படாமல்,

உடல் சார்ந்த லௌகீக வாழ்வைப் பற்றி மட்டும் கவலைப்பட்டு செபித்தால்,

நாம் இறைவனுக்கு பயன்படவில்லை, அவரைத்தான் நமக்கு பயன்படுத்துகிறோம்.

இறைவனையே நமது உடல் சார்ந்த வாழ்விற்கு பயன்படுத்த முயற்சிக்கும் நாம் உண்மையிலேயே சுயநலவாதிகள்.

"ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று நாங்கள் ஆண்டுதோறும் வேளாங்கண்ணி கோவிலுக்குப் போகிறோம்.''

"போய்?"

"அசனம் கொடுப்போம். பூசை காண்போம். நன்மை வாங்குவோம்."

"பாவ சங்கீர்த்தனம்?''

பதில் இல்லை.

"நீங்கள் கோவிலுக்குப் போய் புண்ணியம் இல்லை."

ஆன்மாவின் நலன் வேண்டி கோவிலுக்குப் போகாமல்,

வாழ்க்கை வசதிகள் வேண்டியே கோவிலுக்குப் போகின்றவர்கள்,

M.L.A பதவி வேண்டியே ஒரு கட்சியில் இருப்பவர்களைப் போன்றவர்கள்.

இவர்கள் பதவி கிடைக்காவிட்டால் கட்சியை விட்டு போய் விடுவது போல,

அவர்கள் கேட்டது கிடைக்காவிட்டால் கடவுளை மறந்து விடுவார்கள்.

வாழ்க்கை வசதிகள் எதுவும் இல்லாவிட்டாலும்,

ஆண்டவருக்காக மட்டும் வாழ்பவனே உண்மையான கிறிஸ்தவன்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment