ஒவ்வொரு நாளும் நாம் மூன்று முறை உணவு உண்பதற்கும்,
திருவிழா சமயங்களில் மதிய உணவு உண்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
தினமும் உண்பது வழக்கமான உணவு.
திருவிழா சமயங்களில் உண்பது விசேசமான, விழாவை முழுமையாக அனுபவிப்பற்கென்றே தயாரிக்கப்பட்ட உணவு.
வழக்கமான உணவை விட, திருவிழா உணவை ருசித்து உண்போம்.
தினமும் இறைவனைத் தியானிக்கிறோம்,
அவரை நோக்கி செபிக்கிறோம்,
திருப்பலியில் கலந்து கொள்கிறோம்.
இவற்றையெல்லாம் எந்த உணர்வோடு செய்கிறோம்?
தினமும் உணவு உண்பது போல் வழக்கமான செயல் போல் செய்கிறோமா?
அல்லது திருவிழா உணவை உண்பது போல் உள்ளக் கிளர்ச்சியுடன், ஈடுபாட்டுடன் செய்கிறோமா?
திருமண தம்பதிகளை வாழ்த்திய ஒருவர்,
"முதல் நாள் போல் எந்நாளும் இருக்க வாழ்த்துகிறேன்!" என்றார்.
இறைவனை நேரடியாக பார்க்கும் பாக்கியத்தை நாம் பெற்றால் அப்போது அவரோடு எப்படி பேசுவோமோ
அதே போல்தான் இறைவனோடு ஒவ்வொரு முறையும் பேச வேண்டும்.
உலக வரலாற்றில் மிக முக்கியமாக நிகழ்வு
நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமது பாவங்களுக்கு பரிகாரமாக தன்னையே சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுத்த நிகழ்வுதான்.
அதே பலியைத்தான் இன்றும் ஒவ்வொருவரும் நாம் குருவோடு இணைந்து
பரம தந்தைக்கு ஒப்புக்கொடுக்கிறோம்.
அன்று சிலுவை அடியில் நின்றுகொண்டு தனது திருமகனைப் பார்க்கும்போது
அன்னை மரியாளின் மனதில் என்ன உணர்வுகள் இருந்தனவோ
அதே உணர்வுகள் இன்று திருப்பலியில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும்.
அதேபோல் இருக்க முயற்சியாவது செய்ய வேண்டும்.
அதற்காகத்தான் திருப்பலி ஒப்புக்கொடுக்கும் பீடத்திற்குப் பின்னால் நாம் பார்ப்பதற்காக பாடுபட்ட சுருபம் (Crucifix) வைக்கப்பட்டிருக்கிறது.
நடுப்பலியில் எழுந்தேற்றத்தின்போது குருவின் கையினால் உயர்த்தப்படும் ஆண்டவரின் உடலும், ரத்தமும்
நமது கண்கள் திருச்சிலுவையைப் பார்க்கும் நேர்கோட்டில்தான் இருக்கும்.
இயேசுவின் திரு உடலாக மாற்றப்பட்ட அப்பத்தை நாம் பார்க்கும்போது
அதற்கு பின்னால் சிலுவையில் தொங்கும் ஆண்டவரின் முகத்தையும் பார்த்தால்
அன்னை மரியாளின் மனதில் தோன்றிய அதே உணர்வுகள் நமது மனதில் தோன்ற வாய்ப்பு இருக்கிறது.
அந்த வாய்ப்பை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
அதே உணர்வுகள் தோன்ற அன்னை மரியாளைப்போல் நாம் புனிதர்கள் அல்ல என்பது உண்மைதான்.
ஆனாலும் முயற்சி செய்ய முடியும்.
ஒவ்வொரு திருப்பலியிலும் நாமும், குருவானவரும், சிலுவையில் மரித்த ஆண்டவரோடு இணைய வேண்டும்.
(We , together with the priest, must get united with our Crucified Lord during Mass.)
இந்த இணைவு உண்மையாகவே உணர்ச்சிகரமாக இருக்க வேண்டும்.
இந்த உணர்வு நாம் பங்கேற்கும் ஒவ்வொரு திருப்பலியின் போதும் நம்மிடம் இருக்க வேண்டும்.
நடுப் பூசையின்போது முழுமையான உணர்வுடன் நமது மனது நமக்காக மரித்த ஆண்டவரது மனதுடன் இணைய வேண்டுமென்றால்,
பூசையின் ஆரம்பத்திலிருந்தே பீடத்தில் நிற்கும் குருவானவரோடு இணைந்தே திருப்பலியில் கலந்து கொள்ள வேண்டும்.
நமது கண்கள் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை திருப்பலி ஒப்பு கொடுக்கப்படும் பீடத்தின் மீது இருக்க வேண்டும்.
பராக்குக்கும், வேறு சிந்தனைகளுக்கும் இடம் கொடுக்காமல்,
முற்றிலும் குருவானவரோடு இணைந்து திருப்பலியை ஒப்புக் கொடுத்தால்தான் அதன் முழுப்பலனையும் அடைய முடியும்.
திருப்பலியில் ஆண்டவரோடு முழுவதுமாக இணைய வேண்டுமென்றால் நமது ஆத்மா சாவான பாவ மாசின்றி இருக்க வேண்டும்.
தேவைப்பட்டால் பாவசங்கீர்த்தனம் செய்துவிட்டு திருப்பலியில் கலந்து கொள்ள வேண்டும்.
ஏதோ பொதுக்கூட்டத்திற்கு போவதுபோல் திருப்பலிக்கு வரக்கூடாது.
திருப்பலியின் போது வாசிக்கப்படும் பைபிள் வாசகங்கள் மூலமும்,
குருவானவருடைய பிரசங்கத்தின் மூலமும் இறைவன் நம்மோடு பேசுகிறார்.
அவர் நம்மோடு பேசுவது அவர் தரும் அறிவுரைகளின்படி நடப்பதற்காகத்தான்.
மூன்று ஆண்டுகள் நற்செய்தி அறிவித்த பின்பு தான் இயேசு உலகிற்கு எதற்காக வந்தாரோ அதை நிறைவேற்றினார்.
அவர் உலகிற்கு வந்தது நமது பாவங்களுக்குப் பரிகாரமாக தன்னையே பலியாக ஒப்புக் கொடுப்பதற்காகத்தான்.
பைபிள் வாசகங்களையும் குருவானவரின் பிரசங்கத்தையும் கேட்டபின் பலிக்கு வருவது,
ஆண்டவரோடு மூன்று ஆண்டுகள் பயணித்த பின்,
அவரோடு கல்வாரி மலைக்கு வருவதற்குச் சமம்.
நமது பாவங்களைத்தான் சிலுவையாகச் சுமந்து,
அவற்றுக்குப் பரிகாரமாகத்தான் அதில் மரித்தார் என்ற உணர்வுடன் திருப்பலியில் கலந்து கொண்டால்,
இந்த உணர்வு திருப்பலியின்போது மட்டுமல்ல நாள் முழுவதும் இருந்தால் நாம் பாவமே செய்யமாட்டோம்.
உண்மையாக பக்தி உணர்வோடு இல்லாமல் வெறும் பழக்கத்திற்காக திருப்பலி கண்டால் அதனால் நமக்கு ஆன்மீகப் பலன் எதுவுமில்லை.
திருப்பலியை வழக்கமான நிகழ்வைப் போல் காண்பதால் நமக்கு எந்த பலனும் கிடைக்காது.
திருப்பலியில் உணர்வுப் பூர்வமாக, முழு ஈடுபாட்டுடன் கலந்து கொண்டால்தான் பலன் உண்டு.
திரு விருந்தின்போது நாம் உண்பது உண்மையாகவே இயேசு என்ற உணர்வுடன் உண்ண வேண்டும்.
உணர்வு பூர்வமாக அவரோடு உரையாட வேண்டும்.
உண்மையான தியான அமைதியோடு அவரது குரலுக்கு செவி சாய்க்க வேண்டும்.
நாள் முழுவதும் என்ன செய்தாலும் அவர் நம்முடன் இருக்கும் உணர்வோடு செய்ய வேண்டும்.
அப்படிச் செய்தால் நாம் செய்யும் எல்லா செயல்களும் நற்செயல்களாகவே இருக்கும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment