சர்வ வல்லப கடவுளாகிய இயேசு பாவிகளை மீட்பதற்காகவே மனிதனாய்ப் பிறந்தார்.
மீட்பு பாவங்களுக்காக பரிகாரம் செய்வதிலும், பாவங்களை மன்னிப்பதிலும் அடங்கியிருக்கிறது.
இயேசு நமது பாவங்களுக்குப் பரிகாரமாக தன்னைத் தானே சிலுவையில் பலியாக தந்தைக்கு ஒப்புக் கொடுத்தார்.
பாவிகளின் பாவங்களை மன்னித்தார்.
"இது என் சரீரம்"
"இது என் இரத்தம்"
என்ற வார்த்தைகளின் மூலம்
அப்பத்தையும், இரசத்தையும் தனது சரீரமாகவும், இரத்தமாகவும் மாற்றி
அப்போஸ்தலர்களுக்கு உணவாக அளித்தார்.
மனித குலத்தின் மீட்புக்காக மனிதனாகப் பிறந்த இயேசு செய்தவை:
1.நற்செய்தி அறிவித்தல்.
2.தன்னைத் தானே தந்தைக்கு பலியாக ஒப்புக்கொடுத்து, நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்தல்.
3.மனிதர்களின் பாவங்களை மன்னித்தல்.
4.தன்னைத் தானே மக்களுக்கு உணவாக அளித்தல்.
இயேசு உலகில் முப்பத்திமூன்று ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார்.
தான் விண்ணுலகம் எய்தியபின் இதே செயல்களை உலகம் முடியும் வரை தொடர்ந்து செய்யவே குருக்களை ஏற்படுத்தினார்.
அவர் முதன்முதல் குரு பட்டம் கொடுத்தது தனது அப்போஸ்தலர்களுக்கு.
அப்போஸ்தலர்கள் தங்களது வாரிசுகளுக்கு குருப் பட்டம் கொடுத்தார்கள்.
இன்று நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் கத்தோலிக்கத் திருச்சபையின் குருக்கள் யாவரும் அப்போஸ்தலர்களின் வாரிசுகளே.
இயேசு தான் எதற்காக உலகத்திற்கு வந்தாரோ அந்த செயல்களை,
அதாவது,
1.நற்செய்தி அறிவித்தல்.
2. பாவப் பரிகாரப் பலியாக தன்னையே ஒப்புக் கொடுத்தல்.
3.மனிதர்களின் பாவங்களை மன்னித்தல்.
4.தன்னைத் தானே மக்களுக்கு உணவாக அளித்தல்
ஆகிய செயல்களை செய்ய தனது அப்போஸ்தலர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.
அப்போஸ்தலர்கள் இயேசுவின் பிரதிநிதிகள்.
அவர்களும் நற்செய்தி அறிவிக்க வேண்டும்,
திருப்பலி ஒப்புக் கொடுக்கவேண்டும்,
பாவங்களை மன்னிக்க வேண்டும்.
இயேசுவை மக்களுக்கு உணவாக அளிக்க வேண்டும்.
இயேசு சிலுவையில் இரத்தம் சிந்தி தன்னை பலியாக ஒப்புக்கொடுத்தார்.
அப்போஸ்தலர்கள் அப்பத்தை
இயேசுவின் உண்மையான உடலாகவும், இரசத்தை இயேசுவின் உண்மையான இரத்தமாகவும் மாற்றி பலி ஒப்புக் கொடுத்தார்கள்.
தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்த அதே இயேசுவையே அப்போஸ்தலர்கள் பலியாக ஒப்புக் கொடுத்தார்கள்.
பலிப் பொருளாகிய இயேசுவையே மக்களுக்கு உணவாக கொடுத்தார்கள்.
இயேசு செய்ததை அப்படியே செய்த அப்போஸ்தலர்களைப் போலவே நமது குருக்களும் செய்கிறார்கள்.
நமது குருக்கள் நற்செய்தி அறிவிக்கிறார்கள்,
திருப்பலி ஒப்புக் கொடுக்கிறார்கள்,
பலிப்பொருளாகிய இயேசுவை நமக்கு உணவாக தருகிறார்கள்.
நமது பாவங்களை மன்னிக்கிறார்கள்.
ஒவ்வொரு குருவிலும் நாம் இயேசுவையே காண வேண்டும்.
இயேசு 2022 ஆண்டுகளுக்கு முன்பு என்ன செய்தாரோ அதையே இன்று நமது குருக்கள் மூலம் செய்கிறார்.
இயேசு கடவுள்.
கடவுள் செய்யும் ஒவ்வொரு செயலும் செயலும் ஆன்மீக வாழ்வைச் சார்ந்ததே.
இயேசு உலகில் வாழ்ந்த முப்பத்திமூன்று ஆண்டுகளில் 30 ஆண்டுகள் பெற்றோருக்கு கீழ்ப்படிந்து நடந்தார்.
பொது வாழ்வுக்கு வந்த மூன்று ஆண்டுகளில்
இயேசு நற்செய்தி அறிவித்தார், பாவங்களை மன்னித்தார், அப்போஸ்தலர்களுக்குத் தன்னையே உணவாக அளித்தார், தன்னையே பாவப் பரிகாரப் பலியாக ஒப்புக் கொடுத்தார்.
இயேசு செய்த இதே பணியைத்தான் நமது குருக்களும் செய்கிறார்கள்.
நமது பங்கு குருவானவரை எடுத்துக் கொள்வோம்.
மீட்புப் பணி மட்டுமே அவரது பணி.
இயேசு அறிவித்த அதே நற்செய்தியை அவரும் அறிவிக்கிறார்.
இயேசு கொடுத்த அதிகாரத்துடன் நமது பாவங்களை மன்னிக்கிறார்.
தினமும் நமக்காக திருப்பலி நிறைவேற்றுகிறார்.
இயேசுவை நமக்கு உணவாக தருகிறார்.
இயேசுவை போலவே அவரும் நமது இல்லங்களை சந்தித்து நமக்கு ஆன்மீக ஆலோசனைகள் கூறுகிறார்.
நாம் அவரில் இயேசுவைக் காணவேண்டும்.
முழுக்க முழுக்க அவரை நமது ஆன்மீக வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நமது ஆன்மாவின் நிலைபற்றி அவரிடம் மனம் திறந்து பேச வேண்டும்.
அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்து நமது பாவங்களுக்கு மன்னிப்பு பெற்று,
பரிசுத்தத்தனத்தில் வளர வேண்டும்.
அவர் நிறைவேற்றும் திருப்பலியில் கலந்துகொண்டு அவரது கையிலிருந்து இயேசுவை நமது ஆன்மீக உணவாகப் பெறவேண்டும்.
அவரது ஆன்மீக வழி காட்டுதல்படி நடந்து,
நித்திய பேரின்ப வீட்டிற்குள் நுழைய வேண்டும்.
நமது பங்குத் தந்தையின் உருவத்தில் இயேசுவே நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment