சீமோனுக்கும், அவருடைய சகோதரர் பெலவேந்திரருக்கும்
மீன் பிடிக்கும் தொழில்தான் இவ்வுலக வாழ்க்கைக்கு ஆதாரம்.
மீன் பிடிக்கும் தொழிலுக்கு வலைகள் ஆதாரம்.
ஆண்டவர் அழைத்தவுடன் வலைகளை, அதாவது, தங்கள்
வாழ்க்கை ஆதாரத்தை விட்டு விட்டு ஆண்டவர் பின் சென்றார்கள்.
அவர்களுக்கு ஏற்கனவே ஆண்டவரை தெரியும்.
பெலவேந்திரருக்கு அவரை அறிமுகப்படுத்தியவர் ஸ்நாபக அருளப்பர்.
சீமோனுக்கு அவரை அறிமுகப்படுத்தியவர் பெலவேந்திரர்.
இப்போது ஆண்டவர் அழைத்த உடனே அவரைப் பின் சென்றார்கள்.
இவ்வுலக வாழ்க்கைக்கு ஆதாரமாக இருந்த மீன் பிடிக்கும் தொழிலை விட்டு விட்டு
மறு உலக வாழ்க்கைக்கு ஆதாரமான ஆண்டவரை பின்பற்றினார்கள்.
உடல் சார்ந்த வாழ்வின் ஆதாரத்தை விட்டு விட்டு,
ஆன்மாவைச் சார்ந்த வாழ்வின் ஆதாரத்தைப் பற்றிக் கொண்டார்கள்.
நமது ஆன்மீக வாழ்வை மையமாக வைத்து இதைப்பற்றி சிறிது தியானிப்போம்.
நமது உடலையும், ஆன்மாவையும் படைத்தவர் கடவுளே.
எதை எதற்காக படைத்தார் என்பதை தெரிந்து கொண்டால்
சீமோனும் பெலவேந்திரரும் செய்த செயல்
நமக்குப் புரிவதோடு, வழிகாட்டியாகவும் இருக்கும்.
ஆன்மா அழியாதது. இவ்வுலக வாழ்க்கை முடிந்தவுடனே விண்ணுலக வாழ்க்கைக்கு செல்ல வேண்டியது.
ஆனால் நமது உடல் நமது இவ்வுலக வாழ்க்கையின் முடிவில் மண்ணுக்கு திரும்ப வேண்டியது.
ஆன்மாவை விண்ணுலக வாழ்க்கைக்காகவும்,
உடலை இவ்வுலகில் ஆன்மீக வாழ்வுக்கு உதவிகரமாக இருப்பதற்காகவும் கடவுள் படைத்தார்.
உடலை ஆன்மாவுக்காகப் படைத்தார்
ஆன்மாவின் பணியாள்தான் உடல்.
ஆகவே ஆன்மீக வாழ்வுக்காக உடல் தன்னையே தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்.
ஆன்மீக வாழ்வு ஆண்டவருக்காக மட்டுமே.
ஆகவே நமது ஆன்மா வாழ்வதற்காக நமது உடலை நாம் தியாகம் செய்ய வேண்டும்.
ஆனால் உடல் வாழ்வதற்காக ஆன்மாவைத் தியாகம் செய்யக் கூடாது.
இரண்டு சீடர்களும் உடல்சார்ந்த மீனவர் தொழிலை தங்கள் ஆன்மாவிற்காக தியாகம் செய்துவிட்டு
ஆன்மாவைச் சார்ந்த இறைப் பணிக்காக தங்களை அர்ப்பணித்தார்கள்.
நாமும் அவர்களை பின்பற்ற வேண்டும் என்பது நமது ஆண்டவரின் விருப்பம்.
இறைவன் அழைக்கிறார் என்றால் சீடத்துவ வாழ்வுக்கு,
அதாவது, இயேசுவின் சீடர்களாகப் பணிபுரிய அவர் அவர் அழைக்கிறார் என்பது பொருள்.
ஞானஸ்நானம் பெற்று, கிறிஸ்துவின் நற்செய்தியை ஏற்றுக் கொள்கிறவர்கள் அனைவரும் அவருடைய சீடர்களே.
அதாவது கிறிஸ்தவர்கள் அனைவரும் கிறிஸ்துவின் சீடர்களே.
நம்மை சீடர்களாக வாழ இயேசு அழைக்கிறார்.
சீடர்களாக இருப்பது வேறு, வாழ்வது வேறு.
இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக் கொள்பவர்கள் அனைவரும் அவரது சீடர்களே.
ஆனால் அவர்களில் நற்செய்தியை வாழாதவர்களும் இருக்கிறார்கள்.
நற்செய்திப்படி வாழாவிட்டால் அதை அறிந்தும் பயனில்லை.
சீமோனையும், பெலவேந்திரரையும் அழைத்ததுபோல நம்மையும்
நற்செய்திப்படி வாழ இயேசு அழைக்கிறார்.
"நற்செய்தியின்படி வாழுங்கள்" என்று அழைத்துவிட்டு
அப்படி வாழ்கின்றோமா இல்லையா என்பதை இயேசு மேற்பார்வையிட்டுக் கொண்டிருப்பதில்லை.
அழைப்பது மட்டுமல்ல, அழைத்தபடி வாழ ஒவ்வொரு வினாடியும் நம்முடனே இருந்து நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.
நடைமுறை வாழ்வில் நம்மை நற்செய்தியின்படி வழி நடத்த
இயேசு எப்படி செயல்படுகிறார் என்பதை
நமது கடந்தகால வாழ்க்கையை திரும்பி பார்த்தாலே புரியும்.
காலையில் எழுந்தவுடன் நமது உள்ளக் காதைக் கொண்டு கூர்ந்து கேட்டால்
ஆண்டவர் நம்மை பார்த்து
''இன்றைய நாளை எனக்கு ஒப்புக் கொடுத்துவிட்டு உனது பணிகளைச் செய்." என்று கூறுவது கேட்கும்.
நாமும் அதை ஏற்றுக்கொண்டு
அன்று விடுகிற மூச்சு,
உண்கிற உணவு,
உடுத்துகிற உடை
உட்பட அனைத்து செயல்களையும் காலையிலேயே ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்து விட வேண்டும்.
ஆண்டவருக்காகச் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் செபமாக மாறிவிடும்.
ஒவ்வொரு செயலையும் செய்யும்போது ஆண்டவர் நம்மோடு இருந்து அதை ஆசீர்வதித்துக் கொண்டிருப்பார்.
ஏனெனில் அது அவருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட செயல்.
ஒவ்வொரு செயலையும் ஆண்டவருக்காக செய்யும்போது நம் வாழ்வில் பாவம் குறுக்கிட முடியாது.
ஏனெனில் நம்மால் ஆண்டவருக்காக பாவம் செய்ய முடியாது.
அதுமட்டுமல்ல, அவரது அழைப்பை ஏற்று,
நாம் வாழும் நாளை,
நம்மோடு சேர்த்து அவருக்கு ஒப்புக் கொடுத்து விட்டால்
அவருடையதை எப்படிப் பேணிக் காப்பது என்று அவருக்குத் தெரியும்.
நமது உள்ளத்தை தூய எண்ணங்களால் நிறப்புவார்.
நாம் செல்லும் இடமெல்லாம் நம்மோடு இருந்து தனது நற்செய்தியால் நம்மை ஆன்மீகப் பாதையில் வழி நடத்துவார்.
"உன்னை நேசிப்பதுபோல் உன் பிறனையும் நேசி" என்ற நற்செய்தி வசனத்தை நமது உள்ளத்தில் ஒலித்துக் கொண்டேயிருப்பார்.
நம்மை பிடிக்காதவர் ஒருவர் நமக்கு எதிர்ப்பட்டால் நமக்கு மனதில் வெறுப்புணர்ச்சி தோன்றுவது போல் தெரியும்.
உடனே உள்ளத்தில் இயேசுவின் குரல் ஒலிக்கும்:
"உன்னை வெறுப்பவர்களை நேசி. உனக்குத் தீமை செய்ய விரும்புவர்களுக்கு நன்மை செய்.
நீ உனது பாவத்தால் என்னை மனம் நோக செய்திருந்தாலும் நான் உன்னை நேசிக்கிறேன்.
உன்னை மீட்கவே எனது உயிரைப் பலியாகக் கொடுத்தேன்.
நீ எனது சீடன் என்பதை மறந்துவிடாதே."
ஆண்டவரின் சந்நிதானத்தில் வாழ்பவர்களுக்கு ஆண்டவரின் குரல் தெளிவாக கேட்கும்.
இது அவரை பின்பற்ற அவர் விடுக்கும் அழைப்பு.
அழைப்பை உடனே ஏற்பது நமது கடமை.
பட்டினியாக இருக்கும் ஒருவன் நமக்கு எதிர்ப்பட்டால்,
"இதோ பட்டினியாக உன் முன் நிற்பது நான்தான். எனக்கு உணவு கொடு."
என்று இயேசுவின் குரல் நமக்கு கேட்கும்.
உடனே அவருக்கு உணவு அளிப்பது நமது அன்பின் செயல்.
இவ்வாறு நமது வாழ்நாள் முழுவதும் இயேசு நம்மோடே இருந்து நமக்கு அழைப்புகள் விடுத்துக் கொண்டேயிருப்பார்.
நமது சொந்த விருப்பு வெறுப்புகளை தியாகம் செய்துவிட்டு
இயேசுவின் அழைப்புகளை ஏற்று வாழ்ந்தால்தான் நாம் அவரது சீடர்கள்.
பெயரளவிற்கு இயேசுவின் சீடர்களாக இருந்தால் மட்டும் போதாது.
சீடர்களாக வாழ வேண்டும்.
சீடர்களாய் வாழ்வதால் நாம் இயேசுவின் நற்செய்தியின்படி வாழ்வதோடு
நமது முன்மாதிரிகையின் மூலம் மற்றவர்களுக்கும் நற்செய்தியை அறிவிக்கிறோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment