Saturday, January 15, 2022

இறைவனால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்.

இறைவனால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்.


"தாத்தா, கூப்பிட்டீங்களா?"

", வா. உட்கார். உனக்கு ஒரு பரீட்சை வைக்கப் போகிறேன்."

"பள்ளிக்கூடங்களிலேயே எல்லா பரீட்சைகளையும் தள்ளி வச்சிட்டாங்க."

",அது நான் உனக்கு பரீட்சை வைப்பதற்காகத்தான்."

"பரீட்சைக்கு நான் ரெடி."

"அப்போ, நான் கேள்விகள் கேட்க ஆரம்பிக்கலாமா?"

".ஆரம்பிக்கலாம். முதல் கேள்விக்கு சரியான பதில் கூறி விட்டேன்."

",இப்போதுதான் முதல் கேள்வி.
கிறிஸ்தவர்கள் யார்?"

"கிறிஸ்துவை பின்பற்றுபவர்கள்."

",அப்படின்னா?"

"Followers of Christ."

",மொழிபெயர்க்க சொல்லவில்லை. பதிலை விளக்கமாக சொல்லு."

"கிறிஸ்துவைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டு அவர் சொன்னபடி நடப்பவர்கள்.

அவர் சொன்னதை எல்லாம் வாழ்ந்து காண்பித்தார்.

ஆகவே அவர் வாழ்ந்தபடி வாழ்பவர்கள், 

இன்னும் அழுத்தமாக சொல்ல வேண்டும் என்றால், 

 கிறிஸ்துவாகவே வாழ்பவர்கள்.

கிறிஸ்து + அவன்.

யாரில் நாம் கிறிஸ்துவை பார்க்கிறோமோ அவன்தான் கிறிஸ்தவன்."

",கிறிஸ்து நமக்காக வாழ்ந்தார்.
நாம் யாருக்காக வாழ வேண்டும்?"

"நாம் அவருக்காக வாழ வேண்டும்."

",அவர் வாழ்ந்தபடி வாழ்பவர்கள்தான் கிறிஸ்தவர்கள் என்றாய்.

அவர் நமக்காக வாழ்ந்தார்,
அப்படியானால் நாமும் நமக்காகத்தானே வாழ வேண்டும்?"

''தாத்தா, நாம் அவருக்குள் இருக்கிறோம். மனுக்குலமே அவருக்குள்தான் இருக்கிறது.

நித்திய காலத்திலிருந்தே அவர் நமது ஞாபகமாகவே இருப்பவர்.

நாம் அவருக்காக வாழும்போது அவர் மனதில் வாழும் எல்லோருக்காகவும்தான் வாழ்கிறோம்.

ஆகையினால்தான் இறைவன் மேல் அன்பு உள்ளவன், இறைவனுக்குள் வாழும் தன் பிறன் மீது அன்பு உள்ளவன் ஆகிறான்.

இறையன்பையும், பிறரன்பையும் பிரிக்க முடியாது.

நமக்கு இறைவன் மீது அன்பு இருந்தால்தான் நமக்கு நம்மீது உண்மையான அன்பு இருக்க முடியும்.

இறைவனை நேசிக்காமல் தன்னை மட்டும் நேசிப்பவன் மீட்பு அடைய முடியாது.

மீட்பு அடைய உதவாத சுய அன்பு உண்மையான அன்பு அல்ல.

ஆகவே கிறிஸ்துவுக்காக வாழ்வோம். அதுதான் அவருக்குள் இருக்கும் நமக்கு விண்ணக வாழ்வைத் தரும்." 

",இயேசு கடவுள். அவர் ஏன் மனிதனாகப் பிறந்தார்?" 

"கடவுள் மனிதனைப் பாவ மாசு இல்லாமல் தனது சாயலில் படைத்தார்.

 ஆனால் மனிதன் தன்னைப் படைத்த கடவுளுக்கு விரோதமாகப் பாவம் செய்து அவரது சாயலை இழந்தான்.

அவன் செய்த பாவத்திற்கு பரிகாரம் செய்து 

அவனது பாவத்தை மன்னித்து அவன் இழந்த சாயலை மீட்டுக் கொடுக்கவே கடவுள் மனிதனாகப் பிறந்தார்."

",நாம் இழந்த இறைவனின் சாயலை திரும்பவும் பெற்று விட்டோமா?"

"நாம் ஞானஸ்நானம் பெற்றபோது நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டன. 

அந்த நொடியில் நாம் இழந்த இறைவனின் சாயலை திரும்பவும் பெற்று விட்டோம்.

திரும்ப பெற்ற சாயலை நமது மரணம் வரை இழக்காமல் இருந்தால் நாம் விண்ணக வாழ்வைப் பெறுவோம்.

இடையில் சாவான பாவம் செய்தால், பெற்ற சாயலை இழக்க நேரிடும்.

அந்நிலை ஏற்பட்டால் பாவசங்கீர்த்தனம் செய்து நமது பாவத்திற்கு மன்னிப்புப் பெற்று இறைவன் சாயலை திரும்பவும் பெறலாம்."

", இயேசு என்று சொன்னவுடனே நமது உள்ளத்தில் தோன்ற வேண்டிய காட்சி எது? ஏன்?"

"இயேசு சிலுவையில் தொங்கும் காட்சி.

ஏனெனில் இயேசு சிலுவையில் மரித்ததன் மூலமே நமக்கு பாவ மன்னிப்புக் கிடைத்தது.

சிலுவையின்றி மீட்பு இல்லை."

", மீட்புப் பெற இயேசுவின் சீடனாக இருந்தால் போதாதா?"

"தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்சொல்லாதவன் என் சீடனாயிருக்க முடியாது." என்று இயேசுவே சொல்லியிருக்கிறார்."

",நான் கேட்ட முதல் கேள்வி ஞாபகத்தில் இருக்கிறதா?"

"இருக்கிறது.
'கிறிஸ்தவர்கள் யார்?"

", இப்போது இயேசுவின் வார்த்தைகளின் உதவியைக் கொண்டு இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லு."


"தங்கள் சிலுவையைச் சுமந்துகொண்டு 
கிறிஸ்துவைப் பின் பற்றுகிறவர்கள் மட்டுமே இயேசுவின் சீடர்கள், அதாவது,
கிறிஸ்தவர்கள்."

", அதாவது....."

"தங்கள் சிலுவையைச் சுமக்க ,விரும்பாதவர்கள் உண்மையான கிறிஸ்தவர்களாக வாழ விரும்பாதவர்கள்."

", நாம் சிலுவையைச் சுமப்பது எப்படி?"

"நமக்கு வரும் துன்பங்களை நமது பாவங்களுக்கு பரிகாரமாக ஏற்றுக்கொண்டு  இறைவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.

இயேசு நமது பாவங்களுக்கு பரிகாரமாக அவர் பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு தன்னைப் பலியாக தந்தைக்கு ஒப்புக்கொடுத்தார். 

நாமும் துன்பங்களை சிலுவையாக ஏற்றுக்கொள்ளும்போது இயேசுவின் சாயலை பெறுகிறோம்.

புனித பிரான்சிஸ் அசிசியார், சுவாமி பியோ ஆகியோருக்கு இயேசு தனது ஐந்து காயங்களையும், அவற்றோடு சேர்ந்த வேதனையையும் அன்புப் பரிசாகக் கொடுத்தார்.''

", கேள்விகளுக்கான உனது பதில்களிலிருந்து என்ன பாடம் கற்றுக் கொள்கிறாய்?"

"தங்களுக்கு வரும் துன்பங்களைச் சிலுவையாக ஏற்றுக் கொள்பவர்கள் இறைவனால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்."

லூர்து செல்வம்.






.

No comments:

Post a Comment