Tuesday, January 4, 2022

"நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" (மாற்கு, 6:37)

"நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" (மாற்கு, 6:37) 

இயேசு அவரைத் தேடிவந்த பெருங்கூட்டமான மக்களுக்கு வெகுநேரம் போதித்தார்.

 மக்கள் உண்ணாமலும், உறங்காமலும் இயேசுவின் போதனையை ஆர்வமுடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

 அவர்கள் பசியோடு இருந்ததைக் கவனித்த அப்போஸ்தலர்கள்
அவர்கள்மேல் இரக்கப் பட்டிருக்க வேண்டும்.

அவர்கள் சார்பாக அப்போஸ்தலர்கள் இயேசுவை அணுகி,

"பாழ்வெளியாயிற்றே, ஏற்கனவே நேரமுமாகிவிட்டது.

சுற்றிலுமுள்ள பட்டிகளுக்கும் ஊர்களுக்கும் சென்று உண்பதற்கு ஏதாவது வாங்கிக் கொள்ளும்படி இவர்களை அனுப்பிவிடும்" என்றனர்.

இயேசுவோ அவர்களை நோக்கி,

"நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்றார்.


"அவர்களுக்கு உணவு கொடுக்க, நாங்கள் இருநூறு வெள்ளிக் காசுக்கு அப்பம் வாங்கிவர வேண்டுமா?" என்று தங்கள் இயலாமையைத் தெரிவித்தனர்.

அப்புறம் அவர்களிடம் என்ன இருக்கிறது என்பதை விசாரித்து,

ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் பலுகச் செய்து,

ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவளித்தார்.

இந்த புதுமை நிகழ்ச்சியைச் சிறிது தியானித்தால் நமக்கு சில உண்மைகள் புரிய வரும். 

1.அப்போஸ்தலர்கள் பசியாக இருந்த மக்களுக்காக இயேசுவிடம் வேண்டினார்கள்.

2. இயேசு கடவுள் என்று அவர்களுக்கு தெரியும். இயேசுவிடம் அவர்களுக்கு முழுமையான விசுவாசம் இருந்திருந்தால்,

"ஆண்டவரே, அனைத்து மக்களுக்கும் உணவு கொடும்" என்று கேட்டிருப்பார்கள்.

அவர்களை சாப்பிட அனுப்பிவிடும் என்று சொல்லியிருக்க மாட்டார்கள். 

3.ஆண்டவரும் "இவர்களை அனுப்பிவிடும்" என்று சொன்னவுடனே அவர்களை அனுப்பவும் இல்லை, உணவு அளிக்கவும் இல்லை.

மாறாக "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்றார்.

ஆனாலும் அவரே உணவு அளித்தார்.

இயேசுவின் வாழ்வில் நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நமக்காக ஒரு ஆன்மீக பாடம் காத்துக் கொண்டிருக்கிறது.

அதைக் கண்டு பிடித்து அதன்படி வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

அப்போஸ்தலர்களின் இடத்தில் நம்மையும் மக்களிடத்தில் நமது அயலானையும் வைத்துக் கொள்வோம்.


நமது அயலானை நாம் நேசிக்க வேண்டும். நேசித்தால் அவனது தேவைகளைப் பூர்த்தி செய்ய ஆசைப்படுவோம். 

அப்போஸ்தலர்கள் மக்களுக்காக இயேசுவிடம் பரிந்து பேசியது போல,

நாமும் நமது அயலானுக்கு உதவி செய்யும்படி ஆண்டவரிடம் வேண்டுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். 

 நம்மிடம் எவ்வளவு விசுவாசம் இருக்கிறது என்பது அவரவருக்கு தெரிந்த விசயம்.

நாம் முழுமையான விசுவாசத்தோடு வேண்டினாலும், 
இறைவன் நம்மோடு பகிர்ந்து கொள்ளும் செய்தி,

"நீ உனது அயலானுக்கு உன்னால் ஆன உதவி செய்."

இந்த செய்தி இயேசு நமக்கு அளித்த இரண்டாவது கட்டடளையான,

"உன்னை நீ அன்பு செய்வது போல உனது அயலானையும் அன்பு செய்."

என்பதில் அடங்கியிருக்கிறது.

"நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்"

என்று இயேசு அப்போஸ்தலர்களிடம் சொன்னது இந்த கட்டளையை சார்ந்ததே. 

அவர்கள்.
"அவர்களுக்கு உணவு கொடுக்க, நாங்கள் இருநூறு வெள்ளிக் காசுக்கு அப்பம் வாங்கிவர வேண்டுமா?"

இருந்து கூறினாலும், இயேசு அவர்களை கைவிடவில்லை.

இயேசு அவர்களை நோக்கி,

"உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன? போய்ப் பாருங்கள்" என்று கூறினார். 

அவர்களும் பார்த்துவந்து, "ஐந்து அப்பங்கள் இருக்கின்றன. இரண்டு மீனும் உண்டு" என்றார்கள்.

 இயேசுவும் அவற்றை பலுகச் செய்து ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு அளித்தார்.

பசியாய் இருந்த மக்களுக்கு உதவி செய்ய வேண்டிய அப்போஸ்தலர்களின் ஆசையை நிறைவேற்றினார்.

இதேபோல்தான் நமது வாழ்விலும் நாம் பிறருக்கு உதவி செய்ய ஆசைப்பட்டால் நமது மூலமாகவே இயேசு அந்த உதவியை அவர்களுக்கு செய்வார்.

பிறருக்கு உதவி செய்ய தேவையான பொருள் நம்மிடம் இல்லையே என்று கவலைப்பட தேவையில்லை.

நம்மிடம் இருக்க வேண்டியது உதவி செய்யவேண்டும் என்ற ஆசையும்,

 அதற்கான முயற்சியும்,

இறைவனிடம் நாம் செய்யும் விசுவாசத்தோடு கூடிய செபமும்தான்.

உலகியலின்படி நமது நாளைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இன்று நம்மிடம் இருப்பதைச் சேமித்து வைக்க விரும்புகிறோம்.

சேமித்து வைக்கவும் செய்கிறோம்.

ஆனால், இயேசு, 

"நாளைய தினத்தைக் குறித்துக் கவலைப்படாதீர்கள். நாளைய தினம் தன்னைப்பற்றிக் கவலைகொள்ளும். அன்றன்றைய தொல்லை அன்றன்றைக்குப் போதும்." என்கிறார்.

"எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்"

என்று தந்தையை நோக்கி வேண்டவே நமக்கு சொல்லி தந்திருக்கிறார்.

நாளைய உணவை இன்றே தரும்படி கேட்க சொல்லவில்லை.

முழுமையான விசுவாசத்தோடு வேண்டுபவர்களின் அன்றாட தேவைகளை அன்றன்றே பூர்த்தி செய்வார்.  

நாம் நம்மிடம் இன்று இருப்பதை நாளைக்காக சேமித்து வைப்பதற்கு பதில்

அதைப் பிறர் சிநேக உதவிகளுக்குப் பயன்படுத்த வேண்டும்.

இயேசு நமக்கு தந்திருப்பது நமக்கு நாமே உதவி செய்து கொள்வதற்காக மட்டுமல்ல,

 பிறருக்கு உதவி செய்வதற்கும்தான்.

ஆகவே நம்மிடம் இருப்பதை கொண்டு தினமும் நம்முடைய அயலானுக்கும் உதவி செய்ய வேண்டும். 

பிறருக்கு உணவு கொடுப்பதற்காக ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் பலுகச் செய்த இறைவன்,

பிறருக்கு உதவி செய்வதற்காக
எந்த வகையிலாவது நம்மிடம் இருப்பதை பலுகச் செய்து கொண்டிருப்பார். 

அன்னைத் தெரசாள் தனது பிறர் சிநேகப் பணியை ஆரம்பிக்கும்போது இலட்சக் கணக்காய் பணம் வைத்துக்கொண்டு ஆரம்பிக்கவில்லை.

அவளிடம் இருந்ததெல்லாம் இறைவன்மீது ஆழமான விசுவாசம்,

தியாக உணர்வோடு இருந்த பிறர் அன்பு,

பிறரன்பு செயல்களில இருந்த ஆர்வமும், முயற்சியும்

மட்டுமே.

இறைவன் பிறர் மூலமாக அவளுக்கு உதவி செய்து கொண்டேயிருந்தார்.

அவளும் அதைக் கொண்டு தேவைப்படுவோருக்கு உதவி செய்து கொண்டேயிருந்தாள்.

இன்றும் இயேசு தனது அப்போஸ்தலர்களுக்கு சொன்னதையே நமக்கும் சொல்கிறார்.

"நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்"

நம் மூலமாகவே இயேசு மற்றவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறார்.

நாமும் இயேசுவின் விருப்பத்தை நிறைவேற்றுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment