Sunday, September 29, 2019

பக்தி எதில் அடங்கியிருக்கிறது?


பக்தி எதில் அடங்கியிருக்கிறது?
*****     *****     *****     ******

"தம்பி இங்கே வா."

"தாத்தா!  சொல்லுங்க."

..."நல்ல பையன். தினமும் காலையில ஒழுங்கா கோவிலுக்கு வந்துட்ற, ரொம்ப சந்தோசம்.

உங்கிட்ட பேசணும்போல இருக்கு, பேசலாமா?"

"நடந்து கொண்டே பேசலாமா?  நான் வீட்டுக்குப் போயி Schoolக்குப் புறப்படணும்."

..."நீ நடந்து கொண்டே பேசு. நான் பேசிக்கொண்டே நடக்கிறேன்."

"இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?"

"உனக்கு நடக்கிறது முக்கியம். இங்கே நின்னா Schoolக்குப் புறப்பட முடியாது.

ஆகவே நீ  நடந்து கொண்டே பேசு.

எனக்கு உன்னோட பேசறது முக்கியம்.

ஆகவே நான் பேசிக்கொண்டே நடக்கிறேன்."

"அதாவது முக்கியத்துக்கு முதல் இடம்."

..."ஆமா. உனக்கு யார் மேல பக்தி அதிகம், இயேசு மேலேயா அல்லது மாதா மேலேயா?"

"தாத்தா, அன்பை அளப்பதற்கு நம்மிடம் அளவுகோல் எதுவும் கிடையாது.

சர்வத்தையும் உணர்ந்த கடவுளுக்கு மட்டும்தான் நமது அன்பின் ஆழம் தெரியும்.

என்னைப் பொறுத்தமட்டில் இயேசுவை என்னால் இயன்ற அளவு அன்பு செய்கிறேன்.

இயேசுவின் தாயையும் என்னால் இயன்ற அளவு அன்பு செய்கிறேன்.

யாரை அதிகமாக என்று கேட்டால், என்னிடம் ஒரு பதில்தான் இருக்கிறது.

இயேசு  என்னைப் படைத்து இரட்சித்த கடவுள். அவரின்றி நான் இல்லை.

கடவுளை 
முழு உள்ளத்தோடும்
முழு ஆன்மாவோடும்
முழு மனத்தோடும் அன்பு செய்ய வேண்டும் இயேசு  கூறியுள்ளார்.

நான் சின்ன பையன், அந்த அளவை இன்னும் எட்டவில்லை.

ஆனால் 'அருள் நிறைந்த மரியாள்' தன் வாழ்நாள் முழுவதும் தன் மகனை

முழு உள்ளத்தோடும்
முழு ஆன்மாவோடும்
முழு மனத்தோடும்

அன்பு செய்தாள்.

கடவுளை நேசிக்கும் நான் 'அவருக்காக' அவரது தாயையும் நேசிக்கிறேன்.

'அவருக்காக' என்று சொன்னேன், ஏனென்றால் மகனுக்காகத்தான் தாய்.

மகன் இல்லாவிட்டால் தாயில்லை.

மகன் கடவுள்.

கடவுளை கடவுள் என்பதாலேயே நேசிக்கிறேன்.

மாதாவை கடவுளின் மாதா என்பதற்காகவே நேசிக்கிறேன்.

எல்லாம் அவருக்காகத்தான்.

நேசத்தின் அளவு தெரியாது.

ஆனால் ஒன்று உண்மை.

இவ்வுலகத்தில் உள்ளவர்களை நேசிப்பதை விட இயேசுவை அதிகமாக நேசிக்கிறேன்."

..."அதை மட்டும் எப்படி அளக்க முடிகிறது?"

"அளக்கவில்லை.

'உனக்கு நான் வேண்டுமா?  அல்லது இந்த உலகம் வேண்டுமா?'

என்று இயேசு  நம்மிடம் கேட்டால் நாம் என்ன பதில் சொல்ல வேண்டும்?

அதேபதில்தான் நீங்கள் கேட்ட கேள்விக்கும்."

..."Correct. 'என்னைவிடத் தன் தந்தையையோ தாயையோ அதிகம் நேசிக்கிறவன் எனக்கு ஏற்றவன் அல்லன்.

என்னைவிடத் தன் மகனையோ மகளையோ
அதிகம் நேசிக்கிறவனும் எனக்கு ஏற்றவன் அல்லன்.'
(மத்.10:37)

என்று இயேசுவே சொல்லியிருக்கிறார்.

இப்போ ஒரு கேள்வி,  மாதா பக்தி பற்றி.

ஒருவன் மாதா பக்தன் என்பதை எப்படி அறிந்து கொள்ளலாம்?"

"ஒருவன் மாதாவின் நற்குணங்களைத் தானும் பின்பற்றி வாழ்ந்தால் அவன் மாதா பக்தன்.

மாதாவைப் போல யாராவது ஆண்டவரது அடிமையாக முழு அர்ப்பணிப்போடு வாழ்ந்தால்

அவனை மாதா பக்தன் என்று அறிந்து கொள்ளலாம்."

..."Correct.  மாதாவின் நற்குணங்களில் சிலவற்றையாவது கூறமுடியுமா?"

"மாதாவைப்பற்றி என்னுடைய அம்மா நிறைய சொல்லி யிருக்காங்க.

மாதா ரொம்ப தாழ்ச்சி உள்ளவங்க.

மெசியா ஒரு கன்னியின் வயிற்றில் பிறப்பார் என்று தீர்க்கத்தரிசிகள் சொல்லியிருக்காங்க.

ஆகையினால் அந்தக் காலத்து யூதக் கன்னிப் பெண்கள் தங்கள்  வயிற்றில் மெசியா பிறக்கமாட்டாரான்னு ஆசைப்படுவாங்களாம்.

ஆனால் மாதா அப்படியெல்லாம் ஆசைப்பட்டது மாதிரி தெரியல.

ஆசைப்பட்டிருந்தால் கபிரியேல் தூதர் தூது உரைத்தவுடனே

"இது எங்ஙனம் ஆகும்? நானோ கணவனை அறியேனே"

என்று சொல்லியிருக்க மாட்டாங்க.

எடுத்த எடுப்பிலேயே 'ஏற்றுக் கொள்கிறேன்'னு சொல்லியிருப்பாங்க.

ஆனால் மாதாவுக்கு அந்த எண்ணமே இருந்ததில்லை.

ஆனாலும் அதுதான் கடவுளின் திருவுளம் அறிந்வுடனே,

'இதோ ஆண்டவரின் அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது என்றார்கள்.

அடிமைக்கு சொந்த விருப்பு முக்கியமல்ல, எஜமானனின் விருப்புதான் முக்கியம்.

இது அம்மாவின் தாழ்ச்சியைக் காட்டுகிறது.

அடுத்து அம்மாவிடம் எனக்குப் பிடித்தது அவர்களுடைய விசுவாசம்.

கபிரியேல் தூதர்  "கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை" என்று சொன்னவுடனே மறுகேள்வி கேட்காமல் விசுவசித்தார்கள்.

நாம் பைபிள் வாசிக்கும்போது எல்லா விசயமும் புரியாது.

எல்லாவற்றையும் புரியக்கூடிய அளவுக்கு நாம் பெரிய ஞானிகள் அல்ல.

ஆனால் இறைவார்த்தையைப் புரிந்தாலும், புரியாவிட்டாலும் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

அடுத்து அம்மாவிடம் எனக்குப் பிடித்தது அவர்களுடைய கீழ்ப்படிதல்.

இயேசு கைக்குழந்தையாக இருக்கும்போது

கபிரியேல் தூதர் சூசையப்பரின் கனவில்  தோன்றி இட்ட கட்டளைகளுக்கு

மாதாவும் கீழ்ப்படிந்தார்கள்.

குழந்தையை எடுத்துக் கொண்டு எகிப்துக்குப் போனது,

திரும்பிவந்தது,

நசரேத்துக்குப்போனது

எல்லாவற்றுக்கும் அம்மாவின் கீழ்ப்படிதல்தான் காரணம்.

அடுத்து அம்மாவிடம் எனக்குப் பிடித்தது அவர்களுடைய இடைவிடாத செபம்.

இயேசு 30 ஆண்டுகள் அம்மாவுடன் இருந்தார்.

கடவுளின் அருகில் இருப்பதும், அவரோடு பேசுவதும்தானே செபம்.

அம்மா இடைவிடாது மகனிடம் பேசினார், அதாவது, செபித்தார்.

ஒருவகையில் அம்மாவின் வாழ்க்கையே ஒரு செபம்தான்.

தன் வாழ்க்கை முழுவதையும் தன் மகனினுக்காக வாழ்ந்த ஒரே பெண்மணி அம்மா மட்டடும்தான்!

அடுத்து அம்மாவிடம் எனக்குப் பிடித்தது அவர்களுடைய சுய ஒறுத்தல்.

அம்மா என்றாலே தன் குடும்பத்திற்காக தன்னைத்தானே ஒறுத்து வாழ்பவள்தான்.

திருமணமானவராக இருந்தாலும்

தான் இறைவனுக்குக் கொடுத்திருந்த கற்பு நெறி வார்த்தைப்பபாட்டை முன்னிட்டு

திருமண சுகத்தை தியாகம் செய்தவள் நம் அன்னை.

தன் வயிற்றில் இருந்தது எல்லாம் வல்ல கடவுள் என்று அவளுக்குத் தெரியும்.

ஆயினும் அவரைப் பெற்று எடுப்பதற்கு ஒரு மாட்டுத் தொழுவத்தையே அவர் தந்தபோது

தன்னையே ஒறுத்து தொழுவத்தையே ஏற்றுக்கொண்டார்.

உலகத்தையே படைத்தவர் தன் மகனாக இருந்தும் வாழ்வதற்கு பங்களாவைக் கேட்கவில்லை.

மற்ற ஏழைகளைப் போலவே ஒரு சாதாரண வீட்டில்தான் அவரை வளர்த்தாள்.

தன்னையே ஒறுத்து அவரது பாடுகளின்போது இறுதிவரை அவருடனே இருந்தாள்.

அவரது ஒறுத்தல் வாழ்வு எனக்கு ரொம்ப பிடிக்கும்.

மற்றும் அவளது மாசு மரு அற்ற தன்மை,

அன்பு,

பொறுமை,

கருணை

போன்ற குணங்களும் பிடிக்கும்"

"வீடு பக்கத்தில வந்தாச்சோ?"

"ஆமா, எப்படிக் கண்டுபிடிச்சீங்க?"

..."கடைசி  நான்கு  குணங்களையும் விளக்கவில்லையே.

அதை வச்சிக் கண்டுபிடிச்சேன்."

"ஆமா தாத்தா. இதுதான் எங்க வீடு. உடனே ஸ்கூலுக்குப் புறப்படணும்.  வரட்டுமா தாத்தா?"

"வா. நாளை சந்திப்போம்."

நாம் மாதாவைத் தேடுவது உதவிகள் கேட்பதற்காகத்தான்.

குழந்தை கேட்டு,

வேலை கேட்டு,

வெற்றி கேட்டு

மாதாவைத் தேடி திருப்பயணங்கள் மேற்கொள்கிறோம்.

இதெல்லாம் வேண்டாமென்று சொல்லவில்லை.

ஆனால் பக்தி அடங்கி இருப்பது

பயணங்களில் அல்ல,

மாதாவைப்போல் வாழ்வதில்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment