Friday, September 20, 2019

மருத்துவன் நோயற்றவருக்கன்று, நோயுற்றவருக்கே."(மத்.9:12)

"மருத்துவன் நோயற்றவருக்கன்று, நோயுற்றவருக்கே."(மத்.9:12)
-------       ---------       ---------         --------

இயேசு மத்தேயு வீட்டில் வரி வசூலிப்பவர்களோடு உணவு அருந்திக் கொண்டிருந்தபோது அங்கிருந்த பரிசேயர்

அவருடைய சீடரைப் பார்த்து, "உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் உண்பதேன் ?" என்றனர்.

அவர்களைப் பொறுத்தமட்டில் வரி வசூலிப்பவர்கள் பாவிகள்!

உண்மையில் இறைமகனையே கொல்ல வழி தேடிக்கொண்டிருந்த அவர்கள்தான் பெரிய பாவிகள்!

தங்கள் நிலையை உணராமல் மற்றவர்களைப் பாவக் கண்ணாடி போட்டு பார்ப்பவர்களைப் பார்க்கப் பாவமாயிருக்கிறது!

தண்ணீருக்குள் மூழ்கிக் கொண்டிப்பவன் கரையில் நிற்பவனைப் பார்த்து,

"ஏண்டா, முட்டாள், தண்ணீருக்குள் விழுந்தாய்?"

என்றானாம்!

இயேசு பரிசேயருக்கு மறுமொழியாக,

"மருத்துவன் நோயற்றவருக்கன்று, நோயுற்றவருக்கே தேவை." என்கிறார்.

இயேசுவுக்குத் தெரியும் மனிதர் அனைவரும் பாவிகள் என்று.

ஆகவே அவர் தன் மீட்புப் பணியைக் குறிக்கும் வகையில்,

பாவிகட்கே இரட்சகர் தேவை என்ற பொருளில் நோயுற்றவருக்கே மருத்துவன் தேவை என்கிறார்.

அவரைப் பொறுத்தமட்டில் பரிசேயரும் பாவிகள்தான்.

நம்மை நாம் இயேசுவின் கண்ணோக்கில் பார்க்க வேண்டும், பரிசேயரின் கண்ணோக்கில் அல்ல.

நமது திருச்சபை பாவிகளின் கூடாரம்தான்.

இதை ஏற்றுக்கொண்டால்தான் நாம் இயேசு தரும் இரட்சண்யத்தை ஏற்றுக்கொண்டதாக அருத்தம்.

யாராவது தன்னைப் பாவமே அற்றவன் எனக் கருதினால்,

"இயேசுவே நீர் எனக்குத் தேவை இல்லை"

என்று கூறுவதாக அருத்தம்!

இது நாத்திகத்தைவிட மோசமான நிலைமை!

நாத்திகன் 'கடவுள் இல்லை' என்கிறான்.

தனது பாவ நிலையை ஏற்றுக் கொள்ளாதவன், 'கடவுளே நீர் எனக்கு வேண்டாம்' என்கிறான்.

இது நரக நிலை! கடவுளே வேண்டாம் என்பவர்களின் நித்திய நிலை!

தனக்கு வியாதி இருக்கிறது ஏற்றுக் கொள்பவன்தான் அதற்காக வைத்தியம் பார்ப்பான்,குணம் பெறுவான்.

வியாதியை ஏற்றுக் கொள்ளாதவனை அவன் வியாதியே கொன்றுவிடும்.

நமது திருச்சபை பாவிகளின் கூடாரம்தான். ஆனால் பரிசுத்தமான கூடாரம்.

பரிசுத்தமான நம் கூடாரத்தின் தலைவர் இறைமகன் இயேசு.

பாவிகளைத் தேடியே உலகிற்கு வந்த அவர் பாவிகளுடனேயே இருக்கிறார்.

பாவத்திலிருந்து அவர்களுக்கு  விடுதலை கொடுத்து,

அதாவது இரட்சித்து,

பரிசுத்தர்களின் உலகமாகிய விண்ணுலகிற்கு அழைத்துச் செல்வதற்காககவே

பாவிகளோடு இருக்கிறார்.

வைத்தியர் நோயாளிகளோடு இருந்தால்தானே வியாதி குணமாகும்!

பாவநோய் குணமாக:

1. இயேசுவே பாவங்களை மன்னிப்பவர் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இதற்குப் பெயர் விசுவாசம்.

2.இயேசு உறுதியாக நம்மை இரட்சிப்பார். இயேசுவின் கரம் பிடித்து நடந்தால் நாம்  விண்ணகம் செல்வோம் என்று உறுதியாக நம்ப வேண்டும்.

இது நம்பிக்கை.

3.அன்பின் விளைவாக நம்மைப் படைத்து, பராமரித்துவரும் இயேசுவை நேசிகக் வேண்டும்.

இது தேவசிநேகம்.

4. அன்போடு நம்மைப் படைத்து,  பராமரித்துவரும் இறைவனை நம் பாவங்களால் மனம் நோகச் செய்தமைக்காக உண்மையிலேயே வருந்த வேண்டும்.

5.  குருவானவரிடம் நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்யவேண்டும்.

பாவ சங்கீர்த்தனத்தில் அதுவரை செய்த அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும்

6. மன்னிக்கப்பட்ட பாவங்களுக்காகப் பரிகாரம் செய்ய வேண்டும்.

நமது   வாழ்க்கையைப்  பாவப்பரிகார வாழ்க்கையாக மாற்ற வேண்டும்.

அது மிகவும் எளிது.

நமக்கு வரும் துன்பங்களைப் பொறுமையோடு சகித்து, நமது பாவங்களுக்குப் பரிகாரமாக இறைவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.

நாம் செய்யும் பிறர்பணி நற்செயல்களையும் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக்கொடுக்க வேண்டும்.

உலகம் முடியும் வரை பாவிகளின் கூடாரம் உலகில் இருக்கும்.

ஒவ்வொருவராக பாவங்களிலிருந்து விடுதலை பெற்று, விண்ணகக் கூடாரத்திற்குள் சென்று கொண்டிருப்போம்.

உலகமுடிவில் பாவிகளின் கூடாரம் பரிசுத்தவான்களின் கூடாரமாக மாறி

பரிசுத்தவான்களின் கூடாரமாகிய விண்ணகக் கூடாரத்தோடு இணைந்து விடும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment