Saturday, September 7, 2019

அவரது மகிழ்ச்சியே நமது மகிழ்ச்சி.

அவரது மகிழ்ச்சியே நமது மகிழ்ச்சி.
*****     *****     *****     *****

ஓர் ஒய்வு நாளன்று இயேசு  விளைச்சல் நிலம் வழியே  செல்லும் பொழுது,

அவரது சீடர்கள் கதிர்களைக் கொய்து கையில் கசக்கித் தின்றனர்.

அவர்கள் நற்செய்திப் பணிக்காக இயேசு  சென்ற இடங்களுக்கெல்லாம் அவருடனே சென்றார்கள்.

பரிசேயரும் இயேசுவுடன் சென்றார்கள்,

ஆனால் நற்செய்திப் பணிக்காக அல்ல,

அவருடைய சொல்லிலும், செயலிலும் குற்றம் கண்டு பிடிக்க.

சீடர் கதிர்களைக் கொய்து கையில் கசக்கித் தின்றதை இயேசுவும் பார்த்தார்,

அவர் அதில் எந்தக்குறையும் காணவில்லை.

ஆனால் குற்றம் காண்பதை மட்டுமே தொழிலாகக் கொண்ட பரிசேயர்

சீடர்களைப் பார்த்து,

"ஓய்வுநாளில் செய்யத் தகாததை நீங்கள் செய்வதேன்?"

என்றனர்.

இயேசு அவர்ளுக்குப் பதில் கூறும்போது,

"மனுமகன் ஓய்வுநாளுக்கு ஆண்டவர்."

என்று சொன்னார்.

அதன் பொருள்:

"நான் ஆண்டவர். 

ஓய்வு நாளை ஏற்படுத்தியதே நான்தான்.

ஓய்வுநாளில் என்ன செய்யவேண்டும், 

என்ன செய்யக்கூடாது என்று தீர்மானிக்க வேண்டியது நான்.

ஓய்வுநாளில் கதிர்களைக் கொய்து கசக்கித் தின்பதில் தவறு ஒன்றும் இல்லை.

ஓய்வுநாள் இருப்பது மனிதனுக்காக,

மனிதன்  ஓய்வுநாளுக்காக அல்ல."

பழைய ஏற்பாட்டில்'

ஓய்வு நாளில்

யாதொரு வேலையும் செய்யாமல்

இறைவனை வழிபடவேண்டும்

என்று சட்டம் இருந்தது.

அதாவது ஆறு நாட்களை நமக்கு வேண்டியது கிடைக்கச் செலவழித்தபின்,

ஏழாவது நாளை இறைவனுக்காக மட்டும் செலவழிக்க வேண்டும்.

காலப்போக்கில் யூத சட்ட வல்லுனர்கள் செய்யக்கூடாத வேலைப் பட்டியலைப் பெரிதாக்கிவிட்டார்கள்.

கையால் கதிர்களைக் கொய்வதை அறுவடைக்கும்,(harvesting)

கசக்குவதை இயந்திரத்தில் அறைப்பதற்கும் (milling)

சமமாக்கிவிட்டார்கள்!

ஓய்வு நாள் ஏற்படுத்தப்பட்டது மனிதனுக்காக.

மனிதன் படைக்கப்பட்டது கடவுளுக்காக.

ஆகவே மனிதன் இறைவனை விசேசமானவிதமாக வழிபடவே  ஓய்வுநாள் தரப்பட்டுள்ளது.

வெறுமனே வேலை செய்யாமல் இருப்பதற்காக அல்ல.

நம்மைப் பொறுத்தமட்டில் ஞாயிற்றுக்கிழமை இறைவனின் நாள்.

ஓய்வு நமது அன்றாட வேலைகட்கு, இறைப்பணிக்கு அல்ல.

ஓய்வு நாளில்தான்  ஓய்வே இல்லாமல் இறைவனுக்கு நன்றி கூறவேண்டும்.

வழக்கமாக நாம் என்ன செய்கின்றோம்?

வாரம் முழுவதும் செய்ய முடியாத வீட்டு வேலைகளை ஞாயிற்றுக் கிழமைக்கு ஒதுக்கி வைத்து விடுகிறோம்.

காலை திருப்பலியில் பங்கெடுப்பதோடு ஞாயிறு கடன் முடிந்துவிட்டதாக நினைக்கிறோம்.

ஆனால் ஞாயிறு ஆண்டவரின் நாள் என்பதை மறந்து விடுகிறோம்.

வாழ்நாள் முழுவதுமே ஆண்டவருக்குதான்.

ஆயினும் அவர் தனக்கென்று ஒதுக்கி நம்மிடம் தந்த நாளை அவருக்காக மட்டும் வாழ்வதுதான் நல்லது.

திருப்பலி,

ஞானவாசகம்,

தியானம்,

சுகமில்லாதவர்களைச் சந்தித்தல்,

இயேசுவை அறியாதவர்கட்கு அறிவித்தல்

போன்ற திருச்செயல்களுக்கு  ஞாயிற்றுக் கிழமையைப் பயன்படுத்தினால் ஆண்டவர் மிகவும் மகிழ்வார்.

அவரது மகிழ்ச்சியே நமது மகிழ்ச்சி.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment