காசு பணம் எதற்கு?
நல்ல மனதிருந்தால் போதுமே!
***** ****** ****** *****
உன்னை நேசிப்பதுபோல் உன் அயலானையும் நேசி என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறார்.
நேசத்தின் இருப்பிடம் நமது இருதயம்.
ஆனால் நேசம் 'நல்ல Seat' கிடைத்துவிட்டது' என்று அங்கேயே சௌக்கியமா உட்கார்ந்து விடக்கூடாது.
இருதயத்தில் இருந்துகொண்டே வெளியே இறங்கி வேலை செய்யும் ஆற்றல் நேசத்திற்கு உண்டு.
கொடுக்கக் கொடுக்க குறையாதது நேசம்.
நேசத்திற்கு அழிவே இல்லை.
அன்பின் உருவான கடவுள் அவரால் படைக்கப்பட்ட அனைவரையும் அன்பு செய்கிறார்.
அனைவருக்கும் அன்பை அள்ளிக் கொடுத்தாலும் அவரது அன்பு குறைவதில்லை.
கடவுள் மனிதகுலத்திற்கு அன்பைக் கொடுக்கும்போது அதன் அடையாளமாக இவ்வுலகையே கொடுத்தார்.
நாம் வாழும் உலகைப் பார்க்கும் போதெல்லாம் இறைவன் நம்மீது கொண்டுள்ள அன்பு நினைவுக்கு வருகிறது.
நாம் அவரது அன்பை நினைத்து அவருக்கு நன்றி கூறுகிறோம்.
நாம் நம் அயலான் மேலுள்ள அன்பை செயலில் காட்டும்போது,
அதாவது நற்செயல் புரியும்போது,
பொருளின், பணத்தின் உதவி தேவையா?
அதாவது வெறுங்கை முழம்போடுமா?
பணம் இல்லாதவர்கள் அயலானுக்கு உதவ முடியாதா?
'என்னிடம் செழுமையாகப் பணம் கிடையாது, ஆகவே என்னால் அயலானுக்கு உதவிகள் எதுவும் செய்ய இயலாது'
என்று சாக்குப்போக்கு சொல்லத் தேவையில்லை.
மனமிருந்தால் மார்க்கம் உண்டு.
நல்ல மனம் வேண்டும், அவ்வளவுதான்.
உதவி செய்ய எத்தனையோ எளிய வழிகள் இருக்கின்றன.
பயன்படுத்திவிட்டு ,
"பழையதாகி விட்டன, புதியவை வாங்குவோம்"
என்று கழித்துப் போடும் பொருட்கள்,
துணிமணிகள், செல்போன்கள், மடிக்கணிணிகள் போன்றவை இருந்தால் புதிது வாங்க முடியாதவர்களுக்குக் கொடுக்கலாமே!
ஆள் தேடிப்போக வேண்டாம்.
அவற்றைப் பெற்றுத் தேவைப்படுவோருக்குக் கொடுக்கும் அமைப்புகள் இருக்கின்றன. அவற்றிடம் ஒப்படைத்துவிட்டால் போதும்.
தேவைப்படுவோர் அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்வர்.
நமது உடல் உள் உறுப்புக்கள் நாம் இறந்தபின் நமக்குத் தேவை இல்லை.
நாம் உயிருடன் இருக்கும்போதே அதற்கென இயங்கும் அமைப்புகளிடம் தானம் செய்து விடலாம்.
நாம் இறந்தபின் தேவைப்படுவோர் அவற்றைப் பயன்படுத்த முடியுமே!
திருமணம் போன்ற குடும்ப விழாக்களைக் கல்யாண மண்டபங்களில் நடத்துவதற்குப்பதில்
முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்கள் போன்றவற்றில் நடத்தினால் அங்கு வாழும் நமது மக்கள் பயன்பெறுவார்களே!
மூன்றாவது வகுப்பு மாணவன் ஒருவன் அவனுடைய அப்பாவிடம் கேட்டான்,
"அப்பா, எனக்குப் பிறந்த நாள் பரிசாக என்ன தருவீர்கள்?"
"ஒரு புது ட்ரெஸ்."
"ட்ரெஸ் வாங்க ஆகும் பணத்தை என்னிடம் தந்து விடுங்கள்."
"ஏன்? என்ன செய்யப்போகிறாய்? "
"என் வகுப்புல ஒரு ஏழைப் பையன்.
ட்ரெஸ் வாங்கும் பணத்தை அவனிடம் கொடுத்தால் என்னை விட அவனுக்கு உதவியாக இருக்கும்."
"பாராட்டுக்கள். அப்படியே செய்."
நமது பிள்ளைகளையும் இப்படி பயிற்றுவிக்கலாம்!
ஒருநாள் Town bus ல கண்டக்டர்
"சார், இரண்டு ரூபாய் தாங்க, ஐந்து ரூபாய் தருகிறேன்" என்றார், magic show நடத்துபவர்போல.
"சில்லரை இல்லை, சார். வேணும்னா நான் 10 ரூபாய் தருகிறேன். நீங்கள் 13 ரூபாய் தாருங்கள்" என்றேன்.
ஆனால் அவருக்கு 5 ரூபாய் magic தான் தெரியும் போலிருக்கு!
சிரித்தார்.
உடனே எனது பக்கத்து சீட்காரர்
இரண்டு ரூபாயை கண்டக்ரிடம் கொடுத்தார்.
அவர் 5 ரூபாயை என்னிடம் தந்தார்.
நான் பக்கத்து சீட்காரரைப் பார்த்து, "சார்" என்றேன். "
பரவாயில்லை"என்றார்.
"நன்றி" என்றேன்.
இரண்டு ரூபா பெரிசில்ல, மனசு பெரிசு!
ஒருநாள் காலையில் வீக்கேபுரம் போவதற்காக அகத்தியர்பட்டி பஸ்ஸில் ஏறினேன்.
எல்லா இருக்கைகளிலும் பாவநாசம் கல்லூரி மாணவர்கள்.
'பாவநாசம் வரை நிற்க வேண்டியதுதான்' என்று நினைத்துக் கொண்டேன்.
திடீரென்று ''தாத்தா" என்று குரல் கேட்டுத் திரும்பினேன்.
இருக்கையிலிருந்த எழுந்த ஒரு பையன்,
"உட்காருங்க தாத்தா" என்றான்.
"பரவாயில்லை, நிற்கிறேன்."
"பரவாயில்லை, உட்காருங்க, தாத்தா. நான் தாத்தா ஆகும்போது என்னாலெல்லாம் நிற்க முடியாது."
சிரித்துக்கொண்டே "நன்றி" சொல்லிவிட்டு உட்கார்ந்தேன்.
அவன் கையில் ஒரேஒரு நோட்டு இருந்தது.
"தாத்தா, கல்லூரி வாசல் வரைக்கும் இந்த நோட்டு உங்களுக்கு எனது அன்புப் பரிசு" என்றான்.
"நல்லா பேசறியே!" என்றேன்.
"என்ன பிரயோசனம். வகுப்புக்குள்ள போனவுடனே பேசமுடியலியே, தாத்தா"
என்றான்.
கல்லூரியை அடைந்தவுடன் நோட்டை அவனிடம் கொடுக்கும்போது
"கடவுள் உன்னோடு இருக்கிறார்" என்றேன்.
" நான் நோட்டை மட்டும் தந்தேன், நீங்கள் கடவுளையே தந்துவிட்டீர்களே, தாத்தா!
ரொம்ப நன்றி, தாத்தா" என்றான்.
எல்லா மாணவர்களும் இப்படி இருந்தால் எப்படி இருக்கும்!
பல வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம்.
பஸ்ஸில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது, பஸ் ஒரு ஊரில் கொஞ்ச நேரம் நின்றது.
Driver, conductor இருவரும் இறங்கிவிட்டார்கள்.
மூன்று பையன்கள் பஸ்ஸில் ஏறினார்கள்.
ஒவ்வொரு பயணியையும் பார்த்து,
"அண்ணாச்சி
டீ சாப்பிடுகிறீர்களா?
காபி சாப்பிடுகிறீர்களா?
பால் சாப்பிடுகிறீர்களா?"
அவர்கள் உபசரித்த தொனி வீட்டிற்கு வந்த விருந்தினர்களை உபசரிப்பது போலிருந்தது.
ஏறக்குறைய எல்லோருமே வேண்டியதைக் கேட்டார்கள்.
பையன்களும் கொண்டுவந்து கொடுத்தார்கள்.
மக்களும் சாப்பிட்டார்கள்.
ஒரு காபி ஒரு அணா.
அதே விலைதான் மற்றவையும்.
நடந்தது வியாபாரம்தான்.
ஆனால் பையன்கள் 'உபசரித்த' விதம்
விருந்து சாப்பிடுவதுபோல் இருந்தது.
அநேக பயணிகள் டீ, காபி, பால் சாப்பிட்டது பையன்களின் உபசரணயான பேச்சுக்காகத்தான்.
ஒரு நாள் காலையில் பள்ளி வாயில் வழியே நுழையும்போது,
"Hi, Sir. எப்படி இருக்கீங்க?"
"Hi, நல்லா இருக்கோம். என்ன திடீர் உற்சாகம்? "
"நான் வீட்டை விட்டுக் கிளம்பும்போது ஒருவர் Hi போட்டு உற்சாகப்படுத்தினார்.
அதே உற்சாகத்தை அப்படியே கொண்டு வந்து உங்களிடம் விட்டுவிட்டேன்.
நீங்களும் அப்படியே செய்யுங்கள்."
அவரும் அவரை அறியாமலே உற்சாகமாகிவிட்டார்.
அன்று பகல் முழுவதும் Staff room ம், வகுப்புகளும் கலகலப்பாய் இருந்தன.
ஒரு பையன் கேட்டான்,
"ஏன் சார், இன்றைக்கு Teachers ரொம்ப உற்சாகமா இருக்காங்க?"
"இன்றைக்கு உற்சாகம்தான் Teachersஆ இருக்கு!"
உற்சாகத்தை வெளிப்படுத்த காசுபணம் தேவை இல்லை.
அதேபோல்
அன்பை வெளிப்படுத்தவும் காசுபணம் தேவை இல்லை.
நல்ல மனது போதும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment