Sunday, September 15, 2019

விண்ணகம் எங்கே இருக்கிறது?

விண்ணகம் எங்கே இருக்கிறது?
*****     *****     ******    *****

கேள்வியே நமது இயலாமையை பளிச்சென்று வெளிக்காட்டுகிறது.

நாம் மண்ணுலகில் பிறந்து மண்ணுலகில் வாழ்பவர்கள்.

மண்ணுலகப் பொருட்களோடு நேரடி அனுபவம் உள்ளவர்கள்.

நாம் பேசும் மொழி மண்ணுலக பொருட்களைப் பற்றிய நமது உள்ளக் கருத்துக்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள நம்மால் உருவாக்கப்பட்டது.

இவ்வுலகிற்கு அப்பாற்பட்ட எதைப்பற்றியும் பேச நம்மிடம் மொழி இல்லை, ஒரு வார்த்தைகூட இல்லை.

ஆனால் நமது ஆன்மா ஆவியாகையால்,  அதுவும்  இவ்வுலகிற்கு அப்பாற்பட்ட நோக்கத்திற்காகவே படைக்கப்பட்டதாகையால்,

இவ்வுலகிற்கு அப்பாற்பட்ட விசயங்களைப்பற்றி சிந்திக்கவும்,  அவற்றிற்காக ஆசைப்படவும் அதனால் இயலும்.

ஆனால் அவற்றைப்பற்றிய தன் உள்ளக்கிடக்கையை

மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள

இவ்வுலக சம்பந்தப்பட்ட மொழியையே பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

அதாவது அளவில்லாத கடவுளைப் பற்றி பேச அளவுள்ள மொழியைப் பயன்படுத்த வேண்டியிருக்கிது.

பரிசுத்த தமதிரித்துவத்தை நம்மால் முழுவதுமாக புரிந்து கொள்ள முடியாமைக்குக் காரணம்

1.நமது புரிந்து கொள்ளும் தன்மை அளவுள்ளது.

2. நமது மொழி அளவுள்ளது.

1, 2, 3 ஆகிய எண்கள் கணிதம் சம்பந்தப்பட்டவை.  சடப்பொருட்களை எண்ணப் பயன்படுத்தப்படுபவை.

அந்த எண்களைக் கொண்டு கணிதத்திற்கு அப்பாற்பட்ட, ஆவியாகிய இறைவனை எப்படி புரிந்துகொள்ளும் விதமாய் விளக்க முடியும்?

விளக்க முயற்சிக்கிறோம்.

நாம் வார்த்தைகட்கு அப்பாற் சென்று,

திரி ஏக தேவனைப்

புரிந்துகொள்ள வேண்டிய விதமாய்ப் புரிந்து கொள்ள வேண்டும்.

கடவுளைப் பற்றிய உண்மைகள் விசுவாசம் உள்ளவர்களுக்கு மட்டும் புரியும்.

விசுவாசம் உள்ளவர்கள் இறைவன் தன்னைப்பற்றி வெளிப்படுத்தியவற்றை

விசுவாசத்தின் அடிப்படையில்

(ஆராய்ச்சியின் அடிப்படையில் அல்ல)

அப்படியே ஏற்றுக்கொள்வார்கள்.

இப்போது சொல்வதை கொஞ்சம் முயற்சிசெய்து  பாருங்கள்.

'கடவுள் சர்வ வல்லபர், எங்கும் நிறைந்தவர், அளவற்ற அன்புள்ளவர்' என்ற அடிப்படை உண்மைகளை மனதில் இருத்தி,

வார்த்தைகளைப் பயயன்படுத்தாமல்,

உருவம் எதையும் பயன்படுத்தாமல்

கட வுளை மட்டும் நினைத்துப் பாருங்கள்.

நினைவை கொஞ்சம் ஆளப்படுத்தி தியானித்துப் பாருங்கள்.

சர்வ வல்லமையும், அன்பும் நமது உள்ளத்தை நிறப்புவதையும்,

எங்கும் நிறைந்திருப்பவருக்குள்
  நாம் இருப்பதையும் உணரலாம்.

இந்த தியானத்திற்கு மொழி தேவை இல்லை.

மனதை அவரிடம்
ஒருநிலைப்படுத்தினாலே போதும்.

இப்போ தலைப்புக் கேள்விக்கு வருவோம்.

விண்ணகம் எங்கே இருக்கிறது?

உங்கள் வீடு எங்கே இருக்கிறது?என்று கேட்டால் பதில் சொல்லி விடலாம்.

நீ படிக்கும் பள்ளி எங்கே இருக்கிறது?என்று கேட்டால் பதில் சொல்லி விடலாம்.

அமெரிக்கா எங்கே இருக்கிறது?என்று கேட்டால் பதில் சொல்லி விடலாம்.

சீனா எங்கே இருக்கிறது?என்று கேட்டால் பதில் சொல்லி விடலாம்.

ஏனென்றால் இவை எல்லாம் சடப்பொருட்கள், இடத்தில் உள்ளவை.

'எங்கே' என்றாலே 'எந்த இடத்தில்' என்றுதான் அர்த்தம்.

விண்ணகம் எங்கே இருக்கிறது? என்று கேட்டால்

விண்ணகம் எந்த இடத்தில் இருக்கிறது என்று அர்த்தம்.

விண்ணகம் ஆவிகள் உலகம்.
ஆவிகள் இடத்தை அடைக்காது.
Spirits don't occupy space.

இடத்தை அடைக்காத உலகை 'எங்கே இருக்கிறது?' என்று எப்படிக் கேட்கலாம்?

விண்ணகம்  அல்லது மோட்சம் என்பது ஒரு இடம் அல்ல.

அது ஒரு வாழ்க்கை நிலை.
A state of life.

இறைவனோடு இணைந்த ஒரு பேரின்ப நிலை.

அந்நிலையை அடையவே இவ்வுலகில் பாடுபடுகிறோம்.

அதை அடைந்தபின்தான் அது எப்படிப்பட்டது என்று நமக்குப் புரியும்.

நாம் இப்போது வாழும் மண்ணக வாழ்வு காலத்திற்கு உட்பட்டது.

வாழப்போகும் விண்ணக வாழ்வு,

அதாவது மோட்ச வாழ்வு,

அதாவது இறைவனோடு இணைந்த பேரின்ப வாழ்வு

காலத்திற்கு அப்பாற்பட்டது,

அதாவது நித்தியமானது.

சிற்றின்பங்களும், பேரிடர்களும் நிறைந்த மண்ணக வாழ்வை விட்டு

நாம் பேரின்பம் நிறைந்த விண்ணக வாழ்விற்குள் நுழையும் நிகழ்ச்சியைத்தான் மரணம் என்கிறோம்.

மரணம் எவ்வளவு மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சி!

யாராவது பேரின்ப வாழ்விற்குள் நுழைந்தால் நாம் ஏன் அழுகிறோம்?

புரியவில்லை!

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment