Thursday, September 19, 2019

உன் விசுவாசம் உன்னை மீட்டது, சமாதானமாய்ப்போ." (லூக்.7:50)

"உன் விசுவாசம் உன்னை மீட்டது, சமாதானமாய்ப்போ."  
(லூக்.7:50)
*****        ******        *******       ****

இயேசு எங்கே சென்றாலும் அவரைப் பின்தொடர்ந்த மக்கள் இருவகையினர்.

பாமரமக்கள், படித்தவர்கள்.

பாமரமக்கள் அவரது நற்செய்தியைக் கேட்கவும்,

வியாதிகளிடமிருந்து சுகம் பெறவும் அவரைப் பின்தொடர்ந்தனர்.

படித்த பரிசேயரும், சதுசேயரும்

அவரது பேச்சிலும்,செயலிலும் குற்றம் கண்டுபிடிக்கவும்,

அவரைக் கொல்ல வழி தேடவுமே

அவரைப் பின்சென்றனர்.

பாமர மக்களிடம் விசுவாசம் இருந்தது.

ஆன்மீக வாழ்வின் உயிர்நாடியே விசுவாசம்தான்.

விபசாரத்தின்போது பிடிபட்ட பெண்,

பரிசேயன் சீமோன் வீட்டில் ஆண்டவர் அமர்ந்திருந்தபோது தன் மனஸ்தாபக் கண்ணீரால் அவரது பாதங்களைக் கழுவியபெண்  ஆகியோர்

ஆன்மீக ரீதியாகக் குணம் பெற்றோருக்கு இரு உதாரணங்கள்.

1.சீமோன் வீட்டில் இயேசுவின் பாதங்களைக் கழுவிய பெண்

இயேசு இறைவன் என்பதை ஏற்று,

அவருக்குப் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உண்டு என்பதையும் ஏற்று, 

அதாவது விசுவசித்து,

தனது பாவங்களுக்கு மன்னிப்புப் பெறுவதற்கென்றே அவரைத் தேடிவந்தாள்.

ஏற்கனவே இயேசுவின் நற்செய்தியைக் கேட்டு அவள் மனம்திரும்பியிருக்க வேண்டும்.

மனித உள்ளத்தை அறியும் இயேசு அவளது மனம் திரும்புதலை ஏற்று அவளை மன்னிக்கிறார்.

" உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன"

"உன் விசுவாசம் உன்னை மீட்டது, சமாதானமாய்ப் போ."

மீட்பு அளிப்பவர் இயேசுதான்.

ஆனாலும் நமது ஒத்துழைப்பு இருந்தால்தான் மீட்பு அளிப்பார்.

அவர் மீது நாம் கொண்டுள்ள விசுவாசம்தான் நமது ஒத்துழைப்பு.

ஆகவேதான் நமது   பாவங்களை மன்னித்து மீட்பு அளிப்பவர் அவராக இருந்தாலும்

நமக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில்

"உனது விசுவாசம் உன்னை மீட்டது" என்கிறார்.

கிணறு  நிறைய தண்ணீர் இருக்கிறது.

ஆனாலும் நாம் முயன்றால்தான் தண்ணீரை நமது பயன்பாட்டிற்கு எடுக்கமுடியும்.

அதேபோல்தான் இயேசு எப்போதும் மன்னிக்கத் தயாராக இருக்கிறார்.

ஆனாலும் முயன்று மன்னிப்பைப் பெறவேண்டியது நாம்தான்.

ஆகவேதான் அந்தப் பெண் இயேசு இருக்கும் இடம் தேடிச்சென்று

மனஸ்தாபக் கண்ணீரால்  அவரது பாவங்களைக் கழுவி

பாவமன்னிப்பையும், அதன் மூலம் மீட்பையும் பெறுகிறார்.

2.விபச்சாரத்தில் பிடிபட்ட பெண் அவளாகவே வரவில்லை.

விபச்சாரத்தில் பிடிபட்டதால் அது வரை அவள் மனம் திரும்வில்லை என்பது தெளிவாகிறது.

இங்கே கடவுளின் வழிகள் எவ்வளவு அதிசயமானவை என்பது தெரிகிறது.

எப்படி?

இயேசுவைப் பார்த்தபின்புதான் அவள் மனம் திரும்புகிறாள்.

அவள் இயேசுப் பார்க்க,

அதாவது, மனம்திரும்ப

அவள் சாகவேண்டுமென்று ஆசைப்படுகின்ற அவளுடைய விரரோதிகளே உதவுகிறார்கள்!

அவர்கள் அவளை இழுத்து வந்திருக்காவிட்டால் அவள் அப்போது மனம் திரும்பியிருக்க மாட்டாள்!

"உங்களுள் பாவமில்லாதவன் முதலில் அவள்மேல் கல் எறியட்டும்"

என்று இயேசு கூறியபோது யாருமே அவள்மேல் கல்லை எறியவில்லை.

ஆகவே அவர்களும் பாவிகள் என்பது தெளிவாகிறது.

ஒரு பாவியை மனம் திருப்ப இயேசு  பாவிகளையே பயன்படுத்தியிருப்பது

இறைவனின் சக்திவாய்ந்த பராமரிப்பைக் காட்டுகிறது.

இயேசுவிடம் கேள்விகேட்டு குற்றம் கண்டுபிடிக்கத்தான்

அந்தப் பெண்ணை இழுத்து வந்தார்கள்.

ஆனால் அவர்களை அறியாமலே

அவள் பாவமன்னிப்புப் பெற அவளுக்கு உதவியிருக்கிறார்கள்!


நாம் எல்லோருமே பாவிகள்தான்.

நம்மையும் மீட்கவே இயேசு தன்னையே பலியாக்கினார்.

நம்மிலும் பாவமன்னிப்பு பெறுவோரில் இரண்டுவகை உண்டு.

ஒரு வகையினர் இயேசுவின் நற்செய்தியைக் கேட்டு, உணர்ந்து தாங்களாகவே இயேசுவைத் தேடிவருபவர்கள்.

அதாவது அவரைத் தேடிவந்து,  தனது மனஸ்தாபக் கண்ணீரால் இயேசுவின் பாதங்களைக் கழுவிய பெண்மணியைப்போல.

இன்னொரு வகையினர் கடவுளைப்பற்றிக்   கவலைப்படாமல் தங்கள் விருப்பம்போல் வாழ்பவர்கள்.

மனசாட்சியை ஓரங்கட்டி வைத்துவிட்டு, இறைவனின் கட்டளைகளை மீறுவதில் இன்பம் காண்பவர்கள்.

இவர்களும் ஒருநாள் கடவுளிடம் வ.ருவார்கள்,

தாங்களாகவே ஆசைப்பட்டு அல்ல, பிரச்சினைகளால் தூக்கிவரப்பட்டு.

விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணை பரிசேயர் பிடித்துவருவதுபோல

தவிர்க்க முடியாத பிரச்சினைகள் அவர்களை கடவுளிடம் தள்ளிக்கொண்டுவரும்.

குழந்தைப் பேரின்மை,
திருமணம் தள்ளிப்போதல், வேலையின்மை,
நோய்,
குடும்பத்திற்குள் சண்டை, விரோதிகளின் சதி

போன்றவை பிரச்சனைகளில் சில.

பிரச்சனைகளால் தள்ளிவரப்பட்டவர்கள் கடவுளைத் தவிர நமக்கு உதவுபவர்கள் வேறு யாரும் இல்லை என்பதை உணர்ந்து,

பழைய வாழ்க்கையிலிருந்து திருந்தி,

உண்மையான விசுவாசத்தோடு அவரிடம் கேட்டால்,

கேட்டதும் கிடைக்கும், மீட்பும் கிடைக்கும்.

அநேக சமயங்களில் நமக்கு எதிரிகளாகத் தோன்றும் பிரச்சனைகள்தான்

நமது ஆன்மீக வாழ்வின் நண்பர்களாக மாறிவிடுகின்றன.

பிரச்சனைகளை இறைவன் அனுமதிப்பதே நமது ஆன்மீக நன்மைக்காகத்தான் என்பதை நாம் உணர்ந்தால்

நாம் அவற்றைக் கண்டு அஞ்சமாட்டோம்,

மாறாக இறைவனிடம் தஞ்சம் புகுவோம்.

எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு இறைவன் மட்டும்தான்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment