Saturday, September 14, 2019

சிலுவையே நமது மகிமை!

சிலுவையே நமது மகிமை!
****    ****    ****    *****     ****

சில கிறிஸ்தவர்கள் விசுவாசத்தோடுதான் வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள்.

ஆனால் யார்மேல் விசுவாசம் வைத்திருக்கிறார்களோ அவரது சித்தப்படி அல்லாமல்

தங்கள் இஸ்டத்துக்கு ஒரு வாழ்க்கையை கற்பனை செய்துகொண்டு

அதன்படி வாழ்க்கை அமையாவிட்டால் விசுவாசத்தைக் காற்றில் பறக்கவிட்டு விடுகிறார்கள்.

விடுதலையை நோக்கிப் பயணித்துக் கொண்ட இஸ்ரலேயர்கள்

பாலைவனத்தில் பட்ட கஸ்டங்களால் மோயீசன் மீதும், கடவுள்மீதும் கோபம்கொண்டு

பழையபடி எகிப்துக்கேதிரும்ப ஆசைப்பட்டார்களே, அதேபோல.

விசுவாச வாழ்வு வாழும் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்,

நமது பயணம் விண்ணை நோக்கிய ஆன்மீகப் பயணம்,

பூமிக்குள்ளே வட்டம் போட்டுக்கொண்டிருக்கும் லௌகீகப் பயணம் அல்ல.

நமது கனவுகள் விண்ணோக்கி இருக்க வேண்டும் ,

மண்ணைச் சுற்றியே வலம் வந்து கொண்டிருக்கக்கூடாது.

அப்படியானால் விண்ணை நோக்கிப் பயணிக்கவேண்டிய நம்மை

ஏன் கடவுள் மண்ணிலிருந்து எடுத்து மண்ணிலேயே உலவவிட்டிருக்கிறார்?

இதில்தான் நமது வாழ்வின் இரகசியமே அடங்கி இருக்கிறது.

விண்ணகம் ஆவிகளின் உலகம்.
அங்கே  காலமும், இடமும் கிடையாது. (No time and space)

ஆனால் மண்ணகம் சடப்பொருட்களின் உலகம்.
இது காலத்திற்குக் கட்டுப்பட்டது, அதாவது துவக்கமும் முடிவும் உள்ளது. இடத்தில் உள்ளது.

(Our world is a matter,  subject to time and space)

மனிதர்களாகிய நாம் விண்ணகத்துக்குரிய ஆவியாகிய ஆன்மாவும்,

மண்ணகத்துக்குரிய சடபொருளாகிய உடலும் உள்ளவர்கள்.

நமக்குத் தெரியும் நமது இவ்வுலக வாழ்வின் முடிவில் நமது ஆன்மா உடலை இங்கே விட்டுவிட்டு விண்ணகம் சென்றுவிடும் என்று.

இப்போ கேள்வி,  விண்ணகம் செல்ல வேண்டிய ஆன்மாவிற்கு
மண்ணகத்தில் என்ன வேலை?

ஒரு ஒப்புமை (An analogy)

ஆசிரியப்பணி செய்ய விரும்புகிறவர்கள் முதலில் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் சேறுகிறார்கள்.

ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் சேறுவது

அங்கே பயிற்சியை முடித்துவிட்டு, 

வெளியே வந்து

ஆசிரியப்பணி புரியத்தான்,

பயிற்சிப் பள்ளியிலேயே தங்கிவிடுவதற்காக அல்ல.

அதுபோல்தான் நாம் மண்ணுலகில் வாழ்வது நம்மை விண்ணுலக வாழ்விற்காகத் தயாரிப்பதற்காகத்தான்,

மண்ணுலகிலேயே தங்கிவிடுவதற்காக அல்ல.

இதை மறந்து மண்ணுலக வாழ்வே சதம் என்று எண்ணி வாழ்ந்தால்,

இரண்டுமே கைநழுவிப் போய்விடும்,

நரகுலகம்தான் கிடைக்கும்.
(இது தீய ஆவிகளின் உலகம்)

இவ்வுலக வாழ்வின்போது

1.விண்ணக வாழ்வில் நமக்கு இடம் உண்டு என்பதை உறுதி செய்யவேண்டும்.

2.விண்ணக வாழ்வில் நாம் அனுபவிக்க வேண்டிய சொத்தைச் சம்பாதிக்க வேண்டும்.

நமக்கு இந்த இரண்டு வேலைகளைத் தவிர வேறு எந்த வேலையும் இவ்வுலகில் இல்லை.

1.விண்ணக வாழ்வில் நமக்கு இடம் உண்டு என்பதை எப்படி உறுதிசெய்வது?

அது ஒன்றும் கடினம் இல்லை.

நாம் சாவான பாவம் எதுவும் செய்யாமல் வாழ்ந்தாலே நமக்கு விண்ணுலகில் இடம் உறுதி.

சாவான பாவம் செய்யாமல் வாழ்ந்தால்  இவ்வுலகில்  இறைவனுக்கும் நமக்கும் உள்ள ஆன்மீக உறவு விண்ணுலகிலும் தொடரும்.

மனித பலகீனம் காரணமாக சாவான பாவம் செய்ய நேர்ந்தால் ஆன்மீக உறவு துண்டிக்கப்படும்.

செய்த பாவத்திற்காக மனஸ்தாபப்பட்டு, நல்ல
பாவசங்கீர்த்தனம் செய்தால்,

பாவம் மன்னிக்கப்பட்டு
இழந்த உறவு திரும்ப கிடைக்கும்.

நாமும் விண்ணக வாழ்வுக்குத் தகுதி உள்ளவர்களாவோம்.

ஆக நமது முதற் கடமை பாவம் இல்லாமல் வாழ்வது.

2.பாவம் இல்லாமல் வாழ்வது விவசாயி பயிர் செய்வதற்கு ஏற்றபடி நிலத்தை தயாரிப்பதற்குச் சமம்.

தயாரித்தால் மட்டும் போதாது.

பயிர் செய்ய வேண்டும்.
பயிர் செய்தால்தான் பலன் கிடைக்கும்.

அதேபோல, பாவம் இன்றி ஆன்மாவைச் சுத்தமாக வைத்திருந்தால் மட்டும் போதாது.

இறைவன் தரும் அருளாகிய உரத்தை இட்டு,

புண்ணியமாகிய பயிர்செய்து ஆன்மீக வளர்ச்சியாகிய பலனைப் பெறவேண்டும்.

எவ்வளவுக்கெவ்வளவு  ஆன்மீகத்தில் வளர்கிறோமோ

அவ்வளவுக்கவ்வளவு விண்ணுலகில் நாம் அனுபவிக்கவிருக்கும் பேரின்பம் அதிகம் ஆகும்.

நித்திய பேரின்பம்தான் (Eternal bliss) நமது விண்ணுலக சம்பாத்தியம்.

நாம் மண்ணுலகில் வாழ்வது

பணம், பதவி, வீடு, நிலபுலன், தொழிற்சாலைகள், கடைகள், மருத்துவனைகள் போன்ற

உலகியல் சொத்துக்களை சம்பாதிப்பதற்காக அல்ல.

அவை எல்லாம் ஒரு நாள் அழிந்துபோகக்கூடியவை.

ஆனால் அவை இல்லாமல் பூவுலகில் வாழமுடியாதே!

உண்மைதான்.

பணம் இல்லாமல், பதவி இல்லாமல், வீடு இல்லாமல் உலகில் வாழமுடியாது.

ஆனால் அவற்றின் உதவியோடு வாழ்வதற்கும் அவற்றிற்காக வாழ்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

அவற்றின் உதவியோடு வாழ்ந்தால்  அவை நமக்கு அடிமை.

அவற்றிற்காக வாழ்ந்தால் நாம் அவற்றிற்கு அடிமை.

நாம் விண்ணுலகிற்கான சம்பாத்தியம் செய்யத்தான் அவை நமக்கு உதவவேண்டும்.

இவ்வுலகப் பொருட்கள் வெறுமனே இவ்வுலகில் வாழ்வதற்காகமட்டும் நமக்குத் தரப்படவில்லை.

நமது வாழ்வையே இறைவனுக்காக வாழ உதவுவதற்காகத்தான் தரப்பட்டுள்ளன.

உதாரணத்திற்கு பணத்தை

எடுத்துக்கொள்வோம்.

பணம் நேரடியாகவே இறைப்பணிக்குச் செலவழிக்கப்படலாம்.

கோவில் உண்டியலில் போடப்படும் பணம் மட்டுமல்ல

ஏழைகட்கு உதவியாகக் கொடுக்கப்படும் பணமும் காணிக்கைதான்.

ஏழைகளுக்கு  நாம் செய்யும் எல்லாப்பணியும் இறைப்பணிதான்.

பணத்தை மட்டுமல்ல

நம்மிடமுள்ள எந்தப் பொருளையும்

இறைப்பணிக்காகச் செலவிடும்போது

நாம் விண்ணகத்தில் சம்பாவனையைச் சேர்த்து வைக்கிறோம்.

இறைப்பணியில் பயன்டுத்துவதற்காகத்தான்

இவ்வுலகப் பொருட்கள் நமக்குத் தரப்பட்டுள்ளன.

நமது தேவைகளுக்குப்போக மிகுதியாய் உள்ளவை எல்லாம் பிறர் பணிக்காகத் தரப்பட்டவைதான்.

எந்த அளவுக்கு, அதாவது, எந்த அளவு மனத் தாராளத்தோடு அள்ளிக் கொடுக்கிறோமோ,

அந்த அளவுக்கு விண்ணகத்திலும் சொத்து சேரும்.

"கொடுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்.

அமுக்கிக் குலுக்கிச் சரிந்துவிழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள்.

ஏனெனில், எந்த அளவையால் அளப்பீர்களோ அதே அளவையால் உங்களுக்கு அளக்கப்படும்." (லூக்.6:38)

அழியக்கூடிய இவ்வுலகச் சொத்தைக் கொடுத்து,

அழியாத விண்ணுலகச் சொத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு இலாபகரமானது!

இந்த உணர்வு அனைத்து மக்களிடமும் இருந்தால் உலகில் பொருட் பற்றாக் குறையே வராது.

இவ்வுலகு துன்பங்கள் நிறைந்தது என்று எண்ணுகிறோம்.

ஆனால் நமது துன்பங்கள் உண்மையில் துன்பங்கள் அல்ல,

அழியா பேரின்பத்தின் காரணிகள்!

பாவத்தின் விளைவாகப் புவியுள் நுழைந்த துன்பங்களை

இறைமகன் இயேசு தனது விலை மதிப்பற்ற இரத்தத்தை விலையாகக் கொடுத்து,

நித்திய பேரின்பத்தின் ஊற்றுக்களாக மாற்றிவிட்டார்.

ஆம். எவ்வளவுக்கெவ்வளவு துன்பங்களை இயேசுவுக்காகக நல்மனதுடன் ஏற்றுக்கொள்கிறோமோ

அவ்வளவுக்கவ்வளவு விண்ணகத்தில் நமது பேரின்பத்தின் அளவு கூடும்!

யாராவது ஒரு பெருந்தொகை பரிசாகக் கொடுத்தால் வேண்டாம் என்பார்களா?

அதைக்கொண்டு எத்தனையோ பயனுள்ள பொருட்களை வாங்கிக் கொள்ளலாமே!

நமக்கு வரும் துன்பங்கள் இயேசு நமக்குத் தரும் பரிசு!

அவற்றைக் கொண்டு மோட்ச இன்பத்தைச் சம்பாதிக்கலாமே!

இறைமகன் இயேசுவே தனது துன்பத்தால்தான் உலகை இரட்சிக்கிறார்!

ஆனால் நாம் துன்பத்தைக் கண்டு பயப்படுகிறோம்.

பயப்படாமல் வருகிற துன்பங்களை நன்றியோடு ஏற்றுக்கொள்கிறவன் பாக்கியவான்,

ஏனெனில் அதிகமான மோட்ச இன்பத்திற்கு உரிமையாளனாகிறான்!

The more one suffers temporarily the more one can enjoy bliss eternally!

முடியக்கூடிய துன்பத்தைக் கொடுத்து முடியாத பேரின்பத்தைப் பெறுவது எவ்வளவு புத்திசாலித்தனம்!

இது ஏன் நமக்குப் புரிவதில்லை?

ஏன் நமக்குப் புரிவதில்லை என்பதே புரியவில்லை!

"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்." (மத்.16:24)

இயேசுவைப் பின் சென்றால்தான் விண்ணகம் போகமுடியும்.

சிலுவையைச் சுமந்தால்தான் இயேசுவின் பின்னால் போகமுடியும்!

விண்ணக மகிமையின் ஊற்றே சிலுவைதான்!

இயேசு சிலுவைகளை அனுப்புவதே நாம் மகிமை பெறுவதற்காகத்தான்.

இதை உணர்வோம்,  உய்வடைவோம்!

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment