"சுமை சுமந்து
சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள். உங்களை நான் இளைப்பாற்றுவேன். (மத்.11:28)
****** ****** *******
சுமக்க முடியாத சுமையுடன் கஸ்டப்படுபவர்கட்கு இயேசு விடுக்கும் அழைப்பு:
'என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாற்றியைத் தருவேன்"
சுமை என்பது மற்றவர்களால் நம்மீது ஏற்றப்பட்ட அல்லது நாமாகவே எடுத்துக்கொண்ட பாரம்.
சுமை என்றாலே கனமான ஒரு பொருள்தான்.
இலேசான பொருட்களை எடுத்துச் செல்வதற்கும்,
கனமான பொருட்களைச் சுமந்து செல்வதற்கும்
உள்ள வேறுபாடு எல்லோருக்கும் தெரிந்ததே.
அதனால்தான் பயணிகட்கு
"Less luggage, more comfort"
என்ற ஆலோசனை கூறப்படுகிறது.
நமது வாழ்வில் இரண்டு வகையான சுமைகள் உண்டு.
1.நமது அன்றாட வேலைகள் செய்யமுடியாத அளவிற்குக் கடினமாக இருந்தால் அவற்றைச் சுமைகள் என்போம்.
விருப்பம் இல்லாத வேலைகளையும் சுமைகளாகத்தான் கருதுகிறோம்.
வாழ்க்கை தாங்கள் எதிர்பார்த்தபடி அமையாதவர்களுக்கு வாழ்க்கையே சுமையாகிவிடுகிறது.
இந்தச் சுமைகள்மீது நமக்கு விருப்பம் ஏற்பட்டுவிட்டால்
அவற்றின் கனத்தன்மை காற்றில் கரைந்து விடும்.
ஆனால் விருப்பம் ஏற்படுவது எப்படி?
பதில் ஆண்டவரிடம் இருக்கிறது.
2. நமது ஆன்மாவை அழுத்திக் கொண்டிருக்கும் பாவச்சுமை இன்னொருவகை.
பாவம் செய்யும்போது கிடைக்கும் சிறிய இன்பம் செய்து முடித்தபின் பெரிய சுமையாக மாறிவிடும்.
பாவ வாழ்க்கை வாழ்வோரின் வெளித்தோற்றம் 'ஜாலி'யாகத் தோன்றும்.
அது வெறும் தோற்றம்தான்.
அவர்களது ஆன்மாவை அழுத்தி, அமுக்கிக் கொண்டிருக்கும் சுமை அவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.
பாவச்சுமை அதைச் சுமப்பவர்களின் மன நிம்மதியை அழித்திவிடும்.
நிம்மதி இல்லாத இடத்தில் மகிழ்ச்சி இருக்காது.
மகிழ்ச்சி இல்லாத வாழ்க்கை துன்பக் கடல் மாதிரி. நீச்சல் தெரியாதவன் அதில் மாட்டிக்கொண்டால், அதைவிடப் பரிதாபம் வேறொன்றும் இல்லை.
இவ்வாறு சுமைகளால் அவதிப்படுவோரை மீட்கவே இறைமகன் மனுமகன் ஆனார்.
தாங்க முடியாத சுமைகளால் அல்லல் படுவோரை நோக்கி நம் ஆண்டவர் சொல்கிறார்,
"சுமை சுமந்து
சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள். உங்களை நான் இளைப்பாற்றுவேன்."
ஆண்டவர் வெறுமனே ஆறுதல் சொல்வதற்காகமட்டும் இவ்வார்த்தைகளைக் கூறவில்லை.
உண்மையிலேயே நமது சுமைகளை நீக்கி இளைப்பாற்றி தர அவரால் இயலும்.
அவர் சர்வ வல்லபர். அவரால் எல்லாம் இயலும்.
சுமைகளால் அல்லல்படும் நாம் அவற்றிலிருந்து விடுபட செய்யவேண்டியது இரண்டே இரண்டு எளிதான காரியங்கள்தான்.
1.அவர்மீது ஆழமான, அசைக்கமுடியாத விசுவாசம் கொள்ள வேண்டும்.
2.நமது வாழ்வை முற்றிலுமாக அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும்.
ஆழமான விசுவாசத்தோடும், அற்பண உணர்வோடும் அவரிடம் செல்வோம்.
நமது வரவிற்காகவே அவர் திவ்ய நற்கருணைப் பேழையில் ஆவலுடன் இரவும்,பகலும் காத்துக் கொண்டிருக்கிறார்.
அவரது பாதங்களின் அமர்ந்து,
அவரது கருணைபொங்கும் முகத்தைப்
பார்க்க வேண்டியது மட்டும்தான் நமது வேலை.
மீதியை அவர் பார்வை பார்த்துக்கொள்ளும்.
பாடுபட்ட சுரூபத்தின் அடியில் அமர்ந்து கொள்வோம்.
மேலே ஏறிட்டுப் பார்ப்போம்.
இயேசுவின் முகம்.
மொத்த சோகத்தின் உறைவிடம்.
நாம் கண்ணால் செய்த பாவங்களுக்காக அழுது அழுது வற்றிப்போன கண்கள்.
தலையில் முள்முடி.
மண்டை ஓட்டையும் பிழந்து உள்ளிறங்கி
நாம் சிந்தனையால் செய்த பாவங்களுக்காக மூளையைக் குத்தி காயப்படுத்திய முட்கள்,
காதுகளால் செய்த பாவங்களுக்காக காதுகளிலும் இறங்கிக் குத்திக் கொண்டிருக்கும் முட்கள்,
நாம் செய்த பாவங்களுக்கு இறைத் தந்தையிடம் மன்னிப்பு கேட்ட வாய்,
ஈட்டியால் குத்தித் திறக்கப்பட்டு அவரது கடைசித்துளி இரத்தத்தையும் நமக்காகக் வெளியே கொட்டித்தீர்த்தத் திருவிலா,
ஆணிகளால் சிலுவை மரத்தோடு சேர்த்து அறையப்பட்ட அவரது கைகள், கால்கள்.
பார்க்கவே பரிதாபமான தோற்றம்.
இவ்வளவு பரிதாபமாக ஆண்டவர் பாடுபட்டு, சிலுவையில் அறையப்பட்டு,
தாங்கவொண்ணா வேதனைகளை அனுபவித்து,
உயிரையே பலியாக ஒப்புக் கொடுத்தது யாருக்காக?
நமக்காக!
எதற்காக?
நாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக!
அற்பப் புழுக்களுக்குச் சமமான நமக்காக சர்வ வல்லப தேவன் தன்னையே பலியாக்கியிருக்கிறார்!
கஸ்டப்படவே முடியாத தேவன் நமக்காகக் கஸ்டப்படுவதற்காகவே மனுவுரு எடுத்திருக்கிறார்!
மரிக்கவே முடியாத தேவன் நமக்காக மரிப்பதற்காகவே மனிதனாய் பிறந்திருக்கிறார்!
என்னே அவரது அன்பு!
அளவிடமுடியாத அன்பு!
நமக்காக இவ்வளவு பாரமான சிலுவையைச் சுமந்து,
அதிலேயே பலியான இயேசுவுக்கு நன்றியாக
நாம் என்ன செய்திருக்கிறோம்?
இவற்றை நாம் தியானிக்கும்போதே சிலுவையில் மரித்த இயேசுவின் அருள் (Grace) நம்முள் இரங்கும்.
அவர் சுமந்த சிலுவைச் சுமைக்கு முன் நமது வாழ்க்கைச் சுமை சுமையாகவே தெரியாது!
சூரிய ஒளி பட்ட உடனே பனித்துளிகள் மறைந்து விடுவதுபோல
இயேசுவின் அருள் பட்டவுடனே நமது சுமையின் கனம் காணாமல் போய்விடும்.
நாம் செய்த பாவங்களுக்காக நமது மனதில் மனஸ்தாபம் பொங்கும்.
"இவ்வளவு அன்பு நிறைந்த இயேசுவுகக்கு எதிராகவா இத்தனை பாவங்கள் செய்தேன்?
இயேசுவே மன்னியும்."
இவ்வளவு சுமை சுமந்த இயேசுவுக்காக
எவ்வளவு சுமையை வேண்டுமானாலும் மகிழ்ச்சியோடு தாங்கும் மனப்பக்குவம் வந்துவிடும்.
இப்போது நமது மனதுக்குள் இயேசுவின் குரல் கேட்கிறது.
"மகனே/ மகளே,
திரும்பிப்பபார்.
அதோ பாவசங்கீர்த்தனத் தொட்டியில் அமர்ந்திருக்கிறேன்.
வந்து உன் பாவச்சுமைகளை எல்லாம் என் முன் இறக்கி வை."
திரும்பிப் பார்க்கிறோம்.
குருவானவர் வடிவில் இயேசு அமர்ந்திருக்கிறார்.
அவரிடம் சென்று நமது பாவச்சுமைகளை முழுவதுமாக இறக்கிவைக்கிறோம்.
மனது மிகவும் இலேசாகி மகிழ்ச்சியால் பொங்கிவடிகிறது.
உலகம் தரமுடியாத சமாதானத்தை இயேசு தந்திருக்கிறார்.
"நல் மனதோற்குச் சமாதானம்"
என்ற விண்ணகத் தூதர்களின் கீதம் உள்ளத்தை நிரப்புகிறது.
பெற்ற சமாதானத்தைப் பேணிக்காப்போம்.
அப்புறமும் ஏதாவது சுமை ஏறிவிட்டால்
இயேசுவிடம் செல்வோம்.
இளைப்பாற்றி பெறுவோம்.
இவ்வுகில் மட்டுமல்ல,
நமக்கு நித்திய இளைப்பாற்றியைத் தரவிருப்பவரும் அவரே!
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment