"கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்களே எனக்குத் தாயும் சகோதரரும் ஆவர்"
(லூக்8:21)
******* ******* ********
"ஹலோ! நில்லுங்க, சார்."
"வணக்கம், சொல்லுங்க."
"ஏன், நீங்க என்ன அவ்வளவு பெரிய ஆளா,பார்த்தவுடனே வணக்கம் சொல்றதுக்கு?"
"ஹலோ! யார் என்ன சொன்னாலும்,
பைபிளே சொன்னாலும்,
அதற்குத் தவறாகவே அர்த்தம் பண்றதுல ஒண்ணாம் நம்பர் நீங்கதான்.
எங்க இருந்து இந்த கலையைக் கற்றுக்கிட்டீங்க?"
"நான் எங்க தவறா அர்த்தம் பண்ணினேன்?
என்னைப் பார்த்து,
'வணக்கம் சொல்லுங்க'ன்னு சொன்னது நீங்கதானே?"
"உங்களுக்கு 'வணக்கம்' சொன்னது நான்.
'வணக்கம்' சொல்லிவிட்டு,
கொஞ்சம் இடைவெளி(,) விட்டு,
நீங்க சொல்ல வந்தத 'சொல்லுங்க'ன்னு சொன்னேன்.
'இடைவெளி'யை நீங்களே சாப்பிட்டுவிட்டு,
நான் உங்களிடம் வணக்கம் கேட்டதா சொல்றீங்க!
சரி விடுங்க. என்ன நிற்கச் சொன்னது நீங்க. என்ன விசயம்? சொல்லுங்க."
"பைபிள் வாசிக்கிற பழக்கம் உண்டா?"
.." Introductory questionலாம் வேண்டாம். கேட்க வந்தத நேரடியாகவே கேளுங்க."
"மரியாள் இயேசுவைப் பார்க்கவந்தபோது அவர் மக்களைப் பார்த்து,
"கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்களே எனக்குத் தாயும் சகோதரரும் ஆவர்"
என்று சொன்னார் தெரியுமா?"
.."தெரியும். சொல்லுங்க."
"இதிலிருந்து என்ன தெரிகிறது?"
.."உங்களுக்கு என்ன தெரிகிறது?"
"இயேசுவுக்கு தன்னைப் பெற்ற தாயின்மேல் விசேச அக்கரை இல்லை என்று தெரிகிறது.
அவரது அக்கரை எல்லாம் தன்னைப் பின்பற்றுவோர் மேல்தான்.
நீங்கள்தான் 'மாதா, மாதா' என்று மரியாளைக் கொண்டாடுகிறீர்கள்."
.."எதை வைத்து
இயேசுவுக்கு தன் தாயின்மேல் விசேச அக்கரை இல்லை என்று சொல்கிறீர்கள்?"
"தாய் மேல் விசேச அக்கரை இருந்திருந்தால் அவங்க வந்திருப்பது தெரிந்தவுடன் போய்ப் பார்த்திருப்பார்.
'கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்களே எனக்குத் தாயும் சகோதரரும் ஆவர்'
என்று கூறியிருக்கமாட்டார்."
"இயேசு தன் தாயைப் போய்ப் பார்க்கவில்லை என்று யார் சொன்னது?"
"பைபிளில் எழுதப்படவில்லையே! "
..'' 'இயேசு செய்தவை வேறு பல உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுத வேண்டிய நூல்களை உலகமே கொள்ளாது.'
என்று பைபிளில் எழுதப்பட்டிருக்கிறது தெரியுமா?
சரி, உங்கள் கருத்துப்படி இயேசுவுக்குத் தாய் மேல் அக்கரை இல்லை, அப்படித்தானே?"
"விசேச அக்கரை ஒன்றும் இல்லை.
அவரைப் பொறுத்தமட்டில் மரியாள் அவர் பிறக்க உதவிய ஒரு பெண்மணி, அவ்வளவுதான்."
.."அதாவது அவரே நமக்குக் கொடுத்த பத்துக் கட்டளைகளில்
நாலாவது கட்டடளையைப் பற்றி அவரே அக்கறைப்படவில்லை, அப்படித்தானே?"
"மிஸ்டர், இயேசு கடவுள்.
மரியாள் அவரால் படைக்கப்பட்ட ஒரு பெண்மணி.
தான் மனிதனாய்ப் பிறக்க அவளைத் தாயாய்ப் பயன்டுத்திக்கொண்டார், அவ்வளவுதான்.
நீங்கள் அவளைக் கடவுளின் தாய் என்கிறீர்கள்."
.."அப்படியானால் அவள் இயேசுவின் தாய் அல்ல. அப்படித்தானே?"
"இயேசுவின் தாய், கடவுளின் தாய் அல்ல."
. ."அப்படியானால் இயேசு கடவுள் அல்ல!"
"என்ன மிஸ்டர் உளர்கிறீங்க"
.."உளர்வது நான் அல்ல.
யோசியுங்கள்.
இயேசு கடவுள்.
மரியாள் இயேசுவின் தாய்.
ஆகவே
மரியாள் கடவுளின் தாய்.
இதில் உளரல் எங்கே இருக்கிறது?"
"அப்படியானால் இயேசு பிறக்குமுன் உலகில் கடவுளே இல்லையோ?"
"உளர ஆரம்பித்துவிட்டீர்."
.."நீர் சொல்லுகிறது விளங்கவில்லை. கொஞ்சம் விளக்குங்கள்."
"உண்மையிலேயே படிக்க விரும்புகிறவனுக்கு ஆசிரியர் பாடம் நடத்தலாம்.
ஆசிரியரின் ஒவ்வொரு சொல்லிலும் குற்றம் காண தீர்மானத்தோடு இருப்பவனுக்கு ஆசிரியர் எப்படி பாடம் நடத்துவார்?"
"அப்படியானால் மாணவன் சந்தேகம் கேட்கக்கூடாதா?"
.."சந்தேகம் பாடத்தில் இருக்கலாம். ஆசிரியர் மீது அல்ல.
இயேசு பரிசுத்த தமதிரித்துவத்தின் இரண்டாம் ஆள்.
இயேசு கடவுளாய் இருப்பதால் அவர் தேவஆள்.
இயேசு மனிதனாய் உற்பவிக்குமுன் அவருக்கு இருந்தது ஒரே சுபாவம், தேவ சுபாவம்.
இயேசுவாகிய தேவ ஆள் கன்னி மரியின் வயிற்றில்
மனிதனாய் கருவுற்றபோது மனித சுபாவத்தையும் எடுத்துக்கொள்கிறார்.
மனுவுரு எடுத்தவர் தேவஆள்.
கன்னிமரியின் கருப்பையில் இருந்தது
நித்தியகாலமாக தனக்கிருந்த தேவ சுபாவத்தோடு, மனித சுபாவத்தையும் எடுத்துக்கொண்ட,
பரிசுத்த தமதிரித்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சுதனாகிய கடவுள்.
அதாவது
ஆள் ஒன்று,
சுபாவம் இரண்டு.
தேவசுபாவம், மனித சுபாவம்.
இயேசு
முழுமையாக கடவுள்.
Fully God.
முழுமையாக மனிதன்.
Fully Man.
கடவுள் மனிதனாய்ப் பிறக்கிறார்.
அதாவது
கன்னிமரி பெற்றது கடவுளாகிய இயேசுவை.
கடவுளைப் பெற்றதால் அவள் கடவுளின் தாய்.
கடவுளுக்கே மனு உருக் கொடுத்தவள் சாதாரணப் பெண்மணியா?
தனக்குத் தாயாக இருக்கவேண்டும் என்பதற்காக
இறைவன் தானே விசேசமான விதமாகத் தேர்ந்தெடுத்து,
சென்மப்பாவ மாசிலிருந்து காப்பாற்றி,
அவள் அற்பப் பாவம்கூட செய்யாதிருக்கும் அளவிற்கு அவளை அருள்வரங்களால் நிறப்பி
விசேசமான விதமாகப் பராமரித்து வந்த இறையன்னை உங்களுக்கு சாதாரணப் பெண்மணியா?"
"சரி. ஏற்றுக்கொள்கிறேன்.
சாதாரணப் பெண்மணி அல்ல.
ஆனால்
"கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்களே எனக்குத் தாயும் சகோதரரும் ஆவர்."
என்று இயேசு ஏன் சொன்னார்?"
.."ஏதாவது ஒரு பொருளைப் பற்றி உயர்வாகப் பேசவேண்டுமென்றால்
அதைவிட உயர்ந்த பொருளோடு ஒப்பிடுவது இலக்கிய மரபு.
'எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்.'
ஆசிரியருடைய பெருமையை விளக்குவதற்காக புலவர் அவரை இறைவனுக்கு ஒப்பிடுகிறார்.
தன் தந்தையின் சித்தத்தை நிறைவேற்றுவதற்காகவே புவியில் மனிதனாய்ப் பிறந்த இறைமகன்
நாமும் அவரைப்போலவே இறைத்தந்தையின் சித்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று ஆசிக்கிறார்.
அப்படி நிறைவேற்றுபவர்கள் தன்னுடைய 'தாய்' என்கிறார்.
அதாவது தன் 'தாய்' போன்றவர்கள் என்கிறார்.
அவரைப் பொறுத்தமட்டில் 'அருள் நிறைந்த' அவரது அன்னைதான் மனித குலத்திலேயே உயர்ந்தவள்.
ஆகவே கடவுளின் சொல்லைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்கள் தன் தாய்க்குச் சமமானவர்கள் என்கிறார்.
நமது மொழியில் சொல்வதானால் இயேசு இப்படிச் சொல்லியிருப்பார்:
"மக்களே, எனது தாய் எனக்காகக் காத்திருப்பதாகச் சொல்கிறீர்கள்.
எனது சொற்படி நீங்கள் நடந்தால் நீங்களும் என் தாய்தான்.
என் தாயை நேசிப்பது போலவே உங்களையும் நேசிக்கிறேன்.
என் தாய் என்னை நேசிப்பதுபோல நீங்களும் என்னை நேசிக்க வேண்டும்.
நேசித்தால்தான் என் சொற்படி நடப்பீர்கள்."
நம்மிடம் இயேசு பேசினால் இப்படித்தான் சொல்வார்.
இயேசுவின் பேச்சில் அவரது தாயின் பெருமை வெளிப்படுகிறது.
இயேசு தன் தாய்க்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று நீங்கள் சொன்னால்
நீங்கள் இயேசுவை அவமதிக்கிறீர்கள் என்றுதான் அருத்தம்."
.."அதற்காக அவளுக்கு விழா எடுக்க வேண்டுமா?
அது இயேசுவை அவமதிப்பது ஆகாதா?"
.."உங்கள் தாயின் பிறந்த நாளைக் கொண்டாடி யிருக்கிறீர்களா?"
"ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகிறோம்.
உறவினர்களுக்கு அழைப்புக் கொடுத்து பிரமாண்டமா கொண்டுவோம்."
"அப்படியானால் விழாவுக்கு வருவோர் அனைவரும் உங்களை அவமதிப்பதாகத்தானே அருத்தம்?"
"இல்லை. என் தாயைப் புகழ்கின்றவர்கள் உண்மையில் என்னைப் பெருமைப் படுத்துகிறார்கள்."
.."உங்கள் தாய்ப்பற்றுக்கு பாராட்டுக்கள்.
இயேசு தன் தாயின் மீது அளவுகடந்த பற்றும் பாசமும் உள்ளவர்.
அதை மனதில் வைத்துக் கொண்டு சிந்தியுங்கள்.
தெளிவு கிடைக்கும்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment