Monday, June 30, 2025

இறைப் பிரசன்னத்தில் வாழ்வதுதான் செப வாழ்வு.(தொடர்ச்சி)



இறைப் பிரசன்னத்தில் வாழ்வதுதான் செப வாழ்வு.
(தொடர்ச்சி)

"நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது." (அரு.15:5)

"உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.''

என்று சொன்ன இயேசு,

"நான் திராட்சைச் செடி, நீங்கள் அதன் கொடிகள்.'' என்றும் சொல்கிறார்.

தந்தையின் பண்புகளை மக்களும் பெற்றிருப்பர்,

செடியில் இருக்கும் சத்துக்களைக் கொடிகளும் பெற்றிருக்கும்.

செடி வேர்கள் மூலமாக நிலத்திலிருந்து சத்துக்களை எடுத்து கொடிகள் மூலமாக கனிகளுக்கு அனுப்பும்.

கொடிகளில்தான் திராட்சை காய்த்துப் பழுக்கும்.

இறைமகன் இயேசு தனது சீடர்களின் மூலமாகத்தான், அதாவது, நமது  மூலமாகத்தான் தனது மீட்புச் செய்தியை உலகெங்கும் அறிவிக்கிறார்.

அவர் நம்முள்ளும், நாம் அவருள்ளும் இருந்தால் தான் நற் செய்தி அறிவிப்பு நடக்கும்.

நமது வாழ்வு = நற் செய்தி அறிவிப்பு.

வாழ்வு சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றின் கணம்.

சிந்தனையில் ஆரம்பத்து சொல் வழியாக செயலில் இறங்குவது தான் நற் செய்தி அறிவிப்பு வாழ்வு.

சிந்தனை என்றால் தியானம், எண்ணிப் பார்த்தல்.

தியானம் இன்றி ஆன்மீக வாழ்வு இல்லை.

துவக்க நிலையில் உள்ள ஆன்மீக வாழ்வுக்கு சாதாரண தியானம் போதும்.

ஆனால் ஆழமான ஆன்மீக வாழ்வுக்கு ஆழ்நிலைத் தியானம் (Contemplation) அவசியம்.

ஆழ்நிலைத் தியானம் தியானம் என்றால்?

கடலில் குளிப்பவர்கள் கடலில் இறங்கினால் போதும்.

ஆனால் முத்து எடுக்க விரும்புபவர்கள் கடலின் ஆழத்துக்கு மூழ்க வேண்டும்.

அப்படியே ஆழமான விசுவாசத்தின் அடிப்படையில் வாழ விரும்புவர்கள் ஆழ்நிலைத் தியானத்தில் இறங்க வேண்டும்.

சாதாரண தியானத்தில் ஏதாவது ஒரு ஆன்மீக நிகழ்வை நினைப்போம்.

ஆனால் ஆழ்நிலைத் தியானத்தில் நம்மில் வாழும் அனைத்துக்கும் ஆதி காரணரான மூவொரு தேவனை உற்று நோக்க வேண்டும்.

நமது எண்ணம் ஒரு புள்ளியில் குவிய வேண்டும்.

அந்தப் புள்ளி பரிசுத்த தம திரித்துவக் கடவுளாக இருக்க வேண்டும்.

நமது சிந்தனை இறைவனில் நூற்றுக்கு நூறு குவிந்து விட்டால் நமது மனதில் திரி ஏக கடவுள் மட்டும் இருப்பார்.

அவரைத் தவிர வேறு எந்த எண்ணமும் துளி கூட இருக்காது.

ஐம்புலன்கள் அனைத்தும் ஆண்டவரில் குவிந்திருக்கும்.

நமது கண்களுக்கு புறத்தில் உள்ள எதுவும் தெரியாது.

நமது காதுகளுக்கு வேறு யார் பேசினாலும் கேட்காது.

வாய்க்கு வேறு எந்த ஒரு வேலையையும் இல்லை.

உடலில் தொடுதல் உணர்வே இருக்காது.

யாரும் நம்மை அடித்தால் கூட அதை உணர மாட்டோம்.

கடவுள், கடவுள், கடவுள் மட்டும் தான் நம்மில் இருப்பார்.

நமது சிந்தனை முழுவதிலும் தம திரித்துவக் கடவுள் மட்டும் வாழ்வார்.

 நித்திய காலமும் தன்னை அறிந்து சிந்திக்கிற தந்தை,

 நித்திய காலமும் தந்தையின் சிந்தனையில் பிறக்கிற வார்த்தை, மகன்,

தந்தையும் மகனும் நித்திய காலமும் செய்கிற அன்பு 

ஆகிய கடவுள்  கடவுள் நம்மில் நிறைந்து வாழும்போது நமது ஐம்புலன்களுக்கு கடவுள் மட்டுமே தெரியும்.

நமது அகத்தில் மட்டுமல்ல புறத்திலும் முழுமையாக கடவுள் நிறைந்திருப்பார்.

எந்தப் பொருள் கண்ணில் பட்டாலும் அதில் கடவுள் தான் தெரிவார்.

யார் கண்ணில் பட்டாலும் அவரிலும் கடவுள் தான் தெரிவார்.

உலகின் ஒவ்வொரு பொருளிலும் ஆளிலும் கடவுள் தெரிவதால் நம்மால் எல்லா பொருட்களையும்,
பிராணிகளையும், மனிதர்களையும் நேசிக்க மட்டுமே முடியும்.

இறைவனையும், அவரால் படைக்கப் பட்டவர்களையும்
நேசித்து வாழ்வதே செபவாழ்வு.

ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆழ் நிலைத் தியானத்தில் ஈடுபட்டால்

உலகப் பொருட்களை அநாவசியமாக அழிக்க மாட்டோம்,

யாரையும் பகைக்க மாட்டோம்,

யாருக்கும் தீங்கு செய்ய மாட்டோம்.

புனித பிரான்சிஸ் அசிசி மிருகங்களையும், பறவைகளையும் கூட சகோதர, சகோதரிகளாகக் கருதினார்.

இயேசு தன்னை முத்தமிட்டு காட்டிக் கொடுத்த யூதாசைக் கூட "நண்பனே" என்று தான் அழைத்தார்.

நமது உள்ளத்தில் மட்டுமல்ல உலகிலும் இறைவன் நிறைந்திருப்பதால்

படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களையும் இறைவனுள், இறைவன் மூலமாகவே பார்ப்போம்.

இறைவன் மூலமாகவே பார்ப்பதால் படைப்புகளிலுள்ள‌ நன்மைகள் அனைத்தும் நமக்குத் தெரியும்.

அனைத்தையும் இறைவனில் இறைவனுக்காக நேசிப்போம்.

அன்பு மயமானவர் நம்மையும் அன்பு மயமானவர்களாக மாற்றி விடுவார்.

இனி அன்பு, அன்பு, அன்பு மட்டுமே நமது எல்லாமாக இருக்கும்.

அன்பு தான் செபம்.

நாமே செபமாக மாறிவிடுவோம்.

அதில் தானே பேரின்பம் இருக்கிறது.

செப வாழ்வு வாழும் போது விண்ணக வாழ்வை மண்ணகத்திலேயே ஆரம்பித்து விடுவோம்.

லூர்து செல்வம்.

Sunday, June 29, 2025

இறைப் பிரசன்னத்தில் வாழ்வதுதான் செப வாழ்வு.



இறைப் பிரசன்னத்தில் வாழ்வதுதான் செப வாழ்வு.

"தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்."
(லூக்கா நற்செய்தி 10:42)

மார்த்தாள், மரியாள் வீட்டுக்கு இயேசு சென்றிருந்த போது மார்த்தாள் அவருக்கு உணவு தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தாள்.

 மரியாள்    ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். 

அதாவது ஆண்டவருடைய பிரசன்னத்தில் இருந்தாள். 

ஆண்டவருடைய பிரசன்னத்தில் இருப்பது தான் செபம்.

நமது வீட்டில் சிறு பிள்ளைகள் தாயின் மடியில் அமர்ந்திருக்கும்.

அல்லது தாயின் அருகில் விளையாடிக் கொண்டிருக்கும்.

தெருவில் போய் விளையாடினாலும் அடிக்கடி வீட்டுக்குள் வந்து அம்மாவைப் பார்த்து விட்டு விளையாடப் போகும்.

அதாவது தாயின் பிரசன்னத்தில், சந்நிதியில் விளையாடிக் கொண்டிருக்கும்.

அதேபோல, நாம் கடவுளுடைய சந்நிதியில் வாழ்வது தான் செபம்.


எப்படி ஒரு குழந்தை தனது தாயின் சந்நிதியில் வாழ்கிறதோ

அப்படியே பிள்ளைகளாகிய நாம் நமது தந்தையாகிய இறைவன் சந்நிதியில் வாழ்வோம்.

அதுதான் செபம்.

செபம் இல்லாத வாழ்க்கை இயேசு இல்லாத பைபிள்.

Life without prayer is Bible without Jesus.

இயேசுவைப் பற்றியதுதான் நற் செய்தி. இயேசு இல்லாவிட்டால் அது வெறும் செய்தி.

செபம் இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே அல்ல.

உயிர் இல்லாத உடல்.

சிலர் செபத்தைப் பற்றி ஒரு தவறான கருத்து கொண்டுள்ளார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை செபம் என்றால் இறைவனிடம் கேட்டல்.

அவர்கள் "கேளுங்கள் கொடுக்கப்படும்" என்ற இறைவாக்கை மட்டும் பிடித்துக் கொள்கிறார்கள். அது செபத்தின் ஒரு பகுதி.

நடக்க முடியாமலிருக்கும் போது ஊன்றுகோல் உதவுவது போல செபம் உதவுகிறது என்பது அவர்கள் எண்ணம்.

Some people wrongly think that prayer is a support system which is used when we  can no longer help ourselves

அவர்கள் கட்டங்கள் வரும் போது மட்டும் கடவுளைத் தேடுவார்கள்.

கடவுளைத் தேடுவது செபம் அல்ல.  கடவுளில் வாழ்வதுதான் செபம். 

சர்வ வல்லமை வாய்ந்த, சர்வ ஞானமுள்ள கடவுளில், கடவுளோடு வாழும் போது நாம் ஏன் உதவியைத் தேட வேண்டும்?

நடந்து செல்பவன் வேகமாகச் செல்ல காரைத் தேட வேண்டும்.

காரில் பயணிப்பவன் எதைத் தேட வேண்டும்?

கடவுளில் வாழ்பவன் தன் தேவைகளை நினைத்தாலே போதும்.

நமது நினைவுகளை அறியும் கடவுள் அவற்றை நிவர்த்தி செய்வார்.

செபம் உதவி கேட்கும் கருவி அல்ல. உதவி செய்பவருக்குள் வாழ்வதுதான் செபம்.

அநேகர் காலை செபம், இரவு செபம், செபமாலை, திருப்பலி ஆகியவற்றை மட்டுமே செபம் என்று நினைக்கிறார்கள்.

எல்லாவற்றையும் சேர்த்தாலே ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் தான் ஆகும்.

ஆனால் 24 மணி நேரமும் செப நேரம்தான். சுவாசிப்பது தொடங்கி தூங்குவது ஈறாக அனைத்து செயல்களும் செபம் தான்.

இறைவன் எங்கும் இருக்கிறார். அனைத்தும் அவருக்குள் நடைபெறுகின்றன.

நாம் செய்யும் அனைத்தும் நமது சம்மதத்துடன், உணர்வு பூர்வமாக நடைபெறும் போது செபம்.

 வெறுமனே வாழ்வது
 மிருகங்களுடைய வாழ்க்கைக்குச் சமம்.

மிருகங்களால் செபம் செய்ய முடியாது.

இறைவன் சர்வ வல்லபர், நாம் ஒன்றுமில்லாதவர்கள்.

இயேசு நம்மை இறைவனை நோக்கி, "விண்ணகத்திலுள்ள எங்கள் தந்தையே!" என்று அழைக்கச் சொன்னார்.

இயேசுவின் அருளால் ஒன்றுமில்லாத நாம் தந்தை இறைவனின் பிள்ளைகளாகும் பாக்கியம் பெற்றிருக்கிறோம்.

நம்மை நாம் நேசிப்பதுபோல நமது அயலானையும் நேசிக்கச் சொன்ன கடவுள் தன்னை நேசிப்பது போல நம்மை அளவில்லாத விதமாய் நேசிக்கிறார்.

அவரது நேசத்தினால் நாம் அவருடைய பிள்ளைகள் நிலைக்கு உயர்ந்திருக்கிறோம்.

 "உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."
(மத்தேயு நற்செய்தி 5:48)

இது நமது ஆண்டவரின் அறிவுரை.

ஆற்றுத் தண்ணீரின் அளவு கடல் நீரின் அளவை விடக் குறைவாக இருந்தாலும் ஆறு கடலில் கலக்கும் போது அது கடல் நீரோடு ஒன்றித்து விடுவது போல 

நிறைவில்லாத நாம் நிறைவான இறைவனோடு ஒன்றிக்கும் போது நமது நிறைவின்மை இறைவனின் நிறைவோடு ஒன்றித்து விடுகிறது.

நாம் இறைவனோடு ஒன்றிப்பது தான் செபம்.

ஒன்றித்து வாழ்வது செப வாழ்வு.

(தொடரும்)

லூர்து செல்வம்

Saturday, June 28, 2025

''எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா."(மத்தேயு நற்செய்தி 16:18)



''எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா."
(மத்தேயு நற்செய்தி 16:18)

" நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று இயேசு தன் சீடர்களிடம் கேட்டபோது,

சீமோன்  மறுமொழியாக, "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று உரைத்தார். அதற்கு இயேசு, "யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன். 

ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். 

எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு;(பாறை)  இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. 
.
விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்"

 என்று கூறி சீமோன்தான் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக நியமிக்கப் படுவார் என்பதை முன்னறிவிக்கிறார். 

பேதுரு என்றால் இராய் (பாறை).
தமிழில் பேதுருவை இராயப்பர் என்று அழைக்கிறோம்.

"உன் பெயர் பேதுரு; (பாறை)

இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்."

இதை விடத் தெளிவாக யாரும் கூற முடியாது.

ஆனால் பைபிள் வசனங்களுக்கு தங்கள் விருப்பம் போல் பொருள் கொடுப்பதில் நமது பிரிவினை சகோதரர்கள் கில்லாடிகள்.

அவர்கள் இராயப்பரைத் திருச்சபையின் தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை.

பாப்பரசரைத் தலைவராக ஏற்றுக் கொள்ளாமல் அவரவர்கள் தங்களைத் தாங்களே தலைவர்களாக நியமித்துக் கொள்வதால் தான் இன்று 40,000க்கும் மேற்பட்ட பிரிவினை சபையினர் உலகெங்கும் பரவிக்கிடக்கிறார்கள்.

இயேசுவை ஏற்றுக் கொள்ளும் அவர்கள் இயேசு எதற்காக உலகுக்கு வந்தாரோ அதை நடைமுறைப்படுத்த மறுக்கிறார்கள்.

இயேசு பாடுகள் படுவதற்கு முந்திய நாள் வியாழக்கிழமை அன்று திவ்ய நற்கருணையையும் குருத்துவத்தையும் ஏற்படுத்தினார்.

அவர்களிடம் குருக்களும், திருப்பலியும், திவ்ய நற்கருணையும் கிடையாது.

இயேசு உலகுக்கு வந்தது நமது பாவங்களை மன்னிக்க.

பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை தனது சீடர்களுக்குக் கொடுத்தார்.

ஆனால் பிரிந்து சென்றவர்களிடம் பாவ சங்கீர்த்தனம் கிடையாது.

பாப்பரசரின் கட்டுப்பாட்டுக்குள் வாழ விரும்பாத ஒரு சிலர், சபையை விட்டு வெளியேறி, தங்களை Pastor என அறிவித்துக் கொண்டு செபக் கூட்டங்கள் நடத்த ஆரம்பித்து விடுகிறார்கள்.

செபக் கூட்டங்களின் தலையாய நோக்கம் காணிக்கை வசூலிப்பது.

நம்மவர்களில் சிலர் நமது திருப்பலியில் கலந்து கொள்வதோடு பிரிந்து சென்றவர்களின் செபக் கூட்டங்களிலும் கலந்து கொள்கிறார்கள்.

ஏன் என்று கேட்டால் அங்கேயும் இயேசு தானே இருக்கிறார் என்பார்கள்.

திருப்பலியும், திவ்ய நற்கருணையும், பாவ மன்னிப்பும் இல்லாத இடத்தில் இயேசு எப்படி இருப்பார்?

நற் செய்தி அறிவிப்பவர்கள் இயேசுவின் சீடர்களின் நேரடி வாரிசுகளா இருக்க வேண்டும்.

பிரிந்து சென்றவர்கள் திருப்பலி நிறைவேற்ற முடியாது, பாவ சங்கீர்த்தனம் கேட்க முடியாது.

திவ்ய நற்கருணையும், பாவ மன்னிப்பும் இல்லாத இடத்திற்கு வேறு எதற்காக இயேசுவைப் பின்பற்றுபவர்கள் போகிறார்களோ தெரியவில்லை.

கடன் தொல்லை தீரும், வருமானம் அதிகரிக்கும், வியாதி வருத்தமெல்லாம் நீங்கும் என்று ஆசை வார்த்தை காட்டி மக்களைத் தங்களை நோக்கி ஈர்க்கிறார்கள் Pastors.

ஆனால் இயேசு அப்படி வாக்களிக்கவில்லை.

"என்னைப் பின்பற்றுபவர்கள் நான் சுமந்தது போல் தங்கள் சிலுவைகளைச் சுமந்து வர வேண்டும்" என்றுதான் கூறியுள்ளார்.

இராயப்பராகிய பாறை மேல் கட்டப்பட்ட திருச்சபையின் வழி காட்டுதலின்படி வாழ்வோம்,

நிலை வாழ்வைப் பரிசாகப் பெறுவோம்.

லூர்து செல்வம்

Friday, June 27, 2025

"நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, "ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்."(மத்தேயு நற்செய்தி 8:8)



"நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, "ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்."
(மத்தேயு நற்செய்தி 8:8)

நாம் திவ்ய நற்கருணை நாதரை நாவில் உணவாக வாங்குமுன் செய்யும் செபம் இந்த வசனம் தான்.

சிந்தித்துச் சொல்கிறோமா, அல்லது,  வாயினால் மட்டும் சொல்கிறோமா?

நாம் அடிக்கடி சொல்லும் செபங்கள் மனப்பாடமாகி விடுவதால் சொல்ல ஆரம்பித்தவுடன் வாய் மடமடவென்று சொல்லி விடும்,
ஆரம்பக் கல்வி மாணவர்கள் வாய்பாடு சொல்வது போல.

ஒரு சிறுவனிடம் "ஆறெட்டு எத்தனை" என்று கேட்டால்,

அவன், "ஓரெட்டு எட்டு" என்று ஆரம்பிப்பான்.

அது வாய் பாடு!

செபம் உள்ளத்திலிருந்து வர வேண்டும்,  உதட்டிலிருந்து மட்டும் அல்ல.

உள்ளத்திலிருந்து வந்தால் உள்ளம் , "நான் எப்படித் தகுதியற்றவன்?" என்று சிந்திக்கும், தியானிக்கும்.

''இயேசு அளவில்லாத விதமாய் பரிசுத்தமானவர். என்னால் அந்த அளவுக்கு பரிசுத்தமாக முடியாது.

ஆனாலும் இயேசு தனது அளவு கடந்த இரக்கத்தின் காரணமாக, தனது சிலுவை மரணத்தின் மூலம் தகுதி இல்லாத என்னை தகுதியானவனாக ஏற்றுக் கொண்டு என்னிடம் வருகிறார்.

நமது பாவங்களுக்கு நாம் அனுபவிக்க வேண்டிய தண்டனையை அவரே ஏற்றுக் கொண்டு அதற்காக சிலுவையில் மரித்தார்.

தனது தவறான நடத்தையால் பிள்ளை என்ற தகுதியை இழந்த பிள்ளையைத் தாய் தன் அன்பின் காரணமாக பிள்ளையாக ஏற்றுக் கொள்வது போல

தகுதி இல்லாத நம்மைத் தகுதி உள்ளவர்களாக ஏற்றுக் கொள்கிறார்."

தியானத்தின் மூலமாக இந்த உண்மையை அறிந்து கொண்ட நாம் இயேசு ஏற்றுக் கொண்ட தகுதியை இழக்காமல் இருக்க,

அதாவது, பாவம் செய்யாது வாழ முயற்சி செய்வோம்.

அடுத்து நாம் இயேசுவை நினைக்கும் போதெல்லாம் நமது பாவங்களுக்காக மனத்தாபப்படுவோம்.

இயேசுவை நினைக்கும் போதெல்லாம், 

"ஆண்டவரே, உமது மன்னிப்பை பெற நான் தகுதி அற்றவன்.  ஆயினும் உமது இரக்கத்தின் காரணமாக, என்னை மன்னியும். 

தகுதியற்ற என்னை தகுதி உள்ளவனாக மாற்றும்."
என்று வேண்டுவோம்.

திருப்பலியின்போது மட்டுமல்ல வீட்டுக்கு வந்த பின்னும் இயேசுவின் ஞாபகமாகவே இருப்போம். 

நூற்றுவர் தலைவன் இயேசு ஒரு வார்த்தை சொன்னாலே  தன் பையன் குணமாவான் என்று உறுதியாக விசுவசித்தான். 

அந்த விசுவாசம் நம்மிடம் இருக்கிறதா? 

நமது வேண்டுதல் உறுதியாக நிறைவேறும் என்று விசுவசிக்கிறோமா? 

விசுவசித்தால் அதைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிறாமல் 
இயேசுவின் விருப்பப்படி வாழ்வதில் அதிக கவனம் செலுத்துவோம். 

நமது விருப்பம் நிறைவேறுவதில் காட்டும் ஆர்வத்தை விட இயேசுவின் விருப்பம் நிறைவேறுவதில் அதிக ஆர்வம் காட்டுவோம்.

நமக்காக வாழாமல் இயேசுவுக்காக வாழ்வோம்.

மனிதன் தான் செய்த பாவத்தினால் இறைவனைத் தந்தை என்று அழைக்கும் தகுதியை இழந்து விட்டான். 

ஆனாலும் இறைவன் தனது அன்பின் மிகுதியால் மனிதனாகப் பிறந்து மனிதன் செய்த பாவத்திற்குப் பரிகாரமாக தன்னைத்தானே பலியாக்கி

பிள்ளை என்று ஏற்றுக்கொள்ளப் பட தகுதியற்ற நம்மை பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டார்.

நாம் பாவத்தை விலக்கி, கிடைத்த தகுதியை தக்க வைத்துக் கொள்வோம். 

லூர்து செல்வம்

Thursday, June 26, 2025

"அதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்." (லூக்.15:7)


"அதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்." (லூக்.15:7)

ஒரு டாக்டருக்கு எப்போது அதிகமான மகிழ்ச்சி ஏற்படும்?

பரிபூரண சுகமாக இருக்கும் அவருடைய மனைவி மக்களைப் பார்க்கும் போது ஏற்படும் 
மகிழ்ச்சியை விட 

அவருடைய மருத்துவ மனையில் மிகவும் சுகமில்லாமல் இருந்த ஒரு நோயாளி சுகமாகும் போது ஏற்படும் மகிழ்ச்சி அதிகமானதாக இருக்கும்.

ஏனெனில் அவருடைய பணி நோயாளிகளைக் குணமாக்குவது.

ஒரு ஆசிரியர் எப்போது அதிக மகிழ்ச்சி அடைவார்?

நன்கு படிக்கும் மாணவர்கள் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று வெற்றி பெறும் போது ஏற்படும் மகிழ்ச்சியை விட,

பள்ளித் தேர்வுகளில் வெற்றியே பெறாத ஒரு மாணவன் பொதுத் தேர்வில் 35 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறும் போது ஏற்படும் மகிழ்ச்சி அதிகமானதாக இருக்கும்.

படிப்பே வராத மாணவர்களுக்கு தான் ஆசிரியர் அத்தியாவசியம்.

தொடர்வதற்கு முன் படைப்பின் அடிப்படை உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கடவுளுக்கு எல்லாம் தெரியும், நித்திய காலமாகத் தெரியும்.

கடவுள் நித்திய காலமாக இருக்கிறார், 

உலகமும், மனுக்குலமும் படைக்கப்பட்டன. .

அவற்றைப் படைக்க வேண்டும் என்ற எண்ணம் இறைவன் மனதில் நித்திய காலமாக இருந்தது.

மனிதனை பாவம் அற்ற பரிசுத்த நிலையில் தான் படைத்தார். 

ஆனால் மனிதன் பாவம் செய்வான் என்பது கடவுளுக்கு நித்திய காலமாகத் தெரியும்.

பாவம் செய்த மனிதனை பாவத்திலிருந்து மீட்க 
தான் மனிதனாகப் பிறக்க வேண்டும் என்பதும் அவருடைய நித்திய காலத் திட்டம்.

இந்த அடிப்படை உண்மையை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு தான் இறை வசனத்தைத் தியானிக்க வேண்டும்.


"மனம் மாறத் தேவையில்லாத தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்கள்" யார்"

இயேசுவையும், அன்னை மரியாளையும் தவிர மற்ற அனைத்து மனிதர்களும் சென்மப் பாவத்தோடு உற்பவித்தவர்கள்தான் தான்.

இயேசு கடவுள், பாவம் செய்ய முடியாதவர்.

அன்னை மரியாள் கடவுளின் விசேச சலுகையால் சென்மப் பாவம் இன்றி உற்பவித்தாள்.

ஆனால் அன்னை மரியாளும் மனுக்குலத்தைச் சேர்ந்தவள்தான். மீட்கப்பட வேண்டியள்தான்.

இயேசு தனது சிலுவை மரணத்தின் மீட்புப் பலனை மரியாளுக்கு முன்கூட்டியே கொடுத்து அவளைச் சென்மப் பாவம் இன்றி உற்பவிக்கச் செய்தார்.

"Jesus applied the redemptive benefits of His cross-death to the Virgin Mary in advance, causing her to be conceived without original sin."

ஆகவே அன்னை மரியாள் உட்பட அனைத்து மனிதர்களையும் மீட்கவே இறைமகன் மனுமகனாகப் பிறந்தார்.

ஆன்மீக ரீதியாக அனைத்து மனிதர்களும் பாவிகள் தான்.

ஆகவே மீட்பு அனைவருக்கும் அத்தியாவசியம்.

அனைவருக்கும் நற் செய்தி அறிவிக்கப் படுகிறது.

1. நற் செய்தியை ஏற்று மனம் திரும்பி திரு முழுக்குப் பெற்று பாவ மாசு இல்லாமல் வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.

2.மனம் திரும்பாதவர்களும் இருக்கிறார்கள்.

3.திரு முழுக்குப் பெற்றாலும் பாவ வாழ்க்கை வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.

இவர்களில் முதல் வகையினர் நேர்மையாளர்கள்.

ஒரு முறை மனம் திரும்பிய பின் நேர்மையாக வாழ்பவர்கள்.

தொடர்ந்து நேர்மையாக வாழ வேண்டும்.

திரும்பவும் மனம்திரும்ப வேண்டிய அவசியம் இல்லை.

பாவத்தில் விழ நேரிட்டால் மனம் திரும்ப வேண்டும்.

பாவத்தில் விழாமல் தொடர்ந்து நேர்மையாக வாழ வேண்டும்.

அடுத்த இரு வகையினரும் மனம் திரும்ப வேண்டிய பாவிகள்.

இவர்கள் மேல் கடவுள் அதிக அக்கரை காட்டுகிறார்.

இயேசுவின் சீடர்கள், குருக்கள், அவர்களை அடிக்கடி சென்று பார்த்து அவர்களை மனம் திருப்ப முயற்சி செய்கிறார்கள்.

முயற்சி வெற்றி பெற்று அவர்கள் மனம் திரும்பினால் அதனால் மோட்சத்தில் ஏற்படும் மகிழ்ச்சி மிக அதிகமாக இருக்கும்.

நேர்மையாளர்களால் ஏற்படும் மகிழ்ச்சியை விட மனம் திரும்பியவர்களால் ஏற்படும் மகிழ்ச்சி அதிகமானதாக இருக்கும்.

ஒரு பெற்றோருக்கு ஐந்து பிள்ளைகள்.  நான்கு பேர் நல்ல சுகமாக இருக்கிறார்கள்.

ஒருவன் ஒரு விபத்தில் மாட்டி சாகக் கிடக்கிறான்.

மருத்துவ மனையில் சேர்க்கப் படுகிறான்.

டாக்டர்கள் முயற்சியால் பிழைத்துக் கொண்டான்.

பெற்றோருக்கு பிரச்சினை இல்லாத பிள்ளைகளால் ஏற்படும் மகிழ்ச்சியை விட சாகாமல் பிழைத்துக் கொண்டவனால் ஏற்படும் மகிழ்ச்சி  அதிகமாக இருக்கும்.

அதேபோல்தான் ஏற்கனவே பரிசுத்தவான்களாக இருப்பவர்களால் ஏற்படும் மகிழ்ச்சியை விட பாவிகளாயிருந்து பரிசுத்தவான்களாக மாறியவர்களால் மோட்சத்தில் அதிக மகிழ்ச்சி ஏற்படும்.

ஆகவே தான் இயேசு,

 "நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்" என்றார். 
(லூக்கா நற்செய்தி 5:32)

நாம் பாவிகள். நம்மைத் தேடித்தான் இயேசு உலகுக்கு வந்தார்.

நாம் மனம் திரும்பி பரிசுத்தவான்களாக வாழ வேண்டும் என்பதற்காகத் தான் நமது பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்துடன் பரிசுத்த திருச்சபையை நிறுவினார்.

நமது குருக்களுக்கு நமது பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார்.

ஏழு தேர்வுத் திரவிய அனுமானங்களில் இரண்டு பாவமன்னிப்புக்கானவை.

திருமுழுக்கு தான் நமது சென்மப் பாவத்தை மன்னித்து நம்மைத் திருச்சபையின் உறுப்பினர்கள் ஆக்குகிறது.

திருமுழுக்கு பெற்ற பின் நாம் செய்யும் பாவங்களுக்குப் மன்னிப்புப் பெறவே பாவ சங்கீர்த்தனம்.

குளிப்பது எதற்கு?

உடலில் ஒட்டியுள்ள அழுக்கு போவதற்கு.

தினமும் காலையில் குளிக்கிறோம், இரவில் வியர்வை மூலமாக வெளி வந்த அழுக்கைப் போக்குவதற்கு.

மாலையில் குளிக்கிறோம், அல்லது கால், கை, முகத்தைக் கழுவுகிறோம், நாம் வெளியே சென்று வரும்போது உடலில் ஒட்டும் அழுக்கைப் போக்குவதற்கு.

சாப்பிட்டவுடன் கை கழுவுகிறோம்.

உடல் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்குக் காட்டும் அக்கறையை ஆன்மா சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்குக் காட்டுகிறோமா?

காலையில் எழுந்தவுடனும், இரவில் படுக்கப் போகுமுன்னும் நமது பாவங்களுக்காக மனத்தாபப் படுகிறோமா?

ஆன்மா சாவான பாவ நிலையில் இருந்தால் பாவ சங்கீர்த்தனம் செய்கிறோமா?

எதற்காக ஒவ்வொரு பங்கிலும் ஒரு பங்குக்குரு இருக்கிறார்?

பள்ளிக்கூடத்தை மேற்பார்வை இடுவதற்கா?

இயேசு அதற்காக உலகுக்கு வரவில்லை, அதற்காக குருத்துவத்தை ஏற்படுத்தவில்லை.

இயேசு நமது பாவங்களை மன்னிக்கவும், நமக்காகப் பலியாகவும் உலகுக்கு வந்தார்.

குருத்துவத்தின் நோக்கமும் அதுதான்.

பங்கு மக்களின் பாவங்களை மன்னிக்க வேண்டும், பாவங்களுக்குப் பரிகாரமாக திருப்பலி ஒப்புக் கொடுக்க வேண்டும்.

திருப்பலிக்குப் போகிறோம், பாவ சங்கீர்த்தனம் செய்கிறோமா?

சாவான பாவ நிலையில் திவ்ய நற்கருணை அருந்தக் கூடாது.

சாவான பாவ நிலையில் உள்ளவர்கள் பாவ சங்கீர்த்தனம் செய்தபின் தான் நற்கருணை நாதரை உணவாகப் பெறலாம்.

ஆண்டுக்கு ஒரு முறையாவது நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்ய வேண்டும் என்று திருச்சபை கூறுகிறது.

ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் செய்ய வேண்டும் என்று கூறவில்லை.

தேவைப்படும் போதெல்லாம் பாவ சங்கீர்த்தனம் செய்ய வேண்டும்.

அற்பப் பாவம் இருந்தாலும் பாவ சங்கீர்த்தனம் செய்யலாம்.

அடிக்கடி பாவ சங்கீர்த்தனம் செய்பவர்களின் ஆன்மா மிகவும் பரிசுத்தமாக இருக்கும்.

திருச்சபை நமக்குக் குருக்களைத் தந்திருப்பது நாம் பாவ மன்னிப்பு பெறுவதற்கும், பாவங்களுக்குப் பரிகாரமாக திருப்பலி நிறைவேற்றுவதற்கும்தான்.

நமது குருக்களை நாம் பாவ மன்னிப்புப் பெற பயன்படுத்தியிருக்கிறோமா,

அல்லது கோயில் கட்டவும், பள்ளிக்கூடத்தில் வேலை வாங்கவும், 
விழாக்கள் கொண்டாடவும் மட்டும் பயன்படுத்தியிருக்கிறோமா?

நாம் ஒவ்வொரு முறை பாவ சங்கீர்த்தனம் செய்யும்போதும் விண்ணகத்தில் நம் பொருட்டு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும்.

லூர்து செல்வம்

Wednesday, June 25, 2025

" என்னை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்." (மத்தேயு நற்செய்தி 7:21)



"என்னை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்."
(மத்தேயு நற்செய்தி 7:21)

செபம் என்றால் என்ன என்ற கேள்விக்கு சரியான விடை மேற்படி வசனம்.

வெறுமனே வார்த்தைகளை வாயினால் உச்சரிப்பது மட்டும் செபம் அல்ல.

இயேசுவை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்வது மட்டும் செபம் அல்ல.

நம்மில் பலர் அதைத்தான் செய்கிறோம்.

இயேசுவை அழைக்கிறோம், தேவையானதைக் கேட்கிறோம்.

இது செபத்தின் ஒரு பகுதி.

முழுமையான செபம் அல்ல.

விண்ணகத் தந்தையின் விருப்பப்படி வாழ்வதுதான் செபம்.

சிந்தனை, சொல், செயல் மூன்றும் 
சேர்ந்திருப்பதுதான் செபம்.

சிந்தனை -- தியானம்.
சொல் ----------வார்த்தைகள்.
செயல் --------- வாழ்க்கை.

நாம் வார்த்தைகளால் மட்டுமே செபிக்கிறோம்.

செபமாலையை எடுத்துக் கொள்வோம்.

1. தேவ ரகசியங்களைத் தியானிக்க வேண்டும்.

2.விசுவாசப் பிரமாணம் 
தமதிரித்துவ தோத்திரம்,
 கர்த்தர் கற்பித்த செபம், 
மங்கள வார்த்தை செபம் ஆகியவற்றை வாயினால் சொல்ல வேண்டும்.

3. சிந்தனையில் தியானித்ததை வாழ்வில் செயல்படுத்த வேண்டும்.

உதாரணத்திற்கு,

துக்க தேவ ரகசியங்களைத் தியானித்த படி வாழ்வில் நாம் சந்திக்கும் துன்பங்களை சிலுவைகளாக ஏற்று, அவற்றை நமது பாவங்களுக்குப் பரிகாரமாகக் கடவுளுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும்.

நாம் சிலுவையைச் சுமந்து கொண்டு இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்பதுதான் தந்தையின் விருப்பம். 

சிந்தனையாலும், வார்த்தைகளாலும், வாழ்க்கையாலும் செபிப்பதுதான் செபம்.

இம்மூன்றில் ஒன்று குறைந்தால் கூட அது முழுமையான செபம் அல்ல.

நாம் தியானிக்கிறோம். சொல்கிறோம்.
வாழ்கிறோமா?

கர்த்தர் கற்பித்த செபத்தில் முதல் பகுதியில் இறைவனைப் புகழ்கிறோம்.

இரண்டாவது பகுதியில் நமக்கு வேண்டியதைக் கேட்கிறோம்.

வேண்டியதைக் கேட்கும் போதே நாம் எப்படி வாழ்வோம் என்பதை இறைவனிடம் சொல்கிறோம்.

1. ஒவ்வொரு நாளும் கிடைப்பதில் அன்றைக்குத் தேவையானது போக மீதியை சேமித்து வைக்காமல் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வோம். எங்கள் அன்றாட தேவைகளை நீரே பூர்த்தி செய்வீர் என்று உறுதியாக நம்புகிறோம்.

2. எங்களுக்கு விரோதமாக ஏதாவது தவறு செய்தவர்களை மன்னிக்கிறோம். தந்தையே! உமக்கு விரோதமாக நாங்கள் செய்த பாவங்களை மன்னியும்.

3. நாங்கள் சோதனையில் விழாமல் வாழ பாவ சந்தர்ப்பங்களை தவிர்ப்போம்.
தந்தையே, அதற்கு எங்களுக்கு உதவும்.

4. உமது உதவியுடன் தீமையிலிருந்து மீட்கப்படுவோம்.

நாம் செய்யும் ஒவ்வொரு செபமும் நமது வாழ்க்கையோடு இணைந்ததாக இருக்க வேண்டும்.

விண்ணகத் தந்தையின் விருப்பப்படி வாழ்வதுதான் உன்னதமான செபம்.

லூர்து செல்வம்

Tuesday, June 24, 2025

"கடவுள் நம் வாழ்வில், நம் வாழ்வின் மூலம், மற்றும் நம் வழியாக மற்றவர்களைச் சென்றடைய முடியும்,"



 "கடவுள் நம் வாழ்வில், நம் வாழ்வின் மூலம், மற்றும் நம் வழியாக மற்றவர்களைச் சென்றடைய முடியும்,"

 இவை பாப்பரசர் 14ஆம் லியோ அவரைச் சந்தித்த மக்களிடம் கூறிய வார்த்தைகள்.

"God can work in our lives, through our lives, and through us reach out to other people," the pope told the assembled crowd.

(https://www.facebook.com/share/p/1ENT4Xm3Ek/?mibextid=xfxF2i)

கடவுள் நம்மைத் தனது சாயலில் படைத்தார்.

தனது பண்புகளை நம்மோடு பகிர்ந்து கொண்டதன் மூலம் தனது சாயலை நமக்குத் தந்தார்.

கடவுள் அன்பு மயமானவர். நித்திய காலமாக அவர் செய்து கொண்டிருக்கும் ஒரே வேலை அன்பு செய்வது மட்டும் தான்.

தனது அன்பை நம்மோடு பகிர்ந்து கொண்டதன் மூலம் நம்மையும் அன்பு செய்பவர்களாகப் படைத்தார்.

பாவம் உலகிற்குள் நுழையுமுன் மனிதர்கள், 

அதாவது நமது முதல் பெற்றோர்,

 இறைவனை அன்பு செய்தார்கள்,  தாங்களும் ஒருவரை ஒருவர் அன்பு செய்தார்கள்.

 கடவுளை விட விலக்கப்பட்ட கனியை அதிகமாக அன்பு செய்த வினாடி பாவம் நுழைந்தது.

அன்பு இருந்தது, ஆனால் திசை மாறிவிட்டது.

பாவத்திற்கு முன் கடவுளோடு நடந்தவர்கள் பாவத்திற்குப் பின் அவரைப் பார்த்தவுடன் ஒழிந்து கொள்ள ஆரம்பித்தார்கள்.

மனிதனிடமிருந்த இறைவனின் சாயல் என்ன ஆயிற்று?

பழுதடைந்து விட்டது.


காலையில் கண்ணாடி முன் நின்று பவுடர் போட்டு அழகு படுத்தப்பட்ட முகம் 

தெருவுக்கு வந்தவுடன் தெரு மண்ணை அள்ளி வரும் காற்று பவுடர் போட்ட முகத்தில் மண்ணை அப்பிய பின் முகம் எப்படி இருக்கும்,

 அப்படி ஆகிவிட்டது மனித ஆன்மா.

பழுதடைந்த சாயலை மீட்டுத் தர,  

அதாவது, ஆன்மா இழந்த இறை அன்பை மீண்டும் கொடுத்து 

இறைவனோடு நமக்கு இருந்த உறவைப் புதிப்பிக்க இறைமகன் மனுமகனாகப் பிறந்தார்.

திரு முழுக்கு பெற்றவுடன் நாம் பாவத்தால் பழுது படுத்திய இறைச் சாயலை மீண்டும் முழுமையாகப் பெற்றோம்.

"உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்"

"வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை." இவை‌ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகள்.

ஆகவேதான் "நானே உலகின் ஒளி" என்று கூறிய ஆண்டவர்,

"நீங்கள் உலகின் ஒளி" என்றும் கூறினார்.

ஆனால் 

''நானே வழி" என்று கூறிய ஆண்டவர் 

"நீங்களே வழி" என்று கூறவில்லை.

தந்தையிடம் செல்ல அவர் மட்டும்தான் வழி, ஏனெனில் அவர்தான் உலக மீட்பர்.

ஆனாலும் வேறொரு பொருளில் நாம் ஒவ்வொருவரும் 

"நான் வழி" என்று கூறலாம்.

என்ன பொருளில்?

"கடவுள் நம் வாழ்வில், நம் வாழ்வின் மூலம், மற்றும் நம் வழியாக மற்றவர்களைச் சென்றடைய முடியும்,"

 என்று பாப்பரசர் 14ஆம் லியோ கூறுகிறார்.


"கடவுள் நம் வழியாக மற்றவர்களைச் சென்றடைய முடியும்,"

இயேசு உலகெங்கும் நற் செய்தியை அறிவிக்க அவரது சீடர்களைத்தான் அனுப்பினார்.

சீடர்களின் வழியாகத்தான் இயேசு உலகெங்கும் சென்றார்.

சீடர்கள் தங்கள் வாய் மொழிப் போதனை மூலமும், தங்கள் நற்செய்தி வாழ்க்கை மூலமும் இயேசுவை மக்களுக்கு அளித்தார்கள்.

இன்று நாம் இயேசுவின் சீடர்கள்.

நமது முன்மாதிரியான வாழ்வின் மூலம், 

அதாவது நம் வழியாக கடவுள் மற்றவர்களைச் சென்றடைகிறார். 

இயேசுவை அறியாதவர்கள் நம் வழியாக அறிய வேண்டும்.

நாம் சொல்வதைக் கேட்டும், நாம் வாழ்வதைப் பார்த்தும் மற்றவர்கள் இயேசுவை அறிய வேண்டும்.

"இவன் கிறிஸ்தவன், கிறிஸ்துவைப் போல் வாழ்கிறான்.

நாமும் கிறிஸ்துவைப் போல் வாழ வேண்டுமென்றால் இவனைப் போல் வாழ வேண்டும்." என்று மற்றவர்கள் நினைக்க வேண்டும்.

குடிகாரன் வாயிலிருந்து வரும் நாற்றத்தை வைத்து அவன் குடிகாரன் என்பதைக் கண்டு கொள்ளலாம்.

நாம் வாங்கிக் கொடுத்த பௌடரின் வாசத்தை வைத்து மனைவி வருவதை அறிந்து கொள்ளலாம்.

ஒரு கையில் புத்தமும் இன்னொரு கையில் பிரம்பும் இருப்பதைப் பார்த்து இவர் ஒரு ஆசிரியர் என்பதை   அறிந்து கொள்ளலாம்.

ஒருவரது இரக்க குணத்தையும், உதவி செய்யும் மனப்பாங்கையும் வைத்து இவர் கிறித்தவர் என்பதை அறிந்து கொள்ளலாம்.

பகைவரை நேசித்தல்,
 தீமைக்கு நன்மை செய்தல், குற்றம் செய்பவர்களை மன்னித்தல், 
துன்ப நேரத்திலும் முக மலர்ச்சியாக இருத்தல்

போன்ற குணங்கள் நம்மிடம் இருந்தால் நாம் சொல்லாமலே நாம் கிறிஸ்தவர்கள் என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள்.

இவ்வாறு நமது வாழ்வின் வழியாக நாம் இயேசுவை மற்றவர்களுக்கு அளிக்கலாம்.

நம்மிடம் யார் வழியாக இயேசு வருகிறார்?

நம்முடைய பங்குக் குருவானவர் வழியாக.

திருப்பலியில் போது குருவானவர் "இது என் சரீரம்" என்று சொல்லும் போது அப்பம் இயேசுவின் உடலாக மாறுகிறது.

"இது என் இரத்தம்" என்று சொல்லும் போது திராட்சை இரசம் இயேசுவின் இரத்தமாக மாறுகிறது.

குருவானவர் கையிலிருந்து தான் இயேசு நமது ஆன்மீக உணவாக வருகிறார்.

குருவானவர் மூலமாகத்தான் இயேசு நமது பாவங்களை‌ மன்னிக்கிறார்.

காலையில் திருப்பலியில் இயேசுவைப் பெற்ற நாம் நாள் முழுவதும் அவரை வாழ வேண்டும்.

நமது வாழ்க்கை மூலமாகத்தான் 
இயேசுவின் சாயலை நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம்மிடம் பார்ப்பார்கள்.

 பார்த்து அவரைத் தேடி வருவார்கள்.

வருகிறவர்களுக்கு நாம் இயேசுவைக் கொடுக்க வேண்டும்.

இயேசு மக்களிடம் வர  வழியாக நாம் வாழ்வோம்.


லூர்து செல்வம்.

Monday, June 23, 2025

"அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்." (லூக்கா நற்செய்தி 1:64)

"அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்."
(லூக்கா நற்செய்தி 1:64)

சக்கரியா ஆண்டவரின் திருக் கோயிலில் தூபம் காட்டிக் கொண்டிருந்த போது கபிரியேல் தூதர் அவருக்குத் தோன்றி

அவருடைய மனைவி எலிசபெத் கருவுறவிருக்கும் செய்தியை அறிவித்த போது 

அவர் அவர்களுடைய முதிர்ந்த வயதைக் காரணம் காட்டி செய்தியை நம்பவில்லை.

தூதர் அவரிடம், "உரிய காலத்தில் நிறைவேற இருக்கும் என்னுடைய வார்த்தைகளை நீர் நம்பவில்லை. ஆதலால் அவை நிறைவேறும் வரை நீர் பேச்சற்றவராய் இருப்பீர்; உம்மால் பேசவே இயலாது" என்றார். 

அவர் சொன்னபடியே குழந்தை பிறந்து, அதற்கு பெயரிடும் நாள் வரை பேச முடியாதிருந்தார்.

அவரிடம் சைகை காண்பித்து குழந்தைக்கு என்ன பெயரிடலாம் என்று உறவினர்கள் கேட்டபோது 

 அவர் ஒரு எழுதுபலகையில்  "இக்குழந்தையின் பெயர் யோவான்" என்று எழுதினார். 

அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். 

இது சக்கரியாவின் வாழ்வில் நடந்த நிகழ்வு.

இதை நமது வாழ்வை மையமாக வைத்து எப்படித் தியானிக்கலாம்?

பைபிள் வாசிப்பது எழுதப்பட்டிருக்கும் நிகழ்வுகளைப் பற்றிய நமது அறிவை வளர்த்துக் கொள்வதற்காக அல்ல.

அதாவது பைபிள் தேர்வில் வெற்றி பெறுவதற்காக அல்ல.

"இயேசு எங்கே பிறந்தார்?

பெத்லகேம் நகரில் உள்ள ஒரு மாட்டுத் தொழுவத்தில்."

தேர்வில் இப்படி ஒரு கேள்விக்கு இப்படி ஒரு பதில் எழுதினால் முழு மதிப்பெண் கிடைக்கும்.

ஆனால் மதிப்பெண் ஆன்மீக வாழ்வில் பயன்படாது.

அதேபோல கபிரியேல் தூதர் சொன்னதை நம்பாததால் சக்கரியாவால் பேச முடியவில்லை என்பதைத் தெரிந்திருப்பது மட்டும் நமக்கு மீட்பைப் பெற்றுத் தராது.

பைபிள் செய்தி நமது வாழ்வாக மாறினால் மட்டுமே நாம் ஆன்மீகத்தில் வளரலாம்.

இன்றைய நற்செய்தியை எப்படி நமது வாழ்வாக்குவது?

அதைப் பற்றித் தியானிப்போம்.

செபம் என்றால் இறைவனுக்கும் நமக்கும் நடக்கும் உரையாடல்.

உரையாடலில் இருவரும் ஒருவரோடொருவர் பேசவேண்டும் ஒருவர் மட்டும் பேசிக் கொண்டிருந்தால் அது உரையாடல் அல்ல, அதாவது, செபம் அல்ல.

வழக்கமாக நாம் மட்டும் தான் இறைவனோடு பேசுகிறோம்.

இறைவனுக்குப் பேச நேரம் கொடுப்பதில்லை, அவர் பேசினாலும் நாம் கேட்பதில்லை.

இறைவன் நமது உள்ளத்தில் பேசுவார். அவரது சொல்லைக் கவனிக்க வேண்டும்.

கவனித்து அவர் சொற்படி நடக்க வேண்டும்.

அவரது பேச்சைக்  கவனிக்காவிட்டால் அவர் செயல் மூலம் பேசுவார்.

தூதர் மூலம் இறைவன் சொன்னதை நம்பாததால் இறைவன் அவரை ஊமையாக்கி விட்டார்.

சிந்தித்துப் பார்த்தால் ஒவ்வொருவர் வாழ்விலும் இத்தகைய அனுபவங்கள் இருக்கும்.

நமது வாழ்வில் சில நிகழ்வுகள் தற் செயலாக நடப்பதாக எண்ணுகிறோம்.

ஆனால் எந்த நிகழ்வும் தற்செயலாக நடப்பதில்லை.

இறைவனின் திட்டத்தால் தான் நடக்கின்றன.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு கல்யாண மண்டபத்தில் உறவினருக்குத் திருமணம்.

அதே நேரம் ஞாயிறு திருப்பலி.

இறைவன் மன சாட்சி மூலம் பேசினார், திருப்பலிக்குப் போ.

நண்பர் அதற்குச் செவி கொடுக்காமல், திருமணத்துக்குச் செல்ல சைக்கிளை எடுத்தார்.

சைக்கிளில் காற்று இல்லை.

இறைவன் சைக்கிள் மூலம் பேசியதைப் புரிந்து கொண்டு, திருப்பலிக்குச் சென்றார்.

வேண்டியதைக் கேட்பது மட்டும் செபமல்ல, இறைவன் சொல்வதைக் கேட்பதும் சேர்த்து தான் செபம்.

திவ்ய நற்கருணை உட்கொண்டவுடன் நற்கருணை நாதரின் குரலுக்குச் செவி கொடுக்க வேண்டும்.

இறைவன் நமது உள்ளுணர்வுகள் மூலம் பேசுகிறார்.

இயற்கைப் பொருட்கள் மூலம் பேசுகிறார்.

நமது செயல்கள் மூலம் பேசுகிறார்.

நமக்கு ஏற்படும் நோய் நொடிகள் மூலம் கூட நம்மோடு பேசுகிறார்.

இறைவன் சித்தப்படி நடப்பவர்களுக்கு அவரது குரல் கேட்கும்.

இறைவன் குரலுக்குச் செவி கோடுப்போம்.

லூர்து செல்வம்

Sunday, June 22, 2025

உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்? (மத்தேயு நற்செய்தி 7:3)



உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்? 
(மத்தேயு நற்செய்தி 7:3)

மனிதன் கண்ணாடியைக் கண்டு பிடித்தான்.

எதற்காக?

தன்னைப் பார்ப்பதற்காக.

ஆனால் கண்ணாடியில் நமது புறத் தோற்றம் தான் தெரியும்.

புறத்தோற்றத்தை அழகு படுத்துவதில் கண்ணும் கருத்துமாய் இருக்கும் மனிதன் தனது அகத் தோற்றத்தைப் பற்றிக் கவலைப் படுவதில்லை.

புறத்தோற்றத்தை அழகு படுத்த வேண்டும் என்று எண்ணும் மனிதனுக்கு தனது அகத் தோற்றத்தை அழகு படுத்த வேண்டும் என்ற எண்ணம் ஏன் தோன்றவில்லை?

அது அவனது பாவத்தின் விளைவு.

அகத்தில் இருப்பது பாவம்.

பாவம் நீங்கினால் தான் அகம் அழகு பெறும்.

புறத்தை அழகு படுத்த வேண்டும் என்று தோன்றும் மனிதனுக்கு அகம்  பாவத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்ற வேண்டும்.

அதற்கு நமது அகக் கண் கொண்டு அகத்தை ஆய்வு செய்ய வேண்டும்.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்?

நாம் நமது புறக் கண்ணைக் கொண்டு மற்றவர்களது அகத்தை ஆய்வு செய்ய முயல்கிறோம்.


இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் நமது புறக்கண்ணைக் கொண்டு மற்றவர்களின் அகத்தை ஆய்வு செய்ய நமது கற்பனையைப் பயன்படுத்துவது தான்.

ஒருவன் தனது அலுவலகப் பணிக்காக ஒரு தெரு வழியே போய்க் கொண்டிருப்பான்.

அந்த தெருவில் ஒரு மதுக் கடை இருக்கும்.

நாம் நமது கற்பனை வளத்தால் அவனுக்கும், மதுக் கடைக்கும் முடிச்சுப் போட்டு விடுவோம்.

புறக்கண்களைக் கொண்டு மனதைப் பார்க்க முடியாது.

நம்மால் பார்க்க முடிவதெல்லாம் மற்றவர்களுடைய வெளிப்புறச் செயல்களை மட்டும் தான்.

வெளிப்புறச் செயல்களை வைத்து மனதில் உள்ள சிந்தனைகளை ஆய்வு செய்தால் அது சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது.

எல்லோருடைய சிந்தனை சொல் செயல் மூன்றும் ஒன்றாக இருக்கும் என்று சொல்ல முடியாது.

செயல்களை வைத்து மனதை ஆய்பவர்கள் செய்யும் முக்கிய தவறு சிறு தவறுகளை பெரிது படுத்திப் பார்ப்பதுதான்.

அதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இப்படி ஆய்வு செய்பர்களுடைய கண்களுக்குத் தங்களுடைய பெரிய தவறுகள் தெரியாது.

தங்கள் கண்ணிலுள்ள மரக்கட்டை தெரியாது, மற்றவர்கள் கண்ணிலுள்ள சிறு துரும்பு பெரிய மரக்கட்டை போல் தெரியும்.

"உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்?" ‌என்று ஆண்டவர் கேட்கிறார்.

மற்றவர்களுக்கு நற்செய்தியை அறிவிப்பது கிறித்தவர்களாகிய நமது கடமை.

நற்செய்தியை அறிவிப்பதன் நோக்கம் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கும் மற்றவர்களை மனம் திருப்பி சரியான பாதைக்குக் கொண்டு வருவதுதான்.

அதற்கு நாம் முதலில் சரியான பாதையில் நடக்க வேண்டும், அதாவது நாம் அறிவிக்கும் நற்செய்தியின்படி நாம் நடக்க வேண்டும்.

நமது சிந்தனையிலும், செயலிலும் நற்செய்தி இல்லாமல் வாயில் மட்டும் வைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு நற்செய்தியை அறிவித்தால் எந்த பயனும் ஏற்படாது.

முதலில் நாம் திருந்த வேண்டும்.

"வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்."
(மத்தேயு நற்செய்தி 7:5)

முதலில் நாம் திருந்த வேண்டும். அதன்பின் மற்றவர்களைத் திருத்த முயற்சிக்க வேண்டும்.

அரசியல்வாதிகள் மேடையில் பேசும் போது எதிர்க் கட்சியினரிடம் சுட்டிக்காட்டும் தவறுகள் எல்லாம் பேசுகின்றவர்களிடமும் இருக்கும்.

இது கேட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கும் தெரியும்.

ஆன்மீகவாதிகளாகிய நாம் அரசியல்வாதிகளைப் போல் இருக்கக் கூடாது.

இயேசு நம்மை பாவத்திலிருந்து மீட்கவே மனிதனாகப் பிறந்தார்.

இயேசு கடவுள், பரிசுத்தர்.

நம்மால் இயேசுவின் அளவுக்கு பரிசுத்தர்களாய் வாழ முடியாது.

ஆனாலும் நாம் நற் செய்தியை அறிவிக்க ஆரம்பிக்குமுன் பாவத்திலிருந்து விடுதலை பெற வேண்டும்.

நாம் முதலில் மனம் திரும்பினால்தான் மற்றவர்களை மனம் திருப்ப முடியும்.

அதனால்தான் ஆண்டவர் 


 "முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள்."

அதாவது,"நீங்கள் முதலில் பாவத்திலிருந்து விடுதலை பெறுங்கள்." என்கிறார்.

முதலில் நாம் நல்லவர்களாக மாறுவோம்.

நாம் நல்லவர்களாக வாழ்ந்தால் தான் மற்றவர்களை நல்லவர்களாக மாற்ற முடியும்.

லூர்து செல்வம்

Saturday, June 21, 2025

சினிமா ரசிகர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.



சினிமா ரசிகர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

இயேசுவின் வாழ்க்கையிலிருந்து தான் நாம் ஆன்மீகப் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஆனால் நம்மில் சிலருக்கு கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை. மீசை உள்ளவர்கள் கூழ் குடித்தால் கூழ் மீசையில் ஒட்டிக் கொள்ளும். கூழும் குடிக்க வேண்டும், மீசையிலும் ஒட்டக் கூடாது. இது இயலாத காரியம்.

ஆன்மீக வாழ்க்கை வாழ வேண்டும் என்று தீர்மானித்து ஆரம்பித்த சிலருக்கு ஆன்மீக வாழ்க்கையுடன் லௌகீக வாழ்க்கையும் வாழ வேண்டும் என்று ஆசை.

ஆனால் இது இயலாத காரியம்.

இரண்டு தலைவர்களுக்கு சேவை செய்ய முடியாது என்று இயேசுவே கூறியிருக்கிறார்.

கடவுளுக்கு சேவை செய்பவனால் உலகத்துக்கு சேவை செய்ய முடியாது.

உலகத்துக்கு சேவை செய்பவனால் கடவுளுக்குச் சேவை செய்ய முடியாது.


ஞாயிற்றுக்கிழமை.

புதுப் படம் வெளியாகிறது.

காலை எட்டு முதல் பகல் காட்சி.

அதே எட்டு மணிக்கு ஞாயிறு திருப்பலி.

ஒரே நேரத்தில் ஒருவன் திருப்பலிக்கும், படத்துக்கும் போக முடியுமா?

இறைவனுக்கு சேவை செய்பவன் திருப்பலிக்குச் செல்வான்.

உலகத்துக்குச் சேவை செய்பவன் படத்துக்குச் செல்வான்.

இயேசுவிடமிருந்து தான் நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஆனாலும் சினிமா ரசிகனிடமிருந்து கூட ஆன்மீக பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம்.

சினிமா ரசிகர்கள் தாங்கள் ரசிக்கும் கதாநாயகன் நடித்த சினிமாவை பார்ப்பதற்காக மற்ற அனைத்தையும், தங்கள் உடல் நலன் உட்பட, தியாகம் செய்து விடுவார்கள்.

ஒன்று சினிமா தியேட்டர் முன் தவம் கிடப்பார்கள்,

அல்லது,

வீட்டில் TV முன் தவம் கிடப்பார்கள்,

சினிமா வேண்டுமா, மனைவி மக்கள் வேண்டுமா என்று கேட்டால், சினிமாவுக்குக்குப் பிறகு மற்ற அனைத்தும்.

வாழ்க்கையில் கூட தங்கள் அபிமான நடிகர்களின் நடை உடை பாவனைகளை அப்படியே பின்பற்றுவார்கள்.

எந்த அளவுக்கு ரசிகர்கள் சினிமா கலைஞர்களை தங்கள் வாழ்வின் வழிகாட்டிகளாக ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால்,

நடிகர்கள் அவர்களின் உதவியுடன் நாட்டின் ஆட்சிப் பொறுப்பையே கைப்பற்றிக் கொள்கிறார்கள்.

தமிழ் நாட்டை ஆண்ட இரண்டு முதல்வர்கள் அதற்கு எடுத்துக்காட்டு.

மூன்றாவதாக ஒருவர் அதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

ஆன்மீக ரீதியாக ரசிகர்கள் தங்கள் ஆர்வத்தைத் தவறான பாதையில் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் அவர்களுடைய பாதையில் செல்லாமல் ஆர்வத்தை மட்டும் எடுத்துக் கொள்ளலாமே.

அதற்காகத்தான் நமது ஆண்டவர் நேர்மையற்ற  வீட்டுப் பொறுப்பாளர் உவமையைக் கூறினார்.

உவமையின் இறுதியில் நமது ஆண்டவர் 

"ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள்"
(லூக்கா நற்செய்தி 16:8) என்கிறார்.

நாம் அவர்களுடைய நடைமுறையை விட்டு விட்டு முன்மதியை மட்டும் எடுத்துக் கொள்ளலாமே.

ஆன்மீக வாழ்வில் நாம் அநேக புனிதர்கள் மீது பக்தி உள்ளவர்களாக இருக்கிறோம்.

அவர்களுக்கு விழா எடுப்பதில் ஆர்வம் காட்டுகிறோம்.

ஆனால் சினிமா ரசிகர்கள் தங்கள் கதாநாயகர்களைப் பின்பற்றுவது போல்,

நாம் புனிதர்களைப் பின்பற்றுகிறோமா?

பதிமூன்று நாட்கள் புனித அந்தோனியாருக்கு விழா எடுத்தோம்.

விழா நாட்களில் அவருடைய புதுமைகளைப் பற்றி பேசி மகிழ்ந்தோம்.

ஆனால் அவர் எப்படி வாழ்ந்தார் என்பதைத் தியானித்து முடிந்தபின் அவரைப் போல வாழ முயற்சி எடுத்திருக்கிறோமா?

உதாரணத்திற்கு, அவர் நற்கருணை நாதர் மீது அளவற்ற பக்தி கொண்டவர்.

திவ்ய நற்கருணையில் மெய்யாகவே ஆண்டவர் இருக்கிறார், திவ்ய நற்கருணை என்றாலே இயேசுதான் என்பது நமது விசுவாசம்.

அந்தோனியார் காலத்தில் அநேக பதிதர்கள் (Heretics) திவ்ய நற்கருணையில் இயேசு இருப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை.

அவர்களை ஏற்றுக் கொள்ள வைப்பதற்காக அந்தோனியார் ஒரு புதுமை செய்தார்.

பட்டினி போடப்பட்ட ஒரு கழுதையை பதிதர்கள் கொண்டு வந்தார்கள்.

அதன் முன் அந்தோனியார் திவ்ய நற்கருணையைக் கொண்டு வர வேண்டும்.

அவர்கள் உணவைக் கொண்டு வர வேண்டும்.

திவ்ய நற்கருணை முன் கழுதை எப்படி செயல்படுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

அந்தோனியார் இந்த சவாலை ஏற்றுக் கொண்டு,

திவ்ய நற்கருணையைக் கொண்டு வந்தார்.

கழுதை உணவைப் பற்றிக் கவலைப் படாமல் திவ்ய நற்கருணை முன் முழங்கால் படியிட்டது.

இந்தப் புதுமையைப் பிரசங்கத்தில் கேட்ட எத்தனை பேர் அன்றுமுதல் திருவிருந்தின்போது திவ்ய நற்கருணையை இறைவனுக்குக் கொடுக்க வேண்டிய ஆராதனை உணர்வோடு முழங்கால் படியிட்டு வாங்குகிறார்கள்?

எப்போதும் போல நட்டமாய் நின்று கொண்டு ஆரஞ்சு வில்லையை வாங்குவது போல் கையில் வாங்கி வாயில் போடுகிறார்கள் தானே.

அந்தோனியார் பக்தி நமது வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாவிட்டால் அந்த பக்தியால் என்ன பயன்?

திவ்ய நற்கருணையை நின்று கொண்டு கொண்டு கையில் வாங்குபவர்கள் அந்தோனியார் பக்தர்கள் அல்ல.

அதேபோல மாதா பக்தர்கள் என்று கூறுபவர்கள் மாதாவைப் போல் வாழா விட்டால்  மாதா பக்தர்கள் அல்ல.

இயேசு கிறிஸ்து காட்டிய வழியில் நடக்காதவர்கள கிறிஸ்தவர்கள் அல்ல.

"என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும். 
(லூக்கா நற்செய்தி 9:23)

தங்கள் நலனைப் பற்றிக் கவலைப் படாமல் தங்களுக்கு வரும் துன்பங்களை சிலுவைகளாக ஏற்றுக் கொண்டு இயேசுவின் சிலுவைப் பாதையில் நடப்பவர்கள்தான் உண்மையான கிறிஸ்தவர்கள்.

துன்பங்களை ஏற்றுக் கொள்ள வில்லை என்றால் இயேசுவை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை என்று தான் அர்த்தம்.

சிந்திப்போம், செயல்படுவோம்.

லூர்து செல்வம்.

Friday, June 20, 2025

"ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள்."(மத்.6:25)



"ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள்."
(மத்.6:25)

உவரி புனித அந்தோனியார் கோவிலுக்குத் திருயாத்திரை செல்வதாக வைத்துக் கொள்வோம்.

திருயாத்திரை ஆன்மீகம் சார்ந்தது.

திருயாத்திரையின் போது நமது எண்ணமெல்லாம் ஆன்மீகம் சார்ந்ததாகவே இருக்க வேண்டும்.

பாவ சங்கீர்த்தனம், திருப்பலி, திரு விருந்து, செபம் போன்ற ஆன்மீக காரியங்களில் தான் நமது மனது ஈடுபட்டிருக்க வேண்டும்.

சிலர் வழியில் எந்த ஹோட்டலில் நல்ல உணவு கிடைக்கும், என்ன சாப்பிடலாம் என்று திட்டமிட்டுக் கொண்டே பயணிப்பாளர்கள்.

ஹோட்டலைத் தேடுவதிலும், சாப்பிடுவதிலும் நேரத்தைச் செலவிட்டு விட்டு பாதி பூசைக்குப் போய் சேர்வார்கள்.

இதற்குப் பெயர் திருயாத்திரையா?

தெரு யாத்திரை!

உலகில் நாம் விண்ணகத்தை நோக்கிச் செல்வது ஆன்மீகப் பயணம்.

நமது எண்ணம் விண்ணகம் சார்ந்ததாக இருக்க வேண்டும்.

இயேசு எதற்காக உலகுக்கு வந்தாரோ அதை நிறைவேற்ற அவரது உதவியை நாடுவதாக இருக்க வேண்டும்.

இயேசு எதற்காக உலகுக்கு வந்தார்?

நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய.

அதற்காகப் பாடுகள் பட்டு மரிக்க.

நமது பாவங்களை மன்னிக்க.

நாமும் நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய வேண்டும்.

அதற்காக நமக்கு வரும் துன்பங்களை சிலுவைகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நமது பாவங்களுக்கு மன்னிப்புப் பெற வேண்டும்.

இவை தான் நமது வாழ்வாக மாற வேண்டும்.

எதை உண்போம், 
எதைக் குடிப்போம்,   
எதை உடுத்துவோம் என்ற  கவலையில் வாழ்க்கையைக் கழிக்கக் கூடாது.

உலக வாழ்வின் முடிவில் விண்ணக வாழ்வுக்குள் நுழைய வேண்டும்.

நித்திய பேரின்ப வாழ்வு வாழ வேண்டும்.

நித்திய பேரின்ப வாழ்வை நினைத்துக் கொண்டே பயணித்தால் அதன் முன்ருசியை உணர்வோம்.

பேரின்பத்தின் ருசியை உணர்ந்தவர்களுக்கு சிற்றின்பம் ருசிக்காது.

சிலுவைப் பாதையே பேரின்பப் பாதையாக மாறிவிடும்.

லூர்து செல்வம்.

Thursday, June 19, 2025

"மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர்.". (மத்தேயு நற்செய்தி 6:19)



"மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர்."
(மத்தேயு நற்செய்தி 6:19)

செல்வம் இருவகை, அருட்செல்வம், பொருட்செல்வம்.

அருளின் ஊற்று இறைவன்.
இறைவனோடு ஒன்றித்து வாழ்பவர்கள் ஆன்மாவில் அருள் மிகுந்திருக்கும்.

இறைவனில், இறைவனோடு ஒன்றித்து வாழ்பவர்களின் ஒவ்வொரு செயலும் இறையருளைப் பெற்றுத் தரும்.

நற்செயல்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் பெறும் அருளின் அளவும் அதிகரிக்கும்.

அருளின் அளவு
 அதிகரிக்க அதிகரிக்க விண்ணகத்தில் அவர்கள் அனுபவிக்கயிருக்கும் பேரின்பத்தின் அளவும் அதிகரித்துக் கொண்டேயிருக்கும்.

அவர்கள் செய்யும் பிறரன்புச் செயல்கள் தான் நற்செயல்கள்.

இறையன்பினால் தூண்டப்பட்டு இறைவனின் மகிமைக்காக நமது அயலானுக்கு நாம் செய்யும் உதவிச் செயல்கள்தான் நற்செயல்கள்.

ஒரு செயல் தற்செயலாக வேண்டுமென்றால் முதலில் நாம் சாவான பாவமின்றி, இறை உறவில் இருக்க வேண்டும்.

அடுத்து நாம் செய்யும் பிறருதவி தற்பெருமைக்காக இல்லாமல் இறைவனது மகிமைக்காகச் செய்யப்பட வேண்டும்.

வலதுகை செய்வது இடது கைக்குத் தெரியாமல் செய்ய வேண்டும்.

நற்செயல்கள் செய்பவர்கள் இறை அருளில் வளர்ந்து கொண்டிருப்பார்கள்.

பொருட்செல்வர்கள் இறை அருளைப் பற்றிக் கவலைப் படாமல் இவ்வுலகப் பொருளை ஈட்டுவதில் மட்டும் குறியாக இருப்பார்கள்.

உணவு, உடை, இருப்பிடம், பணம், பட்டம், பதவி போன்றவை பொருட்செல்வங்கள்.

கடவுளைத் தேடாமல் இவற்றை மட்டும் இவற்றுக்காக அனுபவிப்பவர்கள் பொருட் செல்வர்கள்.

அருட் செல்வம் நித்திய காலமும் நம்மோடு சேர்ந்து இருக்கும்.

"இயேசுவே இரட்சியும்."

ஒரு முறை செபிக்க ஒரு வினாடி ஆகும்.

ஆனால் அதற்குச் சன்மானமாக நாம் பெறும் இறை அருள் ‌நித்திய காலமாக நம்மோடு இருக்கும்.

பொருட் செல்வம் வெள்ளம் வந்தால் போய்விடும்.

வெந்தணல் பட்டால் எரிந்து விடும்.

ஆனால் உலகமே அழிந்தாலும் அருட் செல்வம் அழியாது.

இறைவனோடு நித்திய பேரின்பத்தில் வாழ வேண்டுமென்றால் நாம் உலகில் அருட்செல்வர்களாக வாழ வேண்டும்.

எது எளிது?  அருட் செல்வத்தை ஈட்டுவதா? பொருட்செல்வத்தை ஈட்டுவதா?

அருட்செல்வத்தை ஈட்டுவதுதான் எளிது.

பொருட்செல்வத்தை ஈட்டுபவர்கள் அது இருக்கும் இடத்தைத் தேடி நாயாய் அலைய வேண்டும்.

இரவு பகல் பார்க்காமல் உழைக்க வேண்டும்.

சிறிது அசந்தால் இலாபமெல்லாம் நட்டமாய் மாறிவிடும்.

சுகமில்லாமல் படுத்து விட்டால் உழைப்பும் போய்விடும், ஈட்டியதும் போய்விடும்.

கோடிக்கணக்காய் ஈட்டி வைத்திருந்தாலும் மரணம் வந்து விட்டால் ஈட்டியவனால் அதை அனுபவிக்க முடியாது.

இருப்பவர்கள் அனுபவிப்பார்கள்.

ஆனால் அருட்செல்வத்தை ஈட்டுவது மிக எளிது, ஏனெனில் நமக்குத் துணையாய் வருபவர் சர்வ வல்லப கடவுள்.

அவர் உதவியுடன் நற்செயல்களைச் செய்து  செய்ததை அவருக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும்.

தூங்கும் போதும் அருட்செல்வத்தை ஈட்டலாம், நமது தூக்கத்தை
 இறைவனுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும்.

தூக்கத்தை மட்டுமல்ல, சுவாசிப்பது முதல் எதைச் செய்தாலும் நம்முடன் இருக்கும் இறைவனுக்கு ஒப்புக் கொடுத்தால் போதும்.

நாம் சுகமில்லாமல் படுத்த படுக்கையாய் இருந்தாலும் அதை இறைவனுக்கு ஒப்புக் கொடுத்துவிட்டால் நமது நோயும் அருளை ஈட்டித்தரும்.

பொருட்செல்வர்கள் எதைச் செய்தாலும் தங்களுக்காகச் செய்வார்கள்.

ஆனாலும் செல்வம் ஒரு நாள்
"செல்கிறேன்" என்று டாட்டா காட்டி விட்டுப் போய் விடும்.

ஆனால் அருட்செல்வம் நாம் இறந்தால் நம்மை விண்ணகத்துக்கு அழைத்துச் செல்லும்.

ஆகவே அருட்செல்வத்தை ஈட்டி விண்ணகத்தில் சேர்த்து வைப்போம்.

நித்திய காலமும் அதை அனுபவிப்போம்.

லூர்து செல்வம்.

Wednesday, June 18, 2025

ஐந்து அப்பங்களும் ஐயாயிரம் பேரும்.



ஐந்து அப்பங்களும் ஐயாயிரம் பேரும்.

இயேசு ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் (+ பெண்கள் + சிறுவர்கள்)  பேருக்கு உணவளித்த புதுமை பற்றி தியானிப்போம்.

மக்களுக்கு உணவு கொடுக்க இயேசு பயன்படுத்தியது ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும்.

உணவு உண்டது ஆண்கள் மட்டும் ஐயாயிரம். வழக்கமாக ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக நற்செய்திக் கூட்டங்களுக்கு வருவார்கள்.

அவர்களோடு சிறுவர்களையும் சேர்த்தால் உணவு உண்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தையும் தாண்டும்.

நற் செய்தியை அறிவித்துக் கொண்டிருந்த இயேசு ஏன் வந்தவர்களுக்கு உணவளித்தார்?

நற் செய்தி ஆன்மீக உணவு. அப்பங்கள் உடலுக்கான உணவு.

ஆன்மாவைப் படைத்தவரும், உடலைப் படைத்தவரும் ஒரே கடவுள் தானே.

"இயேசு அங்குச் சென்றபோது பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவுகொண்டார்; அவர்களிடையே உடல் நலமற்றிருந்தோரைக் குணமாக்கினார்."

மக்கள் கூட்டம் கூட்டமாக இயேசுவைப் பார்க்கச் சென்றது அவரது நற் செய்தியைக் கேட்கவும், உடல்நலம் பெறவும்.

மக்களைப் பார்த்தவுடன் இயேசுவில் உண்டாகும் முதல் உணர்வு பரிவு, அதாவது, இரக்கம்.

இறைமகன் மனிதனாகப் பிறந்ததே மனிதர்கள் மீது அவர் கொண்டிருந்த இரக்கத்தின் காரணமாகத்தான்.

அவரது இரக்கம் ஆன்மீகம் சார்ந்தது தான்.

பாவத்தின் வீழ்ந்த மனிதன் மீது இரக்கம் கொண்டார், 

ஆன்மாவும் சரீரமும் கொண்டவன் மனிதன்.

ஆன்மாவுடனும், சரீரத்தோடும் 

இயேசுவையும், அன்னை மரியாளையும் போல,

மோட்சத்தில் வாழ வேண்டியவன் மனிதன்.

நமது ஆன்மீக வாழ்வில் நாம் முன்னேறிச் செல்ல வேண்டுமென்றால் நமது உடல் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்.

அதற்காகவே ஆண்டவர் உடல் நலம் இல்லாதவர்கள் மீது இரங்கி அவர்களுக்கு உடல் நலம் கொடுத்தார்.

ஆன்மாவுக்கு உதவியாக உடல் வாழ உணவு உண்பதும் அவசியம்.

ஆகவே தான் பசியாக இருந்த மக்கள் மீது இரங்கி அவர்களுக்கு உணவு கொடுத்தார்.

ஆக இப்புதுமை நமது ஆண்டவருடைய பரிவை முன் உதாரணமாகக் காட்டுகிறது.

நாமும் நமது அயலான் விடயத்தில் பசியாக இருப்பவர்களுக்கு உணவு கொடுத்து உதவ வேண்டும்.

ஒன்றும் இல்லாமையிலிருந்து உலகைப் படைத்த இறைமகன் மக்களுக்கு உணவு கொடுக்க ஒன்றும் இல்லாமையிலிருந்து அப்பங்களை வரவழைக்கவில்லை.

நற் செய்தியை கேட்க வந்திருந்த ஒரு சிறுவனிடமிருந்த ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் பலுகச் செய்கிறார்.

அந்த சிறுவன் அவனிடம் உள்ளதை மற்றவர்களுக்காகத் தியாகம் செய்கிறான்.

இயேசு இப் புதுமையைச் செய்தது இறைச் சமூகத்தில் உள்ள நமக்கு பாடம் கற்றுக் கொடுக்கவே.

நாம் ஒவ்வொருவரும் சமூக நலனுக்காக நம்மிடம் உள்ளதை, அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும், தியாகம் செய்தால் பெரிய மக்கள் நிலத் திட்டங்களை நிறைவேற்றலாம்.

இதை நமக்குப் போதிக்கவே இயேசு சிறுவனிடமிருந்ததை வாங்கி பலுகச் செய்து அனைவருக்கும் உணவளித்தார்.

"இயேசு அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்." (மத்.14:19)

அனைவருக்கும் உணவளித்தவர் அவர்தான். ஆனால் நேரடியாக அவரே அளிக்காமல் தன் சீடர்கள் மூலமாக அளித்தார்.

இன்றும் அப்படித்தான். நாம் அவருடைய சீடர்கள். நம் மூலமாகத்தான் அவருடைய மற்ற மக்களுக்கு உதவ விரும்புகிறார்.

நம்மிடம் உள்ளதெல்லாம் இறைவனுக்கு உரியவை.

அதை என்ன செய்ய வேண்டும் என்று இறைவன் விரும்புகிறாறோ அதைத்தான் நாம் செய்ய வேண்டும்.

நம்மிடம் உள்ளதைக் கொண்டு மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று விரும்புகிறார்.

நம்மை அவரது கரங்களாகப் பயன்படுத்த விரும்புகிறார்.

பயன்படுவோம்.

அவர்கள் வயிறார உண்டபின், "ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்" என்று தம் சீடரிடம் கூறினார். 

மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள். (அரு.6:12,13)

உணவை வீணாக்கக் கூடாது என்ற பாடத்தை நமக்குக் கற்பிக்க இயேசு எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வைக்கச் சொன்னார்.

அதையும் மக்களுக்காகத்தான் இயேசு பயன்படுத்தியிருப்பார்.

இந்தப் புதுமையைச் செய்த மறுநாள் அவரைத் தேடி வந்த மக்களிடம்,

 இயேசு, "நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 

அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்.

 அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்" .(அரு. 6:26,27)
என்று கூறிவிட்டு,

 "வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது." (அரு. 6:35)

என்ற வார்த்தைகள் மூலம் திவ்ய நற்கருணையைப் பற்றி பேச ஆரம்பித்தார்.

"விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். " (அரு. 6:51)
என்று கூறினார்.

இது அவர் திவ்ய நற்கருணையை ஏற்படுத்தயிருப்பதற்கு முன்னறிவிப்பு.

அப்பங்களைப் பலுகச் செய்தது அதற்கு முன்னுரை.

அப்பங்களைப் பலுகச் செய்ததன் மூலம் அப்பத்தைத் தன் சரீரமாக மாற்றவும் முடியும் என்ற தனது வல்லமையை நமக்கு அறிவிக்கவே இந்தப் புதுமை.

கானாவூர்த் திருமணத்தில் தண்ணீரை இரசமாக மாற்றியதும் இந்த நோக்கத்தோடுதான்.

இயேசுவால் எல்லாம் முடியும்.

எல்லாம் வல்லவர் நம்மோடு இருக்கும் போது நாம் எதற்கு அஞ்ச வேண்டும்?

லூர்து செல்வம்

Tuesday, June 17, 2025

மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது. (மத்தேயு நற்செய்தி 6:1)



''மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது."
(மத்தேயு நற்செய்தி 6:1)


"நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது."

என்று சொன்ன இயேசு  ஏன் "மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள்."
என்று சொல்கிறார்?

ஒரு செயலின் தன்மை அதன் நோக்கத்தில் இருக்கிறது.

தேர்தல் சமயத்தில் அரசியல் வாதிகள் மக்களுக்குப் பணம் கொடுக்கிறார்கள்.

அதற்குப் பெயர் ஈகையா?

இல்லை. இலஞ்சம்.

ஏழைகள் வாழ்வதற்கு உதவியாக பணம் கொடுத்தால் அது ஈகை, தர்மம்.

ஓட்டு வாங்கப் பணம் கொடுத்தால் அது இலஞ்சம்.

செயலின் நோக்கம்தான் அது நல்ல செயலா, கெட்ட செயலா என்பதைத் தீர்மானிக்கிறது.

இயேசுவின் மகிமைக்காக, மக்கள் நம்மில் இயேசுவைக் காண வேண்டும் என்பதற்காகத் தர்மம் கொடுத்தால் அது நற்செய்தி வாழ்க்கை.


சுய விளம்பரத்திற்காக தர்மம் கொடுத்தால் தற்பெருமை. ஒரு வகையில் வியாபாரம்.

மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யக்கூடாது.

இறைவனின் மகிமைக்காக நாம் அறச் செயல்களைச் செய்ய வேண்டும். அதைப் பார்க்கும் மக்கள் நம்மில் இயேசுவைப் பார்ப்பார்கள்.

மீட்புப் பெற வேண்டுமானால் விசுவாசம் மட்டும் போதாது, நற்செயல்களும் அவசியம்.

நமது அயலானுக்கு அவனும் இறைவனின் பிள்ளை என்ற உண்மையின் அடிப்படையில் இறைவனின் அதிமிக மகிமைக்காக செய்யும் உதவியே நற்செயல்.

நற்செயல்களின் நோக்கம் இறைவனை மகிமைப் படுத்துவதற்காக மட்டும் இருக்க வேண்டும்.

சுய திருப்தியோ, சுய விளம்பரமோ நமது நோக்கமாக இருக்கக்கூடாது.

ஆகவேதான் ஆண்டவர்
"நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப்பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள்.

 வெளிவேடக்காரர், மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக் கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர்.

 அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."
(மத்தேயு நற்செய்தி 6:2)

இறைவனின் மகிமைக்காக நற்செயல் பரிவோருக்கு நித்திய பேரின்ப வாழ்வு சன்மானமாகக் கிடைக்கும்.

சுய விளம்பரத்துக்காகச் செய்வோருக்கு விளம்பரத்தினால் கிடைக்கும் மகிழ்ச்சி மட்டுமே சன்மானம்.

இறைவனிடமிருந்து எதுவும் கிடைக்காது.

பொது மேடைகளில் பொன்னாடை போர்த்தப்பட வேண்டும், நமது சேவைக்காகப் புகழப்பட வேண்டும் என்ற ஆசை நம்மிடம் இருக்கக் கூடாது.

இறைவனுக்கு ஒப்புக் கொடுக்கப்படும் திருப்பலி தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் ஆரம்பித்து தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் நிறைவடையும்.

ஆரம்ப செபத்துக்கும், இறுதி செபத்துக்கும் இடையில் திருப்பலி சார்ந்த நிகழ்வுகள் மட்டுமே இடம் பெற வேண்டும்.

திருப்பலியைச் சாராத எந்த நிகழ்வும் இடம்பெறக் கூடாது.

திருப்பலி பீடம் பொதுக்கூட்ட மேடை அல்ல.

நமக்காகச் சிலுவையைச் சுமந்து சென்றபோது சிலுவையின் பாரம் தாங்காமல் இயேசு மூன்று முறை கீழே விழுந்தார்.

அவர் விழும்போது முட்டு அடிபட்டிருக்கும்.

நமக்காக முட்டில் அடிவாங்கிய இயேசுவின் முன் முழங்காலில் இருந்து, திவ்ய  நற்கருணை வாங்க நமக்கு மனதில்லை.

நட்டமாய் நின்று கையில் வாங்குகிறோம்.

திவ்ய நற்கருணையில் இருப்பவர் கடவுள் என்ற விசுவாசம் நம்மிடம் இருந்தால் அப்படிச் செய்வோமா?

ஆண்டவரையே தங்கள் இட்டப்படி வாங்குபவர்கள் எப்படி இறைவன் இட்டப்படி வாழ்வார்கள்?

கோவிலுக்கு வருவது பிறர் நம்மைப் பார்க்க வேண்டும் என்பதற்காக அல்ல.

பிறர் நம்மைப் பார்க்க வேண்டும் என்பதற்காக நாம் எதையும் செய்யக் கூடாது.

கடவுள் நம்மைப் பார்க்கிறார் என்பதை மனதில் கொண்டு செயல்படுவோம்.

"எல்லாம் உமக்காக, இயேசுவே, எல்லாம் உமக்காக."

லூர்து செல்வம்.

Monday, June 16, 2025

"நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள்செயலை அறிந்திருக்கிறீர்களே! அவர் செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்." (2 கொரிந்தியர் 8:9)

"நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள்செயலை அறிந்திருக்கிறீர்களே! அவர் செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்."
(2 கொரிந்தியர் 8:9)

புனித சின்னப்பர் தான் நற்செய்தியை அறிவித்து மனம் திருப்பிய கொரிந்து நகர மக்களுக்கு எழுதிய கடிதத்திலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகள்.

இயேசுவின் எந்த பண்புகளை அவர்களும் கொண்டிருக்க வேண்டும் என்பதை இவ்வார்த்தைகள் வலியுறுத்துகின்றன.

அவர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் கூறப்பட்ட வார்த்தைகள்.

இறைமகன் இயேசு இயல்பிலேயே செல்வந்தர்.

கோடிக்கணக்கான விண்மின்களையும், கோள்களையும் கொண்ட மாபெரும் பிரபஞ்சம் அவரால் படைக்கப்பட்டது, அவருக்கு மட்டுமே உரியது.

ஆனால் பிரபஞ்சத்தை அவர் அனுபவிப்பதற்காகப் படைக்கவில்லை.

நமக்காகப் படைத்தார்.

இந்த உலகம் முழுவதும் அவருக்கு உரியதாக இருந்தும் அவர் மனிதனாகப் பிறக்க ஒருமாட்டுத் தொழுவையே தேர்ந்தெடுத்தார்.

செல்வந்தர் ஏன் ஏழையாகப் பிறந்தார்?

நம்மைச் செல்வந்தர்களாக மாற்ற.

இறைவன் வாழ்வது ஆன்மீக வாழ்க்கை.

நாமும் ஆன்மீக வாழ்க்கை வாழவே இறைவன் நம்மைப் படைத்திருக்கிறார்.

ஆன்மீக வாழ்க்கை என்றால்?

இறைவனது மகிமைக்காக வாழும் வாழ்க்கை.

இறைவன் படைத்த பிரபஞ்சம் ஒரு லௌகீகப் பொருள்.

லௌகீகப் பொருளாகிய உலகில் நாம் வாழ்ந்தாலும் இறைவனுக்காக வாழ்வது ஆன்மீக வாழ்க்கை.

இறைவனுக்காக வாழாமல் உலகம் சார்ந்த இன்பத்துக்காக மட்டும் வாழ்வது லௌகீக வாழ்க்கை.

நாம் உலகில் உலகுக்காக வாழாமல் இறைவனுக்காக வாழ வேண்டும்.

இறைவனுக்காக வாழ உலகப் பொருட்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நண்பர் ஒருவருக்கு ஏதாவது காரணத்தை முன்னிட்டு வாழ்த்துக் கூற வேண்டுமென்றால் நமது வாழ்த்துக்கு அடையாளமாக ஏதாவது ஒரு பரிசுப் பொருள் வாங்கிக் கொடுக்கிறோம்.

இங்கே முக்கியத்துவம் பெறுவது பரிசுப் பொருள் அல்ல.
நமது வாழ்த்துதான்.

அவ்வாறே கடவுள் நம்மை ஒவ்வொரு வினாடியும் பராமரித்து வருவதற்கு நன்றியாக இவ்வுலகப் பொருள் ஒன்றைக் காணிக்கையாகச் செலுத்துகிறோம்.

காணிக்கையாகச் செலுத்தப்படுவது ஒரு லௌகீகப் பொருளாக இருந்தாலும் அது இறைவனுக்கு காணிக்கையாகச் செலுத்தப்படுவதால் ஆன்மீகப் பொருளாக மாறிவிடுகிறது.

நாம் உண்ணும் உணவு எந்தப் பொருளாக இருந்தாலும் அது உணவாக நமது உடலிலுக்குள் சென்றபின் நமது தசையும் இரத்தமுமாக மாறிவிடுகிறதோ

அவ்வாறே உலகைச் சார்ந்த லௌகீகப் பொருள் ஆண்டவருக்குக் காணிக்கையாக செலுத்தப்படும்போது ஆன்மீகப் பொருளாக மாறிவிடுகிறது.

இங்கே முக்கியத்துவம் பெறுவது காணிக்கை, பொருள் அல்ல.

ஆக இறைவன் லௌகீகப் பொருளாகிய உலகைப் படைத்தது ஆன்மீக நோக்கத்துக்காக.

அதன் ஆன்மீக நோக்கம் இரண்டு விதமாக நிறைவேறும்.

அதைக் கோவிலில் காணிக்கையாகச் செலுத்தும்போதும்,

இறைவனால் படைக்கப்பட்ட நமது அயலானுக்கு உதவியாகக் கொடுக்கும்போதும்.

நாம் நம்மைப் படைத்துப் பராமரித்து வரும் கடவுளை முழு மனதோடு நேசிக்க வேண்டும்.

நம்மை நாம் நேசிப்பதுபோல நமது அயலானையும் நேசிக்க வேண்டும்.

நம்மிடம் இறைவனின் சாயல் இருக்கிறது,  ஆகவே நம்மை நாம் நேசிக்க வேண்டும்.

நமது அயலானிலும் இறைவனின் சாயல் இருக்கிறது. ஆகவே நமது அயலானை நாம் நேசிக்க வேண்டும்.

நம்மிலும், நமது அயலானிலும் இறைவனின் சாயல் இருக்கிறது.

ஆகவே நமது அன்பிலும் இறைவனின் சாயல் இருக்கிறது.

அதாவது இறைவனின் மகிமைக்காக நம்மையும், அயலானையும் நேசிக்கும் போது அது ஆன்மீகம்.

இறைவனுக்காக அல்லாமல் நமது சுய திருப்திக்காக நேசித்தால் அது லௌகீகம்.

நாம் இறைவனை  இறைவன் என்பதற்காக அல்லாமல் நமக்கு வேண்டிய உதவிகளுக்காக மட்டும் நேசித்தால் அதற்குள் லௌகீகம் புகுந்து விடுகிறது.

நல்ல சுகம் வேண்டும், 
நல்ல வேலை கிடைக்க வேண்டும், 
நல்ல வருமானம் கிடைக்க வேண்டும்
போன்ற உலகைச் சார்ந்த வசதிகளுக்காக மட்டும் இறைவனிடம் வேண்டுபவர்கள் லௌகீகவாதிள்.

ஏனெனில் அவர்கள் இறைவனைத் தங்கள் உலக வாழ்க்கைக்காகப் பயன்படுத்துகிறார்கள்.

அதாவது தங்களை இறைப்பணிக்காகப் பயன்படுத்தாமல் இறைவனை தங்கள் சொந்த நலனுக்காகப் பயன்படுத்த முயல்கிறார்கள்.

நமது வாழ்க்கை இறைவனை மையமாகக் கொண்டிருக்க வேண்டும், நம்மையே மையமாகக் கொண்டிருக்கக் கூடாது.

இறைவனது விருப்பம் நம்மில் நிறைவேற வேண்டும்.

இறை விருப்பம் நிறைவேற நமது விருப்பத்தைத் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.

புனித அல்போன்சா வாழ்நாளில் பெரும் பகுதி சுகமில்லாதிருந்தாள்.

அதுவே இறைவன் சித்தம் என்பதை உணர்ந்து தனது சுகமின்மையை இறைவனுக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தாள், புனிதையானாள்.

உலகியலில் ஏழையாகவும், ஆன்மீகத்தில் செல்வியாகவும் வாழ்ந்தாள்.

இயேசு ஏழையாகப் பிறந்ததன் நோக்கம் நம்மை ஆன்மீகத்தில் செல்வந்தர்களாக மாற்ற.

அன்னை மரியாள் அருட் செல்வத்தால் நிறைந்தவள்.

நாமும் நமது அன்னையைப் போல் அருட் செல்வர்களாக வாழ்வோம்.

நம்மிடம் உள்ள பொருளைப் பயன்படுத்தி அருளை ஈட்டுவோம்.

லூர்து செல்வம்.

Sunday, June 15, 2025

"ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்." (மத்தேயு நற்செய்தி 5:39)



"ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்."
(மத்தேயு நற்செய்தி 5:39)

அன்பு செய்கின்றவர்களை அன்பு செய்வது பெரிய சாதனை அல்ல.

நம்மை வெறுப்பவர்களை அன்பு செய்வதுதான் கிறித்தவப் பண்பு.

வெறுப்பவர்களை அன்பு செய்பவன் தான் இயேசுவின் சாயலைப் பெற்றிருக்கிறான்.

பாவம் இறைவனுக்கு எதிரானது.
பாவம் செய்பவன் பாவி.
அதாவது 
இறைவனுக்கு எதிராகச் செயல்படுபவன் பாவி.

"நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்" என்கிறார் இயேசு.


பாவிகள் மனம் திரும்பி நித்திய பேரின்ப வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக விண்ணிலிருந்து மண்ணுக்கு இறங்கி வந்ததன் மூலம் அவரது போதனையை வாழ்ந்து காண்பித்தார்.

ஆன்மீகத்துக்கும், லௌகீகத்துக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு இந்த வசனத்தில் தான் அடங்கியிருக்கிறது.

ஆன்மீகம் எல்லா சூழ்நிலைகளிலும் நன்மையையே செய்யும்,

நன்மையை மட்டுமே செய்யும்.

லௌகீகம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ளும்.

ஆன்மீகவாதிகள் தங்களுக்கு நன்மை செய்தவர்களுக்கு மட்டுமல்ல, தீங்கு செய்பவர்களுக்கும் நன்மை செய்வார்கள்.

உதவி செய்பவர்களுக்கும் பதில் உதவி செய்வார்கள்,

தீங்கு செய்பவர்களுக்கும் பதில் உதவி செய்வார்கள்.

வாழ்த்துபவர்களையும் வாழ்த்துவார்கள்,

வைகின்றவர்களையும் வாழ்த்துவார்கள்.

ஆனால் லௌகீகவாதிகள் வாழ்த்துபவர்களை வாழ்த்துவார்கள்,

வைபவர்களை பதிலுக்கு வைவார்கள்.

இயேசு தன்னைக் கைது செய்ய வந்தவர்களிடம் தன்னைக் கையளித்தார்.

அவர்கள் தன்னைக் கைது செய்ய கெத்சமனித் தோட்டத்திற்கு வருவார்கள் என்று இயேசுவுக்குத் தெரியும்.

தெரிந்து தான் போனார்.

மூன்று ஆண்டுகள் பொது வாழ்வின் போது தந்தை குறித்த நேரம் வராததால் எதிரிகள் பிடிக்க முயன்ற போது அவர்கள் கையில் அகப்பட்டவில்லை.

ஆனால் நேரம் வந்தவுடன் அவர்கள் கைது செய்ய வந்தபோது தடுக்கவில்லை.

விசாரணை மன்றத்தில் தனக்காக அவர் வாதாடவில்லை.

அவர்கள் அடிக்கும் போது மறுக்காமல் அடிகளை வாங்கிக் கொண்டார்.

மிதிக்கும் போது மிதிகளைத் தடுக்கவில்லை.

மரணத் தீர்ப்பிடும்போது தீர்ப்பை ஏற்றுக் கொண்டார்.

சிலுவையை ஏற்றிய போது மறுக்கவில்லை.

விழுந்தாலும் எழுந்து நடந்தார்.

சிலுவையில் அறைந்தபோது ஏற்றுக் கொண்டார்.

இவ்வளவு தீங்குகளையும் ஏற்றுக் கொண்டு இறுதியில் , யூதாஸ் உட்பட, தனக்கு தீங்கு இழைத்த அனைவரையும் மன்னித்து விட்டார்.

'நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்."

என்ற அவருடைய போதனையை வாழ்ந்து காண்பித்தார்.

அவருடைய போதனைகளை அப்படியே பின்பற்றுபவர்கள் தான் அவருடைய சீடர்கள்.

ரோமைப் பேரரசு நற் செய்தியை அறிவித்ததற்காக அவருடைய சீடர்களைக் கொடுமைப் படுத்தியபோது, அவர்கள் கொடுமையை மறுக்காமல் ஏற்றுக் கொண்டார்கள்.

ஆட்சிக்கு வரும்போது முக்கிய பதவி வேண்டும் என்று இயேசுவிடம் கேட்ட பெரிய யாக்கோபு நற் செய்தியை அறிவித்த போது இயேசுவுக்காக ரோமை அரசிடம் தன் தலையைக் கொடுத்து சீடர்களில் முதல் வேத சாட்சி என்ற பதவியைப் பெற்றார்.

விசாரணை மன்றத்தில் மூன்று முறை இயேசுவை மறுதலித்த இராயப்பர் தலை கீழாக சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.

சீடர்களுக்கு ஏற்பட்ட நிலைமை இந்தியாவில் நமக்கும் வரலாம்.

வந்தால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு நாமும் இயேசுவின் சீடர்கள் என்பதை நிருபிப்போம்.

லூர்து செல்வம்

Saturday, June 14, 2025

புதைகுழியும் இரண்டாம் உலகப் போரும்.

புதைகுழியும் இரண்டாம் உலகப் போரும்.


ஒரு கோடிஸ்வரனின் 10 வயது மகன் திறந்த வெளியில் விளையாடிக் கொண்டிருந்தான்.

அருகில் ஒரு புதைகுழி இருந்தது அவனுக்குத் தெரியாது.

ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தவன் தவறி புதைகுழிக்குள் விழுந்து விட்டான்.

தன்னைக் காப்பாற்றும் படி கத்தினான்.

கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கிக் கொண்டிருந்தான்.

அவன் கத்தியது ஒரு ஏழைக் கூலியின் காதில் விழுந்தது.

அவன் தாமதிக்காமல் ஓடிவந்து பையனின் ஆபத்தான நிலையில் தன் உயிரைப் பற்றிக் கவலைப் படாமல் கட்டப்பட்டு அவனைக் காப்பாற்றினான்.

பையன் நன்றி கூறிவிட்டு தன் இல்லம் சென்றான்.

கொஞ்சம் பொறுத்து காப்பாற்றப்பட்ட பையனின் பணக்கார அப்பா மகனைக் காப்பாற்றிய ஏழைக் கூலியின் குடிசைக்கு வந்து,

"எனது மகனின் உயிரைக் காப்பாற்றிய உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்.

எவ்வளவு பணம் வேண்டும், கேளுங்கள்.

எவ்வளவு கேட்டாலும் நன்றியுடன் தருவேன்." என்றான்.

ஆனால் ஏழைக் கூலி

"யாராவது உதவியை விற்பார்களா? நீங்கள் நன்றி சொன்னதே போதும். பணம் வேண்டாம்" என்று கூறிவிட்டான்.

பணக்காரன் ஏழைக் கூலியின் மகனைப் பார்த்தான்.

"பணம் வேண்டாம் என்றால் விட்டு விடுவோம். உங்கள் பையனின் படிப்புக்கான செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதற்கு அனுமதி கொடுங்கள்" என்றான்.

மகனின் நலன் கருதி ஏழை அதை ஏற்றுக் கொண்டான்.

பணக்காரனின் உதவியோடு ஏழை பையன் நன்கு படித்ததோடு

 மருத்துவக்கல்லூரியில்  படித்து, தலைசிறந்த டாக்டர் ஆனது மட்டுமல்ல,

பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ உதவிய புது மருந்து ஒன்றையும் கண்டுபிடித்தார்.

அவர்தான் பென்சிலின் மருந்தைக் கண்டு பிடித்த

சர் அலெக்சாண்டர் பிளெமிங் (Sir Alexander Fleming) 

புதை குழிக்குள் விழுந்து காப்பாற்றப் பட்ட பையன் வளர்ந்தபின் சுகமில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அநேக மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் 

சர் அலெக்சாண்டர் பிளெமிங் தான் கண்டுபிடித்த புது மருந்தின் உதவியுடன் அவரைக் காப்பாற்றினார்.

புதை குழியிலிருந்து
காப்பாற்றப்பட்டவர், இங்கிலாந்தின் பிரதமராக இருந்து, இரண்டாம் உலகப் போரில்,நேச நாடுகளின் வெற்றிக்குக் காரணமாக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில்!

அன்று பணக்காரப் பையன் புதைகுழிக்குள் விழாதிருந்திருந்தால் நமக்கு பென்சிலின் மருந்து கிடைத்திருக்காது.

விழுந்தவன் இறந்திருந்தால்
இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகள் தோற்றிருக்கும்.

இந்தியா செர்மனி கைக்கு மாறியிருக்கும்.

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது.

ஒரு ஏழையின் பிறரன்பு முயற்சி உலகத்தையே காப்பாற்றியது.

உதவி நிச்சயம் பலன் தரும்.

லூர்து செல்வம்

Friday, June 13, 2025

"ஆகவே நீங்கள் பேசும்போது 'ஆம்' என்றால் 'ஆம்' எனவும் 'இல்லை' என்றால் 'இல்லை' எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது." (மத்.5:37)



"ஆகவே நீங்கள் பேசும்போது 'ஆம்' என்றால் 'ஆம்' எனவும் 'இல்லை' என்றால் 'இல்லை' எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது." 
(மத்.5:37)

பேச்சாளர்கள் (Orators) என்று பெயர் எடுத்திருப்பவர்கள் ஒரு சிறு விடயம் பற்றி மணிக்கணக்காகப் பேசுவார்கள்.

அதன் சிறப்பு என்னவென்றால் கேட்பவர்களுக்கு சலிப்பு ஏற்படாது.

ஆனால் கேட்டுக் கொண்டிருந்தவர்களிடம் இரண்டு மணி நேர சொற்பொழிவின் மையக்கருத்து என்னவென்று கேட்டால் சொல்லத் தெரியாது.

ஏனெனில் சொற்பொழிவை ரசிக்க வைப்பதற்காக கருத்தை விட நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள்.

நகைச்சுவை மட்டும் நினைவில் இருக்கும்.

சொல்ல வேண்டியதை மட்டும் சொன்னால் கேட்பவர்கள் மனதில் அது மட்டும் தங்கும்.

நான்காவது வகுப்பு மாணவர்களுக்கு கிராம நிர்வாக அதிகாரியின் பணியை விளக்கிக்  கொண்டிருந்த ஆசிரியர்,

"கிராம் நிர்வாக அதிகாரியின் முக்கிய பணி நிலவரி வசூலித்தல்.

வரியை ஒழுங்காகச் செலுத்தாதவர்களின் வீட்டுக்கு தலையாரி வந்து அவர்கள் வீட்டில் இருக்கும் சட்டி, பானை, மற்றும் பொருட்களைப் பொறுக்கி தெருவில் போடுவதைப் பார்த்திருக்கிறீர்களா?" என்று கேட்டார்.

அனைத்து மாணவர்களும்,  "ஆமா, சார்." என்றார்கள்.

அந்த ஆண்டு இறுதித் தேர்வில் கிராம நிர்வாகப் பாட வினாத்தாளில் ஒரு கேள்வி.

"கிராம நிர்வாக அதிகாரியின் வேலை என்ன?"

அநேக மாணவர்கள் எழுதியிருந்த பதில்,  

"கிராம நிர்வாக அதிகாரியின் வேலை வீடுகளுக்கு வந்து சட்டி பானைகளைப் பொறுக்குவது ஆகும்."

கோவிலில் பிரசங்கம் கேட்பவர்கள் அநேகரின் மனதில் சுவாமியார் சொன்ன நகைச்சுவை மட்டும் மனதில் தங்கும்.

சொல்ல வேண்டியதை
 அலங்காரமாகச் சொன்னால் அலங்காரம் மட்டும் மனதில் தங்கும்.

சொல்ல வேண்டியதை மட்டும் சொல்ல வேண்டும்.

கதை அளக்கக் கூடாது.


இதைத்தான் ஆண்டவர்

"நீங்கள் பேசும்போது 'ஆம்' என்றால் 'ஆம்' எனவும் 'இல்லை' என்றால் 'இல்லை' எனவும் சொல்லுங்கள்."

என்று சொல்கிறார்.

சிலர் விதவிதமான வார்த்தைகளைப் பயன்படுத்தி நீண்ட நேரம் செபம் செய்தால் 
நமது செபம் கேட்கப்படும் என்று நினைக்கிறார்கள்.

வார்த்தைகளைக் குறைத்து சொன்னால் போதும்.

வகுப்பில் மக்கு மாணவர்களுக்குப் புரிய வைக்க சிறிய விடயத்தை நீண்ட நேரம் விளக்குவோம்.

அனைத்தையும் அறிந்த கடவுளுக்கு எதையும் விளக்க வேண்டிய அவசியம் இல்லை.

கடவுள் அனைத்தையும் அறிந்தவர்.

நமது திருப்திக்காக சொல்ல வேண்டியதை சுருக்கமாகச் சொல்வோம்.

ஆனால் மனதில் எப்போதும் கடவுள் ஞாபகமாக இருக்க வேண்டும்.

எப்போதும் இறைவன் சந்நிதானத்தில் இருக்க வேண்டும்.

We must always be in the presence of God.

அதுதான் உண்மையான செபம்.

செபமாலையின் வல்லமையே இதில்தான் இருக்கிறது.

மங்கள வார்த்தை செபம் அளவில் சிறியது.

ஒரு 53 மணிச் செபமாலையில் மங்கள வார்த்தை செபத்தை 53 தடவைகள் சொல்கிறோம்.

கர்த்தர் கற்பித்த செபத்தை 6 முறை சொல்கிறோம்.

ஆனால் எப்போதும் இறைவன் சந்நிதானத்தில் தியானித்துக் கொண்டே சொல்கிறோம்.

தியானத்துக்கு வார்த்தைகள் தேவையில்லை.

மனதை ஒரு நிலைப்படுத்துவது தான் முக்கியம்.

மகிழ்ச்சி நிறை தியானத்தில் அன்னை மரியாளுடன் குழந்தை இயேசுவின் சந்நிதானத்திலும்,

துக்கம் நிறை தியானத்தில் பாடுகள் படும் இயேசுவின் சந்நிதானத்திலும்,

மகிமை நிறை தியானத்தில் உயிர்த்த இயேசுவின் சந்நிதானத்திலும்

மனதை ஒரு நிலைப்படுத்தி செபிக்க வேண்டும்.

செபத்துக்கு வல்லமையைக் கொடுப்பது வார்த்தைகளே இல்லாத தியானம் தான்.

தியானிக்கும் போது மனதை வேறு எங்கும் அலைய விடக்கூடாது.

வார்த்தைகளாலான நீண்ட செபத்தில் மனதை ஒரு நிலைப்படுத்துவது கடினம்.

ஆனால் வார்த்தைகள் தேவையில்லாத தியானத்தில் மனதை ஒரு நிலைப்படுத்துவது எளிது.

ஆகவே வார்த்தைகளைக் குறைத்து தியானத்தை அதிகப்படுத்தி செபிப்போம்.

லூர்து செல்வம்.

Thursday, June 12, 2025

உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது." (மத்.5:30)



"உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது." 
(மத்.5:30)

கடவுளால் நமக்குத் தரப்பட்ட உடலை இறைப்பணிக்குதான் பயன்படுத்த வேண்டும், பாவம் செய்யப் பயன்படுத்தக் கூடாது.

எந்த உடல் உறுப்பும் நமது விருப்பத்தை மீறி இயங்காது.

கால்களை இறைவன் முன் முழங்கால் படியிடவும், கைகளை கரம் குவித்து இறைவனை ஆராதிக்கவும் பயன்படுத்த வேண்டும்.

திவ்ய நற்கருணை முன் முழங்கால் படியிட விருப்பம் இல்லை என்றால் திவ்ய நற்கருணைப் பக்தி குறைந்து விட்டது என்று அர்த்தம்.

ஒரு காலத்தில் திவ்ய நற்கருணைப் பேழையைக் கடக்குமுன் ஒற்றை முழங்கால் படியிட்டு எழுந்து சென்றோம்.

இப்போது சிலர் நட்டமாய் நின்று தலையால் மட்டும் வணங்கிச் செல்கின்றனர்.


திவ்ய நற்கருணையில் இருப்பது மெய்யாகவே நம்மைப் படைத்த கடவுள் என்ற விசுவாசம் இருந்தால் கடவுள் முன் முழங்கால் படியிட மறுப்போமா?

திவ்ய நற்கருணை மெய்யாகவே உணவு (சாக்லேட் போல வெறும் தின்பண்டம் அல்ல) என்ற விசுவாசம் இருந்தால் திவ்ய நற்கருணையை நாவில் வாங்க மறுப்போமா?

ஆரஞ்சு வில்லையை கையில் வாங்கி வாயில் போடுவது போல போடுவோமா?

திவ்ய நற்கருணையை வாங்கும் போது இயேசுவே நம்மிடம் வருகிறார் என்ற விசுவாசம் இருந்தால் நன்மை வாங்கியவுடன் அவரோடு பேசாமல் எங்கோ இருக்கும் நண்பனோடு 
Phoneல் பேசுவோமா?

ஞாயிற்றுக்கிழமை பூசை முடியு முன்பே இயேசுவையும் அழைத்துக் கொண்டு கசாப்புக் கடைக்கு ஓடுவோமா?

சிந்திப்போம்.

Mutton சாப்பிட்டால் BP ஏறுகிறது. Mutton சாப்பிட்டு விட்டு BP மாத்திரை போடுபவன் மடயன்.

காரணமான உணவை நிறுத்துபவன்தான் புத்திசாலி.

பாவத்தில் விழாதிருக்க வேண்டுமா?

பாவ சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும்.

குடியை நிறுத்த வேண்டுமா?

மதுக்கடை பக்கம் போகக்கூடாது.

"எங்களைச் சோதனையில் விழ விடாதேயும்."

என்று தினமும் வேண்டுகிறோம்.

நமது முதல் தாய் ஏவாளை ஏன் சாத்தான் சோதித்தது?

 விலக்கப்பட்ட மரத்தின் அருகே அவளுக்கு என்ன வேலை?

அவள் அங்கே போனதால் தானே சாத்தான் அவளைச் சோதித்தது.

அவள் பாவத்தில் விழ நேர்ந்தது.

TV பெரிய சாத்தான்.
Smart phone குட்டிச் சாத்தான்.

கண்களைக் காப்பாற்ற வேண்டுமா?

இரண்டு சாத்தான்கள் பக்கத்திலும் போகக்கூடாது.

TV பார்ப்பதையே பழக்கமாகக் கொண்டிருந்தால் கண்ணும் கெடும், கருத்தும் கெடும்.

"எங்களைச் சோதனையில் விழ விடாதேயும்."  என்று வேண்டும் நாம் 

சோதனை பக்கத்தில் நாம் போகக் கூடாது.

பாவ சந்தர்ப்பங்களைத் தவிர்ப்போம்.

பாவத்தில் விழ மாட்டோம். 

லூர்து செல்வம்

Wednesday, June 11, 2025

"அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்." (மத்.5:24)



"அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்." (மத்.5:24)

காணிக்கை என்றால் என்ன?

இறைவன் தந்ததை அவர் தந்ததற்கு நன்றி செலுத்தும் வகையில் அவருக்கு அர்ப்பணிப்பது காணிக்கை.

நம்முடையது என்று நாம் அழைக்கும் நமது உடல், உயிர், ஆன்மா உட்பட எதுவும் நம்முடையது இல்லை.

இவற்றுடன் உற்பவிக்கு முன் நாமே இல்லை.

We were nothing before our conception.

நாம் உற்பவிக்கும் போது  நாம் என்ற உறவும், வாழ உலகில் ஒரு இடமும் கிடைக்கிறது.

இதற்காக நாம் கடவுளுக்கு நன்றி கூற வேண்டும்.

நாம் முழுமையாகக் கடவுளுக்கே சொந்தம்.

இதை ஏற்றுக் கொண்டு, அவருடைய பொருளாகிய நம்மைக் கடவுளுக்கு அர்ப்பணிப்பது தான் காணிக்கை.

நாம் நாமாக அவருக்காக வாழ வேண்டும் என்று விரும்புகிறார்.

நாம் நமது உடலோடும், உயிரோடும், ஆன்மாவோடும் வாழ வேண்டும்.

அதற்காக இவற்றை நமது உடமையாகத் தந்ததோடு,  வாழ உலகையும் தருகிறார்.

நாம் கடவுளுக்காகத்தான் வாழ வேண்டும்,

ஆனாலும் வாழ்வதற்காக உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இருப்பிடமும் ஈட்ட உழைக்கிறோம்.

நாம் உழைக்கும் போது கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை இறைப்பணிக்காகக் கொடுப்பதும் காணிக்கை.

நமது உடல் கடவுளுடையதாகையால் அதைப் பேணுவதும் கடவுளுக்குச் செய்யும் சேவைதான்.

 நாம் உண்பது இறைவன் தந்த உடலைப் பேணி வளர்ப்பதற்கு.

பசிக்காக அல்லாமல் ருசிக்காக அளவுக்கு மீறி உண்டு உடலுக்கு தீமை வர வைப்பது போசனப் பிரியம் என்னும் பாவம்.

அதேபோல் நமது அயலானும் கடவுளுக்கு உரிமையானவன் தான். அவனைப் பேணுவதும் கடவுளுக்குச் செய்யும் சேவைதான்.

கடவுள், நாம், நமது அயலான் ஆகிய மூவரோடும் நமது உறவு சீராக இருந்தால்தான் நாம் கொடுப்பது காணிக்கை.

உறவு சீராக இல்லாவிட்டால் நாம் கொடுப்பதை கடவுள் காணிக்கையாக ஏற்றுக் கொள்ள மாட்டார். 

கோவில் உண்டியலில் நாம் போடும் காணிக்கை கோவில் நிர்வாகத்தால் பிறரன்புப் பணிகளுக்காகத்தான் செலவிடப்
 படுகிறது.

காணிக்கை போடும் போது நமது உறவு சீராக இருக்கிறது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நமக்கும் நமது அயலானுக்கும் உறவில் ஏதாவது பிரச்சினை இருந்தால் அதை சரி செய்து விட்டுதான் காணிக்கையை உண்டியலில் போட வேண்டும்.

இதைத்தான் நமது ஆண்டவர்,

'' நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், 

அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்."(மத்.5:23,24) என்று சொல்கிறார்.

ஆண்டவருடைய வார்த்தைகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

"உங்களுக்கு உங்கள் சகோதரர் சகோதரிகள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்" என்று சொல்லவில்லை.

"உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்," என்று கூறுகிறார்.

நமக்கு யார் மீதும் எந்தக் கோபமும் இல்லாவிட்டாலும்,

மற்றவர்களுக்கு நம்மீது ஏதாவது கோபம் இருந்தால் அதன் காரணத்தைக் கண்டறிந்து உடனே அதைச் சரிசெய்ய வேண்டும்.

"ஏன் தம்பி என்னுடன் பேசாமல் இருக்கிறாய்? நான் ஏதாவது தப்பு செய்திருந்தால் அது என்ன என்று சொல், நான் திருத்திக் கொள்கிறேன்."

என்று தாழ்ச்சியோடு உரையாடி, காரணத்தைக் கண்டறிந்து உறவைச் சரிசெய்ய வேண்டும்.

நமக்கும் நமது அயலானுக்கும் இடையில் மனத்தாங்கல் எதுவும் இருக்கக்கூடாது.

இருந்தால் மன்னிப்பு என்னும் ஆயுதம் கொண்டு அதைச் சரிசெய்ய வேண்டும்.

அயலானுக்குச் செய்வதை நாம் இறைவனுக்கே செய்கிறோம்.

அயலானோடு சமாதானமாக வாழ்ந்தால் இறைவனோடும் சமாதானமாக வாழ்கிறோம்.

இறைவன் நம்மோடு பகிர்ந்து கொண்ட அன்பை நமது அயலானோடும் பகிர்ந்து வாழ்வோம்.

நிலை வாழ்வுக்கு வழிவகுப்போம்.

லூர்து செல்வம்.

Tuesday, June 10, 2025

"பணமிருந்தால் நாயை வாங்கலாம், அதன் வாலை வாங்க முடியுமா?



"பணமிருந்தால் நாயை வாங்கலாம், அதன் வாலை வாங்க முடியுமா?

இப்படி ஒரு கேள்வியை யாரோ Status ல் போட்டிருந்தார்கள்.

பணமிருந்தால் நாயை வாங்கலாம், நாயின் அன்பை வாங்க முடியுமா?

நாம் அதை அன்பு செய்தால் மட்டுமே அது வாலை ஆட்டும்.

LOVE MAKES A DOG’S TAIL WAG…

இன்றைய மனிதர்கள் பணமிருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று எண்ணுகிறார்கள்.

இன்றைய அரசியல்வாதிகளைப் பாருங்கள்,

பணமிருந்தால் ஓட்டை வாங்கலாம்,

ஓட்டை வாங்கினால் நாட்டை வாங்கலாம்,

நாட்டை வாங்கினால் மேலும் பணம் ஈட்டலாம்.

ஆனால் மக்களை வாங்க முடியுமா?

மக்களை விலை கொடுத்து வாங்க முடியாது,

மக்களைத் தங்கள் பக்கம் ஈர்க்க வேண்டுமென்றால் அவர்களது மனதைக் கவர வேண்டும்.

மனதைக் கவர வேண்டுமென்றால் அவர்களை அன்பு செய்ய வேண்டும்.

மக்களை அன்பு செய்பவர்கள் தான் அவர்களது நலனுக்காக மட்டும் உழைப்பார்கள்.

அவர்களது நலனுக்காக மட்டும் உழைப்பவர்கள் மட்டும் தான் அவர்களுடைய மனதில் நிரந்தரமாகக் குடியேற முடியும்.

அதற்கு ஒரு உதாரணம் பெருந்தலைவர் காமராசர்.

மகனுக்குப் பெண் பார்க்கும் பெற்றோர் கேட்கும் முதல் கேள்வி,

''பெண்ணுக்கு எவ்வளவு நகை போடுவார்கள்?"

அடுத்த கேள்வி,

"எவ்வளவு வரதட்சணை கொடுப்பார்கள்?"

மாப்பிள்ளை பார்க்கும் பெற்றோர் கேட்கும் முதல் கேள்வி,

''மாப்பிள்ளை என்ன வேலை பார்க்கிறார், எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்?"

குணத்தைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை.

அவர்களைப் பொறுத்தவரை பணம்தான் வாழ்க்கைக்கு அடிப்படை.

குடும்ப வாழ்வுக்கு அடிப்படை அன்பு. அதைப் பற்றி யாரும் சிந்திப்பதேயில்லை.

வேலை தேடுபவர்கள் மனதில் இருக்கும் ஆசையெல்லாம் நிறைய சம்பளம் தரும் கம்பெனியில் வேலை கிடைக்க வேண்டும்.

லௌகீக வாதிகளை விட்டு விடுவோம். ஆன்மீகவாதிகளுக்கு வருவோம்.

"கேளுங்கள், கொடுக்கப்படும்" என்று இயேசு சொல்லியிருக்கிறார்.

மக்களின் பூசைக் கருத்துகளைக் கூர்ந்து கவனித்தால் 

ஒரு கருத்து எல்லோருடைய கருத்துகளிலும் இருக்கும்.

" நினைத்த காரியங்கள் அனுகூலமாகத் தக்கதாக."

இறைவன் நினைப்பது தங்களில் நிறைவேற வேண்டும் என்று ஆசிப்பது தான் உண்மையான செபம்.

"இறைவனின் சித்தம் எங்களில் நிறைவேறத் தக்கதாக,

எங்கள் வாழ்வில் வரும் சிலுவைகளை நாங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்று வாழத்தக்கதாக,


பிறருக்கு உதவி செய்து வாழ வேண்டிய அருள் வரங்கள் கிடைக்கத் தக்கதாக,

எங்களுக்கு நல்ல மரணம் கிடைக்கத் தக்கதாக."

என்ற ஆன்மீக ரீதியிலான கருத்துகளுக்காக பூசை வைப்பவர்கள் பாக்கிய சாலிகள்.

ஆண் குழந்தை பிறக்க வேண்டும்,

தேர்வில் வெற்றி பெற வேண்டும்,

விண்ணப்பித்துள்ள வேலை கிடைக்க வேண்டும்.

திருத்தலங்களுக்குத் திரு யாத்திரை செல்கிறோம், நேர்ச்சைகளை நிறைவேற்ற.

என்ன நேர்ச்சைகள்?

ஆன்மாவைச் சார்ந்தவைகளா? அல்லது ஆன்மீகம் கலக்காத உலகியல் ரீதியானவைகளா?

"எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். பிறந்தால் அவர் குருவாக ஆசைப் பட்டால் நிறைவேற உதவுவோம்."

ஆசை நிறைவேறியது. நன்றி செலுத்த வேளாங்கண்ணிக்குப் போகிறோம்.

நல்லது.

முதலில் பங்குக் கோவிலுக்கு ஒழுங்காகத் திருப்பலிக்குச் சென்று, நல்ல கிறிஸ்தவ வாழ்வு வாழ்வோம்.

அன்னை மரியாள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது நல்ல கிறிஸ்தவ வாழ்வை.

நல்ல கிறிஸ்தவர்களாகத் திருத்தலங்களுக்குச் செல்வோம்.

நாம் கேட்டது கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும் நல்ல கிறிஸ்தவர்களாக வாழ்வோம்.

நேர்ச்சைகளை நிறைவேற்றுவோம், நல்ல கிறிஸ்தவர்களாக.


ஜோக்கிம், அன்னம்மாள் தம்பதியருக்கு முதிய வயது வரை குழந்தை பிறக்கவில்லை.

"இறைவா, எங்களுக்கு ஒரு குழந்தை கொடுங்கள். குழந்தையை இறைப்பணிக்கு அர்ப்பணிப்போம்."

இது அவர்களது நேர்ச்சை.

பெண் குழந்தை பிறந்தது.
மரியாள் என்று பெயரிட்டு, மூன்று வயதிலேயே ஆலயத்தில் வாழ
 விட்டு விட்டார்கள்.

மரியாள் ஆலயத்தில் தான் வளர்ந்தாள்.

இறைவனின் தாயாகும் பாக்கியம் பெற்றாள்.

நாமும் ஆன்மீக ரீதியாக நேர்ந்தால் அது இறைவனின் ஆசீரோடு நிறைவேறும்.

இறைவனை நேசிப்போம், இறையன்பில் வளர.

பிறரை நேசிப்போம்.

அன்புக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.

லூர்து செல்வம்.

Monday, June 9, 2025

"நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது." (மத்தேயு நற்செய்தி 5:14)



"நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது."
(மத்தேயு நற்செய்தி 5:14)

"அப்பொழுது கடவுள், "ஒளி தோன்றுக!" என்றார்; ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார்."
(தொடக்கநூல் 1:3)

அறிவியல் ரீதியாக ஒளி இல்லையேல் உலகில் வாழ்வு இல்லை. 

ஆன்மீக ரீதியாக இயேசு தான் உலகின் ஒளி.

 "உலகின் ஒளி நானே." (அரு.8:12)

"வழியும், உண்மையும், வாழ்வும் நானே."( அரு.14:6)

 இயேசுவே நமது ஆன்மீக வாழ்வு. வாழ்வை அடைவதற்கான வழியும் அவரே. வழிக்கான ஒளியும் அவரே.

இருட்டில் நடந்தால் வழி மாறிப் போக நேரிடும்.

வழி மாறினால் நிலை வாழ்வை அடைய முடியாது.

இயேசுவாகிய வழியில் இயேசு காட்டும் ஒளியில் நடக்க வேண்டும்.

சூரிய ஒளியை சந்திரன் பிரதிபலிக்கிறது.

சந்திரனின் ஒளியில் நடப்பவர்களும் சூரிய ஒளியில் தான் நடக்கிறார்கள்,

ஏனெனில் சூரிய ஒளியின் பிரதிபலிப்புதான் சந்திர ஒளி.

"நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்." என்று நம்மைப் பார்த்து இயேசு கூறுகிறார்.

இயேசு சுயமாக ஒளி.

நாம் சுயமாக ஒன்றுமில்லை. இயேசுவின் ஒளியைப் பிரதிபலிக்கும் போது நாம் ஒளியாக மாறுகிறோம்.

நமது ஒளியில் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் இயேசுவைப் பார்ப்பார்கள்.

"மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது."

ஒளியாகிய நம்மை மலைமேல் இருக்கும் நகருக்கு இயேசு ஒப்பிடுகிறார்.

நாம் பிரதிபலிக்கும் இயேசுவை மற்றவர்களால் பார்க்காமல் இருக்க முடியாது.

நமது வாழ்வில் மற்றவர்கள் இயேசுவைப் பார்ப்பார்கள்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால் நாம் நமது வாழ்க்கையின் மூலம் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கிறோம்.

நற் செய்தியை அறிவிப்பதும், இயேசுவை அறிமுகப் படுத்துவதும் ஒன்றுதான்.

நாம் நமது சுய விளம்பரத்திற்காக மலை மேல் இருக்கும் நகரைப் போல் வாழவில்லை. 

நம்மில் பிரதிபலிக்கும் இயேசுவாகிய ஒளியை அனைவரும் பார்க்க வேண்டும் என்பதற்காக நாம் மலை மேல் இருக்கும் நகரை போல் வாழ வேண்டும்.

இதுவும் ஒரு நற்செய்தி அறிவிப்புப் பணிதான்.

நாம் ஒளியாம் இயேசுவைப் பிரதிபலித்தால் இயேசுவின் என்னென்ன குணங்களை மக்கள் நம்மில் பார்ப்பார்கள்?

இயேசு உலகுக்கே உரிமையாளர்.

ஆனால் அவர் ஏழ்மையை நேசித்தார்.

ஏழையாகப் பிறந்து, ஏழையாக வாழ்ந்து, ஏழையாக மரித்தார்.

தன்னுடைய பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தார்.

சென்ற இடமெல்லாம் அனைவருக்கும் நன்மை செய்தார்.

தன்னைப் பகைத்தவர்களையும் நேசித்தார்.

தனக்குத் தீங்கு இழைத்தவர்களை மன்னித்தார்.

தான் போதித்த நற் செய்தியை அவரே வாழ்ந்து முன் மாதிரிகை காட்டினார்.

பாவிகளை நேசித்தார்.

தனது பாடுகளையும், மரணத்தையும் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக தந்தைக்கு ஒப்புக் கொடுத்தார்.

தன்னைப் பெற்ற தாயை மிகவும் அதிகமாக நேசித்தார்.

இயேசுவின் இத்தனை குணங்களும் நம்மில் பிரதிபலிக்க வேண்டும்.

நம்மைப் பார்ப்பவர்கள் நம்மில் இயேசுவைப் பார்க்க வேண்டும்.

அவர்களும் இயேசுவைப் போல் வாழ நமது வாழ்க்கைக் காரணமாக இருக்க வேண்டும்.

லூர்து செல்வம்.



.