Saturday, January 29, 2022

இறைவனே நமது வீடு.

இறைவனே நமது வீடு.


"அண்ணாச்சி, Good morning."

",Good morning. சொல்லு.''

"சொல்ல வரவில்லை. கேட்க வந்தேன்."

", சரி, கேள்."

"நீங்கள் வீட்டில் இருப்பது வேலைக்குப் போவதற்கா?

அல்லது,

வேலைக்குப் போவது வீட்டிற்குத் திரும்புவதற்கா?"

",உன் கேள்வி புரியவில்லை."

"நீங்கள் பிறந்தது வீட்டில், வாழ்வது வீட்டில். 

வேலை செய்வது அலுவலகத்தில். வேலையால் கிடைக்கும் சம்பளத்தை வீட்டுக்கு கொண்டு வருகிறீர்கள்.

கேள்வி,

அலுவலகத்தில். வேலை செய்ய, வீட்டில் வாழ்கிறீர்களா?

அல்லது,

வீட்டில் வாழ்வதற்காக வேலைக்கு போகின்றீர்களா?"

", வீடு நமக்கு உரியது.

அலுவலகம் நமக்கு உரியது அல்ல. ஆனாலும் வீட்டில் வாழ்வதற்கு வேண்டிய பொருளை அங்குதான் சம்பாதிக்கிறோம்.

இரண்டுமே முக்கியமானதுதான்.

ஆனாலும், பிறந்ததும் வாழ்வதும் வீட்டில் தானே!
அலுவலகத்தில் அல்லவே!

ஆகவே நாம் எங்கே எதைச் செய்தாலும் அது வீட்டில் வாழ்வதற்காகத்தான்!" 

"கேள்விக்கும் பதில்?"

", வாழ்வதற்காக வீட்டுக்கு திரும்புவதற்காகத்தான்  வேலைக்கு போகிறேன்."

" ஆகவே?"

", வீட்டில் வாழ்வதற்காகத்தான் வேலை.

வேலைக்காக வீடு இல்லை.

சரி தம்பி, திடீரென்று இந்த கேள்வியை கேட்பதற்கு காரணம்?"

"அண்ணாச்சி,

வாழ்க்கைக்கு உயிர் அளிக்கும் அன்பு,

குடும்பத்தில் சேர்ந்து வாழ்வதால் கிடைக்கும் மகிழ்ச்சி,

ஒற்றுமை,

ஆறுதல் தரும் வார்த்தைகள்,
 
உண்மையான சுதந்தரம்,

உண்மையான மன்னிப்பு,

நமது முன்னோர்களின் வாழ்க்கை அனுபவங்கள்

போன்ற உண்மையான வாழ்க்கை இன்பங்கள் கிடைப்பது நாம் வாழும் வீட்டில்தான்.

நாம் பிறக்க காரணமாகி, நம்மை ஆசையோடு வளர்த்துவரும்  நமது பெற்றோரும்,

நம்மோடு அன்பைப் பகிர்ந்து வாழும் நமது உடன் பிறந்தவர்களும் வாழ்வது நமது வீட்டில் தான்.

களைப்பைத் தரும் உழைப்பிற்குப் பின் நமக்கு உண்மையான ஓய்வு கிடைக்கும் இடமும் வீடுதான்."

",அதெல்லாம் புரிகிறது. இப்போது என்னிடம் இந்த கேள்வியைக் கேட்க வேண்டிய அவசியம் என்ன?"

"நீங்கள் கையில் பேப்பர், பேனாவுடன் எதை எழுதலாம் என்று யோசித்து கொண்டிருப்பதுபோல தெரிகிறது.

தங்கள் சிந்தனைக்கு சிறிது விருந்து அளிக்கலாம் என்று நினைத்தேன்."

", very good. வா, உட்கார். இருவரும் சேர்ந்தே நீ அளித்த விருந்தை  உண்ணலாம்.

நீ தந்திருப்பது வெறுமனே சிந்தனைக்கு விருந்தல்ல. 
ஆன்மீக விருந்து. ஆன்மா வளர்வதற்கும் வாழ்வதற்குமான விருந்து. 

விருந்தை ரசித்து, ருசித்து உண்போம். 

ஆன்மீக ரீதியாக நமது வீடு எது? நாம் பணி புரியும் அலுவலகம் எது?"

"ஆன்மீக ரீதியாக, நம்மைப் படைத்த இறைவன்தான் நமது வீடு.

உலகில் ஒரு குழந்தை தாயின் வயிற்றில் பத்து மாதங்கள் இருந்துவிட்டு முழு வளர்ச்சி அடைந்தவுடன் பிறப்பது போல,

நாமும் இறைவனது உள்ளத்தில் ஆதியிலிருந்தே கருவாக (idea) இருந்துவிட்டு,

அவர் தீர்மானித்த நேரத்தில் பிறந்தோம்.  

நாம் பிறந்தது இறைவனிடமிருந்துதான்.

ஆகவே அவர்தான் நமது வீடு.

 நாம் பணி புரியும் அலுவலகம் இந்த உலகம்.

அலுவலகத்தில் நமது பணி முடிந்தவுடன் நாம் திரும்ப வேண்டிய வீடு இறைவன்தான்."

", நம்மைப் பெற்றவர் இறைவன்தான். ஆனால் நாம் உலகில்தானே பிறந்தோம்!"

"அது உடல் ரீதியாக.

ஆன்மீக ரீதியாக இவ்வுலகில் பணிபுரிய  வந்த நிகழ்வை பிறப்பு என்கிறோம். 

பணி புரிந்து முடிந்தபின் நமது வீட்டுக்கு,

அதாவது நம்மை படைத்த இறைவனிடம்,

 திரும்பும் நிகழ்வை இறப்பு என்கிறோம்."

",நமது அலுவலகப் பணிக்கு துவக்கமும் உண்டு, முடிவும் உண்டு.

உலகமாகிய   அலுவலகத்தில் நமது பணிதான் என்ன?"

"முழுக்க முழுக்க ஆன்மீகப் பணி.

நமது விண்ணக தந்தையையும் சகோதர சகோதரிகளையும் நேசித்து, இறைவனுக்காக வாழ்வது மட்டுமே நமது பணி."

",இறைவனுக்காக என்றால்?"

"நாம் என்ன செயல் செய்தாலும் அதற்கு ஒரு நோக்கம் கட்டாயம் இருக்கும்.

ஒரு நோக்கமும் இல்லாமல் ஒருவன் செயல் புரிந்தால் அவனைப் பைத்தியம் என்போம்.

நமது இவ்வுலக வாழ்க்கையின் ஒரே நோக்கமாக இருக்க வேண்டியது இறைவனின் மகிமை மட்டுமே.

மூச்சு விடுதல் உட்பட நமது அனைத்து செயல்களையும் இறைவனின் மகிமைக்காகவே செய்ய வேண்டும்." 

'', உலகியலில் அலுவலகத்தில் உழைக்கும்போது நமக்கு உரிய
சம்பளம் பண வடிவில் கிடைக்கிறது அதை அனுபவிப்பதற்காக வீட்டுக்குக் கொண்டு செல்கிறோம்.

ஆன்மீகத்தில் எப்படி?"

"ஆன்மீகத்தில் இறைவனின் மகிமைக்காகச் செய்யப்படும் ஒவ்வொரு செயலுக்கும் இறைவனின் அருள் சன்மானமாகக் கிடைக்கும்.

அந்த அருள் உலகில் நமது ஆன்மீக வாழ்வுக்கு உதவுவதோடு,

நமது விண்ணக வீட்டில் நமக்காக சேர்த்து வைக்கப்படும்.

நாம் ஈட்டும் அருள் அதிகமாக   அதிகமாக, நமக்கான விண்ணக பேரின்பத்தின் அளவு அதிகரித்துக் கொண்டே போகும்.

இறைவனோடு நமக்குள்ள நெருக்கமும் அதிகமாகும்.

 விண்ணக வீட்டில் இறைவன் நமக்குத் தரும் அருளை சேமித்து வைப்பதற்காகத்தான் இவ்வுலகில் ஆன்மீக வாழ்வு வாழ்கிறோம்."

", உலகில் நாம் நமக்காக வாழ்ந்தால்?"

"நமக்காக மட்டும் வாழ்ந்தால் விண்ணக வீட்டில் நமக்காக எதுவும் இருக்காது.

இறைவனுக்காக வாழ்பவர்களுக்கு மட்டுமே 
விண்ணக வீடும், அதன் 
அருட்செல்வங்களும் கிடைக்கும்."

", இவ்வுலகில் நாம் செய்ய வேண்டிய ஒரே பணி

சிந்தனையாலும், சொல்லாலும் செயலாலும் அன்பு செய்வது மட்டுமே.

இவ்வுலகில் நாம் வாழ்வது விண்ணக வீட்டுக்காக மட்டுமே.

இறைவனிடமிருந்து பிறந்த நாம்,

இறைவனுக்காக வாழ்வோம்,

இறைவனுக்காக மட்டுமே வாழ்வோம்.

உலகம் இறையருளை சம்பாதிக்க நாம் பணி புரியும் அலுவலகம் மட்டுமே.

அலுவலக வாழ்வுக்கு Retirement உண்டு.

வீட்டில் வாழ்வது நிரந்தரமானது.

விண்ணுலகில் வாழும் இறைவனே நமது வீடு.

அவர் தரவிருக்கும் பேரின்ப வாழ்வும் நிரந்தரமானது."

லூர்து செல்வம்.

Wednesday, January 26, 2022

நாம் யூதாசைப் போல நடந்து கொள்ளலாமா?

நாம் யூதாசைப் போல நடந்து கொள்ளலாமா?


"தாத்தா, உங்கள ரொம்ப நாளா பார்க்கவே முடியல?"

"ஏன், என்னாச்சி? கண்ணில் ஏதாவது கோளாறா?

கண்டாக்டரிடம் கண்ணைக் காண்பிக்க வேண்டியதுதானே!"

"என் கண்ணில் எந்தக் கோளாறும் இல்லை. நீங்கள் வெளியூருக்குப் போயிருந்தீர்களோ?"

"உள்ளுரிலேயே வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தால் வெளியூருக்குப் போனது மாதிரிதான்.

இப்போ உனக்கு என்ன பிரச்சனை?"

"ரொம்ப நாளா மனதுக்குள்ளே கிடக்கும் ஒரு சந்தேகத்தைத் தீர்த்து வைக்க வேண்டும்."

", என்ன சந்தேகம்?"

"நரகம் இருக்கிறதுதானே?"

", மோட்சம் இருப்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை நரகம் இருப்பதும்.

மோட்சமும், நரகமும் நாம் வாழும் உலகத்தைப் போல இடங்கள் அல்ல. வாழ்க்கை நிலைகள்.

மரணத்துக்குப் பின் முடிவுல்லா காலமும் இறைவனோடு ஒன்றித்து வாழும் பேரின்ப நிலை மோட்சம்.

முடிவுல்லா காலமும் இறைவனைப் பிரிந்து வாழும் பேரிடர் நிலை நரகம்."

"நரகத்திற்கு யார் போவார்கள்?"

", சாவான பாவ நிலையில் மரணிப்பவர்கள் நரகத்திற்குப்
போவார்கள்."

"நமக்குத் தெரிந்த சாவான பாவ நிலையில் உள்ள எல்லோரும்
நரகத்திற்குத்தானே
போவார்கள்?"

", உன் கேள்வியே தவறு. நாம் மனிதர்களின் உடலை மட்டுமே பார்க்க முடியும்.

ஆன்மாவைப் பார்க்க முடியாது.

உனக்கு தெரிந்தவர்களின் ஆன்மா சாவான பாவத்தில் இறந்தது என்று உனக்கு எப்படி தெரியும்?

சம்பந்தப்பட்டவர்களின் ஆன்மாவிற்கும் இறைவனுக்கும் மட்டுமே தெரிந்த விஷயம் உனக்கு எப்படி தெரியும்?"

"பாவ நிலையில் வாழ்கின்றவர்களை நமது கண்ணால் பார்க்கிறோமே!"

",ஒருவன் பாவ நிலையில் வாழ்கிறான் என்று தீர்ப்பிட நமக்கு அதிகாரம் இல்லை.

மனிதர்களின் உள்ளங்களை அறியும் இறைவனுக்கு மட்டுமே அந்த உரிமை இருக்கிறது. 

 "நீங்கள் தீர்ப்புக்குள்ளாகாதபடி தீர்ப்பிடாதீர்கள்." (மத். 7:1)

யூதர்கள் இயேசுவையே "தேவ தூஷணம் சொன்னார்" என்று குற்றம் சாட்டினார்கள். 

மற்றவர்களைப் பாவிகள் என்று நாம் தீர்ப்பிட்டால், நாம் இயேசுவைக் குற்றம் சாட்டிய யூதர்களை விட மோசமானவர்கள் ஆகிவிடுவோம்.

கடவுளின் உரிமையை பறிக்க நமக்கு அதிகாரம் இல்லை.

அதுமட்டுமல்ல, பாவ நிலையில் வாழ்பவர்கள் எல்லாம் அதே நிலையில்தான் மரிப்பார்கள் என்று நமக்கு தெரியாது.

அதுவும் இறைவனுக்கு மட்டுமே தெரியும்.

தாய்த் திருச்சபை மோட்சத்திற்கு சென்ற சிலரின் பெயர்களை புனிதர்களாக வெளியிட்டிருக்கிறது.

ஆனால் நரகத்திற்கு சென்ற யாரின் பெயரையும் வெளியிடவில்லை ."

"உலகப் போர்களின் போது லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தவர்கள் பெயர்கள் நமக்கு தெரியும்.

அவர்கள் நரகத்திற்கு சென்றிருப்பார்கள் என்று கூறினால் அதில் உண்மை இருக்காதா?"

", அதில் உண்மை இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

அவர்கள் கொலைகள் செய்தது பாவம்தான். ஆனால் தங்களது மரண சமயத்தில் தங்கள் பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறதே!"

"யூதாஸ் இயேசுவைக் காட்டிக் கொடுத்தது பாவம்தானே?"

", ஆமா."

"தற்கொலை செய்து கொண்டது பாவம்தானே?"

",ஆமா."

" அப்படியானால் யூதாஸ் நரகத்தில் தானே இருப்பான்?"

"தேவையில்லை.

உனக்கு யூதாஸ் தற்கொலை செய்து கொண்டதுவரைதான் தெரியும்.

அவன் இறந்து கொண்டிருந்த போது அவனது உள்ளத்தில் என்னென்ன எண்ண ஓட்டங்கள்
இருந்தன என்பது உனக்கு தெரியுமா?

செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி இயேசுவிடம் மன்னிப்பு கேட்க வாழ்வின் இறுதி வினாடியில் ஒரு சிறு பகுதியே போதுமே!

A small fraction of a second is enough to feel sorry for our sins and request for God's forgiveness."

"As for Judas, 

the church has never definitively said that Judas

 — or any individual, for that matter — is surely in hell. 

It’s conceivable, I suppose, that at the last moment Judas, filled with remorse, could have repented and sought the Lord’s forgiveness."
(Father Kenneth Doyle)

"அப்படியானால் யூதாஸ் மோட்சத்தில்தான் இருக்கிறான் என்று நம்பலாமா?"

",யாரையும் குற்றவாளி என்று தீர்ப்பிடவே நமக்கு உரிமை இல்லை.

நல்லவிதமாய் நினைப்பதில் தவறில்லை.

யூதாஸ் நரகத்தில் இருக்கிறான் என்பது திருச்சபையின் போதனை அல்ல.

அவன் எங்கு இருக்கிறான் என்பது பற்றியும் திருச்சபை எந்தவித கருத்தும் கூறவில்லை.''

"யூதாஸ் எதற்காக இயேசுவை காட்டிக் கொடுத்தான்?"

'',பணத்தின் மீது உள்ள ஆசையால் தான்." 

"யூதர்கள் இயேசுவைக் கொல்வதற்காகத் தேடினார்கள்.
யூதாஸ் அவர்களுக்கு உதவி செய்தான்.

அப்படியானால் அவரைக் கொல்வதற்காகத்தானே உதவி செய்தான்?"

",கொல்வதற்காக உதவுவது அவனது நோக்கமாக இருந்திருந்தால்,

அவர் மரணத் தீர்வையிடப்பட்டபோது சந்தோசப் பட்டிருப்பான்.

"மாசற்ற இரத்தத்தைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன்" என்று வருந்தி

வெள்ளிக்காசுகளை ஆலயத்தில் எறிந்துவிட்டுப் போயிருக்க மாட்டான்.

 தற்கொலை செய்து கொண்டதுதான் அவன் செய்த தப்பு.

இராயப்பரைப் போல் அவனும் இயேசுவிடம் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும்.

நாமும் பாவம் செய்யும்போது யூதாசை போலவே நடந்து கொள்கிறோம்.

சுய இன்பத்துக்காகவே பாவம் செய்கிறோம்.

ஆனால் நமது பாவம்தான் இயேசுவின் மரணத்திற்கு காரணம் என்பதை மறந்து விடுகிறோம்."

"அப்படியானால் யூதாஸ் பணத்தை நேசித்ததைவிட இயேசுவை அதிகம் நேசித்தான், சரியா?"

", சரி. ஆனால் 

ஒருவன் இரண்டு எஜமானர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது என்ற இயேசுவின் போதனையை மறந்து

ஒரே நேரத்தில் இயேசுவையும், பணத்தையும் நேசித்ததுதான் அவன் செய்த தப்பு.

நமக்குப் பணம் கிடைத்துவிடும், ஆனால் இயேசு எப்படியும் தப்பித்து விடுவார் என்று அவன் நினைத்திருப்பான்.

அவன் நினைத்தபடி நடக்கவில்லை."

"இன்னும் ஒரே ஒரு கேள்வி.

யூதாஸ் நரகத்திற்கு போயிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறீர்கள்.

அப்படியானால் அவன் மோட்சத்திற்கு போயிருப்பான் என்று நம்பலாமா?"

", போவதற்கு வேறு நிலை இல்லை."

"தாத்தா ஏதாவது கூற விரும்புகிறீர்களா?"

",நாம் எல்லோரும் பாவிகள்தான்.

நமது பாவங்களுக்காக மனம் வருந்தி இயேசுவிடம் மன்னிப்பு கேட்போம்.

நம்மை மன்னிப்பதற்கென்றே இயேசு இன்னும் நமது பங்கு குருவின் உருவத்தில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை எப்போதும் நினைவில் கொள்வோம்."

லூர்து செல்வம்.

Saturday, January 15, 2022

இறைவனால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்.

இறைவனால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்.


"தாத்தா, கூப்பிட்டீங்களா?"

", வா. உட்கார். உனக்கு ஒரு பரீட்சை வைக்கப் போகிறேன்."

"பள்ளிக்கூடங்களிலேயே எல்லா பரீட்சைகளையும் தள்ளி வச்சிட்டாங்க."

",அது நான் உனக்கு பரீட்சை வைப்பதற்காகத்தான்."

"பரீட்சைக்கு நான் ரெடி."

"அப்போ, நான் கேள்விகள் கேட்க ஆரம்பிக்கலாமா?"

".ஆரம்பிக்கலாம். முதல் கேள்விக்கு சரியான பதில் கூறி விட்டேன்."

",இப்போதுதான் முதல் கேள்வி.
கிறிஸ்தவர்கள் யார்?"

"கிறிஸ்துவை பின்பற்றுபவர்கள்."

",அப்படின்னா?"

"Followers of Christ."

",மொழிபெயர்க்க சொல்லவில்லை. பதிலை விளக்கமாக சொல்லு."

"கிறிஸ்துவைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டு அவர் சொன்னபடி நடப்பவர்கள்.

அவர் சொன்னதை எல்லாம் வாழ்ந்து காண்பித்தார்.

ஆகவே அவர் வாழ்ந்தபடி வாழ்பவர்கள், 

இன்னும் அழுத்தமாக சொல்ல வேண்டும் என்றால், 

 கிறிஸ்துவாகவே வாழ்பவர்கள்.

கிறிஸ்து + அவன்.

யாரில் நாம் கிறிஸ்துவை பார்க்கிறோமோ அவன்தான் கிறிஸ்தவன்."

",கிறிஸ்து நமக்காக வாழ்ந்தார்.
நாம் யாருக்காக வாழ வேண்டும்?"

"நாம் அவருக்காக வாழ வேண்டும்."

",அவர் வாழ்ந்தபடி வாழ்பவர்கள்தான் கிறிஸ்தவர்கள் என்றாய்.

அவர் நமக்காக வாழ்ந்தார்,
அப்படியானால் நாமும் நமக்காகத்தானே வாழ வேண்டும்?"

''தாத்தா, நாம் அவருக்குள் இருக்கிறோம். மனுக்குலமே அவருக்குள்தான் இருக்கிறது.

நித்திய காலத்திலிருந்தே அவர் நமது ஞாபகமாகவே இருப்பவர்.

நாம் அவருக்காக வாழும்போது அவர் மனதில் வாழும் எல்லோருக்காகவும்தான் வாழ்கிறோம்.

ஆகையினால்தான் இறைவன் மேல் அன்பு உள்ளவன், இறைவனுக்குள் வாழும் தன் பிறன் மீது அன்பு உள்ளவன் ஆகிறான்.

இறையன்பையும், பிறரன்பையும் பிரிக்க முடியாது.

நமக்கு இறைவன் மீது அன்பு இருந்தால்தான் நமக்கு நம்மீது உண்மையான அன்பு இருக்க முடியும்.

இறைவனை நேசிக்காமல் தன்னை மட்டும் நேசிப்பவன் மீட்பு அடைய முடியாது.

மீட்பு அடைய உதவாத சுய அன்பு உண்மையான அன்பு அல்ல.

ஆகவே கிறிஸ்துவுக்காக வாழ்வோம். அதுதான் அவருக்குள் இருக்கும் நமக்கு விண்ணக வாழ்வைத் தரும்." 

",இயேசு கடவுள். அவர் ஏன் மனிதனாகப் பிறந்தார்?" 

"கடவுள் மனிதனைப் பாவ மாசு இல்லாமல் தனது சாயலில் படைத்தார்.

 ஆனால் மனிதன் தன்னைப் படைத்த கடவுளுக்கு விரோதமாகப் பாவம் செய்து அவரது சாயலை இழந்தான்.

அவன் செய்த பாவத்திற்கு பரிகாரம் செய்து 

அவனது பாவத்தை மன்னித்து அவன் இழந்த சாயலை மீட்டுக் கொடுக்கவே கடவுள் மனிதனாகப் பிறந்தார்."

",நாம் இழந்த இறைவனின் சாயலை திரும்பவும் பெற்று விட்டோமா?"

"நாம் ஞானஸ்நானம் பெற்றபோது நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டன. 

அந்த நொடியில் நாம் இழந்த இறைவனின் சாயலை திரும்பவும் பெற்று விட்டோம்.

திரும்ப பெற்ற சாயலை நமது மரணம் வரை இழக்காமல் இருந்தால் நாம் விண்ணக வாழ்வைப் பெறுவோம்.

இடையில் சாவான பாவம் செய்தால், பெற்ற சாயலை இழக்க நேரிடும்.

அந்நிலை ஏற்பட்டால் பாவசங்கீர்த்தனம் செய்து நமது பாவத்திற்கு மன்னிப்புப் பெற்று இறைவன் சாயலை திரும்பவும் பெறலாம்."

", இயேசு என்று சொன்னவுடனே நமது உள்ளத்தில் தோன்ற வேண்டிய காட்சி எது? ஏன்?"

"இயேசு சிலுவையில் தொங்கும் காட்சி.

ஏனெனில் இயேசு சிலுவையில் மரித்ததன் மூலமே நமக்கு பாவ மன்னிப்புக் கிடைத்தது.

சிலுவையின்றி மீட்பு இல்லை."

", மீட்புப் பெற இயேசுவின் சீடனாக இருந்தால் போதாதா?"

"தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்சொல்லாதவன் என் சீடனாயிருக்க முடியாது." என்று இயேசுவே சொல்லியிருக்கிறார்."

",நான் கேட்ட முதல் கேள்வி ஞாபகத்தில் இருக்கிறதா?"

"இருக்கிறது.
'கிறிஸ்தவர்கள் யார்?"

", இப்போது இயேசுவின் வார்த்தைகளின் உதவியைக் கொண்டு இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லு."


"தங்கள் சிலுவையைச் சுமந்துகொண்டு 
கிறிஸ்துவைப் பின் பற்றுகிறவர்கள் மட்டுமே இயேசுவின் சீடர்கள், அதாவது,
கிறிஸ்தவர்கள்."

", அதாவது....."

"தங்கள் சிலுவையைச் சுமக்க ,விரும்பாதவர்கள் உண்மையான கிறிஸ்தவர்களாக வாழ விரும்பாதவர்கள்."

", நாம் சிலுவையைச் சுமப்பது எப்படி?"

"நமக்கு வரும் துன்பங்களை நமது பாவங்களுக்கு பரிகாரமாக ஏற்றுக்கொண்டு  இறைவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.

இயேசு நமது பாவங்களுக்கு பரிகாரமாக அவர் பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு தன்னைப் பலியாக தந்தைக்கு ஒப்புக்கொடுத்தார். 

நாமும் துன்பங்களை சிலுவையாக ஏற்றுக்கொள்ளும்போது இயேசுவின் சாயலை பெறுகிறோம்.

புனித பிரான்சிஸ் அசிசியார், சுவாமி பியோ ஆகியோருக்கு இயேசு தனது ஐந்து காயங்களையும், அவற்றோடு சேர்ந்த வேதனையையும் அன்புப் பரிசாகக் கொடுத்தார்.''

", கேள்விகளுக்கான உனது பதில்களிலிருந்து என்ன பாடம் கற்றுக் கொள்கிறாய்?"

"தங்களுக்கு வரும் துன்பங்களைச் சிலுவையாக ஏற்றுக் கொள்பவர்கள் இறைவனால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்."

லூர்து செல்வம்.






.

Thursday, January 13, 2022

விசுவாசமா? சுயநலமா?

விசுவாசமா? சுயநலமா?



அரசியல் கட்சியில் உறுப்பினராய் இருப்பவர்கள் அடிக்கடி கட்சி மாறுவதைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம்

ஏன் கட்சி மாறுகிறார்கள்?

கட்சி என்றல் அதற்கென்று ஒரு கொள்கை இருக்கும்.

தத்துவப்படி (Theoretically) ஒரு கட்சியின் கொள்கையில் நம்பிக்கை உள்ளவர்கள் தான் அதில் இருப்பார்கள்.

கொள்கையில் நம்பிக்கை போய்விட்டால் அவர்களும் கட்சியை விட்டுப் போய் விடுவார்கள்.

 கொள்கையில் நம்பிக்கை இல்லாதவர்கள் அந்த கட்சியில் இருந்தால் அவர்கள் அவர்களது சுய நலத்திற்காக இருப்பதாக அர்த்தம்.

சுய நலத்திற்கு கட்சி உதவாவிட்டால் அதை விட்டு போய்விடுவார்கள்.

மக்கள் அடிக்கடி கட்சி மாறுவதன் காரணம் இதுதான்.

இப்போது நம்மைப் பார்த்து நாமே ஒரு கேள்வி கேட்போம்.

நாம் கிறிஸ்தவர்களாக இருப்பது கிறிஸ்தவத்தின் மீது உள்ள விசுவாசத்தினாலா, அல்லது சுய நலத்திற்காகவா?

வேறுவிதமாகக் கேட்டால்

கிறிஸ்துவின் திட்டப்படி ஆன்மீக வாழ்வு வாழ்வதற்காகவா,
  அல்லது
 நமது இஷ்டப்படி உடல் சார்ந்த வாழ்வை மட்டும் வாழ்வதற்காகவா?

இது மாதிரியான கேள்வியை பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் மாணவனைப் பார்த்து கேட்பார்,

"நீ பள்ளிக்கூடம் வருவது பாடம் படிப்பதற்கா, அல்லது வெறுமனே நேரத்தைப் போக்குவதற்கா?"

எப்படிப்பட்ட மாணவனை பார்த்து ஆசிரியர் இந்த கேள்வியை கேட்பார்?

பாடம் படிக்காமல் விளையாடிக் கொண்டிருக்கும் மாணவனை பார்த்து.

அதேபோல் தான்,

நாம் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவராக வாழ்ந்தாலும்,

ஆன்மீக வாழ்வில் ஆர்வம் காட்டாமல் லௌகீக வாழ்வில் மட்டும் ஆர்வம் காட்டினால்,

 நம்மை பார்த்து நாமே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும்.

எதற்காக செபம் சொல்லுகிறோம்?

செபம் என்றாலே இறைவனும் நாமும் ஒன்றிப்பதுதான்.

இறைவனும், நாமும் ஒன்றிப்பதற்கு அத்தியாவசியமானது இறைவனுடைய அருள்.(grace)

நாம் இறைவனுடைய அருள் வேண்டி செபிக்காமல் உலகைச் சார்ந்த பொருள் மட்டும் வேண்டி செபித்தால்

 நாம் நமது உலக வாழ்வில் மட்டும் ஆர்வம் காட்டும் சுயநலக்காரர்கள்.

இறைவன் நம்மை படைத்தது முழுக்க முழுக்க அவருக்காக.

நாம் வாழ்வது நமக்காக அல்ல,
 இறைவனுக்காக மட்டுமே.

இறைவனுக்காக மட்டும் வாழ்வது ஆன்மீக வாழ்வு.

 நமக்காக மட்டும் வாழ்வது உடல்சார்ந்த வாழ்வு.

உடலும் அதைச் சார்ந்தவையும் நமக்கு தரப்பட்டிருப்பது நமது ஆன்மீக வாழ்வுக்கு உதவிகரமாக இருக்கத்தான்.

நாம் ஆன்மீக வாழ்வு சார்ந்த பாவ, புண்ணியங்களைப் பற்றி கவலைப்படாமல்,

பாவங்களுக்காக மனஸ்தாபப்பட வேண்டும் என்பதை பற்றியும்,

ஆண்டவருடைய அருள் வரங்களைப் பெற்று ஆன்மீகத்தில் வளர வேண்டும் என்பதை பற்றியும் கவலைப்படாமல்,

உடல் சார்ந்த லௌகீக வாழ்வைப் பற்றி மட்டும் கவலைப்பட்டு செபித்தால்,

நாம் இறைவனுக்கு பயன்படவில்லை, அவரைத்தான் நமக்கு பயன்படுத்துகிறோம்.

இறைவனையே நமது உடல் சார்ந்த வாழ்விற்கு பயன்படுத்த முயற்சிக்கும் நாம் உண்மையிலேயே சுயநலவாதிகள்.

"ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று நாங்கள் ஆண்டுதோறும் வேளாங்கண்ணி கோவிலுக்குப் போகிறோம்.''

"போய்?"

"அசனம் கொடுப்போம். பூசை காண்போம். நன்மை வாங்குவோம்."

"பாவ சங்கீர்த்தனம்?''

பதில் இல்லை.

"நீங்கள் கோவிலுக்குப் போய் புண்ணியம் இல்லை."

ஆன்மாவின் நலன் வேண்டி கோவிலுக்குப் போகாமல்,

வாழ்க்கை வசதிகள் வேண்டியே கோவிலுக்குப் போகின்றவர்கள்,

M.L.A பதவி வேண்டியே ஒரு கட்சியில் இருப்பவர்களைப் போன்றவர்கள்.

இவர்கள் பதவி கிடைக்காவிட்டால் கட்சியை விட்டு போய் விடுவது போல,

அவர்கள் கேட்டது கிடைக்காவிட்டால் கடவுளை மறந்து விடுவார்கள்.

வாழ்க்கை வசதிகள் எதுவும் இல்லாவிட்டாலும்,

ஆண்டவருக்காக மட்டும் வாழ்பவனே உண்மையான கிறிஸ்தவன்.

லூர்து செல்வம்.

Wednesday, January 12, 2022

இன்றும் இயேசு நம்மோடு வாழ்கிறார்

இன்றும் இயேசு நம்மோடு வாழ்கிறார்.

சர்வ வல்லப கடவுளாகிய இயேசு பாவிகளை மீட்பதற்காகவே மனிதனாய்ப் பிறந்தார்.

மீட்பு பாவங்களுக்காக பரிகாரம் செய்வதிலும், பாவங்களை மன்னிப்பதிலும் அடங்கியிருக்கிறது.

இயேசு நமது பாவங்களுக்குப் பரிகாரமாக தன்னைத் தானே சிலுவையில் பலியாக தந்தைக்கு ஒப்புக் கொடுத்தார்.

பாவிகளின் பாவங்களை மன்னித்தார்.

"இது என் சரீரம்"

"இது என் இரத்தம்"

 என்ற வார்த்தைகளின் மூலம்

 அப்பத்தையும், இரசத்தையும் தனது சரீரமாகவும், இரத்தமாகவும் மாற்றி

 அப்போஸ்தலர்களுக்கு உணவாக அளித்தார்.

மனித குலத்தின் மீட்புக்காக மனிதனாகப் பிறந்த இயேசு செய்தவை:

1.நற்செய்தி அறிவித்தல்.

2.தன்னைத் தானே தந்தைக்கு பலியாக ஒப்புக்கொடுத்து, நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்தல்.

3.மனிதர்களின் பாவங்களை மன்னித்தல்.

4.தன்னைத் தானே மக்களுக்கு உணவாக அளித்தல்.

இயேசு உலகில் முப்பத்திமூன்று ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார்.

தான் விண்ணுலகம் எய்தியபின் இதே செயல்களை உலகம் முடியும் வரை தொடர்ந்து செய்யவே குருக்களை ஏற்படுத்தினார்.

அவர் முதன்முதல் குரு பட்டம் கொடுத்தது தனது அப்போஸ்தலர்களுக்கு.

அப்போஸ்தலர்கள் தங்களது வாரிசுகளுக்கு குருப் பட்டம் கொடுத்தார்கள்.

இன்று நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் கத்தோலிக்கத் திருச்சபையின் குருக்கள் யாவரும் அப்போஸ்தலர்களின் வாரிசுகளே.

இயேசு தான் எதற்காக உலகத்திற்கு வந்தாரோ அந்த செயல்களை,

அதாவது,

1.நற்செய்தி அறிவித்தல்.
2. பாவப் பரிகாரப் பலியாக தன்னையே ஒப்புக் கொடுத்தல்.
3.மனிதர்களின் பாவங்களை மன்னித்தல்.
4.தன்னைத் தானே மக்களுக்கு உணவாக அளித்தல்

ஆகிய செயல்களை செய்ய தனது அப்போஸ்தலர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.

அப்போஸ்தலர்கள் இயேசுவின் பிரதிநிதிகள்.

அவர்களும் நற்செய்தி அறிவிக்க வேண்டும்,

திருப்பலி ஒப்புக் கொடுக்கவேண்டும்,

பாவங்களை மன்னிக்க வேண்டும்.

இயேசுவை மக்களுக்கு உணவாக அளிக்க வேண்டும்.

இயேசு சிலுவையில் இரத்தம் சிந்தி தன்னை பலியாக ஒப்புக்கொடுத்தார்.

அப்போஸ்தலர்கள் அப்பத்தை
இயேசுவின் உண்மையான உடலாகவும், இரசத்தை இயேசுவின் உண்மையான இரத்தமாகவும் மாற்றி பலி ஒப்புக் கொடுத்தார்கள்.

தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்த அதே இயேசுவையே அப்போஸ்தலர்கள் பலியாக ஒப்புக் கொடுத்தார்கள்.

பலிப் பொருளாகிய இயேசுவையே மக்களுக்கு உணவாக கொடுத்தார்கள்.

இயேசு செய்ததை அப்படியே செய்த அப்போஸ்தலர்களைப் போலவே நமது குருக்களும் செய்கிறார்கள்.

நமது குருக்கள் நற்செய்தி அறிவிக்கிறார்கள்,

திருப்பலி ஒப்புக் கொடுக்கிறார்கள்,

பலிப்பொருளாகிய இயேசுவை நமக்கு உணவாக தருகிறார்கள்.

நமது பாவங்களை மன்னிக்கிறார்கள்.

ஒவ்வொரு குருவிலும் நாம் இயேசுவையே காண வேண்டும்.

இயேசு 2022 ஆண்டுகளுக்கு முன்பு என்ன செய்தாரோ அதையே இன்று நமது குருக்கள் மூலம் செய்கிறார்.

இயேசு கடவுள்.

கடவுள் செய்யும் ஒவ்வொரு செயலும் செயலும் ஆன்மீக வாழ்வைச் சார்ந்ததே.

இயேசு உலகில் வாழ்ந்த முப்பத்திமூன்று ஆண்டுகளில் 30 ஆண்டுகள் பெற்றோருக்கு கீழ்ப்படிந்து நடந்தார்.

பொது வாழ்வுக்கு வந்த மூன்று ஆண்டுகளில் 

இயேசு நற்செய்தி அறிவித்தார், பாவங்களை மன்னித்தார், அப்போஸ்தலர்களுக்குத் தன்னையே உணவாக அளித்தார், தன்னையே பாவப் பரிகாரப் பலியாக ஒப்புக் கொடுத்தார். 

இயேசு செய்த இதே பணியைத்தான் நமது குருக்களும் செய்கிறார்கள்.

நமது பங்கு குருவானவரை எடுத்துக் கொள்வோம்.

மீட்புப் பணி மட்டுமே அவரது பணி.

இயேசு அறிவித்த அதே நற்செய்தியை அவரும் அறிவிக்கிறார்.

 இயேசு கொடுத்த அதிகாரத்துடன் நமது பாவங்களை மன்னிக்கிறார்.

தினமும் நமக்காக திருப்பலி நிறைவேற்றுகிறார்.

இயேசுவை நமக்கு உணவாக தருகிறார்.

இயேசுவை போலவே அவரும் நமது இல்லங்களை சந்தித்து நமக்கு ஆன்மீக ஆலோசனைகள் கூறுகிறார்.

நாம் அவரில் இயேசுவைக் காணவேண்டும்.

முழுக்க முழுக்க அவரை நமது ஆன்மீக வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நமது ஆன்மாவின் நிலைபற்றி அவரிடம் மனம் திறந்து பேச வேண்டும்.

 அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்து நமது பாவங்களுக்கு மன்னிப்பு பெற்று,

பரிசுத்தத்தனத்தில் வளர வேண்டும்.

அவர் நிறைவேற்றும் திருப்பலியில் கலந்துகொண்டு அவரது கையிலிருந்து இயேசுவை நமது ஆன்மீக உணவாகப் பெறவேண்டும். 

அவரது ஆன்மீக வழி காட்டுதல்படி நடந்து,  

நித்திய பேரின்ப வீட்டிற்குள் நுழைய வேண்டும்.

நமது பங்குத் தந்தையின் உருவத்தில் இயேசுவே  நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

லூர்து செல்வம்.

Monday, January 10, 2022

"உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்சென்றனர்." (மாற்கு. 1:18)

"உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்சென்றனர்." (மாற்கு. 1:18)

சீமோனுக்கும், அவருடைய சகோதரர் பெலவேந்திரருக்கும்
மீன் பிடிக்கும் தொழில்தான் இவ்வுலக வாழ்க்கைக்கு ஆதாரம்.

மீன் பிடிக்கும் தொழிலுக்கு வலைகள் ஆதாரம்.

ஆண்டவர் அழைத்தவுடன் வலைகளை, அதாவது, தங்கள் 
வாழ்க்கை ஆதாரத்தை விட்டு விட்டு ஆண்டவர் பின் சென்றார்கள்.

அவர்களுக்கு ஏற்கனவே ஆண்டவரை தெரியும்.

பெலவேந்திரருக்கு அவரை அறிமுகப்படுத்தியவர் ஸ்நாபக அருளப்பர்.

சீமோனுக்கு அவரை அறிமுகப்படுத்தியவர் பெலவேந்திரர்.

இப்போது ஆண்டவர் அழைத்த உடனே அவரைப் பின் சென்றார்கள்.

இவ்வுலக வாழ்க்கைக்கு ஆதாரமாக இருந்த மீன் பிடிக்கும் தொழிலை விட்டு விட்டு

 மறு உலக வாழ்க்கைக்கு ஆதாரமான ஆண்டவரை பின்பற்றினார்கள்.

உடல் சார்ந்த வாழ்வின் ஆதாரத்தை விட்டு விட்டு,

ஆன்மாவைச் சார்ந்த வாழ்வின் ஆதாரத்தைப் பற்றிக் கொண்டார்கள்.

நமது ஆன்மீக வாழ்வை மையமாக வைத்து இதைப்பற்றி சிறிது தியானிப்போம்.

நமது உடலையும், ஆன்மாவையும் படைத்தவர் கடவுளே.

எதை எதற்காக படைத்தார் என்பதை தெரிந்து கொண்டால்

சீமோனும் பெலவேந்திரரும் செய்த செயல் 

நமக்குப் புரிவதோடு, வழிகாட்டியாகவும் இருக்கும்.

ஆன்மா அழியாதது. இவ்வுலக வாழ்க்கை முடிந்தவுடனே விண்ணுலக வாழ்க்கைக்கு செல்ல வேண்டியது. 

ஆனால் நமது உடல் நமது இவ்வுலக வாழ்க்கையின் முடிவில் மண்ணுக்கு திரும்ப வேண்டியது.

ஆன்மாவை விண்ணுலக வாழ்க்கைக்காகவும்,

உடலை இவ்வுலகில் ஆன்மீக வாழ்வுக்கு உதவிகரமாக இருப்பதற்காகவும் கடவுள் படைத்தார்.

உடலை ஆன்மாவுக்காகப் படைத்தார்

ஆன்மாவின் பணியாள்தான் உடல். 

ஆகவே ஆன்மீக வாழ்வுக்காக உடல் தன்னையே தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்.

ஆன்மீக வாழ்வு ஆண்டவருக்காக மட்டுமே.

ஆகவே நமது ஆன்மா வாழ்வதற்காக நமது உடலை நாம் தியாகம் செய்ய வேண்டும்.

ஆனால் உடல் வாழ்வதற்காக ஆன்மாவைத் தியாகம் செய்யக் கூடாது.

இரண்டு சீடர்களும் உடல்சார்ந்த மீனவர் தொழிலை தங்கள் ஆன்மாவிற்காக தியாகம் செய்துவிட்டு 

ஆன்மாவைச் சார்ந்த இறைப் பணிக்காக தங்களை அர்ப்பணித்தார்கள்.

நாமும் அவர்களை பின்பற்ற வேண்டும் என்பது நமது ஆண்டவரின் விருப்பம்.

இறைவன் அழைக்கிறார் என்றால் சீடத்துவ வாழ்வுக்கு,

அதாவது, இயேசுவின் சீடர்களாகப் பணிபுரிய அவர் அவர் அழைக்கிறார் என்பது பொருள்.

ஞானஸ்நானம் பெற்று, கிறிஸ்துவின் நற்செய்தியை ஏற்றுக் கொள்கிறவர்கள் அனைவரும் அவருடைய சீடர்களே.

அதாவது கிறிஸ்தவர்கள் அனைவரும் கிறிஸ்துவின் சீடர்களே.

நம்மை சீடர்களாக வாழ இயேசு அழைக்கிறார்.

சீடர்களாக இருப்பது வேறு, வாழ்வது வேறு.

இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக் கொள்பவர்கள் அனைவரும் அவரது சீடர்களே.

ஆனால் அவர்களில் நற்செய்தியை வாழாதவர்களும் இருக்கிறார்கள்.

நற்செய்திப்படி வாழாவிட்டால் அதை அறிந்தும் பயனில்லை.

சீமோனையும், பெலவேந்திரரையும் அழைத்ததுபோல நம்மையும் 
நற்செய்திப்படி வாழ இயேசு அழைக்கிறார்.

"நற்செய்தியின்படி வாழுங்கள்" என்று அழைத்துவிட்டு 

அப்படி வாழ்கின்றோமா இல்லையா என்பதை இயேசு மேற்பார்வையிட்டுக் கொண்டிருப்பதில்லை.

அழைப்பது மட்டுமல்ல, அழைத்தபடி வாழ ஒவ்வொரு வினாடியும் நம்முடனே இருந்து நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.

நடைமுறை வாழ்வில் நம்மை நற்செய்தியின்படி வழி நடத்த 
இயேசு எப்படி செயல்படுகிறார் என்பதை 

நமது கடந்தகால வாழ்க்கையை திரும்பி பார்த்தாலே புரியும்.

காலையில் எழுந்தவுடன் நமது உள்ளக் காதைக் கொண்டு கூர்ந்து கேட்டால்

 ஆண்டவர் நம்மை பார்த்து

 ''இன்றைய நாளை எனக்கு ஒப்புக் கொடுத்துவிட்டு உனது பணிகளைச் செய்." என்று கூறுவது கேட்கும்.

நாமும் அதை ஏற்றுக்கொண்டு 
 அன்று விடுகிற மூச்சு,
 உண்கிற உணவு, 
உடுத்துகிற உடை 
உட்பட அனைத்து செயல்களையும் காலையிலேயே ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்து விட வேண்டும்.

ஆண்டவருக்காகச் செய்யப்படும்  ஒவ்வொரு செயலும் செபமாக மாறிவிடும்.

ஒவ்வொரு செயலையும் செய்யும்போது ஆண்டவர் நம்மோடு இருந்து அதை ஆசீர்வதித்துக் கொண்டிருப்பார். 

ஏனெனில் அது அவருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட செயல். 

ஒவ்வொரு செயலையும் ஆண்டவருக்காக செய்யும்போது நம் வாழ்வில் பாவம் குறுக்கிட முடியாது.

ஏனெனில் நம்மால் ஆண்டவருக்காக பாவம் செய்ய முடியாது.

அதுமட்டுமல்ல, அவரது அழைப்பை ஏற்று,

  நாம் வாழும் நாளை, 

நம்மோடு சேர்த்து அவருக்கு ஒப்புக் கொடுத்து விட்டால்

அவருடையதை எப்படிப் பேணிக் காப்பது என்று அவருக்குத் தெரியும்.

நமது உள்ளத்தை தூய எண்ணங்களால் நிறப்புவார்.

நாம் செல்லும் இடமெல்லாம் நம்மோடு இருந்து தனது நற்செய்தியால் நம்மை ஆன்மீகப் பாதையில் வழி நடத்துவார்.

"உன்னை நேசிப்பதுபோல் உன் பிறனையும் நேசி" என்ற நற்செய்தி வசனத்தை நமது உள்ளத்தில் ஒலித்துக் கொண்டேயிருப்பார்.

நம்மை பிடிக்காதவர் ஒருவர் நமக்கு எதிர்ப்பட்டால் நமக்கு மனதில் வெறுப்புணர்ச்சி தோன்றுவது போல் தெரியும்.

 உடனே உள்ளத்தில் இயேசுவின் குரல் ஒலிக்கும்:

"உன்னை வெறுப்பவர்களை நேசி. உனக்குத் தீமை செய்ய விரும்புவர்களுக்கு நன்மை செய்.

நீ உனது பாவத்தால் என்னை மனம் நோக செய்திருந்தாலும் நான் உன்னை நேசிக்கிறேன்.

உன்னை மீட்கவே எனது உயிரைப் பலியாகக் கொடுத்தேன்.

நீ எனது சீடன் என்பதை மறந்துவிடாதே."

ஆண்டவரின் சந்நிதானத்தில் வாழ்பவர்களுக்கு ஆண்டவரின் குரல் தெளிவாக கேட்கும்.

இது அவரை பின்பற்ற அவர் விடுக்கும் அழைப்பு.

அழைப்பை உடனே ஏற்பது நமது கடமை.

பட்டினியாக இருக்கும் ஒருவன் நமக்கு எதிர்ப்பட்டால், 

"இதோ பட்டினியாக உன் முன் நிற்பது நான்தான். எனக்கு உணவு கொடு."

என்று இயேசுவின் குரல் நமக்கு கேட்கும்.  

உடனே அவருக்கு உணவு அளிப்பது நமது அன்பின் செயல். 

இவ்வாறு நமது வாழ்நாள் முழுவதும் இயேசு நம்மோடே இருந்து நமக்கு அழைப்புகள் விடுத்துக் கொண்டேயிருப்பார்.

நமது சொந்த விருப்பு வெறுப்புகளை தியாகம் செய்துவிட்டு 

இயேசுவின் அழைப்புகளை ஏற்று வாழ்ந்தால்தான் நாம் அவரது சீடர்கள்.

  பெயரளவிற்கு இயேசுவின் சீடர்களாக இருந்தால் மட்டும் போதாது.

சீடர்களாக வாழ வேண்டும்.


சீடர்களாய் வாழ்வதால் நாம் இயேசுவின் நற்செய்தியின்படி  வாழ்வதோடு 

நமது முன்மாதிரிகையின் மூலம் மற்றவர்களுக்கும் நற்செய்தியை அறிவிக்கிறோம்.

லூர்து செல்வம்.

Sunday, January 9, 2022

இயேசுவோடு வாழ்வோம்.

  இயேசுவோடு வாழ்வோம்.


ஒவ்வொரு நாளும் நாம் மூன்று முறை உணவு உண்பதற்கும்,

திருவிழா சமயங்களில் மதிய உணவு உண்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

தினமும் உண்பது வழக்கமான உணவு.

திருவிழா சமயங்களில் உண்பது விசேசமான, விழாவை முழுமையாக அனுபவிப்பற்கென்றே தயாரிக்கப்பட்ட உணவு.

வழக்கமான உணவை விட, திருவிழா உணவை ருசித்து உண்போம்.

தினமும் இறைவனைத் தியானிக்கிறோம்,

அவரை நோக்கி செபிக்கிறோம்,

திருப்பலியில் கலந்து கொள்கிறோம்.

இவற்றையெல்லாம் எந்த உணர்வோடு செய்கிறோம்?

தினமும் உணவு உண்பது போல் வழக்கமான செயல் போல் செய்கிறோமா?

அல்லது திருவிழா உணவை உண்பது போல் உள்ளக் கிளர்ச்சியுடன், ஈடுபாட்டுடன் செய்கிறோமா?

திருமண தம்பதிகளை வாழ்த்திய ஒருவர்,

"முதல் நாள் போல் எந்நாளும் இருக்க வாழ்த்துகிறேன்!" என்றார்.

இறைவனை நேரடியாக பார்க்கும் பாக்கியத்தை நாம் பெற்றால் அப்போது அவரோடு எப்படி பேசுவோமோ

அதே போல்தான் இறைவனோடு ஒவ்வொரு முறையும் பேச வேண்டும்.

உலக வரலாற்றில் மிக முக்கியமாக நிகழ்வு 

நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமது பாவங்களுக்கு பரிகாரமாக தன்னையே சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுத்த நிகழ்வுதான்.

அதே பலியைத்தான் இன்றும் ஒவ்வொருவரும் நாம் குருவோடு இணைந்து 

பரம தந்தைக்கு ஒப்புக்கொடுக்கிறோம்.

அன்று சிலுவை அடியில் நின்றுகொண்டு தனது திருமகனைப் பார்க்கும்போது

 அன்னை மரியாளின் மனதில் என்ன உணர்வுகள் இருந்தனவோ 

அதே உணர்வுகள் இன்று திருப்பலியில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும்.

அதேபோல் இருக்க முயற்சியாவது செய்ய வேண்டும்.

அதற்காகத்தான் திருப்பலி ஒப்புக்கொடுக்கும் பீடத்திற்குப் பின்னால் நாம் பார்ப்பதற்காக பாடுபட்ட சுருபம் (Crucifix) வைக்கப்பட்டிருக்கிறது. 

நடுப்பலியில் எழுந்தேற்றத்தின்போது குருவின் கையினால் உயர்த்தப்படும் ஆண்டவரின் உடலும், ரத்தமும் 

நமது கண்கள் திருச்சிலுவையைப் பார்க்கும் நேர்கோட்டில்தான் இருக்கும்.

இயேசுவின் திரு உடலாக மாற்றப்பட்ட அப்பத்தை நாம் பார்க்கும்போது  

அதற்கு பின்னால் சிலுவையில் தொங்கும் ஆண்டவரின் முகத்தையும் பார்த்தால்

அன்னை மரியாளின் மனதில் தோன்றிய அதே உணர்வுகள் நமது மனதில் தோன்ற வாய்ப்பு இருக்கிறது.

அந்த வாய்ப்பை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

அதே உணர்வுகள் தோன்ற அன்னை மரியாளைப்போல் நாம் புனிதர்கள் அல்ல என்பது உண்மைதான்.

ஆனாலும் முயற்சி செய்ய முடியும்.

ஒவ்வொரு திருப்பலியிலும் நாமும், குருவானவரும், சிலுவையில் மரித்த ஆண்டவரோடு இணைய வேண்டும்.

(We , together with the priest, must get united with our Crucified Lord during Mass.)

இந்த இணைவு உண்மையாகவே உணர்ச்சிகரமாக இருக்க வேண்டும்.

இந்த உணர்வு நாம் பங்கேற்கும் ஒவ்வொரு திருப்பலியின் போதும் நம்மிடம் இருக்க வேண்டும்.

நடுப் பூசையின்போது முழுமையான உணர்வுடன் நமது மனது நமக்காக மரித்த ஆண்டவரது மனதுடன் இணைய வேண்டுமென்றால்,

பூசையின் ஆரம்பத்திலிருந்தே பீடத்தில் நிற்கும் குருவானவரோடு இணைந்தே திருப்பலியில் கலந்து கொள்ள வேண்டும்.

நமது கண்கள் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை திருப்பலி ஒப்பு கொடுக்கப்படும் பீடத்தின் மீது இருக்க வேண்டும்.  

பராக்குக்கும், வேறு சிந்தனைகளுக்கும் இடம் கொடுக்காமல்,

முற்றிலும் குருவானவரோடு இணைந்து திருப்பலியை ஒப்புக் கொடுத்தால்தான் அதன் முழுப்பலனையும் அடைய முடியும்.

திருப்பலியில் ஆண்டவரோடு முழுவதுமாக இணைய வேண்டுமென்றால் நமது ஆத்மா சாவான பாவ மாசின்றி இருக்க வேண்டும்.

தேவைப்பட்டால் பாவசங்கீர்த்தனம் செய்துவிட்டு திருப்பலியில் கலந்து கொள்ள வேண்டும்.

ஏதோ பொதுக்கூட்டத்திற்கு போவதுபோல் திருப்பலிக்கு வரக்கூடாது.

திருப்பலியின் போது வாசிக்கப்படும் பைபிள் வாசகங்கள் மூலமும்,

குருவானவருடைய பிரசங்கத்தின் மூலமும் இறைவன் நம்மோடு பேசுகிறார்.

அவர் நம்மோடு பேசுவது அவர் தரும் அறிவுரைகளின்படி நடப்பதற்காகத்தான்.

மூன்று ஆண்டுகள் நற்செய்தி அறிவித்த பின்பு தான் இயேசு உலகிற்கு எதற்காக வந்தாரோ அதை நிறைவேற்றினார்.

அவர் உலகிற்கு வந்தது நமது பாவங்களுக்குப் பரிகாரமாக தன்னையே பலியாக ஒப்புக் கொடுப்பதற்காகத்தான்.

 பைபிள் வாசகங்களையும் குருவானவரின் பிரசங்கத்தையும் கேட்டபின் பலிக்கு வருவது,

ஆண்டவரோடு மூன்று ஆண்டுகள் பயணித்த பின்,

அவரோடு கல்வாரி மலைக்கு வருவதற்குச் சமம். 

நமது பாவங்களைத்தான் சிலுவையாகச் சுமந்து,

அவற்றுக்குப் பரிகாரமாகத்தான் அதில் மரித்தார் என்ற உணர்வுடன் திருப்பலியில் கலந்து கொண்டால்,

இந்த உணர்வு திருப்பலியின்போது மட்டுமல்ல நாள் முழுவதும் இருந்தால் நாம் பாவமே செய்யமாட்டோம்.

உண்மையாக பக்தி உணர்வோடு இல்லாமல் வெறும் பழக்கத்திற்காக திருப்பலி கண்டால் அதனால் நமக்கு ஆன்மீகப் பலன் எதுவுமில்லை.

திருப்பலியை வழக்கமான நிகழ்வைப் போல் காண்பதால் நமக்கு எந்த பலனும் கிடைக்காது.

 திருப்பலியில் உணர்வுப் பூர்வமாக, முழு ஈடுபாட்டுடன் கலந்து கொண்டால்தான் பலன் உண்டு.

திரு விருந்தின்போது நாம் உண்பது உண்மையாகவே இயேசு என்ற உணர்வுடன் உண்ண வேண்டும்.

உணர்வு பூர்வமாக அவரோடு உரையாட வேண்டும்.

உண்மையான தியான அமைதியோடு அவரது குரலுக்கு செவி சாய்க்க வேண்டும்.  

நாள் முழுவதும் என்ன செய்தாலும் அவர் நம்முடன் இருக்கும் உணர்வோடு செய்ய வேண்டும்.

அப்படிச் செய்தால் நாம் செய்யும் எல்லா செயல்களும் நற்செயல்களாகவே இருக்கும்.

லூர்து செல்வம்.

Friday, January 7, 2022

இறைமகன் ஏன் மனுமகன் ஆனார்?

இறைமகன் ஏன் மனுமகன் ஆனார்?

"தாத்தா, நான் கேட்கும் கேள்விகளுக்கு ஒரே வார்த்தையில் பதில் கூறுங்கள்.

இறைமகன் ஏன் மனிதனாகப் பிறந்தார்?"

", மன்னிக்க."

"இயேசு மூன்று ஆண்டுகள் போதித்த நற்செய்தியின் சுருக்கம்? 

",மன்னிப்பு."

"இயேசு ஏன் பாடுகள் பட்டார்?"

",.மன்னிக்க"

"இயேசு ஏன் சிலுவையில் மரித்தார்?"

",மன்னிக்க."

"இயேசு ஏன் தனது அப்போஸ்தலர்களை உலகெங்கும் அனுப்பினர்?"

",மன்னிக்க."

"நம்மிடையே குருக்கள் ஆயர்கள் ஆகியோர் எதற்காக வாழ்கின்றார்கள்?"

".மன்னிக்க."

"நமது ஆன்மாவின் இரட்சண்யம் எதில் அடங்கியிருக்கிறது?"

", மன்னிப்பில்."

" அடுத்த கேள்விக்கு விளக்கமான பதில்.

இயேசு பிறந்த அன்று வானதூதர்கள்,

" விண்ணுலகில் இறைவனுக்கு மகிமையும், பூவுலகில் நன்மனதோருக்கு சமாதானமும் உண்டாகுக."

என்றுதானே பாடினார்கள். மன்னிக்க என்று சொல்லவில்லையே.

உங்கள் பதிலில் சமாதானம் என்ற வார்த்தை வரவில்லையே, ஏன்?"

",இப்போ நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்.

சமாதானம் என்றால் என்ன?"

"இரண்டு நண்பர்களுக்கு இடையே சுமுகமான உறவு இருந்தால் அவர்களுக்கு இடையே நிலவுவது சமாதானம்."

",எப்போது சமாதானம் கெடும்?"

"இருவரில் ஒருவர் மற்றவர் மனதை நோகச் செய்துவிட்டால் அவர்களுக்கு இடையே நிலவிய சமாதானம் கெடும், அதாவது உறவு முறியும்."

",நமக்கும் இறைவனுக்கும் இடையே நிலவும் சமாதான உறவு எப்போது முறியும்?"

"நாம் இறைவனுடைய மனதை நம்முடைய பாவத்தினால் நோகச் செய்யும்போது அவரோடு நமக்கு இருக்கும் சமாதான உறவு முறியும்."

", முறிந்த உறவை மீண்டும் ஏற்படுத்த வேண்டுமென்றால் 

இறைவன் நமது பாவங்களை மன்னிக்க வேண்டும்.

அதற்காகவே இயேசு பிறந்தார்.

மன்னிப்பு இன்றி சமாதானம் இல்லை."

"உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்.

 விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான்,"

என்றுதான் இயேசு தனது சீடர்களிடம் கூறினார்.

இது மன்னிப்பு எங்கே வருகிறது?"


", இயேசுவின் நற்செய்தியே மன்னிப்பின் செய்திதான்.

 ஞானஸ்நானம் பெறுவதே பாவ மன்னிப்பு பெறுவதற்காகத்தான்.

ஆன்மாவின் பாவங்கள் மன்னிக்கப் படும்போதுதான் அதற்கு மீட்பு கிடைக்கிறது."

''அப்படியானால் கிறிஸ்தவனையும் மன்னிப்பையும் பிரிக்க முடியாதா?"

",கடவுள் நமது பாவங்களை மன்னிப்பது போல பிறருடைய குற்றங்களை மன்னிப்பவன்தான் உண்மையான கிறிஸ்தவன்.

மன்னிக்க மனம் இல்லாதவன் கிறிஸ்தவன் அல்ல.

பிறரை மன்னிப்பவனுக்கு மட்டுமே 
கடவுளிடம் மன்னிப்பு கேட்க உரிமை உண்டு."

"கடவுள் நம்மை எத்தனை முறை மன்னிப்பார்?"

", அதற்கு கணக்கே கிடை யாது.

அவர் அளவற்ற அன்பு உடையவர்.
அவரது மன்னிப்புக்கும் அளவே கிடையாது.

நாம் எத்தனை கோடி தடவை மன்னிப்பு கேட்டாலும்,

அத்தனை கோடி தடவையும் மன்னிப்பார்."

"எப்படிப்பட்ட பாவங்களை மன்னிப்பார்?"

"எல்லா பாவங்களையும், 

அவை பெரியவையோ, சிறியவையோ,

பாவத்தின் தன்மையைப் பார்க்காமல் மன்னிப்பார்.

கோடிக் கணக்கான மனிதர்களை கொலை செய்துவிட்டு, அதற்காக மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டாலும் மன்னிப்பார்.

தன் மகனைக் கொன்றவர்களையே மன்னித்தார்.

 ஆண்டுக் கணக்காக பாவம் செய்தவர்களையும் ஒரு விநாடியில் மன்னிப்பார்."

"நாமும் அப்படித்தான் மன்னிக்க வேண்டுமா?"

",ஆமா. அயலானை மன்னிக்காமல் நாம் அவருக்குச் செலுத்தும் காணிக்கைகளை அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார்.

நாம் திருப்பலி செலுத்துமுன் முதலில் நமது அயலானை மன்னிக்க வேண்டும்.

அயலான் மீது வன்மம் வைத்துக் கொண்டு, நாம் எத்தனை முறை திருப்பலி ஒப்புக் கொடுத்தாலும் பயனில்லை.

"நீ பீடத்தின்மேல் காணிக்கை செலுத்த வரும்பொழுது, 

உன் சகோதரனுக்கு உன்மீது மனத்தாங்கல் இருப்பதாக அங்கே நினைவுற்றால்,

அங்கேயே, பீடத்தின்முன், உனது காணிக்கையை வைத்துவிட்டு,

 முதலில் போய் உன் சகோதரனோடு சமாதானம் செய்துகொள். 

பின்னர் வந்து, உன் காணிக்கையைச் செலுத்து"
(மத். 5:23, 24)

என்று நமது ஆண்டவரே கூறியிருக்கிறார்.

மன்னிப்பு இன்றி பலி ஒப்புப் கொடுப்பது, ஓட்டைப் பானைக்குள் 
தண்ணீர் ஊற்றுவதுபோல.

எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் ஒரு சொட்டுக்கூட பானைக்குள் நிற்காது.

இறைவன் அருள் நம்மில் தங்க வேண்டும் என்றால் நம் மனதில் யார் மீதும் வன்மம் இருக்க கூடாது.

வான தூதர்கள் 'நல்மனது உள்ளவர்களுக்கே சமாதானம்' என்று பாடினார்கள்.

மன்னிக்கத் தெரியாத மனது நல்மனது அல்ல."

"அரசாங்கம் கிறிஸ்தவர்களுக்கு எதிராக செயல்படும் போது நாம் அதை எதிர்த்து போராட்டம் செய்ய வேண்டுமா அல்லது மன்னிக்க வேண்டுமா?"

"ஒரு கன்னத்தில் அறைபவனுக்கு, மறுகன்னத்தையும் காட்டு.

 உன் மேலாடையைப் பறிப்பவனுக்கு, உள்ளாடையையும் மறுக்காதே.

 உன்னிடம் கேட்பவன் எவனுக்கும் கொடு. 

உன் உடைமைகளைப் பறிப்பவனிடமிருந்து திருப்பிக் கேட்காதே." 
(லூக்.6:29, 30)

என்றுதான் ஆண்டவர் கூறியிருக்கிறார்.

நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு அவரது பாடுகளின்போது அவர் நடந்து வந்த விதமே நமக்கு எடுத்துக்காட்டு.

தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களுக்கு எதிராக ஒன்றும் செய்யாதது மட்டுமல்ல,

அவர்களை மன்னிக்கும்படி தந்தையிடம்  வேண்டினார்.

அவரிடம் பயிற்சி பெற்ற அப்போஸ்தலர்கள் 

வேத கலாபனை காலத்தில் தங்களைக் கொல்ல அனுமதித்தார்கள் தவிர 

அரசை எதிர்த்து போராடவில்லை.''


"ஆனால் நம்மவர்கள் போராடுகிறார்களே.''


", அது இவ்வுலகைச் சார்ந்த முறை.
கிறிஸ்து வாழ்ந்த சமயத்தில் யூதர்கள் ரோமானியரின் அடிமைத்தனத்தில் வாழ்ந்து வந்தார்கள். 

அவர்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுக்க இயேசு போராடவில்லை.

நமது ஆன்மாவின் மீட்புக்கு கூட அவ பாடுபட்டு மரித்திருக்க வேண்டிய அவசியமில்லை.

அவரது ஒவ்வொரு செயலுக்கும் அளவற்ற பலன் உண்டு.

ஒரு நாள் நோன்பு இருந்து அதை நமது பாவங்களுக்கு பரிகாரமாக ஒப்புக்கொடுத்திருந்தால் கூட அது மனுக்குலத்தின் எல்லா பாவங்களுக்கும் மன்னிப்பு பெற்றுத் தந்திருக்கும்.

ஆனால் மனுக்குலத்தின் மீது அவருக்கு அந்த அளவற்ற அன்பை காட்டவே 

அவர் தாங்கமுடியாத வேதனைகள் நிறைந்த பாடுகள் படவும்,

 தன்னையே சிலுவையில் பலியாக்கவும் மனப்பூர்வமாக தீர்மானம் எடுத்தார். 

அவரது சீடர்களும் அவரையே பின்பற்றினார்கள்.

நற்செய்தியை உலகெங்கும் அறிவிக்க அவர்கள் போராடவில்லை,

 தங்களது உயிரையே கொடுத்துதான் நற்செய்தியை அறிவித்தார்கள்.

வேத சாட்சிகளின் இரத்தம்தான் கிறிஸ்தவம் உலகெங்கும் பரவ காரணமாக இருந்தது.

நமது உரிமைகளை பறிப்பது யாராக இருந்தாலும் 

அவர்களை மன்னிப்போம்,

 அவர்களுக்காக செபிப்போம்.

மன்னிப்பு ஒன்றுதான் நமது ஆயுதம்.

நாம் ஒருவரையொருவர் மட்டுமல்ல நமது எதிரிகளையும் மன்னிப்போம்.

எதிரிகளையும் மன்னிப்பவன்தான் உண்மையான கிறிஸ்தவன். ''

லூர்து செல்வம்.

Wednesday, January 5, 2022

"அவரைக் கண்டபின் எனக்குத் தெரிவியுங்கள். நானும் போய் அவரை வணங்கவேண்டும்"(மத்.2:8)

"அவரைக் கண்டபின் எனக்குத் தெரிவியுங்கள். நானும் போய் அவரை வணங்கவேண்டும்"
(மத்.2:8)

பிறந்திருக்கும் யூதர்களின் அரசரைத் தரிசிப்பதற்காக கீழ்த்திசையிலிருந்து வந்த ஞானிகள்,

 அவர் பிறந்த இடம் தெரியாததால் அதைப் பற்றி விசாரிக்க ஏரோது மன்னனிடம் சென்றார்கள்.

"பிறந்திருக்கும் யூதர்களின் அரசர்" என்பதைக் கேட்டதும், தனது பதவிக்கு ஆபத்து வந்து விட்டதோ என்று எண்ணி ஏரோது அரசன் கலங்கினான்.

உடனே அவரைக் கொல்வது என்று தீர்மானித்துவிட்டான்.

தலைமைக் குருக்கள், மக்களுள் மறைநூல் அறிஞர் மூலம் அவர் பெத்லகேமில் பிறப்பார் என்பதை அறிந்து கொண்டான்.

பின்பு ஞானிகளைப் பெத்லெகேமுக்குப் போகச் சொல்லி, 

"நீங்கள் சென்று குழந்தையைப்பற்றிக் கருத்தாய் ஆராய்ந்து பாருங்கள்: 

அவரைக் கண்டபின் எனக்குத் தெரிவியுங்கள். 

நானும் போய் அவரை வணங்கவேண்டும்" என்றான்.

"நானும் போய் அவரை வணங்கவேண்டும்" என்று சொன்னது

உண்மையில் அவரை வணங்குவதற்காக அல்ல,
அவரைக் கொல்வதற்கு.

ஏரோதுவின் வார்த்தைகளையும், நோக்கத்தையும் சிறிது தியானித்தால், ஒரு கவலை தரும் உண்மை நமக்குப் புலனாகும்.

ஆண்டவர் பிறந்த சமயத்தில் ஒரு ஏரோது தான் வாழ்ந்தான்.

ஆனால் இன்று எண்ணற்ற ஏரோதுகள் வாழ்ந்து கொண்டிருப்பார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

நாமும் கூட அவர்களில் ஒருவராக இருப்போமோ என்ற சந்தேகம் எழுகிறது. 

அன்றைய ஏரோது இயேசுவை வணங்க ஆசைப் படுவதாகக் கூறினான், ஆனால் உண்மையில் அவன் அவரைக் கொல்ல நினைத்தான்.

இன்றைய ஏரோதுகள் இயேசுவை மகிமைப்படுத்த போவதாக கூறிக்கொண்டு,

 அவரை அவமானப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.

ஆன்மீக வாழ்வு வாழ்வது இயேசுவை மகிமை படுத்துவதற்காக.

ஆன்மீக வாழ்வில் ஏசுவின் சித்தப்படி நடந்து அவரை மகிமைப் படுத்துகின்றோம்.

ஆனால் ஆன்மீக வாழ்வு வாழ்வதாக கூறிக்கொண்டு

 லௌகீக வாழ்வு வாழ்பவர்கள் அவரை அவமானப்படுத்துகிறார்கள்.

நாம் இறைப்பற்றோடு வாழும்போது இயேசுவை மகிமைப்
படுத்துகிறோம்.

இறைப்பற்றோடு வாழ்வதாக கூறிக்கொண்டு பணப்பற்றோடு வாழ்ந்தால் அவரை அவமானப்படுத்துகிறோம்.

ஆவிக்குரிய கூட்டங்கள் நடத்துபவர்கள் பரிசுத்த ஆவியை மகிமைப் படுத்துவதாக கூறிக்கொள்கிறார்கள்.

ஆனால் அவர்கள் காணிக்கை வசூலிப்பதில் மட்டும் குறியாக இருப்பார்களானால் அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? 
ஏரோதுவைவிட மோசமானவர்கள்.

ஆண்டவரை வழிபடுவதற்காக தானே கோவிலுக்குச் செல்கிறோம்?

ஆனால் அங்கு நமது ஆன்மீகத் தேவைகளைப் பற்றி கொஞ்சம் கூட கவலை படாமல்,

உலகைச் சார்ந்த உதவிகளை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தால்,

நாம் ஆன்மீக வாழ்வு வாழ்வதாக வெளித்தோற்றத்திற்கு தோன்றினாலும்,

நாம் உண்மையில் வாழ்வது உலகைச் சார்ந்த வாழ்வாகவே இருக்கும்.

யார் நமது ஆன்மாவை காப்பாற்ற மனிதனாகப் பிறந்து, பாடுபட்டு, சிலுவையில் நமக்காக மரித்தாரோ

அவரிடமே சென்று நமது உடல் சம்பந்தப்பட்ட, உலகைச் சார்ந்த உதவிகளை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தால் 

அது அவரது விருப்பத்திற்கு எதிரானது.

இயேசுவின் விருப்பத்திற்கு எதிரான செயல்களை நாம் செய்து கொண்டிருந்தால்

நிச்சயமாக அது அவரை மகிமை படுத்துவதற்காக அல்ல. 


''அப்போது, கூட்டத்தில் ஒருவன், "போதகரே, 

என் சகோதரன் என்னுடன் சொத்தைப் பங்கிட்டுக்கொள்ளுமாறு சொல்லும்" என்றான்.

அதற்கு அவர், "அன்பனே, நியாயம் தீர்க்கவோ பாகம்பிரிக்கவோ என்னை ஏற்படுத்தியவர் யார்?" என்றார்.

 பின் மக்களைப் பார்த்து, "எவ்வகைப் பொருளாசையும் கொள்ளாதபடி கவனமாயிருங்கள்.

 ஏனெனில், ஒருவனுக்கு எவ்வளவு தானிருந்தாலும் செல்வப் பெருக்கினால் வாழ்வு. வந்துவிடாது" (லூக்.12:13-15)

பொருளாசை இறைப்பற்றுக்கு எதிரானது.

ஒருவன் பணத்திற்கும் இறைவனுக்கும், ஒரே நேரத்தில் ஊழியம் செய்ய முடியாது என்று இயேசுவே கூறியிருக்கிறார்.

இறைப் பணிக்கு மட்டுமே அவர் நமக்கு தரும் பொருள் பயன்படுத்தப்பட வேண்டும்.

இறைவனை மறந்து பணத்தை 
பணத்திற்காக மட்டுமே விரும்பினால் நாம் பணத்திற்கு அடிமைகள் ஆகிறோம்.

பணத்திற்காக மட்டுமே இறைவனைத் தேடினால்,  அது அவரை அவமானப்படுத்தும் செயல்.

இதைச் செய்யும்போது நாம் ஏரோதுகளாக மாறி விடுகிறோம்.

 நமது ஆண்டவராகிய இயேசுவை 
 நற்கருணை மூலம் நமது ஆன்மீக உணவாக உண்ணும்போது நமது ஆன்மா பரிசுத்தமானதாக இருக்க வேண்டும். 

சாவான பாவ மாசுடன் பரிசுத்தரான இயேசுவை நாம் உட்கொண்டால்

 மற்றொரு சாவான பாவம் செய்து அவரை அவமானப் படுத்துகிறோம்.

இயேசுவை உணவாக உட்கொண்டு ஆன்மீகத்தில் வாழ்வதாக கூறிக்கொண்டு,

அவரை நமது பாவ சேற்றுக்குள் இழுத்து அவமான படுத்துகிறோம்.

தகுதியான தயாரிப்பின்றி நற்கருணை அருந்துபவர்கள் அனைவரும் ஏரோதுகள்தான்.  

இயேசுவின் அதிமிக மகிமைக்காக என்று கூறிக்கொண்டு
.
 தற்பெருமைக்காகவும், 

குறைவாக கொடுத்தால் நிறைவாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடனும்

பிறருக்கு உதவி செய்பவர்கள் உண்மையில் இயேசுவை பெருமைப் படுத்தவில்லை, அவமானப்படுத்துகிறார்கள்.

தற்பெருமைக்காக செய்யப்படும் எதுவும் நற்செயல் அல்ல.

சுய விளம்பரத்திற்காக பிறசிநேக செயல்கள் போல் தோன்றும்படி 
செயல்படுபவர்கள் அனைவரும் ஏரோதுகள்தான்.

சுயபரிசோதனை செய்து பார்ப்போம்.

நாம் இறைவனின் அதிமிக மகிமைக்காக ஆன்மீக வாழ்வு வாழ்ந்தால்தான் கிறிஸ்தவர்கள். 

சுய நன்மைக்காக, 

ஆன்மீக வாழ்வு வாழ்வது போல் தோற்றம் அளித்துக்கொண்டு

 உலகைச் சார்ந்த வாழ்வை மட்டும் வாழ்ந்தால் ஏரோதுகள்.

இறைவனுக்காக வாழ்வோம்.

இறைவனுக்காக மட்டும் வாழ்வோம்.

இயேசு பாலனுக்கு மகிமை உண்டாவதாக!

லூர்து செல்வம்.

Tuesday, January 4, 2022

"நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" (மாற்கு, 6:37)

"நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" (மாற்கு, 6:37) 

இயேசு அவரைத் தேடிவந்த பெருங்கூட்டமான மக்களுக்கு வெகுநேரம் போதித்தார்.

 மக்கள் உண்ணாமலும், உறங்காமலும் இயேசுவின் போதனையை ஆர்வமுடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

 அவர்கள் பசியோடு இருந்ததைக் கவனித்த அப்போஸ்தலர்கள்
அவர்கள்மேல் இரக்கப் பட்டிருக்க வேண்டும்.

அவர்கள் சார்பாக அப்போஸ்தலர்கள் இயேசுவை அணுகி,

"பாழ்வெளியாயிற்றே, ஏற்கனவே நேரமுமாகிவிட்டது.

சுற்றிலுமுள்ள பட்டிகளுக்கும் ஊர்களுக்கும் சென்று உண்பதற்கு ஏதாவது வாங்கிக் கொள்ளும்படி இவர்களை அனுப்பிவிடும்" என்றனர்.

இயேசுவோ அவர்களை நோக்கி,

"நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்றார்.


"அவர்களுக்கு உணவு கொடுக்க, நாங்கள் இருநூறு வெள்ளிக் காசுக்கு அப்பம் வாங்கிவர வேண்டுமா?" என்று தங்கள் இயலாமையைத் தெரிவித்தனர்.

அப்புறம் அவர்களிடம் என்ன இருக்கிறது என்பதை விசாரித்து,

ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் பலுகச் செய்து,

ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவளித்தார்.

இந்த புதுமை நிகழ்ச்சியைச் சிறிது தியானித்தால் நமக்கு சில உண்மைகள் புரிய வரும். 

1.அப்போஸ்தலர்கள் பசியாக இருந்த மக்களுக்காக இயேசுவிடம் வேண்டினார்கள்.

2. இயேசு கடவுள் என்று அவர்களுக்கு தெரியும். இயேசுவிடம் அவர்களுக்கு முழுமையான விசுவாசம் இருந்திருந்தால்,

"ஆண்டவரே, அனைத்து மக்களுக்கும் உணவு கொடும்" என்று கேட்டிருப்பார்கள்.

அவர்களை சாப்பிட அனுப்பிவிடும் என்று சொல்லியிருக்க மாட்டார்கள். 

3.ஆண்டவரும் "இவர்களை அனுப்பிவிடும்" என்று சொன்னவுடனே அவர்களை அனுப்பவும் இல்லை, உணவு அளிக்கவும் இல்லை.

மாறாக "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்றார்.

ஆனாலும் அவரே உணவு அளித்தார்.

இயேசுவின் வாழ்வில் நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நமக்காக ஒரு ஆன்மீக பாடம் காத்துக் கொண்டிருக்கிறது.

அதைக் கண்டு பிடித்து அதன்படி வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

அப்போஸ்தலர்களின் இடத்தில் நம்மையும் மக்களிடத்தில் நமது அயலானையும் வைத்துக் கொள்வோம்.


நமது அயலானை நாம் நேசிக்க வேண்டும். நேசித்தால் அவனது தேவைகளைப் பூர்த்தி செய்ய ஆசைப்படுவோம். 

அப்போஸ்தலர்கள் மக்களுக்காக இயேசுவிடம் பரிந்து பேசியது போல,

நாமும் நமது அயலானுக்கு உதவி செய்யும்படி ஆண்டவரிடம் வேண்டுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். 

 நம்மிடம் எவ்வளவு விசுவாசம் இருக்கிறது என்பது அவரவருக்கு தெரிந்த விசயம்.

நாம் முழுமையான விசுவாசத்தோடு வேண்டினாலும், 
இறைவன் நம்மோடு பகிர்ந்து கொள்ளும் செய்தி,

"நீ உனது அயலானுக்கு உன்னால் ஆன உதவி செய்."

இந்த செய்தி இயேசு நமக்கு அளித்த இரண்டாவது கட்டடளையான,

"உன்னை நீ அன்பு செய்வது போல உனது அயலானையும் அன்பு செய்."

என்பதில் அடங்கியிருக்கிறது.

"நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்"

என்று இயேசு அப்போஸ்தலர்களிடம் சொன்னது இந்த கட்டளையை சார்ந்ததே. 

அவர்கள்.
"அவர்களுக்கு உணவு கொடுக்க, நாங்கள் இருநூறு வெள்ளிக் காசுக்கு அப்பம் வாங்கிவர வேண்டுமா?"

இருந்து கூறினாலும், இயேசு அவர்களை கைவிடவில்லை.

இயேசு அவர்களை நோக்கி,

"உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன? போய்ப் பாருங்கள்" என்று கூறினார். 

அவர்களும் பார்த்துவந்து, "ஐந்து அப்பங்கள் இருக்கின்றன. இரண்டு மீனும் உண்டு" என்றார்கள்.

 இயேசுவும் அவற்றை பலுகச் செய்து ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு அளித்தார்.

பசியாய் இருந்த மக்களுக்கு உதவி செய்ய வேண்டிய அப்போஸ்தலர்களின் ஆசையை நிறைவேற்றினார்.

இதேபோல்தான் நமது வாழ்விலும் நாம் பிறருக்கு உதவி செய்ய ஆசைப்பட்டால் நமது மூலமாகவே இயேசு அந்த உதவியை அவர்களுக்கு செய்வார்.

பிறருக்கு உதவி செய்ய தேவையான பொருள் நம்மிடம் இல்லையே என்று கவலைப்பட தேவையில்லை.

நம்மிடம் இருக்க வேண்டியது உதவி செய்யவேண்டும் என்ற ஆசையும்,

 அதற்கான முயற்சியும்,

இறைவனிடம் நாம் செய்யும் விசுவாசத்தோடு கூடிய செபமும்தான்.

உலகியலின்படி நமது நாளைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இன்று நம்மிடம் இருப்பதைச் சேமித்து வைக்க விரும்புகிறோம்.

சேமித்து வைக்கவும் செய்கிறோம்.

ஆனால், இயேசு, 

"நாளைய தினத்தைக் குறித்துக் கவலைப்படாதீர்கள். நாளைய தினம் தன்னைப்பற்றிக் கவலைகொள்ளும். அன்றன்றைய தொல்லை அன்றன்றைக்குப் போதும்." என்கிறார்.

"எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்"

என்று தந்தையை நோக்கி வேண்டவே நமக்கு சொல்லி தந்திருக்கிறார்.

நாளைய உணவை இன்றே தரும்படி கேட்க சொல்லவில்லை.

முழுமையான விசுவாசத்தோடு வேண்டுபவர்களின் அன்றாட தேவைகளை அன்றன்றே பூர்த்தி செய்வார்.  

நாம் நம்மிடம் இன்று இருப்பதை நாளைக்காக சேமித்து வைப்பதற்கு பதில்

அதைப் பிறர் சிநேக உதவிகளுக்குப் பயன்படுத்த வேண்டும்.

இயேசு நமக்கு தந்திருப்பது நமக்கு நாமே உதவி செய்து கொள்வதற்காக மட்டுமல்ல,

 பிறருக்கு உதவி செய்வதற்கும்தான்.

ஆகவே நம்மிடம் இருப்பதை கொண்டு தினமும் நம்முடைய அயலானுக்கும் உதவி செய்ய வேண்டும். 

பிறருக்கு உணவு கொடுப்பதற்காக ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் பலுகச் செய்த இறைவன்,

பிறருக்கு உதவி செய்வதற்காக
எந்த வகையிலாவது நம்மிடம் இருப்பதை பலுகச் செய்து கொண்டிருப்பார். 

அன்னைத் தெரசாள் தனது பிறர் சிநேகப் பணியை ஆரம்பிக்கும்போது இலட்சக் கணக்காய் பணம் வைத்துக்கொண்டு ஆரம்பிக்கவில்லை.

அவளிடம் இருந்ததெல்லாம் இறைவன்மீது ஆழமான விசுவாசம்,

தியாக உணர்வோடு இருந்த பிறர் அன்பு,

பிறரன்பு செயல்களில இருந்த ஆர்வமும், முயற்சியும்

மட்டுமே.

இறைவன் பிறர் மூலமாக அவளுக்கு உதவி செய்து கொண்டேயிருந்தார்.

அவளும் அதைக் கொண்டு தேவைப்படுவோருக்கு உதவி செய்து கொண்டேயிருந்தாள்.

இன்றும் இயேசு தனது அப்போஸ்தலர்களுக்கு சொன்னதையே நமக்கும் சொல்கிறார்.

"நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்"

நம் மூலமாகவே இயேசு மற்றவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறார்.

நாமும் இயேசுவின் விருப்பத்தை நிறைவேற்றுவோம்.

லூர்து செல்வம்.

Monday, January 3, 2022

இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் நிலை என்ன?

 இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் நிலை என்ன?


"தாத்தா, வணக்கம்."

"வணக்கம். வழக்கமா காலையில் வந்து வணக்கம் போடுவ, இன்றைக்கு சாயங்காலம் வந்து போடற?"

"காலையில குற்றாலத்துக்குப் போனோம்."

"அப்படியா? அருவிகளில் எல்லாம் நிறைய தண்ணீர் விழுமே!"

"ஆமா, தாத்தா. எல்லா அருவிகளிலும் நிறைய தண்ணீர் விழுந்து கொண்டிருக்கிறது."

"நீ எந்த அருவியில் குளிச்ச?

"நான் ஒரு அருவியிலும் குளிக்கல.
அருவியை இரசிச்சேன், அவ்வளவுதான்."
 
", உன்னோடு வந்த மற்றவர்கள் குளித்தார்களா?"

"அவர்கள் குளித்தார்கள்."

", நீ என்னதான் செய்தாய்?"

"அருவியை இரசிச்சேன், அப்புறம் ஹோட்டலில் நன்கு சாப்பிட்டேன்.
கடைகளிலிருந்து சில விளையாட்டுப் பொருட்கள் வாங்கினேன். ஊருக்கு திரும்பும்போது தென்காசியில் மேட்னி சினிமா பார்த்தேன்."

",ஆக குற்றாலத்திற்குப் போகின்றவர்கள் எதற்காக போகிறார்களோ அதை நீ செய்யவில்லை."

"தாத்தா, நான் குற்றாலத்திற்குக் குளிப்பதற்காக செல்லவில்லை.
ஒரு சிறு உல்லாச பயணமாகச் சென்றேன்.

நீங்கள் ஆசிரியர்தானே, பள்ளிக்கூடத்துக்கு வரும் எல்லா மாணவர்களும் படிக்கின்றார்களா?
 
கோவிலுக்கு செல்லும் எல்லோரும் இறைவனை வணங்குகிறார்களா?

பைபிள் வாசிக்கும் எல்லோரும் அதன்படி நடக்கிறார்களா?"

". பேரப்புள்ள, ஒரு குட்டிப் பிரசங்கமே வச்சிட்ட!"

"தாத்தா, நான் சொல்வது சரியா? தவறா?

இப்போ நான் கேட்பதற்குப் பதில் சொல்லுங்கள்.

இயேசு ஏன் ஏழைத் தாயின் வயிற்றில், ஏழ்மையான மாட்டுத் தொழுவத்தில், 
ஏழையாகப் பிறந்தார்?"

"ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றவர்கள்: ஏனெனில், கடவுளின் அரசு உங்களதே."
(லூக்.6:20)

என்ற அவரது போதனைக்கு முன்மாதிரிகையாக வாழ்ந்து காண்பிப்பதற்காக ஏழையாகப் பிறந்தார்."

"யாருக்கு முன்மாதிரிகையாக?"

", நமக்கு முன்மாதிரிகையாக. உலகின் அதிபதியாகிய அவர் ஏழ்மையை நேசித்தார்.

தன்னை நேசிப்பவர்கள் அனைவரும் ஏழ்மையை நேசிக்க வேண்டும் என்பது அவரது சித்தம்.

நமக்கு முன்மாதிரிகையாகத்தான்
அவர் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வாழ்ந்து, ஏழையாக மரித்தார்."

"தாத்தா, நாம் ஒவ்வொரு 
 வருடமும் 

ஏழையாக பிறந்த இயேசு பாலனின் பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

நமக்கு முன்மாதிரியாக தானே அவர் ஏழையாக பிறந்தார் என்று சொன்னீர்கள்.

 நம்மில் எத்தனை பேர் இயேசு பாலனை பின்பற்றி ஏழ்மையை நேசிக்கிறோம்?

எத்தனை பேர் வாழ்நாள் முழுவதும் ஏழைகளாகவே வாழ விரும்புகிறோம்?

எத்தனை பேர் கிறிஸ்மஸ் கொண்டாடும்போது இயேசு பாலனிடம், 'நாங்கள் ஏழைகளாக வாழ வரம் தாரும், ஆண்டவரே ' என்று கேட்கிறோம்?

மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள்?"

", நீ கேட்பது நியாயமான கேள்விதான்.

நம்மவர்கள் கிறிஸ்மஸ் விழாவை கொண்டாடும் விதத்தைப் பார்த்தால் யாரும் ஏழைகளாக வாழ விரும்பவில்லை போல்தான் தெரிகிறது."

"ஏழ்மை என்றால் என்ன? எப்படி வாழ்பவர்கள் ஏழைகள்?"

",உலக பொருட்கள் மீது பற்று இல்லாமையையே ஏழ்மை என்று அழைக்கிறோம்.

உலக பொருட்கள் மீது பற்று இல்லாமல் வாழ்பவர்கள்தான் ஏழைகளாக வாழ்பவர்கள்.

எதிர்மறையான இரண்டு பொருட்கள் மீது ஒரே நேரத்தில் ஒருவருக்கு பற்று இருக்க முடியாது.

கடவுள் மீது பற்று உள்ளவர்களுக்கு உலகத்தின் மீது பற்று இருக்க முடியாது.

உலகப்பற்று உள்ளவர்களுக்கு இறைப்பற்று இருக்க முடியாது.

இறைப் பற்று உள்ளவர்களால் மட்டுமே இறை அரசுக்குள் நுழைய முடியும்.

ஆகவேதான் ஆண்டவர்,

"ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றவர்கள்: ஏனெனில், கடவுளின் அரசு உங்களதே."

என்று சொன்னார்.

  சிலரிடம் உலகப் பொருட்கள் எதுவும் இருக்காது. ஆனால் அவற்றின்மீது பற்று இருக்கும்.

 உலக பார்வையில் அவர்கள் ஏழைகளாக இருக்கலாம்,

 ஆனால் ஆன்மீக பார்வையில் அவர்கள் ஏழைகள் அல்ல.

சிலரிடம் உலகப் பொருட்கள் இருக்கலாம், ஆனால் அவற்றின்மீது பற்று இருக்காது.

அவர்கள்தான் ஆன்மீக பார்வையில் உண்மையான ஏழைகள்.

இயேசு உலகத்தைப் படைத்தவர். அதிலுள்ள ஒவ்வொரு பொருளும் அவருக்கு உரியவை.

 ஆனால் அவற்றில் எதையும் அவர் அனுபவிக்க விரும்பாமல் ஒன்றும் இல்லாதவர்போல் ஏழையாகப் பிறந்தார்.

 தன்னைப் பெற்ற அன்னையையும் வளர்த்த தந்தையையும் தன்னைப்போலவே ஏழைகளாக வைத்திருந்தார்.

அவர்களிடம் அருள்வளம் இருந்தது, பொருள்வளம் இல்லை.

புரிகிறதா?"

"நன்றாகவே புரிகிறது, தாத்தா.

 ஆனால் என் கேள்வி இயேசுவைப் பின்பற்றுகிறோம் என்று சொல்லிக் கொள்பவர்கள் அப்படி இருக்கிறார்களா?"

",அதை அவரவர் சிந்தனைக்கு விட்டுவிடுவோம்."

லூர்து செல்வம்.








"

Saturday, January 1, 2022

புத்தாண்டுச் செய்தி.

  புத்தாண்டுச் செய்தி.

" தாத்தா, ஒரு கணக்குக்கு பல விடைகள் இருக்க முடியுமா?"

".ஒரு கணக்குக்கு சரியான விடை ஒன்றுதான் இருக்க முடியும்.

தவறான விடைகள் கோடிக்கணக்கில் இருக்கலாம்.
இப்போ எதுற்காக இந்தக் கேள்வி?"

"இன்று 'நாங்கள்தான் கிறிஸ்தவ சபை' என்று கூறிக்கொண்டு ஆயிரக்கணக்கான சபைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

எல்லோர் கையிலும் பைபிள் இருக்கிறது.

எல்லா சபைகளையும் கிறிஸ்தவ சபைகள் என்று ஏற்றுக் கொள்ளலாமா?

அப்படி ஏற்றுக் கொண்டால்,

5 X 4 = 20 என்றாலும்,

5 X 4 = 22  என்றாலும்

5 X 4 = 32  என்றாலும்

சரிதான் என்று ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்குமே.  அதனால்தான் அப்படிக் கேட்டேன்."

", உண்மைதான். ஆயிரக்கணக்கான சபைகள் தங்களைக் கிறிஸ்தவ சபை என்று கூறிக்கொண்டாலும் 

 ஒன்றே ஒன்று மட்டும்தான் தன்னை உண்மையிலேயே கிறிஸ்துவால் உருவாக்கப்பட்ட சபை என்று கூறமுடியும்.

அதன் போதனைகள்தான் கிறிஸ்துவின் கிறிஸ்துவின் போதனைகள்.

அவற்றை வாழ்பவர்களே உண்மையான கிறிஸ்தவர்கள்."

"அதை எப்படிக் கண்டுபிடிப்பது?"

", கிறிஸ்து எதற்காக  மனிதனாகப் பிறந்தார்?"

"மனுக்குலத்தை பாவத்திலிருந்து மீட்பதற்காக ."

",அதாவது?"

"நமது பாவங்களை மன்னிப்பதற்காக."

", அதை மனிதனாகப் பிறக்காமல் செய்திருக்க முடியாதா?"

"முடியும். ஆனால்  தனது பாடுகளின் மூலமும், தன்னைத் தானே பலி ஒப்புக்கொடுப்பதன் மூலமும்

நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்து."

நமது பாவங்களை மன்னிக்க இறைமகன் மனுமகனாய்ப் பிறந்தார்."

"அப்படியானால் இயேசு நமது பாவங்களுக்காக தன்னையே பலியாக்கிய வினாடியே மனுக்குலத்தின் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு விட்டனவா?"

", இயேசு மனுக்குலத்தின் பாவங்களுக்காக பரிகாரம் செய்தார். நாம் நமது பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு மன்னிப்பு கேட்கும்போது பாவமன்னிப்பு  கிடைக்கும்."

"இயேசு நமது பாவங்களுக்காகப்
பரிகாரம் செய்துவிட்டார். நமது பாவங்களை மன்னிக்கிறவரும் அவரே.

அப்படியானால் ஏன் பாவமன்னிப்புப் பெற ஒரு குருவிடம் நமது பாவங்களை அறிக்கையிட வேண்டும்?"

"எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்:

 எவர்களுடைய பாவங்களை மன்னியாது விடுவீர்களோ, அவை மன்னிப்பின்றி விடப்படும்"
(அரு. 20:23) என்று சொன்னது யார்?  யாரிடம் சொன்னார்?"

"இப்போது புரிகிறது. இயேசு நமது பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை தன்னுடைய அப்போஸ்தலர்களுக்குக் கொடுத்தார்.

நமது குருக்கள் அப்போஸ்தலர்களின் வாரிசுகள்.

ஆகவே  நமது பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் நமது குருக்களுக்கு இயேசுவால் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆகவேதான் நமது பாவங்களை குருவிடம் அறிக்கையிட வேண்டும்."

",நமது பாவங்களை மன்னிப்பது ஆண்டவர்தான். நமது குருக்கள் மூலம் ஆண்டவர் நமது பாவங்களை மன்னிக்கிறார்கள்.

பாவசங்கீர்த்தனம் என்னும் தேவத் திரவிய  அனுமானத்தை ஏற்படுத்தியவர் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே.

பாவசங்கீர்த்தனம் என்னும் தேவத் திரவிய  அனுமானத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அதை ஏற்படுத்திய இயேசுவையே ஏற்றுக் கொள்ளாதவர்கள். 

இயேசுவையே ஏற்றுக் கொள்ளாதவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல.

இயேசு எதற்காக பாடுகள் பட்டு சிலுவையில் தனது உயிரைக் கொடுத்தார்?"

" நமது பாவங்களுக்கு  பரிகாரமாக 
இயேசு பாடுகள் பட்டு சிலுவையில் தனது உயிரைக் கொடுத்தார்."

", எகிப்தின் அடிமைத் தனத்திலிருந்து இஸ்ரயேலர்கள் மீட்கப்பட்ட பாஸ்கா நாளன்று 

  கடவுளுக்கு  பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்ட பொருளை அவர்கள் உணவாக உண்ண வேண்டும் என்பது

 மோயீசன் மூலம்  இறைவன் கொடுத்த கட்டளை.

அதேபோல்தான் பாவத்தின் அடிமைத் தனத்திலிருந்து நம்மை மீட்க  தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்த இயேசு,

  மீட்படைய  விரும்புகிறவர்கள் அவரை உண்ண வேண்டும் என்று  விரும்புகிறார்.

" என் தசையைத் தின்று, என் இரத்தத்தைக் குடிப்பவன் முடிவில்லா வாழ்வைக் கொண்டுள்ளான்." (அரு. 6:54)

அவருடைய தசையைத் உண்டு, 
இரத்தத்தைக் குடிப்பதற்காகத்தான்
இயேசு பாடுபடுவதற்கு முந்திய நாள், வியாழக்கிழமை இரவு, திவ்ய  நற்கருணையை ஏற்படுத்தினார்.

''அப்பத்தை எடுத்து, நன்றிகூறி, பிட்டு, அவர்களுக்கு அளித்து, " இது உங்களுக்காக அளிக்கப்படும் என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள் " என்றார்.

 அவ்வாறே, உணவு அருந்தியபின் கிண்ணத்தை எடுத்து, "இக்கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படும் என் இரத்தத்தினாலாகும் புதிய உடன்படிக்கை."

புனித வியாழனன்று இயேசு திவ்ய நற்கருணையையும், குருத்துவத்தையும் ஏற்படுத்தினார்.

வசீகர வார்த்தைகள் மூலம் இயேசு
 அப்பத்தை தன் உடலாகவும், ரசத்தைத்   தன்  இரத்தமாகவும் மாற்றி தனது சீடர்களுக்கு தன்னையே உணவாக அளித்தார்.

இதைத்தான் நமது குருக்கள் திருப்பலியின் போது செய்கிறார்கள்.

அப்பத்தையும் ரசத்தையும் இயேசுவின் உடலாகவும்  ரத்தமாகவும் மாற்றி நமக்கு அவரை உணவாகத் தருகின்றார்கள். 

திவ்ய நற்கருணையை ஏற்படுத்தியவர் இயேசுவே.

திவ்ய நற்கருணையை ஏற்றுக் கொள்ளாதவன் இயேசுவை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆகவே நற்கருணையை ஏற்றுக் கொள்ளாத யாரும் கிறிஸ்தவன் அல்ல.

திருப்பலியின்போதுதான் அப்பமும் இரசமும் இயேசுவின்  உடலாகவும் இரத்தமாகவும் மாறுகின்றன.

"இதை என் நினைவாகச் செய்யுங்கள்"

இதை : இயேசு அப்பத்தையும் ரசத்தையும் தனது உடலாகவும் இரத்தமாகவும் மாற்றியதை.


என் நினைவாக: என்னை நினைத்துக்கொண்டு. 

செய்யுங்கள்: நீங்களும் அப்பத்தையும் இரசத்தையும் 
என் உடலாகவும், இரத்தமாகவும் மாற்றி, உண்ணுங்கள்.

சீடர்கள் இயேசுவின் நினைவாக செய்ததால்தான் 

அவர்கள் இயேசு பயன்படுத்திய அதே வார்த்தைகளை 

("என் உடல்"
"என் இரத்தத்தினாலாகும்" )

அப்படியே பயன்படுத்தி 

அப்பத்தை இயேசுவின் உடலாகவும்,


 ரசத்தை அவருடைய இரத்தமாகவும் மாற்றினார்கள். 

சீடர்களின் வாரிசுகளான நமது குருக்களும் அதையே செய்கிறார்கள்.

குருவானவர் 'என்' என்று சொல்லும்போது இயேசுவின் இடத்தில், இயேசுவாகவே நிற்கிறார்.

இயேசுவின் நினைவாக குருக்கள் செய்வதுதான் திருப்பலி,

திருப்பலியின்போதுதான்  அப்பம் இயேசுவின் உடலாகவும், ரசம் இயேசுவின் இரத்தமாகவும்  மாறுகின்றன.

திருப்பலியை ஏற்றுக் கொள்ளாதவன் அதை நிறைவேற்ற சொன்ன இயேசுவையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இயேசுவை ஏற்றுக் கொள்ளாதவன் கிறிஸ்தவன் அல்ல.

இயேசு மனிதனாக பிறந்து முப்பத்தி மூன்று ஆண்டுகள் உலகில் வாழ்ந்ததே 

நமது பாவங்களை மன்னிக்கவும்,
(பாவசங்கீர்த்தனம்)

நமது மீட்புக்காகத் தன்னையே  பலியாக்கவும்,
(திருப்பலி)

பலிப்பொருளை, அதாவது தன்னை,  நமக்கு உணவாகத் தரவும், (திவ்ய நற்கருணை)

அதன்மூலம் நமக்கு நிலை வாழ்வைத் தரவும்தான்.  

ஆகவே பாவசங்கீர்த்தனத்தையும், 

திருப்பலியையும்,

திவ்ய நற்கருணையையும்

ஏற்றுக்கொள்ளாமல்,

 பைபிள் வசனங்களை கொண்டு பாட்டுக்கள் பாடினாலும் பயன் இல்லை.

எத்தனை முறை அல்லேலூயா போட்டாலும், கைகளை ஆட்டி ஆவியானவரை அழைத்தாலும் பயனில்லை.

பைபிள் இயேசு கிறிஸ்துவை மையமாகக் கொண்டது.

பழைய ஏற்பாடு இயேசு கிறிஸ்துவின் வருகையை முன் அறிவிக்கிறது.

புதிய ஏற்பாடு அவரை நாம் வாழ வழி காட்டுகிறது.

இயேசு கிறிஸ்து வாழ்ந்தது

 நமக்காக பலியாகவும்,

தன்னை நமக்கு உணவாகத் தரவும்,   

நமது பாவங்களை மன்னிக்கவும்,

இவற்றின் மூலம் நம்மை விண்ணகத்திற்கு அழைத்து செல்வதற்காகவுமே.

இயேசு எதற்காக உலகிற்கு வந்தாரோ அதை ஏற்றுக்கொள்ளாமல் எப்படி நம்மால் அவரை வாழ முடியும்?

கிறிஸ்தவன் என்று ஒருவன் தன்னை   அழைத்துக்கொள்வதால் மட்டுமே கிறிஸ்தவன் ஆகிவிட முடியாது.

கிறிஸ்தவனாக வாழ்ந்தால் மட்டுமே ஒருவன் கிறிஸ்தவன் ஆக முடியும்.

கிறிஸ்து ஏற்படுத்திய பாவசங்கீர்த்தனத்தையும்,

அவர் தனது உடலோடும்,
உதிரத்தோடும்,
ஆன்மாவோடும்,
தெய்வீகத்தோடும்,

நமது ஆன்மீக உணவாக வருவதற்கென்றே காத்துக் கொண்டிருக்கும்  தேவ நற்கருணையையும்,

 அவரது நினைவாக நிறைவேற்றப் பட்டுக்கொண்டிருக்கும் திருப்பலியையும் 

ஏற்றுக்கொண்டு, அவரது போதனைகளின்படி வாழ்பவனே உண்மையான கிறிஸ்தவன்.

லூர்து செல்வம்.