Wednesday, May 30, 2018

"வேறு வழி? ஒத்துக்கொள்கிறேன்."

"வேறு வழி? ஒத்துக்கொள்கிறேன்."
**************-*****************

"ஹலோ, சார், உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கலாமா? ''

"தாராளமா."

"நீங்க கிறிஸ்துவை நம்புகிறீர்களா? "

"இதென்ன சார் கேள்வி?

கிறிஸ்துவை நம்பாதவன் எப்படி கிறிஸ்தவனா இருக்க முடியும்? "

"உங்க வாய்தான் இதச் சொல்லுது. ஆனால்  உங்க நடைமுறை உங்க சொல்லோடு ஒத்து வரலிய."

"எத வச்சி அப்படிச் சொல்றீங்க? "

"கிறிஸ்துவ நம்பினால் அவர்கூட மட்டுந்தானே உறவு இருக்கணும்.

அவர மட்டுந்தானே வழிபடணும்.

ஆனா நீங்க மாதா,  சூசையப்பர், அந்தோனியார்னு யார்யார் கூடல்லாமோ உறவு வச்சிருக்கீங்க.

கிறிஸ்துதானே நம்ம இரட்சித்தாரு.

புனிதர்களா நமக்காக உயிர விட்டாங்க?

கிறிஸ்துவுக்குக் கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்த யார்யாருக்குல்லாமோ கொடுக்கிற உங்கள எப்படி கிறிஸ்தவன்னு அழைக்க முடியும்? "

"இப்போ நான் உங்கள ஒரு கேள்வி கேட்கலாமா? "

"முதல்ல என் கேள்விக்குப் பதில் சொல்லுங்க.

அப்புறம் உங்க கேள்வியக் கேளுங்க."

"என் கேள்வியிலதான் உங்களுக்குரிய பதிலும் இருக்கு.

கேட்கலாமா?"

"சரி கேளுங்க."

"உங்களுக்குக் குடும்பம் இருக்கா?"

"இருக்கு."

"அதுல யார்யார்லாம் இருக்காங்க?"

"அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, இரண்டு அண்ணன்கள்,  இரண்டு அக்காள்கள், ஒரு தம்பி, நான்."

"பெரிய குடும்பம்.  சரி உங்கள பெத்தது யாரு?"

"அப்பா, அம்மா."

"உங்கள வளர்க்கிறது யாரு?"

"அப்பா, அம்மா."

"உங்கள் தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்றது யாரு?"

"அப்பா, அம்மா."

"உங்க அப்பா, அம்மா கூட பேசுவீங்களா?"

"இதென்ன சார் கேள்வி.  என்ன பெத்தது, வளர்க்கிறது எல்லாம் அவங்கதானே. அதெப்படி சார் பேசாம இருக்க முடியும்?"

"சரி, அப்பா, அம்மா கூட பேசுவீங்க.

ஏன்னா அவங்கதான் உங்களப் பெத்தாங்க, வளர்க்கிறாங்க.

சரி. தாத்தா, பாட்டி,  அண்ணன், அக்கா, தம்பி - இவங்ககூட பேசுவீங்களா?"

"பேசுவேன். அவங்க இல்லாட்டா நேரமே போகாது, பேசிக்கிட்டிருந்தா நேரம் போறதே தெரியாது."

"அப்பா, அம்மா உங்கள பெத்தாங்க, வளர்க்கிறாங்க, அவங்ககூட பேசுவது சரி,

மற்றவங்க உங்கள பெறவும் இல்ல, வளர்க்கவும் இல்ல, அவங்ககூட நீங்க எப்படிப் பேசலாம்?"

"அவங்கள மற்றவங்கன்னு சொல்லாதீங்க, அவங்க என் குடும்பத்த சேர்ந்தவங்க,

என்னப் பெத்தவங்கதான் அவங்களையும் பெத்தாங்க."

"உங்க தாத்தா, பாட்டியையும்  அவங்கதான் பெத்தாங்களா?"

"தெரியாதது மாதிரி பேசுரீங்க. தாத்தா, பாட்டிதான்  அப்பாவைப் பெத்து, வளர்த்தாங்க."

"பரவாயில்ல. உங்களுக்கு குடும்ப பாசம் நிறையவே இருக்கு. ரொம்ப சந்தோசம்.

ஆனால் எங்க குடும்பத்தோட நாங்கள் பாசமா இருக்கக் கூடாது,

குடும்பத்தச் சேர்ந்த யார்கூடேயும் பேசக்கூடாதுன்னு சொல்றீங்க.

ஏன் சார், உங்களுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா?"

"நான் எப்போ சார் சொன்னேன்?"

"அத நான்தான் ஞாபகப்படுத்தணுமா?

நாம் இப்போ பேசப்போவது ஆன்மீகம்.

எங்களப் படைத்த கடவுள்தான் எங்களுக்கு அப்பா, ஒத்துக்கிறீங்களா?"

"உங்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் அவர்தான் அப்பா."

"அது எங்களுக்கும் தெரியும். ஆனால் குற்றம் சாட்டப்பட்டிருப்பது நாங்கதானே.

அதனால் பதில் முடியும்வரை
எங்களைப் பற்றி மட்டும் பேசுவேன்."

"சரி பேசுங்க."

"மறுபடியும் கேள்வியை வைக்கிறேன்.

எங்களப் படைத்த கடவுள்தான் எங்களுக்கு அப்பா, ஒத்துக்கிறீங்களா?"

"ஒத்துக்கிறேன்."

"எங்கள் அப்பா  பெற்ற,

அதாவது,

எங்கள் அப்பாவினால் படைக்கப்பட்ட

அனைவரும் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான்,

ஒத்துக்கிறீங்களா?"

"ஒத்துக்கிறேன்."

"கன்னி  மரியாள் இயேசுவைப் பெற்ற தாய்,
ஒத்துக்கிறீங்களா?"

"ஒத்துக்கிறேன்."

"கன்னி  மரியாளும் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான், ஒத்துக்கிறீங்களா?"

"சரி..ஒத்துக்கிறேன்."

"நாங்கள் அன்புடன் உறவாடும் புனிதர்களும் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான், ஒத்துக்கிறீங்களா?"

"வேறு வழி? ஒத்துக்கிறேன்."

"இப்போ பதிலுக்கு வருவோம்.."

"அப்போ இதுவரை சொன்னது? "

"இது வரை நீங்கள்தான் என் கேள்விகட்குப் பதில் சொன்னீர்கள்."

"நான் எங்க சார் பதில் சொன்னேன்.

திரும்பத் திரும்ப 'ஒத்துக்கிறேன், ஒத்துக்கிறேன்'னுதான சார் சொன்னேன்."

"அதுதான் சார் பதில்.

இனி என் பதிலை முழுவதும் பொறுமையாய்க் கேட்டுவிட்டு கடைசியில் 'ஒத்துக்கிறேன்'னு சொன்னால் போதும்.

இறைவன் நமது தந்தை.

அவரால் படைக்கப்பட்ட அனைவரும் நமது சகோதர, சகோரிகள்.

இயேசு நமது இரட்சகர் மட்டுமல்ல நமது சகோதரர்.

இறைமகனாகிய அவர் தனது தந்தையை

'எங்கள் தந்தையே' என்று நாம் அழைக்க அனுமதி அளித்திருப்பதால்

அவர் நமது சகோதரர் ஆகிறார்.

அப்படியானால் இயேசுவின் தாய் நமது தாய் ஆகிறார்.

நமது குடும்பம் மிகப் பெரியது.

இவ்வுலகில்  வாழ்பவர்களும்,

இறந்து விண்ணுலகம் சென்றவர்களும்

இறைவனுக்குள் வாழ்வதால்

இறைவனில் ஒரே குடும்பத்தவர்தான்.

நமது ஆன்மீகக் குடும்பத்தைப் பொறுத்தமட்டில்

நமது ஒரே பணி,

உள்ளத்தாலும்,

செயலாலும்

அன்பு செய்வது மட்டும்தான்.

ஒரே குடும்பத்தவர் என்பதால்
ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம்,

ஒருவருக்கொருவர் உதவி செய்கிறோம்.

நம் தந்தையுடன் மட்டுமல்ல,

மண்ணிலும்

விண்ணிலுமுள்ள

நமது சகோதர, சகோதரிகளுடனும்

உறவாடுகிறோம்,

உரையாடுகிறோம்.

விண்ணிலுள்ள நமது சகோதர, சகோதரிகளுடன் உறவாடுவது நமது உரிமை.

புனிதர்கட்கு விழா எடுப்பது?

அதுவும் நமது உரிமைதான்.

இவ்வுலகில் வாழும் நம் உறவினர்கட்கு விழா எடுப்பதில்லை?

பிறந்தநாள் விழா,
புதுநன்மை விழா,
திருமண விழா,
புதுமனைப்புகு விழா  -

எத்தனை விழாக்கள் எடுக்கிறோம்!

நமது ஆன்மீகக் குடும்பத்தைச் சேர்ந்த

புனிதர்கட்கு விழா எடுப்பது நமது உரிமை.

அதேபோல புனிதர்களிடம் உதவி கேட்பதுவும் நமது உரிமை.

நமது உதவி புனிதர்கட்குத் தேவை இல்லை.

அவர்களால் நமக்கு உதவ முடியும்.

'அம்மா, எங்கள் பள்ளிக்கூடப் பிள்ளைகளுடன் tour செல்ல அப்பாவின் அனுமதி வாங்கித் தாம்மா' என்று அம்மாவைக் கெஞ்சுவதில்லை?

'Snacks வாங்க காசு தாடா'  என்று அண்ணனிடம் கெஞ்சுவதில்லை?

உதவி கேட்டு நமது  புனித சகோர்களிடம் கெஞ்சுவதில் என்ன தவறு?

நமது உத்தரிக்கிறஸ்தலத்து உறவினர்கட்கு நாம் நமது  செபத்தால் உதவலாம்.

அவர்கள் தங்கள் செபத்தால் நமக்கு உதவலாம்.

அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரிந்தாலும்

நமது உறவைவிட்டுப்  பிரியவில்லை,

நம் அன்பை விட்டுப் பிரியவில்லை,

நம் நினைவை விட்டுப் பிரியவில்லை,

ஆகவே,

நமது  செபத்தை விட்டும் பிரியக்கூடாது.

தேவமாதா நமது அம்மா.

தன்னை மறந்தாலும் நம்மை மறவா தாயை நம்மால் எப்படி மறக்க முடியும்?

தாயின் அரவணைப்பை நாடும் குழந்தையை எப்படிக் குறைகூற முடியும்?

ஹலோ, சார்,

விண்ணில் இறைவனோடு வாழும்

புனிதமான உடன் பிறப்புகளின்

உதவியையும்,

உறவையும் நாடுவது

நமது விண்ணகத் தந்தைக்குப்

பிடித்தமான செயல்
என்று

ஒத்துக்கொள்கிறீர்களா? "

"வேறு வழி? ஒத்துக்கொள்கிறேன்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment