ஆளவே படைத்தார், அழிப்பதற்காக அல்ல.
********************************
ஒரு உஊர்ல ஒரு அப்பா.
அவருக்கு இரண்டு பையன்கள்.
அப்பா பெரிய பணக்காரர்.
நிறைய சொத்து.
எல்லாம் அவர் சம்பாதித்தது.
அவருக்கு ஒரு பயம்.
தன் சம்பாத்தியத்தை தனது பிள்ளைகள் பயன்படுத்தத் தெரியாமல் வீணாக்கி விடுவார்களோ என்ற பயம்.
தனது பிள்ளைகளின் திறமையைப் பரிசோதிக்க அவர்கட்கு ஒரு பரீட்சை வைக்கத் தீர்மானித்தார்.
ஒரு நாள் தன் பிள்ளைகளை அழைத்து,
"உங்களுக்கு ஒரு சோதனை வைக்கப் போகிறேன்.
உங்கள் கையில் ஆளுக்கு நூறு ரூபாய் தருவேன்.
ஆளுக்கு ஒரு வீடும் தருவேன்.
வீட்டில் எதுவும் இருக்காது.
மின்சாரம் கூட இருக்காது.
ஒரு நாள் Time தருவேன்.
நீங்கள் உங்களுக்குத் தந்திருக்கும் நூறு ரூபாயை மட்டும் பயன்படுத்தி வீடு நிறைய பொருள் வாங்கி வைக்க வேண்டும்.
நாளை மறுநாள் உங்கள் வீடுகட்கு வருவேன்.
யார் வீடு நிறைய பொருள் இருக்கிறதோ, அவனுக்குதான் என் சொத்தின் நிர்வாகத்தைத் தருவேன்." என்றான்.
பிள்ளைகள் தங்களிடம் தரப்பட்டிருக்கும் நூறு ரூபாயைக் கொண்டு அவரவர் வீட்டை நிறைக்கப் புறப்பட்டார்கள்.
அப்பா மறு நாள் இரவு பத்து மணிக்கு வீடுகளைப் பார்க்கப் புறப்பட்டார்.
முதலில் மூத்தவன் வீட்டிற்குச் சென்றார்.
பையன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தான்.
வீடு பூட்டியிருந்தது.
"கதவைத் திற. வீட்டைப் பார்க்க வேண்டும்."
"அப்பா, நீங்கள் சொன்னபடி
வீட்டை நிரப்பிவிட்டேன்.
நீங்கள் வீட்டிற்குள் போக அங்கே இடமில்லை."
"அப்படியா? நூறு ரூபாய்க்குள் வீட்டை நிரப்பிவிட்டாயா? எதைக்கொண்டு நிரப்பினாய்? "
"வைக்கோலைக் கொண்டு."
"என்னது? வைக்கோலைக் கொண்டா? "
"நீங்கள் தந்த நூறு ரூபாய்க்கு வேறு என்ன வாங்க முடியும்?"
"ஆக, வீட்டை வைக்கோலால் நிரப்பியிருக்கிறாய்! வா, தம்பி வீட்டுக்குப் போவோம்."
இருவரும் இளையவன் வீட்டுக்கு விரைந்தார்கள்.
வீட்டு வாசலில் இளையவன் நின்றுகொண்டிருந்தான்.
வீடு திறந்திருந்தது.
வாசல் முன் "இனிதே வருக" என்ற வாசகத்துடன் கோலம் இடப்பட்டு, நடுவில் ஒரு மெழுகுதிரி ஒளி வீசிக்கொண்டிருந்தது.
வீட்டிற்குள்ளிருந்து ஊதுபத்தி வாசனை 'கம்கம்'மென்று வரவேற்றுக் கொண்டிருந்தது.
"அப்பா, அண்ணா வாருங்கள் உள்ளே போகலாம்."
உள்ளே சென்றார்கள்.
வீடு சுத்தமாக பெருக்கப்பட்டு மெழுகுதிரிகளால் ஒளி வீசிக்கொண்டிருந்தது.
பார்வையான ஒரு இடத்தில்
'இவ்வீடு என்னால் எப்போதும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.'
என்ற வாசகத்துடன்,
இயேசுவின் திருஇருதயம்,
இரண்டு மெழுகுதிரிகள் ஒளியுடனும்,
ஊது பத்திகளின் வாசனையுடனும்
ஆசீர்வதித்துக் கொண்டிருந்தது.
அப்பா திரு இருதயப் படத்தின் முன் நின்று செபித்து விட்டு,
மக்களின் நெற்றியில் சிலுவை அடையாளம் இட்டார்.
மகன் அப்பாவிற்கும் , அண்ணாவிற்கும் தேநீர் விருந்து அளித்து மகிழ்ந்தான்.
அப்பா இளைய மகனை நோக்கி,
"மகனே, சிறு பொருள் கொண்டு பெரிய சாதனை புரிந்துள்ளாய்.
இருண்ட இடத்தில் ஒளி ஏற்றுவதுதான் மிகப் பெரிய சாதனை.
இறைவன் முதன் முதலில் ஒளியைத்தான் படைத்தார்.
"அப்பொழுது கடவுள்: ஒளி உண்டாகுக என்று உரைத்தார். உரைக்கவே, ஒளி உண்டாயிற்று."(ஆதி..1:3)
இறை இயேசுவும்,
"நானே உலகின் ஒளி: என்னைப் பின்செல்பவன் இருளில் நடவான். உயிரின் ஒளியைக் கொண்டிருப்பான்."
என்று கூறியிருக்கிறார்.
இருண்ட வீட்டில் ஒளி ஏற்றி சாதனை படைத்த உன்னிடம் என் சொத்து நிர்வாகத்தை ஒப்படைக்கிறேன்." என்றார்.
இக்கதையில் வரும் பையன்களில் இளையவன் சிறிய மெழுகுதிரிகளை நல்ல முறையில் பயன்படுத்தியிருக்கிறான்.
மூத்தவன் மாட்டின் உணவாகிய வைக்கோலை வீணடித்திருக்கிறான்.
இறைவன் வளங்கள் நிறைந்த உலகைப் படைத்து, அதை ஆளும் பொறுப்பை நம்மிடம் ஒப்படைத்தார்.
'"பின்னர் கடவுள்: நமது சாயலாகவும் பாவனையாகவும் மனிதனைப் படைப்போமாக:
அவன் கடல் மீன்களையும்,
வானத்துப் பறவைகளையும்,
மிருகங்களையும்,
பூமி முழுவதையும்,
பூமியின் மீது அசைவன ஊர்வன யாவற்றையும்
ஆளக்கடவன் என்றார்.(ஆதி.1:26)
ஆனால் நாம் என்ன செய்கிறோம்?
நமது பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டிருக்கும் உலகப் பொருட்களைத்
தவறாகப் பயன்படுத்தி வீணடித்துக் கொண்டிரூக்கிறோம்.
அணுகுண்டு செய்து உலகை அளிப்பதற்காகவா இறைவன் அணுவைப் படைத்தார்?
வெட்டித் தீர்த்து மழையைத் தடுப்பதற்காகவா மரங்களைப் படைத்தார்?
மது தயாரித்து, குடித்து ஆட்டம் போடுவதற்காகவா பழங்களைப் படைத்தார்?
ஊர் சுற்றி நேரத்தை வீணடிப்பற்காகவா பெட்ரோலைப் படைத்தார்?
மாநிலத்திற்கு மாநிலம் சண்டை போடுவதற்காகவா தண்ணீரைப் படைத்தார்?
அவர் படைத்த ஒவ்வொரு பொருளையும் ஆக்கத்தை விட அழிவிற்குத்தானே அதிகம் பயன்படுத்துகிறோம்!
பூச்சி மருந்து மூலம் நமது உணவையே நஞ்சாக்கி விட்டோமே!
சிறிதாவது சிந்திப்போம்.
இறைவன் தந்த பொருளை இறைவனுக்காகப் பயன்படுத்துவோம்.
ஒவ்வொரு பொருளையும் ஆக்கத்திற்காக மட்டும் பயன்படுத்துவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment