ஈர்க்கும் எதிர் துருவங்கள்.
********************************
இரு எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்ப்பது இறைவன் படைத்த இயற்கையின் நியதி.
இந்நியதியின் அடிப்படையில்தான் உலகமே இயங்கிக்கொண்டிருக்கிறது.
வட துருவத்திற்கும், தென் துருவத்திற்கும் இடைப்பட்ட இவ்வுலகு இயங்கிக் கொண்டிருப்பது,
இவ்விரண்டு எதிர் துருவங்களின் ஈர்ப்பு விசையினால்தான்.
எதிர்துருவங்களின் முக்கிய பணி 'ஈர்ப்பது'தான்.
60 ஆண்டுகட்கு முன்பு எங்களுக்குத் திருமணம் ஆனவுடன்
நான் கண்டுபிடித்த முதல் உண்மை
நாங்கள் இருவரும் இரண்டு எதிர் துருவங்கள் என்பதுதான்.
நான் ஆண், பெண் என்ற எதிர் துருவங்களைக் குறிப்பிடவில்லை.
அது எல்லா திருமணங்கட்கும் பொதுவான அம்சம்.
நான் குறிப்பிடுவது எங்களுடைய இயல்பான விருப்பங்கள். (Interests.)
முதல் நாள் இரவன்று நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது நான் ஒரு கேள்வி கேட்டேன்.
"நாம் இருவரும் பாவூர்ச்சத்திரத்தில் நின்று கொண்டிருக்கிறோம்.
நான் திருநெல்வேலிக்குச் செல்ல விரும்புகிறேன்.
நீ தென்காசிக்குச் செல்ல விரும்புகிறாய்.
இருவரும் ஒரே பஸ்ஸில் ஏறி பயணிக்க முடியுமா ? "
அவள், "முடியும்."
"அதெப்படி முடியும்? இரண்டும் எதிர்த்திசையில் அல்லவா உள்ளன."
"அதனால் என்ன. நான் உங்களுடன் திருநெல்வேலிக்கு
வருகிறேன்.
அடுத்து நீங்கள் என்னுடன் தென்காசிக்கு வாருங்கள்."
"ஒரே பஸ்ஸில்? "
"ஆமா. அது தென்காசி-திருநெல்வேலி பஸ் தானே! என்ன, கொஞ்சம் நேரம் ஆகும்."
"பரவாயில்லையே! இருவரது எதிர் எதிர் ஆசைகளும் ஒன்றுக்கொன்று பாதகமின்றி நிறைவேறும் என்கிறாய்."
"ஆமா. திருமண வாழ்வு என்பது அதுதான்.
கணவன் மனைவி இருவரும் தங்களது தனித்தன்மையை இழக்காமல்
ஒருவர் மற்றவரது ஆசைகளை நிறைவேற்றுவதுதான்
உண்மையான திருமண வாழ்வு.
நாமும் அப்படித்தான் வாழ்வோம்."
எதிர் எதிர் தனித்தன்மைகளும் அன்பு என்னும் ஈர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டு இணைந்து வாழ்வதுதான் உண்மையான திருமண வாழ்வு என்பதை எங்களது 60 ஆண்டு திருமண வாழ்வினால் நிரூபித்திருக்கிறோம்.
God is love.
Love is not in God, but God Himself is love.
கடவுள் அன்பானவர்.
அன்பு அவருக்குள் இல்லை, அவர்தான் அன்பு.
திருமண வாழ்வின் ஈர்ப்பு விசை கடவுள்தான்.
நாங்கள் எப்படி எதிர்முனைகள்?
அவள் ஆசிரிய பணியிலும், வீட்டு வேலைகளிலும் கடுமையான கடுமையான உழைப்பாளி.
நான் முழுநேர ஆசிரியர். வீட்டு வேலைகளில் சிறிதளவுகூட அவளுக்கு உதவியதில்லை.
அவள் சம்பளம் எவ்வளவு என்று அவளுக்குத் தெரியாது. வரவுசெலவு எழுதும் பழக்கம் இல்லை.
நான் ஒரு பைசா கூட விடாமல் வரவு செலவு எழுதுபவன்.
எனது வரவுசெலவு நோட்டை அவள் ஒருபோதும் பார்த்தது கிடையாது.
நான் அவளது ஆலோசனை இன்றி ஒரு பைசாகூட செலவழித்தது கிடையாது.
அவள் பாடப்புத்தகத்தையும், செபப் புத்தகத்தை மட்டுமே வாசிப்பவள்.
நான் புத்தக வெறியன். எனது பொழுது போக்கே வாசிப்பதுதான்.
எனக்கு Jokes ரொம்ப பிடிக்கும்.
அவளுக்கு நகைச்சுவை ரசனையே கிடையாது.
நான் ஏதாவது ஜோக் சொன்னால், "இதுல சிரிக்கதுக்கு என்ன இருக்கு."
என்பாள்.
நான் ஜோக் வாசித்துச் சிரிப்பதைப் பார்த்து அவள் சிரிப்பாள்.
ஒத்த ரசனை உள்ள கணவன் மனைவி மட்டுமே மகிழ்ச்சியாக வாழமுடியும் என்பதில்லை.
ரசனைகள் எதிர் எதிராக இருந்து,
அன்பினால் மட்டும் ஈர்க்கப்பட்டு
அன்பிற்காக மட்டும் வாழும் கணவன், மனைவி
தங்கள் தனித்தன்மைக்கு குறைவு வராமல்
ஒருவர் மற்றவருடைய தனித்தன்மையும் ரசித்து
மிக மகிழ்ச்சியாக வாழ முடியும்
என்பதற்கு நாங்களே சான்று.
எனக்கு ஒரே ஒரு வருத்தம்.
இன்பத்திலும், துன்பத்திலும் இணைந்து வாழ்ந்த எனக்கு
அவளது மரணத்தில் பங்கு தராமல் போய்விட்டாளே!
இங்கேயும் நாங்கள் எதிர் துருவங்கள்தான்.
ஆனாலும் இப்போதும் எங்கும் வாழும் இறைவன் (அன்பு) கையில்தானே இருவரும் இருக்கிறோம்!
இறைவன் ஒருவர்தான் எல்லோரையும் ஈர்க்கும் சக்தி.
லூர்து செல்வம்.
Heart touching
ReplyDelete