உண்மையான மனித நேயம்.
********************************
நண்பகல் 12 மணி.
எதிர் எதிர்த் திசையில் ஓடிக்கொண்டிருந்த நாற்சக்கர வாகனம் ஒன்றும், இருசக்கர வாகனம் ஒன்றும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.
இருசக்கர வாகனத்தைத் தள்ளிப்போட்டு விட்டு நாற்சக்கர வாகனம் ஓடிப்போய்விட்டது.
இருசக்கர வாகனம் தான்மட்டும் விழவில்லை; தன்னை ஓட்டி வந்தவனோடு சேர்ந்தே விழுந்தது.
விழுந்தவன் தன் இரத்தத்தையே குளமாக்கி அதில் மிதந்து கொண்டிருந்தான்.
அவனைக் கடந்து நடந்து சென்றவர்களுள் பலர் ஆளுக்கொரு 'ஐயோ பாவத்தை' அவன்மீது போட்டுவிட்டு போய்க்கொண்டேயிருந்தார்கள்.
கடைசியில் வந்தவன் வெறும்
'ஐயோ பாவத்தோடு' நிற்காமல் அவனே நின்று, அவன் மீது இரங்கி, அவனைத் தூக்கி மருத்துவ மனைக்கு கொண்டுசென்று, தன் இரத்தத்தையே கொடுத்து வைத்தியம் செய்தான்.
வைத்திய மனையில் அவரைச் சந்தித்த ஒருவர்:
"நல்ல காரியம் செய்தீர்கள். இவர் உங்களுக்கு உறவினரா?"
"ஆம்."
"என்ன உறவு?"
"மனிதன். நான் ஒரு மனிதன், அவரும் ஒரு மனிதன். உதவி செய்ய என்னைத் தூண்டியது மனித நேயம்."
"வேறு உறவு ஏதும் இல்லை?"
"நீ என்ன பதிலை எதிர்பார்க்கிறீர்கள்?"
"சரி. கொஞ்சம் மாற்றிக் கேட்கிறேன். உங்கள் வீட்டில் உங்கள் தம்பியோடு என்ன உறவு?"
"கேள்வி வேடிக்கையாகயில்லை? தம்பி உறவு."
"அதைவிட ஆழமாக."
"உடன் பிறந்த உறவு."
"உடன் பிறந்த உறவுக்கும், மனித உறவுக்கும் என்ன வேறுபாடு? ''
"தம்பி, கேள்வி மேல் கேள்வி கேட்பதை விட்டு விட்டு சொல்ல வந்ததைச் சொல்லுங்கள்."
"என்னைத் தம்பி என்றீர்களே, எப்படி? "
"நானும் மனிதன், நீங்களும் மனிதன்."
"அதாவது எல்லா மனிதர்களும் ஒரே குடும்பம். சரியா?"
"சரி, அதுக்கு என்ன இப்போ?"
"நாம் எல்லோரும் ஒரே குடும்பம்னா நாம் எல்லோரும் ஒரே அப்பா, அம்மாவின் வாரிசுகளாகத்தானே இருக்கணும்."
"அதுக்கு என்ன இப்போ?"
"நமம முதல் பெற்றோர் எப்படி வந்தாங்க?"
"ஹலோ! போதும். நீங்க எங்க வரீங்கென்னு புரியுது."
இப்படித்தான் அநேகரருக்கு உண்மை பக்கம் வர பயமாயிருக்கு.
மனிதநேயம் பற்றி பேசுபவர்கள் அதற்கு ஆதாரமான இறை நேயத்தை மறந்து விடக்கூடாது.
உண்மையில் இறை நேயம் இல்லாத இடத்தில் உண்மையான மனித நேயம் இருக்க முடியாது.
நமது வாழ்வுக்கு ஆதாரமான இறைவனை நேசிக்க வேண்டும்.
இறைவன் நமது தந்தை.
மனிதர் நமது தந்தையால் படைக்கப்பட்டதால் நமது சகோதரர்கள்.
அவர்கள்மீது நாம் கொண்டுள்ள நேயம் வெறும் மனித நேயமல்ல, சகோதர பாசம்.
வெறும் மனித நேயத்தைவிட சகோதர பாசம் மேலானது.
ஏனெனில் அது நம் மீது அளவற்ற பாசம் கொண்ட இறைவனின் பாசத்தோடு கலந்தது.
இறைவனுக்காக மற்றவர்களை நேசிக்கும்போது இறைவனையே நேசிக்கிறோம்.
இறையன்பும் பிறர் அன்பும் இணையும்போதுதான் அன்பு முழுமை பெறுகிறது.
இந்த முழுமையான
அன்பின் அடிப்படையில் நாம் செய்யும் பிறரன்புப் பணிகளே இறைவனுக்கு ஏற்றவை.
இறையன்பு இணையாத மனிதநேயப்பணிகள் இறைவன் முன் பயனற்றவை.
இறைவனை நேசிப்போம்.
அவர் பெயரார் பிறர் பணி செய்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment