ஆண்டவரே! உம் அன்பில் மயங்கிவிட்டேன்!
********************************
நம்மைக் கேட்டா நம் தாய் நம்மைக் கருத்தரித்தாள்?
நம்மைக் கேட்டா நம்மைப் பெற்றெடுத்தாள்?
நம்மைக் கேட்டா நமக்குப் பாலூட்டினாள், பாராட்டினாள், சீராட்டினாள், தாலாட்டினாள்?
நம்மைக் கேட்டா நமக்கு வேண்டியவற்றைத் தந்து நம்மை வளர்த்து விட்டாள்?
நம்மைக் கேட்டா நம்மை விதவிதமான உடைகளால்
உடுத்துவிக்கிறாள்?
தாயின் இந்த செயல்களுக்கெல்லாம் என்ன காரணம்?
அன்பு!
அன்பு ஒன்றுதான் காரணம்.
இவ்வுலகத்தாய் தன் குழந்தையை அது கேளாமலே தன் அன்பின் காரணமாக அதற்கு வேடியவற்றையெல்லாம் செய்து கவனித்துக்கொள்ளும்போது, அளவு கடந்த அன்பு கொண்ட நமது தெய்வீகத் தந்தை நம்மை எந்த அளவுக்குக் கவனித்துக் கொள்வார்?
நமக்கு நமது உடலையும், ஆன்மாவையும், உள்ளத்தையும், உணர்வுகளையும், அறிவையும், ஆற்றலையும் தந்த இறைவனுக்கு, அவற்றின் செயல்பாட்டிற்கு என்னவெல்லாம் வேண்டுமென்றும் தெரியும்.
வானத்துப் பறவைகட்கும், வயல்வெளிச் செடிகட்கும் வேண்டியதைக் கொடுத்துக் காப்பாற்றும் இறைவன் தன் சாயலாகப் படைத்த தன் மக்களைக் காப்பாற்ற மாட்டாரா?
கட்டாயம் காப்பாற்றுவார்.
நாம் சொல்லியா இறைமகன் மனுவுரு எடுத்து, சிலுவையில் உயிர்நீத்து நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்தார்?
வானத்துப் பறவைகட்கும், வயல்வெளிச் செடிகட்கும் கடவுள் யாரென்று தெரியாது.
நமக்குத் தெரியும்.
நாம் கேளாமல்தான் கடவுள் நம்மைப் படைத்தார்.
நாம் கேளாமல்தான் நம்மைக் காப்பாற்றுகிறார்.
நாம் கேளாமல்தான் நமக்காக உயிர் நீத்தார்.
இவ்வளையும் செய்த இறைவனுக்கு நாம் என்ன செய்கிறோம்?
நம்மால் என்ன செய்ய இயலும்?
இறைவன் நிறைவானவர்.
God is perfect.
அளவு கடந்த இறைவனுக்கு அளவு உள்ள நம்மால்
என்ன செய்ய இயலும்?
சர்வ உலகுக்கும் சொந்தக்காரரான இறைவனுக்கு சொந்தமாக ஒன்றுமே இல்லாத நம்மால்
என்ன செய்ய இயலும்?
சர்வ வல்லவரான இறைவனுக்கு பலமே இல்லாத நம்மால் என்ன செய்ய இயலும்?
ஒன்று மட்டும் முடியும் - அதுவும் அவரது அருள் இருந்தால் மட்டும் முடியும்.
நம்மை நேசிக்கும் இறைவனைப் பதிலுக்கு நேசிக்க முடியும்- அவரது அருளுடன்.
அவர் நமக்கு அருளிய விசுவாசக் கண்ணினால் அவரை நோக்கி, அவரது அன்பினைப் பற்றி தியானித்து, அவர் நமக்குச் செய்த, செய்துகொண்டிருக்கும், செய்ய விருக்கும் நன்மைகட்கு நன்றி கூற நம்மால் இயலும்.
இறைவனது அன்பினில் மயங்கி, நம்மை மறந்து, அவருக்கு அடி பணிந்து, அவரோடு இணைந்திருக்க நம்மால் முடியும், அவரது அருளிருந்தால்.
ஆண்டவரின் அருளுக்குப் பஞ்சமில்லை.
இடைவிடாமல் நம் மேல் பொழியப்படும் அருளில் நனைந்து, அதன் பயனை அனுபவிக்க வேண்டியது நாம்தான்.
ஒவ்வொரு நாளும் இறைவனின் அன்பைப் பற்றி தியானிப்போம்.
ஒன்றுமில்லாமையிலிருந்து நமக்கு உருக்கொடுத்த உன்னத கடவுளின் அன்போடு ஒன்றிப்போம்.
மலரின் தேனில் மயங்கிக் கிடக்கும் வண்டினைப்போல் இறையன்பில் மயங்குவோம்.
இத்தியான நிலையின்போது இவ்வுலகின் ஆரவாரம் நம் கண்ணில் படாது, ஏன் நாமே படமாட்டோம்.
இறைவன் மட்டுமே நம் கருத்தை நிறைத்திருப்பார்.
இத்தியானத்துக்கு மொழி தேவையில்லை.
இறையன்பின் ஈடுபடுவோரை பாவம் அணுகாது, ஏனெனில் பாவம் ஆரம்பிப்பதே மனதில்தான்.
மனம் நிறைய இறைவன் இருக்கும்போது, ஐயோ பாவம்! பாவம் என்ன செய்யும்!
வந்த தடம் தெரியாமல் ஓடிவிடும்!
தினமும் இறைவனைத் தியானிப்போம், இறையன்பில் வளர்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment