Sunday, November 12, 2017

காலங்களைக் கடந்தவர்.

காலங்களைக் கடந்தவர்.
*******************************
கடவுள்:

காலங்களைக் கடந்தவர்.

நமது கற்பனையைக் கடந்தவர்.

சொற்களைக் கடந்தவர்.

தனது பண்புகளளிலே அளவு கடந்தவர்.

அதேசமயம் நமது உள்ளத்தில் முழுமையாக உள்ளவர்.

கடந்தவர்,  உள்ளத்தில் உள்ளவர்.

கட+உள்= கடவுள்.

கடவுள் காலங்களைக் கடந்தவர்,   இவரது நித்தியத்தை நமது கால அளவைகளால் அளக்க முடியாது.

நமது காலம் நாம் வாழும் Universe படைக்கப்பட்டபோது தொடங்கியது,  அது அழிக்கப்படும்போது முடிந்துவிடும்.

கடவுள் நித்தியர்,  துவக்கமும் முடிவும் இல்லாதவர்.

என்றும் வாழ்பவர்.

கடவுள் நமது கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவர்.

நம்மைப் போன்ற ஜடப் பொருட்களைத்தான் நம்மால் கற்பனை பண்ண முடியும்.

கடவுள்  ஆவி.

கடவுள் நமது சொற்களைக் கடந்தவர்.

நமது சொற்களால்  கடவுளைப் பற்றி சிந்திக்க, பேச முயற்சி செய்யலாம்.

ஆனால் எந்த மனித மொழியாலும் கடவுளைப்பற்றி முழுமையாக விபரிக்க முடியாது.

நமது மொழியைக் கொண்டுதான் அவரைப்பற்றி பேச இயலும், வேறு   வழியில்லை.

ஆனால் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

உதாரணத்துக்கு : இறைவனைத் தந்தை என்று அழைக்கிறோம்.

இலக்கணப்படி,  தந்தை ஆண்பால்.

ஆனால் இறைவன் ஆவி.

ஆவி ஆணாகவோ பெண்ணாகவோ இருக்க முடியாது.

இவ்வுலகில் நம்மைப் பெற்றவர்கள் நம் தந்தையும்,  தாயும்.

உலக நியதிப்படி தந்தையை குடும்பத் தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.

ஆகவே நாம் இவ்வுலகிற்குள் வரக் காரணமாக இருந்தவரும்,  நம் தலைவருமான கடவுளைத் தந்தை என்று அழைக்கிறோம்.

அவரை அம்மா என்று அழைத்தாலும் அன்புடன் ஏற்றுக்கொள்வார்.

ஆனால் இயேசு மனித சுபாவத்தில் உண்மையாகவே ஆண்மகன். தேவ சுபாவத்தில் ஆவி.

கடவுள் தன் பண்புகளில் அளவு கடந்தவர்.

அளவற்ற அன்புள்ளவர்.

அளவற்ற இரக்கமுள்ளவர்.

அளவற்ற நீதியுள்ளவர்.

அளவற்ற ஞானமுள்ளவர்.

அளவற்ற வல்லமையுள்ளவர்.

நம்மை அளவற்ற அன்புடன் நேசிக்ககிறார்.

இயேசு தன் தாயை எந்த அளவு நேசித்தாரோ அதே அளவு நம்மையும் நேசிக்கிறார்.

அளவு கடந்த அன்புள்ள கடவுள் நமது அன்புக்காக நமது இதயத்தில் வாழ்கிறார்.

கடவுளும் நாமும் அன்பில் இணைந்து வாழ வேண்டும்.

அவ்விணைப்பு மறு உலகிலும் தொடரவேண்டும்.

லூர்து செல்வம்.





No comments:

Post a Comment